Saturday, March 24, 2012

தேங்கிப்போன குட்டைகளா நீங்கள்?

வறண்டுபோன உங்கள்
நதி விண்மீன்களையும்
கூட இனி சுமப்பதாயில்லை

விதையில்லாத மரங்களின்
வேர்கூட விறகிற்கும்
சேர்ப்பதாயில்லை

பனியும் புல்லும்
பசுக்களுக்கும் இல்லாமல்
போனபோதும் கவிதை கவிதையென
காலைக்கு அதையே கட்டி அழுகின்றீர் ஏனோ!

இன்னுமின்னும்
எத்தனைகாலம் புளித்த
தயிரையே பாலுக்கு உரை ஊற்றிக்கொண்டிருப்பீர்

புதிது புதிதாய் அடையாளம்
காணப்படவேண்டிய
களம் கண்ணுறங்கிக்கொண்டிருக்க

மீண்டும் மீண்டும் எழுதிய வரிகளையே
இடம் வலம் மாற்றிப்போட்டு
இதுவும் கவிதையென

எத்தனை நாட்கள் கடத்தி
திரிவீர்?

உங்கள் பழையனவான
வார்த்தைகளை
கொஞ்சம் புதைத்துவிட்டு
புதிய திசையை தேடுங்கள்

சலிக்கவைக்கவில்லையா
உங்கள் செத்துப்போன
உவமைகள்

மீண்டும் மீண்டும்
ருசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
ரசப்புளிகளா நீங்கள்?

துவர்த்துப்போய் துவண்டுபோகாமல்
புதியதாய் தேடித்திரிந்து அலைந்து
படைக்கும் படைப்புகளில்
அர்த்தப்பட்டிருக்கின்றது

புதுக்கவிதைகளின் உதயம்..!

ஒரே சாயல் உங்களை
மக்கச்செய்தால் பரவாயில்லை
மக்காக்கிச் சென்றால்...! ???

இன்னும் நீங்கள்
குண்டுச்சட்டிக்குள்ளே
குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றீர்களா

தயவு செய்து உங்கள் குதிரையையாவது
மாற்றித் தொலையுங்கள்
புதுக்கவிதையாளர்களே..!

-கவிதைக்காரன்

No comments: