Showing posts with label எழுத்துப்பிழைக்காரன். Show all posts
Showing posts with label எழுத்துப்பிழைக்காரன். Show all posts

Tuesday, December 6, 2011

தேடல்களின்... தீர்வு எனக்கானதாய்... ஓர் வெற்றிடம்




நாள் எது பொழுதெதுவென
புரியாத
ஒரு வேற்றுகிரக
விடியலில்..

மார்கழிக்குழாம்
பாடி; மாலை வெயில்
இதமாய் பளிர்க்கும்
அந்திமத்தில்...

மிகப்பெரியச் சண்டையின்
முற்றில்
மௌனிக்கும்
வினாடியின் கடைசி
சொட்டில்...

பின்னிரவுகளில்
தூங்காமல்
எழுதும்
இறப்பின் கவிதையின்
இறுதிப்புள்ளியில்....

மகிழ்ச்சிகள் முறிந்து
திடீரென எதிர்கொண்ட
சாலை விபத்தின்
பரிதவிப்பில்...

பொம்மைக்கு அழும்
எதிர்வீட்டுக்
குழந்தையின்
மிட்டாய் கிடைத்த
புன்முறுவலில்...

நட்பிடம்
மறைத்த உண்மையை
வெளிச்சொல்ல முடிவெடுக்கும்
எண்ணத்தின் கடைசி வார்த்தையில்..

உண்மைகளை நிறுபிக்கும்
வரை போராட்டமாய்
செல்லும் பாதையின்
முட்டுக்கட்டைகளில்

காசு பணமில்லாமல்
போனாலும்
பார்த்ததும் சுகம் கேட்கும்
சம்சாரிநண்பனின்
உபசரிப்பில்..

தேடும் பொருளை கண்டெடுக்கும்
போதான மகிழ்ச்சியின் முதல்
உணர்வில்..

மூங்கில் கழியில்
நுழைந்த காற்றாய்..
எப்போதும் நான் என்னைத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்...!

வெற்றிடம் நிரப்பி...!

-கவிதைக்காரன்..

Monday, December 5, 2011

என் தாத்தன்... இரும்பொறை.....




அய்யனாரு பேரன் போல
ஆறடி உசர மீசைக்காரரு...

பொழுது புலரும் முன்னே
முண்டாசுகட்டிகிட்டு
வயலுக்குள் கால் வைச்சாருன்னா

புலர்ந்தது அடையுமுன்னே
காடெல்லாம் உழுதிருக்கும்
இவரோட ஏர்கலப்பை..!

முத்து முத்தா வேர்த்திருக்கும்
வியர்வை சிந்தி விளைஞ்ச நிலம்
வெள்ளாமை பார்க்கும் வரை
ஓயாது இவர்காலும் ..!

பள்ளிக்கூடம் போனதில்லே
மழைக்கும் வெயிலுக்கும்

ஆனாலும் கண்ணாலே
இவரளந்து சொல்லும் -நெல்லுப்
படிக்கணக்குக்கு மறுத்துச் சொல்ல
பத்து ஊரிலும் ஆளில்லே...!

தென்னமரம் ஏறுவதில்
குரங்கெல்லாம் குப்புறவிழுந்து
தற்கொலை செஞ்சுக்கும் இவரு
ஏறும் வேகம் கண்டு...!

எருதுகளை பூட்டிக்கிட்டு
ரேக்ளாவுக்குப் போனாருன்னா
விருதுகளைச் சுமந்துகிட்டு வாசல்
வந்து நிக்கும் இவரோட வில்லுவண்டி...!

பெரும பேசினது போதும் ராசா
இரும்பொறஆண்டையார் மனச சொல்லு லேசா-ன்னு
முப்பாத்தா கிளவி முணுமுணுக்க..!

தப்பாத தாளத்தோட அடிச்சுபாடுறான் -அவதாரம்
ஊருக்குறி சொல்லும் அய்யரோட
முத தாரத்து மவன் இவன்..என் பள்ளிக்கூட கூட்டாளி

கனடா தேசத்தில் கடன் அட்டைகளைச்சுமந்து
கணிணி முன் அமர்ந்து சிலிக்கான் வேலிக்குள்
மேகக்கணிணியம் கற்பிக்கும் இயந்திர வாழ்மனிதன்
எனக்கு

இராஜராஜன் ஆண்ட தஞ்சை மண்ணில்
கொள்ளிடக்கரை தீண்டும் புனல்வாசல்
பூர்வீகம் படிப்பு உழைப்புன்னு அயல்தேசம்
தாவி வர..
சாண்ட்விச்சுக்கும் பேகனுக்கும்
அடங்கிபோன ஐ.ஆர் எட்டு அரிசி நாக்கு...

அடுத்த வருடம் போகலாமென்று ஆறேழு முறை
நினைத்தும் தாண்டிப்போன வருட இடைவெளியில்
சில தலைமுறை இடைவெளிகளோடு சில
தலைகளும் விழுந்து போனது...!

அப்படி வாழ்ந்த மனிதர் தான் என் தாத்தன்
“இரும்பொறை” ஏழு வயசு முதல் கரும்பு
புழியப்போன முரட்டு தேகம் அவருக்கு
பெயருக்கு ஏத்தது போல இருப்புக்கார உடம்புகாரர்..

சின்னவயசில் மவ வயித்துப்பயலுன்னு
தோள் மேல என்னையும் இரண்டுக்கையில்
பெரியப்பா பெண்ணையும் தூக்கிச்சுமக்கும்
பாசக்கார தாத்தன்...!

சந்தனம் பூசிக்கிட்டு ஜல்லடை கட்டிக்கிட்டு
சுடலமாடன் கோவில் கொடைக்கு
வேட்டைக்கு அவர்ப்போகும் போது -பார்த்த
பயத்திலே காய்ச்சல் பத்திக்கும் எனக்கு...

திருநீறு பூசுய்யா சாமிக்கிட்ட என அம்மா
கிட்டக்க கூட்டுப்போகும் போது
கிடுகிடுத்துப்போகும் என்னை
அடையாளம் கண்டுக்கிட்டு அந்த
நொடி சாமி போய் தாத்தா வந்து
கண்ணில் நிப்பார்...

பெத்த பெள்ளைகள்ளாம் கரையேற
காணி நிலத்தையெல்லாம் காங்ரீட்டுக்காரனுவ
ஆக்கிரமிக்க இரத்தம் சுண்டிப்போனாலும்
என்னப் பெத்தமண்ணக் கொடுக்கமாட்டேன்னு



கொலையா நின்னவரு இன்னைக்கு
சிலையா படுத்திருக்க சுத்தி நின்ன மக்கள் எல்லாம்
தத்தம் ஒப்பாரியில் அழுது நிக்க
எண்பத்தாறு வயசில கண்ணமூடி தூங்குறாரு...
களத்துமேட்டுப்பெரியவரு...:

சனிக்கிழமை சாவுன்னு சேவக்குஞ்சி கூட கட்டி
காட்டுக்குத் தூக்கிப்போக பெரியம்மா அழுது நிக்க
அத்தோடு முடிந்தது தாத்தனின் இறுதிச்சடங்கு வீடியோ...!

நான் கேட்டேன்னு அவதாரத்திட்ட சொல்லிவைச்சு
அரியலூரில் இருந்து வந்த முத்து வீடியோஸ்- பாண்டி
அண்ணன் எடுத்தனுப்பி இருக்காரு...

முத்தம் கொடுக்கும் போது குத்திய
அந்த முரட்டு மீசை மனசோடு குத்துது..இப்போ
காதுக்குள்ல ஒலிக்குது பழம்பெரும்
 நடிகர் கல்யாண்குமாரின் குரலப்போல....
 “கண்ணமூடியும் வரலஏப்பு....ன்னு..”

நெஞ்சம் மறப்பதில்லை பாட்டுன்னா அவருக்கு அம்புட்டு இஸ்டம்...!
இரும்புக்கார தாத்தா.....!


-எழுத்து & கற்பனை
*

கார்த்திக் ராஜா...

Friday, December 2, 2011

கவிதைக்காரனின்... காலைப்பொழுதின் ஊடல் கூட்டலாய்...



 தூக்கம் விட்டெழுந்து
காகிதப்பூவாய்
நீ உடுத்தி இருந்த
மேக ஆடையில்
சில வானவில்லை
மட்டும் கலைந்து...

வெளிச்சம் விரும்பாத
இரவுபட்சியாய்
கண்கள் கூசும் ஒளியில்
உன் தாமிர தேகம்
நனைந்து..

சட்டென்றொரு
யாரும் பாராமல் சிறு
சோம்பலை முறித்து
நிதானிக்கிறாய்..

உன் ஜன்னலில் வளரும்
க்ரோட்டன்ஸுக்கு
நீரூற்றும் சமயத்தில்
உன்னோடு சேர்ந்து
அதுவும் மொட்டு விட
எத்தனிக்கும்...

எதிர்வீட்டு மரத்தில்
சாளரத்தில் காலை
கீதம் சேர்க்க ஓயாமல்
கீரிச்சிடும் " டேய்ல் ஸ்பேரோ"..
என நீ செல்லமாய்
அழைக்கும் இரட்டைவால் குருவியை

பார்த்த சந்தோசத்தில்
மொட்டும் அகலப் பூத்திருக்கும்
உன் முகத்தில்
கண்களாய்..

சிற்றிடை நெளித்து
ஈரடி நடந்து..
தண்ணீர்க்கோப்பைக்கு
வெளியே
மீனாய்..

கைகளால்
அள்ளி எடுத்த
நீர்த்துளிகள் முகமெல்லாம்
சிதறடிக்கிறாய்..

பட்டெனத்தெரிக்கும்
நீர்த்துளிகளால்
நேற்றைய இரவின்
முத்தங்கள் படர்ந்த
கன்னத்தின்
இதழ் தீண்டலை
சமன் செய்கிறாய்...

இன்றைக்கோர்
சில்மிஷத்தின்
ஒத்திகைக்கு
களைப்பின்
ஒப்பனை
கலைக்கிறாய்..

ஓவியம் உந்தன்
ஒவ்வொரு அசைவையும்
ரசிக்கிறேன்..
கண்கள் திறக்காமல்
கட்டிலில் கிடந்தே..! -நான் *

நீ என்னென்னெ
செய்வாயென
நான் தினமும் காணும்
கனவாய் இவை தானே
என்னுள் தனக்கான
இடங்களை நிரப்பிக்கொள்கின்றன..!

கனவும் நிஜமும்
ஒன்றாகி ஒன்றிப்போனதும்
காலை -யோடு
இன்னோர் எச்சில் முத்தம்
பெற ஏங்க வைக்கிறாய்,,,!

வந்ததும் கேட்பாய்
“பாவி ” இதையெல்லாமாவா
கவிதைல எழுதுவீங்க என்று
கன்னத்தோடு செல்லக்கடி
கொடுப்பாய்..

கற்பனை கலைக்கும்
விதமாய்
அதோ நீ வரும்
சப்தம் கேட்கிறது
நான் மெல்ல தூங்குவது
போல் நடிக்கப்போகிறேன்...!






-கவிதைக்காரன் *GTM*

ஆதலினால் காதல் செய்ய அட்வைஸ் கேக்காதே...!







மச்சி.. பாலாஜி பேசறேண்டா. எப்படி இருக்க?

அடேய்… சொல்லுடா..

உனக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ். ஒரு ஃபிகர் எனக்கும் மடங்கிடுச்சு மச்சி.

நிஜமாவாடா? பார்த்து மடக்கி மடக்கி கூன் விழ வச்சிடாத.

போதும்டா உன் நக்கலு. இப்ப எனக்கு ஒரு ஹெல்ப்பு வேணும்.

அப்படி வா மேட்டருக்கு. என்ன உன் ஆளுக்கு நான் ஏதாவது தரணுமா?

கரெக்ட். ஆனா ஐடியா மட்டும் நீ தா. கொடுக்கிற வேலையை நான் பார்த்துக்கிறேன்.

உஷாருடா நீ. ஆளு எப்படி இருக்கும்? சுமாரா இருக்குமா?

அதெல்லாம் எதுக்கு? பர்த்டே கிஃப்ட் தரணும். அதுக்கு மட்டும் ஐடியா சொல்லு

இல்லடா. எப்படி இருப்பான்னு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி சொல்லுவேன்

ம்ம். பொய்யெல்லாம் சொல்லல. இந்த ஊரிலே அவதான் அழகுன்னு சொல்லலாம்.

அட. அப்ப ஒண்ணு பண்ணு. ஒரு குளோப் வாங்கி பேக் பண்ணி “உனக்கான பரிசை உலகெங்கும் தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் உலகையே பரிசாக தருகிறேன்னு எழுதிக் கொடு.

இதெல்லாம் உன் பிளாகிலே நான் எப்பவோ படிச்சிட்டேன். நல்லாதானிருக்கு. வேற எதுவும் சொல்லு.

எனக்கு ஃபீல் வரணும்டா. அவள பத்தி சொல்லு

ஜீன்ஸ் போட்ட ஜாஸ்மிண்டா அவ. பழமையும், புதுமையும் கலந்த பதுமை.

கொஞ்சம் ஓவராத்தான் போற..ம்ம். ஒரு மொபைல் வாங்கி இளையராஜா பாட்டு இருக்கிற மெமரி கார்டோடு கொடு. நீ சொல்ற மாதிரி ஒரு ஃப்யூஷனா இருக்கும்.

சூப்பர் ஐடியா. ஆனா அவ ரகுமான் ஃபேன். சோ, வேற சொல்லு மச்சி.

சினிமா பார்ப்பாளா?

ம்ம். நிறைய

அப்போ சத்யம் FUEL CARD வாங்கி 2000 ரூபாய்க்கு ஃபில் பண்ணிக் கொடு. எப்போ சினிமா போனாலும் உன் ஞாபகம் வரும். உன்னையே கூட்டிட்டு போவா. நீ கொடுக்கிற காசுல பாதி நீ படம் பார்த்து கழிச்சிடலாம்.

நீ வேற மச்சி. அவ கல்யாண சிடியை கூட அவ திருட்டு சிடியா வாங்கித்தான் பார்ப்பா.

அடேய். என்ன பொண்ணுடா அவ?

அப்படி சொல்லாத மச்சி. நீ ஒரு தடவ பார்த்த… வேணாம்ப்பா. நீ ஐடியா மட்டும் கொடு.

என்னடா ஓவரா புகழுற. அவ்ளோ அழகா இருந்தா பேசாம ஒரு கிஸ் கொடுத்திடேன்.

இன்னும் அந்தளவுக்கு போகல மச்சி. எனக்கும் ஆசைதான். இருந்தாலும் அவ வாயால லவ்வ கன்ஃபார்ம் பண்ணிடட்டுமே.

அடங்கொன்னியா. இன்னும் அதுவே சொல்லலையா? அதுக்குள்ள மடங்கிடுச்சுன்னு சொல்லிட்ட இல்ல!

ஆயிடும்டா. நீ ஐடியா கொடு.

பெஸ்ட். ஒரு பிளாட்டினம் வித் டைமண்ட் மோதிரம் வாங்கு. அவ உன்னை லவ் பண்ணா அவளே போட்டு விட சொல்லுவா

வாவ். இதுக்குத்தாண்டா நீ வேணும். ஆனால் பிளாட்டிணம் மோதிரம் வாங்குற அளவுக்கு காசில்லை. வெள்ளி ஓக்கேவா?

அப்போ ஃபிகரும் இந்தளவுக்கு இருக்காது. ஓக்கேவா?

என்ன மச்சி? இதே ஃபீலோட வேற ஐடியா சொல்லேன். கொஞ்சம் சீப்பா

வாழைப்பழம் வாங்கி கொடு. சீப்பா இருக்கும்.

பிகு பண்ணாதடா. அவளுக்கு இந்த மாதிரி ஜாலியா பேசினா பிடிக்கும். கிரேசி மோகன் ஜோக்ஸ் எல்லாம் விழுந்து விழுந்து ரசிப்பா. அந்த மாதிரி ஏதாவது.

என்ன சொல்ற? அவளுக்கு மொக்க ஜோக்ன்னா பிடிக்குமா?

ஆமாம்டா. ஒரு நாள் யோகா பண்ணி உடம்ப குறைக்க வேண்டியதுதானேன்னு எங்கிட்ட சொன்னா. நான் உடனே குறைச்சிட்டேன். உடம்ப இல்லை, யோகா பண்றதன்னு சொன்னேன். 2 நாள் லீவ் போட்டு சிரிச்சா.

அடேய். உண்மையாவா? அப்ப அவளுக்கு கிஃப்ட் கொடுக்கிறது ஈசி. வாழ்க்கையிலே அவளுக்கு ரொம்ப பிடிக்க போற கிஃப்ட் இதுவாத்தான் இருக்கும்.

நிஜமாவாடா மச்சி? சொல்லுடா. என்ன கொடுக்கலாம்?

அவ பர்த்டே அன்னைக்கு கரெக்ட்டா 12 மணிக்கு நான் சொல்றத எஸ்.எம்.எஸ் அனுப்பு. உன்னை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டா.

என்ன அனுப்பணும்?

+91-999 4 220 250 - இதாண்டா என் நம்பர் இதைக்கொடு போதும்

ங்… உன்னைப் போய் ஐடியா கேட்டேன் பாரு. என்ன சொல்லணும்.

பொ…. நா… நீயெல்லாம் உருப்படவே மாட்டடா. வயிறெரிஞ்சு சொல்றேன். உனக்கு நல்ல சாவே வராதுடா..
நன்றி-கார்க்கி...டூ கார்த்தி...

Thursday, December 1, 2011

விமர்சகர்கள் அறிவோம் - உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை


வலையுலகில் அதிகம் படிக்கப்படும் தகவல்களில் ஒன்றாக சினிமா இருப்பதை மறுக்கவியலாது. ஓடாத உள்ளூர் படங்களில் தொடங்கி தவறவிடக்கூடாத உலக சினிமாக்கள் வரை அனைத்தையும் அலசும் விமர்சகர்கள் பலர் வலையுலகில் இருக்கின்றனர். அவற்றில் நான் ரசித்த பதிவர்களை இன்று அறிமுகப்படுத்துகிறேன்.

(மன்னிக்கவும் இது எனது சொந்தப்பதிவு அல்ல நண்பர் வலையில் எடுத்தது.. நல்லவிஷயங்களை பகிர்வதில் தவறில்லையே... பார்த்துப்பிடித்தால் கம்மெண்ட் கொடுங்கள்.)

1. சுரேஷ்கண்ணன் - பிச்சைப்பாத்திரம் என்ற பெயரில் அட்சய பாத்திரமாய் பதிவுகளை வழங்கி வருகிறார்

உலக சினிமா ஒன்றைக் காண வேண்டுமா? எனும் பதிவே அதற்கு சாட்சி...


2. பட்டர்பிளை சூர்யா - வண்ணத்துப்பூச்சியார் என்ற வித்தியாசமான பெயரில் உலகசினிமாக்கள் பற்றி அட்டகாசமாக எழுதி வருகிறார்.

உதாரணமாக இவரின் "சில்ரன் ஆஃப் ஹெவன் இயக்குனர் மஜித் மஜிதி" பதிவைச் சொல்லலாம்...


3. ஜெய் - பிற மொழிப்படங்கள் தமிழில் எழுதிவரும்(வந்த) ஜெய் அவர்களின் விமர்சனங்களுக்கு நான் என்றுமே ரசிகன்... மெமண்டோ படத்தினைப் பற்றிய இவரின் அற்புதமான விமர்சனம் memento 

4. கீதப்ரியன் - ஆன்லைன் லைப்ரரி என்றுகூட இவரது வலைப்பூவைக் குறிப்பிடலாம். அந்த அளவிற்கு திரை விமர்சனங்களால் தனது வலைப்பூவை நிரப்பி வைத்திருக்கிறார்...

குறிப்பாகச் சொல்ல வேண்டிய விமர்சனங்கள்...

ஷஷாங் ரிடெம்ப்ஷன்..
களவானி

5. ஜெட்லி - பார்த்தும் படித்ததும்- எதிர்பார்ப்புக்குரிய படங்களின் விமர்சனங்களை வித்தியாசமாக தொகுத்துத் தருகிறார். முதல் நாளிலேயே படங்களைப் பார்த்து மொக்கை வாங்குவதில் வல்லவரான இவர் தி.பி. காலம் (அதாங்க.. திருமணமான பின்) வந்தவுடன் உஷாராகிவிட்டார் போல... :-)

2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...!! 

வாடா - ஒலகபடம் விமர்சனம் 

நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை

6. வர்மா - அன்புடன் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். தடம் மாறிய தமிழ்ப்படங்கள் என்ற பெயரில் இவர் பதியும் தொடர், சினிமாவின் வேறோரு முகத்தைக் காட்டி வருகிறது...

தடம்மாறிய தமிழ்ப்படங்கள் - 12 

தடம்மாறிய தமிழ்ப்படங்கள்  முழுத்தொகுப்பு 

7. சி.பி.செந்தில்குமார்  - புதிய படங்களின் விமர்சனங்களை உடனுக்குடன் பதிவு செய்து வருகிறார், அட்ரா சக்க எனும் வலைப்பூவில் எழுதிவரும் சி.பி.செந்தில்குமார்...

உதாரணமாக போராளியின் விமர்சனத்தை முதல் ஆளாக பதிவிட்டிருக்கிறார்...

8. கருந்தேள் கண்ணாயிரம்... - மிகச்சிறந்த விமர்சகர். சினிமா மட்டுமின்றி அதன் தொழிற்நுட்பத்தை விமர்சிப்பதிலும் வல்லவர்...

நான் வியந்த அவரது பதிவுகள்...
LOTR - The Series  

9. ஜாக்கி சேகர் - பிறமொழிப்படங்களின் விமர்சனங்களை எழுதிவருகிறார் ஜாக்கிசேகர். அனேக திரைப்படங்களின் விமர்சனங்களை இணையத்தில் தேடினால் இவரது வலைப்பூவை கை காட்டும் அளவிற்கு நிறைய பதிவுகளை எழுதியுள்ளார்.

Ocean's Eleven
Travellers and Magicians  


10.கேபிள்சங்கர் - இவரைப் பற்றிச் சொல்லாமல் இந்த பதிவை நிறையடையச் செய்ய முடியாது. அந்த அளவிற்கு ரசிக்கும்படியான விமர்சனங்கள் இவருடையது. தமிழ் படங்கள் மட்டும் என்று இல்லை இவரது பிறமொழிப்படங்களின் விமர்சனங்களுக்கு நான் ரசிகன்.

உதாரணமாக பீப்லி லைவ் படத்திற்கான இவரது விமர்சனத்தைப் பாருங்கள். -

*******************

வேறொரு தொகுப்புடன் நாளை சந்திப்போம்

Sunday, November 20, 2011

நினைவுகள் தாங்கிய நதிக்கரையில்....







நம் சந்திப்பு பொழுதுகளின்
இறுதியில்..
விடைபெற்று நீ சென்றதும்

அடுத்த ஐந்தாறு நிமிடத்தில் 
அழைத்து எங்கே இருக்கிறாய் 
என்கிறாய் ..!

*உன் மனதில் தான் என 
சொல்ல வார்த்தை முட்டும் 
எனக்கு..
அந்த நிமிடம்....!

^^^^^^^^^^
அன்றொரு கடற்கரை 
சந்திப்பில் 
உன்னை அருகில் 
வைத்துகொண்டே 
அலைகள் ரசித்திருந்தவனிடம் 
சரி வா கிளம்பலாமென்றதும் 

அத்தனை ரசனையையும் 
உதறிவிட்டு இன்னும் 
கொஞ்ச நேரம்
எனக் கெஞ்சி நிற்கிறேன் 
உன்னிடம்
அந்த நிமிடம்..!
^^^^^^^^^^

ஒரு மதிய பொழுதினில்.
"பசிக்குது சாப்பிடலாமா ?"
என்று கேட்டால்
"எனக்குப் பசிக்க வில்லை 
என்கிறேன்.
ஏன் ? எனக்காரணம் கேட்டாய்

பார்வையாலே உனை 
மென்று கொண்டிருக்கிறேன் 
இனி எப்படி பசிக்கும் 
என்றதும்,  செல்லமாய் அடிக்க கை 
ஓங்கினாய் அந்த நிமிடம்.

^^^^^^^^^^^

இப்படி தெளிந்த என் வானத்தில் 
என் காதல் பூப்பூத்தது 
மழை நீரில்லாமலே ..!
இன்று நதிக்கரையோரம் 
வட்டக்கல் வீசி 
தனித்து நிற்கிறேன் 
நீயில்லாமலே..! 

அந்த நிமிட நினைவுகள் எல்லாம் 
இன்று என் சில பல 
மணி நேரங்களை 
ஆக்கிரமித்துக்கொள்கிறது 
முழுவதுமாய் ..!

கல் விழுந்த இடம் சுற்றி 
அலை அலையாய் உன் நினைவுகள்..

எழுத்துப்பிழைக்காரன்... 
-கார்த்திக் ராஜா..