Showing posts with label ஏன். Show all posts
Showing posts with label ஏன். Show all posts

Friday, October 25, 2013

எண்ணங்களை எழுதுகிறேன்


பொழுதுகள் மிகச்சீக்கிரமாய் விடிதலை.. எதிர்கொள்கின்றன..
அல்லது நகரத்தின். வேகத்தில் நம்மை திணித்துச் சமன்படுத்திக் கொள்ள நாம் வேகமாகச் சுழல்கின்றோம் எனவும் கொள்ளலாமோ...


ஊரிலிருக்கும் போது... அரிதாக சில நேரம் பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பேன்... சீக்கிரம் எழுந்துவிட்டால்... இன்னுமா தூக்கமென்று போர்வையோடு தண்ணீரை ஊற்றிப் போகும் அக்காளைச் சபித்தது போல் அவை என்னைச் சபிப்பதில்லை... செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது ஒரு கலை...
அது ஒரு தியானம் போன்றது அந்த நிமிடங்களில் அவைகளோடு அளவளாவிக் கிடைக்கும் மகிழ்வை எழுத்தில் கொண்டுவருவது சவால் தான்.
இதுவெல்லாம் சிலகாலம் முன்புதான்... அதற்கும் முன்பற்றி சிந்தித்தால்...
நினைவு நதி ஈரமாய்ச் சிலிர்க்கத்தொடங்குகிறது...
அதிகாலைக்கும். நமக்குமான உறவுநம் வயதையொத்ததல்லவா... அதுவும் பால்யங்களை விட பதின்மங்கள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகாலையில் தான் அர்ச்சனைகளோடு தொடங்கும்..


பள்ளிக்கூட வயதில்.. நான்கரை மணிக்கு விடியும் எனக்கு உறக்கத்தை கொன்றுவிட்டு, எழுந்து முகவாய் கழுவிவிட்டு சைக்கிளை மிதித்துபரபரப்பாய் பாளையங்கோட்டையிலிருந்து பெருமாள் புரம் வரைக்கும் போய்

வண்ணதாசனோ,வண்ணநிலவனோ சரியாய் நினைவில்லை... அந்த எழுத்தாளர் வீட்டருகே. உள்ள ஜேசு. அண்ணன் வீட்டில் தயாராகின சமோசாக்களை பெட்டியில் அடுக்கிக்கொண்டு... வேய்ந்தான் குளாத்திலிருந்து வேலைக்கு ஆயத்தமாகும்..

சில நாள் பாதித்தூக்கத்தில் சைக்கிள் மிதித்து பாளையங்கோட்டை மத்தியச்சிறை முன்னே இருக்கும் பேரூந்துநிறுத்தத்தில் பத்துநிமிடம் படுத்து எழுந்தோடுவேன்...

அப்போதெல்லாம் புதிய பேரூந்துநிலையம் கட்டி முடித்திருக்கவில்லை...
அங்கிருந்து அதே பரபரப்போடு பாளையங்கோட்டை வீதிகளின் தேநீர்விடுதிகள் ஒவ்வொன்றிலும் சரக்குக் கொடுத்துவிட்டுமார்கெட், கே.டி.சி. நகர், வி.மு சத்திரம் , பாளை டவர், வண்ணாரப்பேட்டை வந்து பெட்டிகாலியாகவும் வன்ணாரப்பேட்டை வாங்கு ஊதவும் சரியாய் எட்டு மணியாகிவிடும்...

திரும்ப வீட்டுக்கு வந்து அடித்துபிடித்து பள்ளிக்கூடத்திற்கு ஓடிப்போய். .. லேட்டானதிற்கு பி.டி-யிடம் பிரம்படிவாங்கி ... பாடம் படித்து கொஞ்சம் பால்ராஜின் உதவியால் வாத்தியாருக்குத் தெரியாமல் பெஞ்சுக்கிடையில் குட்டித்தூக்கம் போட்டு மதியம் பலவீட்டுவிருந்துண்டு பள்ளிக்கூடம் விட்டதும் காலையில் கொடுத்த சரக்கிற்கு மாலை பணம் வசூலித்த பெருமாள் புரத்து ஜேசுதாஸ் அண்ணன் வீட்டுக்குப் போய். கணக்குக் கொடுத்தால் இருபத்து ஐந்துரூபாய் கொடுப்பார்... அது அந்த ஒருநாளின் உழைப்பின் சம்பாத்தியம்...

அத்தனை பர பரப்புக்கிடையில் உழன்று கிடைத்த ஊதியத்தை சட்டைப் பையில் சுமந்து அம்மாவிடம் கொடுக்கும் போது கிடைக்கும் ஒரு பெருங்கத்தையான சந்தோசத்தை..

இதோ இன்னும் இரண்டொரு நாளில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஏ.டி.எம் இயந்திரத்தின் வாசலில் வரிசையில் நின்று தேய்த்து எடுக்கும் ஊதியப்பணத்தில் நிச்சயமாய் பெறமுடிவதில்லை... பெரும் இடைவெளி ஏதேனும் விழுந்திருக்கலாம்... காலம் புரட்டிவிளையாடும் போது பந்துகள் தான் என்ன செய்யும்... நினைவு நதி குளிர் உதிர்க்கின்றது...

*******


நேரம் போனதே தெரியவில்லை...

சமீபமாய் பால்ராஜைச் சந்தித்தேன் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் மனைவியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். ஆண்டிநாடார் பாத்திரக்கடை முன்னே முண்டிக்கொண்டிருந்த கூட்டத்தில் அடையாளம்கண்டு கொண்டோம்.

புதுமாப்பிள்ளைக் களை கழுத்தில் மின்னியது... நலம் விசாரித்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாய் கலந்துவிட்டான்.

ஜேசுதாஸ் அண்ணனைப் பார்க்கத் தோன்றியது. போயிருந்தேன், எம்.எச் ஜுவல்லரிஸில் கொடுத்த கைப்பையைச் சுமந்தபடி நிலம் விற்றுக் கொண்டிருக்கிறார். ரெட்டியார்பட்டிக்கு கிழக்கே ரெண்டரை செண்ட் வாங்கிப்போடு இப்போ குறைஞ்சவிலைதான். கிரையம் நானே முன்னயிருந்து முடிச்சுத்தாரேன்னு அவர்பாட்டுக்கு பேசினார்.... எனக்கு இருபத்தைந்து ரூபாயை இடதுகையால் அவர் கொடுக்கும் லாவகம் கற்பனையில் ஓடிக்கொண்டிருந்தது...

******

பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் யாரோ தொட்டியில் ரோஜா வளர்த்திரிக்கிறார்கள்... அது மென்மையாய் என்னை நோக்கிப் புன்னகைக்கின்றது...

தண்ணீர் ஊற்றுவானேனென்று மனம் பரபரக்கின்றது...

பெரிய சைக்கிள் மிதித்தது தினத்தந்தியை வீசிப் போகும் சிறுவனை எங்கோ பார்த்தது போல் இருக்கின்றது.. அது நானாக இருப்பது வாய்ப்பில்லை...


கருப்புவண்ணத்தில் நிக்கல் நிறமிட்ட கடிகாரம் தனக்கான பணியை ஒலியெழுப்பி கூவுகிறது.வண்ணாரப்பேட்டை வீதிகளின் பரபரப்புஎன்னைத் தொற்றிக்கொள்கிறது....

வாருங்களேன் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அதிகாலை சென்னையின் மிச்சங்களை நுகர்வோம்...

- கவிதைக்காரன்.

Thursday, February 9, 2012

ஒரு விபத்தின் மறுபக்கத்தில்...!? கேள்விகள்


நேற்று இரவு வீட்டுக்குப்போகும் போதே அண்ணன் கொஞ்சம் சோகமாக டி.வி முன் அமர்ந்திருக்க என்ன வழக்கமாக கனாகாணும் காலங்கள் பார்த்துக்கொண்டிருப்பாரென.. கடந்துபோக நினைத்தவனை அந்த செய்திச்சானலின் முதல் ஒளிக்காட்ச்சி கவர்ந்தது...

ஆம் அது ஒரு துயரச்செய்தி..!

தமிழ்நாடு: தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனியைச்சேர்ந்த சித்திரைவேல் என்ற நபருடைய மகளுக்கு தேனிமாவட்டம் அருகே மணம் செய்து முடித்து மறுநாள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தன் உறவினர் அக்கம் பக்கம் உள்ளவர்களோடு தூத்துக்குடியில் இருந்து வேன் அமர்த்தி தேனி அருகே உள்ள தேவாரம் சென்று நேற்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி திரும்பிக்கொண்டிருக்கும் போது ...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நக்கலக்கோட்டை கிராமம் அருகே 30 அடி அகலச்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும் போது “அடையாளம் இல்லாத” ஸ்பீட் ப்ரேக்கரால் சாலையிலிருந்து நிலை தடுமாறிய வேன் அருகே இருந்த முட்புதருக்குள் பாய்ந்திருந்ததாகத் தெரிகிறது...




தூரதிஸ்டவசமாக அந்த முட்புதர் ஒரு கைப்பிடி இல்லாத “60 அடி ஆழக்கிணற்றுவெளி”... அதிர்வில் தூக்கி எறியப்பட்ட 3 ஆண்கள் மட்டும் தண்ணீரில் தத்தளிக்க.. சம்பவத்தை நேரில் கண்டோர் உடனடியாக 108 -க்கு அழைக்க அவசர அவசரமாக குவிந்தனர் மாவட்டத்தின் அனைத்து தரப்பு அதிகாரிகளும் ... கூடவே “புதிய தலைமுறை” செய்திச்சானலும் நேரடி ஒளிபரப்போடு..! அந்த மூன்று பேரை காப்பாற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க... செய்தியாளர் இராமானுஜம் நேரடியாக நிகழ்வுகளை தொகுத்து தந்து கொண்டிருக்க செய்தியாளர் மதி விவரங்களைச்சேகரிக்க கேள்விக்கணைகளை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்க சானலை கண்டவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தன்ர்.



மூன்று மணிநேர போராட்டத்திற்குப்பின் இரண்டு கிரேன் மூலம் வேன் கட்டி தூக்கப்பட்டது எஞ்சியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் கிராம மக்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சகாயம், காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் ஆகியோர் நேரில் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

இரவு 11 மணி அளவில் கிணற்றுக்குள் இருந்து வேன் எடுக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. இதில் மணமகளின் தந்தை, தாய், சகோதரன், மூத்த சகோதரி, அவரது குழந்தைகள் உட்பட 10 பேர் உயிர் இழந்தனர்.

இந்த துக்கமான செய்தியின் போது கவனிக்கத்தகுந்த செயல்பாடுகள் .. செய்திச்சானலான புதிய தலைமுறையின் அதிவேக செயல்பாடுகள்.. நேரடியாக மக்களுக்கு விசயங்களை கொண்டுசேர்க்கும் முயற்சியின் போதும் ...
ஒரு நடுநிலையான செய்தி தொலைக்காட்சியாக அவர்களது கேள்விகளை கொண்டு சேர்த்த விதம் உண்மையில் மற்ற சுயலாப சுயவிளம்பர சானல்கள் கற்றுக்கொள்ள வேண்டியது

I.சாலை ஓரம் கைப்பிடி சுவரில்லாமல் இருக்கும் கிணற்றை கிராம நிர்வாக அதிகாரி கவனிக்காமல் விட்டது ஏன்? II.வாகனங்கள் இல்லாவிட்டாலும் அந்த பகுதி குழந்தைகள் தவறி விழுந்தால் என்ன செய்வது சுற்றுச்சுவர் இருக்கவேண்டும் என்ற குறைந்த பட்ச விதியைக்கூட கடைபிடிக்காதது ஏன் ?

III.விபத்துப்பகுதி என்ற அடையாள போர்டுகள் வைக்கப்படாதது ஏன் ?

IV. மாவட்ட நிர்வாகம் இந்த அஜாக்கிரதையான மெத்தனப்போக்கை இனியும் தொடருமா?

இப்படி மக்களின் கேள்விகளை சரியான விதத்தில் சரியான இடத்தில் கொண்டு சேர்க்கும் புதிய தலைமுறையின் நகர்வுகள் கவனிக்கப்பட வேண்டியன...!

சலை வரி செலுத்தாத வாகனங்கள், பர்மிட் இல்லாத வாகனம் , இன்ஸ்யூரன்ஸ் இல்லாத வாகனம் , ஹெல்மெட், லைஸன்ஸ், விதிமுறை பின்பற்றாதது, அளவுக்கு அதிகமான ஆட்கள் கேபினில் என விதிக்கும் அத்தனை அபராதங்களுக்குமாக

ஆளாய்ப்பறக்கும் கேஸ் பிடிக்கும் காவல்துறைக்கும் பொதுமக்களாய் எழும் கேள்வி விபத்துக்கு ஆதாரமான சூழல்களை கண்டு கொள்ளாதது.. ஏன்? சாலைகளின் மேம்பாடு குறித்து அரசுத்திட்டங்கள் நடைமுறைக்கு வர காலதாமதப்படுத்துதல் இவையெல்லாம் பலிவாங்கும் உயிர்களின் எண்ணிக்கைக்கு நீங்கள் கொடுக்கும் லட்சங்களை கொண்டு ஈடு செய்துக்கொளவது தானா உங்களால் இயன்றது..!

“அந்த விபத்துக்காலத்தில் பக்க பலமாக இருந்து உதவிய அத்தனைநல் உள்ளங்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் எனது மனதார்ந்த நன்றிகள் ..!”


-கார்த்திக் ராஜா..!

பள்ளி ஆசிரியர் கொலை...!? எங்கே செல்கிறது இளைய சமுதாயம்


சென்னை பாரி முனையில் பள்ளி  வகுப்பறையிலே ஆசிரியர் உமா மஹேஸ்வரி படுகொலை மாணவன் வெறிச்செயல்...!


# அன்று டாக்டரை கொன்னாங்க? இன்று ஆசிரியரை கொல்றாங்க
சட்டம் ஒழுங்கு சீர் குலைவுன்னி எதிர்கட்சியும்
வகுப்பறையிலும் , மருத்துவ மனையிலும் நடந்த கொலைக்கு சட்டம் ஒழுங்கு எவ்விதத்தில் பொறுப்பாகும்ன்னு ஆளுங்கட்சியும் ...


அடிச்சுக்கும்..! ஆசிரியர்கள் போராட்டம் கிளம்பும்...
ஸ்டரைக் நடக்கும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும்... பள்ளிக்கு வரும் ஆசிரியர் உயிருக்கே உத்திரவாதம் இல்லை மாணவச்செல்வங்களை எப்படி பள்ளிக்கு அனுப்ப என பெற்றோர்கள் தயக்கத்துக்கும்  ஆளாக தொடர்ச்சங்கிலி போல பாதிக்கப்பட்டுக்கிடக்கிறது...! சமுதாயம்


 சிந்தித்து பார்க்கையில் எங்கே போகிறது இளைய சமுதாயம்..! கொலைகள் இவ்வளவு எளிய விசயமாகவும்.,.. உயிர்கள் கிள்ளூக்கீரையாகவும் கிள்ளி எறியப்பட்டுக்கொண்டிருக்கிறதன் விடிவுகாலம் தான் என்ன?


காம்பஸ் பிடிக்க வேண்டிய கரங்கள் கத்தியைப்பிடிக்கின்றது..
கைகட்டி வேடிக்கை பார்ப்பதினாலோ மறதிகளினாலோ சீர்பட்டுவிடுமா இச்சமுதாயம்!