Friday, December 2, 2011

கவிதைக்காரனின்... காலைப்பொழுதின் ஊடல் கூட்டலாய்...



 தூக்கம் விட்டெழுந்து
காகிதப்பூவாய்
நீ உடுத்தி இருந்த
மேக ஆடையில்
சில வானவில்லை
மட்டும் கலைந்து...

வெளிச்சம் விரும்பாத
இரவுபட்சியாய்
கண்கள் கூசும் ஒளியில்
உன் தாமிர தேகம்
நனைந்து..

சட்டென்றொரு
யாரும் பாராமல் சிறு
சோம்பலை முறித்து
நிதானிக்கிறாய்..

உன் ஜன்னலில் வளரும்
க்ரோட்டன்ஸுக்கு
நீரூற்றும் சமயத்தில்
உன்னோடு சேர்ந்து
அதுவும் மொட்டு விட
எத்தனிக்கும்...

எதிர்வீட்டு மரத்தில்
சாளரத்தில் காலை
கீதம் சேர்க்க ஓயாமல்
கீரிச்சிடும் " டேய்ல் ஸ்பேரோ"..
என நீ செல்லமாய்
அழைக்கும் இரட்டைவால் குருவியை

பார்த்த சந்தோசத்தில்
மொட்டும் அகலப் பூத்திருக்கும்
உன் முகத்தில்
கண்களாய்..

சிற்றிடை நெளித்து
ஈரடி நடந்து..
தண்ணீர்க்கோப்பைக்கு
வெளியே
மீனாய்..

கைகளால்
அள்ளி எடுத்த
நீர்த்துளிகள் முகமெல்லாம்
சிதறடிக்கிறாய்..

பட்டெனத்தெரிக்கும்
நீர்த்துளிகளால்
நேற்றைய இரவின்
முத்தங்கள் படர்ந்த
கன்னத்தின்
இதழ் தீண்டலை
சமன் செய்கிறாய்...

இன்றைக்கோர்
சில்மிஷத்தின்
ஒத்திகைக்கு
களைப்பின்
ஒப்பனை
கலைக்கிறாய்..

ஓவியம் உந்தன்
ஒவ்வொரு அசைவையும்
ரசிக்கிறேன்..
கண்கள் திறக்காமல்
கட்டிலில் கிடந்தே..! -நான் *

நீ என்னென்னெ
செய்வாயென
நான் தினமும் காணும்
கனவாய் இவை தானே
என்னுள் தனக்கான
இடங்களை நிரப்பிக்கொள்கின்றன..!

கனவும் நிஜமும்
ஒன்றாகி ஒன்றிப்போனதும்
காலை -யோடு
இன்னோர் எச்சில் முத்தம்
பெற ஏங்க வைக்கிறாய்,,,!

வந்ததும் கேட்பாய்
“பாவி ” இதையெல்லாமாவா
கவிதைல எழுதுவீங்க என்று
கன்னத்தோடு செல்லக்கடி
கொடுப்பாய்..

கற்பனை கலைக்கும்
விதமாய்
அதோ நீ வரும்
சப்தம் கேட்கிறது
நான் மெல்ல தூங்குவது
போல் நடிக்கப்போகிறேன்...!






-கவிதைக்காரன் *GTM*

No comments: