Monday, December 5, 2011

என் தாத்தன்... இரும்பொறை.....




அய்யனாரு பேரன் போல
ஆறடி உசர மீசைக்காரரு...

பொழுது புலரும் முன்னே
முண்டாசுகட்டிகிட்டு
வயலுக்குள் கால் வைச்சாருன்னா

புலர்ந்தது அடையுமுன்னே
காடெல்லாம் உழுதிருக்கும்
இவரோட ஏர்கலப்பை..!

முத்து முத்தா வேர்த்திருக்கும்
வியர்வை சிந்தி விளைஞ்ச நிலம்
வெள்ளாமை பார்க்கும் வரை
ஓயாது இவர்காலும் ..!

பள்ளிக்கூடம் போனதில்லே
மழைக்கும் வெயிலுக்கும்

ஆனாலும் கண்ணாலே
இவரளந்து சொல்லும் -நெல்லுப்
படிக்கணக்குக்கு மறுத்துச் சொல்ல
பத்து ஊரிலும் ஆளில்லே...!

தென்னமரம் ஏறுவதில்
குரங்கெல்லாம் குப்புறவிழுந்து
தற்கொலை செஞ்சுக்கும் இவரு
ஏறும் வேகம் கண்டு...!

எருதுகளை பூட்டிக்கிட்டு
ரேக்ளாவுக்குப் போனாருன்னா
விருதுகளைச் சுமந்துகிட்டு வாசல்
வந்து நிக்கும் இவரோட வில்லுவண்டி...!

பெரும பேசினது போதும் ராசா
இரும்பொறஆண்டையார் மனச சொல்லு லேசா-ன்னு
முப்பாத்தா கிளவி முணுமுணுக்க..!

தப்பாத தாளத்தோட அடிச்சுபாடுறான் -அவதாரம்
ஊருக்குறி சொல்லும் அய்யரோட
முத தாரத்து மவன் இவன்..என் பள்ளிக்கூட கூட்டாளி

கனடா தேசத்தில் கடன் அட்டைகளைச்சுமந்து
கணிணி முன் அமர்ந்து சிலிக்கான் வேலிக்குள்
மேகக்கணிணியம் கற்பிக்கும் இயந்திர வாழ்மனிதன்
எனக்கு

இராஜராஜன் ஆண்ட தஞ்சை மண்ணில்
கொள்ளிடக்கரை தீண்டும் புனல்வாசல்
பூர்வீகம் படிப்பு உழைப்புன்னு அயல்தேசம்
தாவி வர..
சாண்ட்விச்சுக்கும் பேகனுக்கும்
அடங்கிபோன ஐ.ஆர் எட்டு அரிசி நாக்கு...

அடுத்த வருடம் போகலாமென்று ஆறேழு முறை
நினைத்தும் தாண்டிப்போன வருட இடைவெளியில்
சில தலைமுறை இடைவெளிகளோடு சில
தலைகளும் விழுந்து போனது...!

அப்படி வாழ்ந்த மனிதர் தான் என் தாத்தன்
“இரும்பொறை” ஏழு வயசு முதல் கரும்பு
புழியப்போன முரட்டு தேகம் அவருக்கு
பெயருக்கு ஏத்தது போல இருப்புக்கார உடம்புகாரர்..

சின்னவயசில் மவ வயித்துப்பயலுன்னு
தோள் மேல என்னையும் இரண்டுக்கையில்
பெரியப்பா பெண்ணையும் தூக்கிச்சுமக்கும்
பாசக்கார தாத்தன்...!

சந்தனம் பூசிக்கிட்டு ஜல்லடை கட்டிக்கிட்டு
சுடலமாடன் கோவில் கொடைக்கு
வேட்டைக்கு அவர்ப்போகும் போது -பார்த்த
பயத்திலே காய்ச்சல் பத்திக்கும் எனக்கு...

திருநீறு பூசுய்யா சாமிக்கிட்ட என அம்மா
கிட்டக்க கூட்டுப்போகும் போது
கிடுகிடுத்துப்போகும் என்னை
அடையாளம் கண்டுக்கிட்டு அந்த
நொடி சாமி போய் தாத்தா வந்து
கண்ணில் நிப்பார்...

பெத்த பெள்ளைகள்ளாம் கரையேற
காணி நிலத்தையெல்லாம் காங்ரீட்டுக்காரனுவ
ஆக்கிரமிக்க இரத்தம் சுண்டிப்போனாலும்
என்னப் பெத்தமண்ணக் கொடுக்கமாட்டேன்னு



கொலையா நின்னவரு இன்னைக்கு
சிலையா படுத்திருக்க சுத்தி நின்ன மக்கள் எல்லாம்
தத்தம் ஒப்பாரியில் அழுது நிக்க
எண்பத்தாறு வயசில கண்ணமூடி தூங்குறாரு...
களத்துமேட்டுப்பெரியவரு...:

சனிக்கிழமை சாவுன்னு சேவக்குஞ்சி கூட கட்டி
காட்டுக்குத் தூக்கிப்போக பெரியம்மா அழுது நிக்க
அத்தோடு முடிந்தது தாத்தனின் இறுதிச்சடங்கு வீடியோ...!

நான் கேட்டேன்னு அவதாரத்திட்ட சொல்லிவைச்சு
அரியலூரில் இருந்து வந்த முத்து வீடியோஸ்- பாண்டி
அண்ணன் எடுத்தனுப்பி இருக்காரு...

முத்தம் கொடுக்கும் போது குத்திய
அந்த முரட்டு மீசை மனசோடு குத்துது..இப்போ
காதுக்குள்ல ஒலிக்குது பழம்பெரும்
 நடிகர் கல்யாண்குமாரின் குரலப்போல....
 “கண்ணமூடியும் வரலஏப்பு....ன்னு..”

நெஞ்சம் மறப்பதில்லை பாட்டுன்னா அவருக்கு அம்புட்டு இஸ்டம்...!
இரும்புக்கார தாத்தா.....!


-எழுத்து & கற்பனை
*

கார்த்திக் ராஜா...

No comments: