இன்று காலை குயில்களின் சப்தத்தில் விரைந்தே புலர்ந்தது.. பக்கத்து வீட்டின் சலசலப்புச்சத்தம் ஏனோ தூக்கத்தை கலைத்துப்போட எழுந்து எட்டிப்பார்த்தேன் வானத்தை பொழுது புலர்ந்து ஜன்னலுக்கு எதிரே நிலா சிரித்துக்கொண்டிருந்தது பங்குனி மாதத்தின் காலை...
இன்று என்ன விஷேசம் எல்லோரும் பரபரப்பாயிருக்கிறார்களே எனக் கேட்டபோது இன்று பங்குனி உத்திரம் சாஸ்தா கோவிலுக்குப்போகிறார்கள் என பட்டென பதில் வந்தது...
சுமார் 18 - வருடங்களுக்கு முன்
___________________________________
கழுத்து மணி ஜலங் ஜலங்கென ஒலிக்க.. எட்டு மேலே எட்டு வைத்த இரண்டு காளை பூட்டிய மாட்டுவண்டிகளில், தாத்தா, பாட்டிகள் [அப்பத்தா, அம்மத்தா ] அத்தை மாமன் ,சித்தி சித்தப்பன் , பெரியப்பன் , பெரியம்மை என கூட்டுக்குடும்பமாயும் , சாமிக்கு நேர்ந்த கிடா சகிதமாக சாத்தான் [சாஸ்தா] கோவிலுக்கு பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் மாலை புறப்படுவோம்...
போகும் வழியெங்கும் நிலா பார்த்துக்கொண்டே.. அப்பத்தாளின் நாட்டுப்புறப்பாட்டு... அண்ணன் தம்பிகளோடு விடுகதை விளையாட்டு அத்தை மடியில் தலை சாய்த்து உறங்காமல் நிலாவை ரசித்து கலையும் மேகங்களை உருவங்களாய் நினித்து சிலாகித்து அந்தி இரவாகி பொழுது புலரும் போது.
சீவலப்பேரி கிராமத்தில் தென் பொதிகை கரைந்து ஓடும் ஜீவநதியாம் தாமிரபரணிக்கரையின் மருங்கில் வெள்ளியெலும்பி இருக்கும் சாஸ்தா கோவிலை வந்தடைவோம்...
மாட்டுவண்டியை பெரியப்பனும் , தாத்தனும் பூட்டு கலைக்க, கொட்டடியில் இறங்கிய சொந்தங்கள் தேடி வந்து நலம் விசாரிக்கும் அசலூர்க்கு வாக்கப்பட்ட சொந்தங்களின் .. குடும்ப நலன் விசாரிக்க..
சித்தப்பன் தோள்களைத் தொற்றிக்கொண்டு ஆற்றில் குளிக்க நீ முந்தி நான் முந்தி என அடித்துப்பிடித்து ஆளாய்ப்பறக்க பரணி பாயும் கரையில் குளித்து குதூகலித்துக் கரையேறுவோம்
தூக்குச்சட்டிகளின் கூட்டாஞ்சோறு வீசும் முருங்கை இலை வாசம் மணக்க..அம்மத்தாவின் கை மணக்கும் கானத் துவையலும் காலை உணவில் பசியும் ருசியும் கலந்து பறிமாறப்படும். அம்மா, சித்தியின் கைகளில்... கூட்டாஞ்சோற்றின் ருசி இன்று வரை வேறெந்த உணவுப்பதார்த்தத்திலும் நான் கண்டதே இல்லை..
நேர்ச்சை முடி எடுக்க இழுத்துபிடித்து செல்லப்பட்ட
சித்தி மகனுக்கு மாமன் மடியில் அடித்த மொட்டை சந்தனத்தால் தக தகக்க தடவிப்பார்த்து சந்தோஷிக்கும் குழந்தை குறும்பில் தாத்தா எடுத்து தந்த புத்தாடைகளை அணிவோம்..
அடுத்த வேலையாக... சாஸ்தாவை கும்பிட அப்பத்தாவின் மடியில் தூக்கிக்கொள்ள ஆளாய் அடித்துக்கொள்ளும் தலைமுறை வாண்டுகளில் என்னை மட்டும் தூக்கிக்கொள்ள மற்றவரை எல்லாம் அந்த பாம்படக்கிளவி ஒற்றைக்கையில் தர தரவென இழுத்து சாமி பாரு சாமி பாரு என சத்தமிட்டு வேண்டுதல் வைக்கும்.
ஓங்கி உயர்ந்திருக்கம் பூடத்தை பார்த்து கை தூக்கி கும்பிட்டு முணு முணுக்கும் சமயத்தில் அதன் கண்கள் சட்டென்று கண்ணீர் வைக்கும். கண்ணீர் வர வைக்கும் கிளிசரின்கள் அங்கே எந்த பலூன் விற்பவனிடமும் கிடைக்காது இன்று வரைக்கும் ஆனாலும் அந்த ரெடிமேட் கண்ணீர் இன்றும் என்னை ஆச்சர்யப்படுத்தும் அது தான் அவர்களின் தெய்வ நம்பிக்கை(?)
[ பின்னாட்களில் நான் கடவுள் இல்லை எனச் சொல்லித்திரிவேனென என் அப்பத்தா கனவிலும் நினைத்திருக்காது]
இனி என்ன எங்களுக்கு வேலை ஆட்டமும் பாட்டமும் தான் அண்ணன்கள் கண்ணாம்பூச்சி மரமேறிக்குரங்கென ஆட்டம் போட அத்தை மகள்களோடு கிச்சுக்கிச்சு தாம்பூலம் விளையாடுவதே எனக்கு பிடித்ததாய் இருந்தது, வீர விளையாட்டுக்களை விட பெண் பிள்ளைகளோடு விளையாடுவது அத்தனை சுகம்.,
ஒளித்து வைச்ச குச்சிகளை மணலுக்குள் களைந்து கண்டு பிடித்து விளையாட அடிக்கும் ஓர் மழை...
பங்குனி உத்திரம் தோறும் தவறாமல் மழையுண்டு என
இன்னமும் சொல்வார்கள் முன்னோர்கள் கணிப்பு மீது அத்தனை நம்பிக்கை இன்றும் மழை வரலாம்.. யாருக்குத்தெரியும்.
[நான் மூட நம்பிக்கை என்று சொன்னாலும் கூட அட அடிக்கும் வெயிலுக்கு ஒரு மழை வந்தால் தான் என தோன்றுகிறதே! ஹஹ் ]
{மென்மையான இதயமுள்ளவர்கள் படிக்க வேண்டாம் இந்த **அடையாளமிடப்பட்ட வரிகளை}
**இதற்கிடையில் ஆட்டை வெட்டுகொடுக்க ஆளாலுக்கு தாங்கல் போட.. வீட்டு ஆண்கள் எல்லாம் வேட்டி மட்டும் கட்டி சட்டை போடாமல் திறுநீறு பூசிக்கொண்டு சன்னதியில் பூ கொடுக்க நிற்பார்கள்.
மஞ்சள் தண்ணீர் தெளித்து மாலை கட்டிய கிடா [ஆடு] தலையை அசைத்ததும் மல்லாக்கப்போட்டு நான்கு கால்களையும் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக்கொள்ள விம்மும் மார்புக்கூட்டை பூசாரி அருவாளைக் கொண்டு செதுக்கினார் போல அறுத்து ஆட்டின் நெஞ்சுக்குழிக்குள் கை விட்டு இருதயத்தை கத்தரிப்பார் .
இருதயத்தை படையலுக்காக கொடுத்துவிட்டு நெஞ்சுக்குழிக்குள் பழம் வைத்து அனுப்பிடுவர். அந்த இடமே ரத்தச்சகதியாய் மிதக்கும். அச்சமயம் சிறுவர்களை வர விட மாட்டார்கள் ..அண்ணன்கள் வரமாட்டார்கள். ஆனால் நான் இந்த இடங்களில் அழுது முரண்டு பிடித்து பார்க்கனும் என முதல் ஆளாக நிற்பேன்.ஏனென்று தெரியாத வயதில் ஓர் ஆர்வம் அது.**
சாஸ்தாவிற்கு படைக்கப்பட்ட ஆட்டை சமைக்க வேண்டிய வேலைகள் அடுத்தடுத்து ஆரம்பமாக ஆட்டை தலைகீழாகக்கட்டி தாத்தா தன் குறுவாளால் லாவகமாக தோல் அகற்ற பின் வெட்டப்படவும், அத்தையும் , சித்தி , அம்மையுமாக கறி சோறு தயாராகும் மணி மதியத்தை நெறுங்கவும்
முதலில் 11 ஏழைகளை அழைத்து அவர்களுக்கு பரிமாறல் குடும்பமே பரிமாறும் எச்சில் இலை அள்ளும்.. ஆளாளுக்கு ஒரு வாளியைக்கையில் எடுத்து பரிமாறக்கிளம்ப எனக்கு மட்டும் ஏனோ தண்ணீர் ஜக்கும் டம்ளரும் மட்டுமே பெரியதொரு போரில் கடைசியாக மிச்சமிருக்கும் ஆயுதமாக கிடைக்கும்.
அவர்கள் எப்போது சாப்பிட்டு கிளம்புவார்கள் என மனம் ஆளாய்ப்பறக்கும் ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் காத்திருந்து .. அவர்கள் நன்றி சொல்லி கிளம்பியதும் முதல் ஆளாக இடம் பிடித்து அமர்ந்து விடுவேன்.
ஆட்டுக்கறிச்சமையலை ஆவலாய் ருசித்து இந்தா எலும்பு கடிச்சு தின்னு டே பல்லுக்கு நல்லதுன்னு அத்தை வைக்க , ஈரல் இந்தா இரத்தம் ஊறும்ன்னு அம்மத்தா கொஞ்சம் எடுத்து வைக்க பாசமும் நேசமும் ஆறாய் ஓடும் அங்கே
உறவுகளின் இணக்கத்தில் பங்குனி உத்திரம் மீண்டும் மாலை கிளம்பி மறு நாள் காலை வீடு வந்து சேரும்போது மூன்று நாள் விழ போல பிரமிப்பை பூர்த்தி அடையும் .. என்ன வேண்டுதல் எனத்தெரியாத வயதுகளில் குடும்பத்தோடு நடக்கும் இது போலான வைபவங்களில் எத்தனை அந்நியோன்யம் இருந்தது..
எத்தனை உறவுகள் எத்தனை தலைமுறைகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தோம். ஊருக்கே சோறிடும் பண்பு எல்லாம் அங்கே தானே...கற்றறிந்தோம். மெல்ல நினைவுகள் பின்னோக்கி வருடங்கள் கடக்கிறது அதி வேகமாய்...
___________________________________________
இன்று
***************
கஸ்ட்டப்பட்டு கடந்த கால நிகழ்வுகளில் என் சிந்தனைக்கு எட்டிய நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கிறேன்...
வானம் பார்த்து கதை சொல்லும் அத்தை மடி இனி கிடைக்கப்போவது இல்லை ...
தாத்தனின் மாட்டு வண்டி,வில்வண்டி பற்றி வாய்ச்சொல் மட்டுமே மிச்சம்..
வீட்டில் கட்டிட வேலையின் போது அதிகமாக கொஞ்சம் மணல் தேவை என்றதும் பெரியவர் ஒருவர் ஓட்டி வந்த மாட்டுவண்டியில் சூம்பிப்போன தேகமுடைய காளை மாடுகளைப் பார்த்தது தான் கடைசியாக காளை மாடு பார்த்த நினைவில்...
தாமிரபரணியில் நான் குளித்த இடத்தில் இப்போது மணலும் புதர்போல் மண்டிய நாணலும் ... மணல் கொள்ளையடித்த லாரிகளின் டயர் தடங்களும் கூடவே ஒரு இருபது லிட்டர் தண்ணீர் நதியாகவும்... ஓடிக்கொண்டிருக்கிறது [சில இடங்களில் தவிர்த்து ]
சித்தப்பன் பெரியப்பரெல்லாம் அவரவர் மக்களோடு நகர எல்கைக்குள் வாழ்ந்தாலும் தேசங்கடந்தது போலான தொடர்பில் இருக்கிறார்கள் .
சாஸ்தா கோவிலைக்கூட காங்ரீட் தளம் அமைத்து அல்ட்ரா மார்டன் அய்யனாராக்கி விட்டார்கள் என்ன ஒன்று அவர் இன்னும் ஜீன்ஸ் அணியவில்லை..
அண்ணன் மூத்தவன் கோவையில் இளையவன் சென்னையில் அடுத்தவன் இன்றோ நாளையோ இரவு தூங்கப்போகும் முன் நேருக்கு நேராகப்பார்க்கலாம்
அந்த பார்வையை மீண்டும் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்கள் இடைவெளி வரும்.. இத்தனைக்கும் ஒரெ வீட்டில் இருவரும் ...
எல்லாம் மாறி விட்டது... ஆனால்
இன்னும் அந்த நிலா மட்டும் மாறவே இல்லை... என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறது... ஜன்னல் வழியே...
-கார்த்திக் ராஜா
[கவிதைக்காரன் ]
2 comments:
:) நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்முன் காட்சியாய் விரிகிறது
இனிமையான வெகு இயல்பான நடை அற்புதம் !!!
Post a Comment