Wednesday, June 20, 2012

வழக்கு எண் 18/9

நன்றி வினவு :18/9





வழக்கு-எண்-18-9-விமர்சனம்

ஆழமில்லாத பாராட்டும் நிராகரிப்பும்!

க்தி வாய்ந்த ஒரு கலை தன்னை நாடி வரும் மனிதர்களை, அறிமுகமான வாழ்க்கையினூடாக பழக்கப்பட்ட உணர்ச்சிகளில் ஆழ்த்தி பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறிந்திராத முரண்பாடுகளில் சிக்க வைத்து புத்தம் புதிய உணர்வுகளில் கரை ஒதுக்கி, சமூக உணர்வின் அறத்தை மேம்பட்ட நிலையில் பருக வைத்து ஆற்றுப்படுத்தும். அதனால் அந்தக் கலையின் பாதிப்பிலிருந்து  வாழ்வை உள்ளது உள்ளபடி கொஞ்சம் உறுதியோடு எதிர் கொள்ளும் புத்துயிர்ப்பான உற்சாகத்தை பெறுகிறோம். அந்தக் கலையின் செல்வாக்கிலிருந்து புதிய ஆளுமையின் குருத்துக்கள் உரத்துடன் நம்மிடம் முளை விடத் தொடங்கும். அது சமூக வாழ்வின் புதிய எல்லைகளை எண்ணிறந்த முறையில் திறந்து விடுகிறது. களைப்பூட்டும் வாழ்வின் நெடும் பயணம் இத்தகைய கலை உணர்ச்சியால் சாகசமும், இனிமையும், தோழமையும், போராட்ட உணர்வும் கொண்ட பயணமாகிறது.

அப்படி ஒரு கலை உணர்ச்சியை கொஞ்சம் வலியுடன் உணர்த்துகிறது வழக்கு எண் திரைப்படம். சமீபத்திய ஆண்டுகளில் கலையழகும், பொருளாழமும் கொண்ட இப்படியொரு தமிழப் படத்தை பார்த்திருக்கவில்லை. ஆனாலும் என்ன? “OK.OK” போன்ற குப்பைகளுக்குக் கூட தகுதியற்ற கசடுகள் ஓடும் காலத்தில் வழக்கு எண் எனும் வைரக்கல்லின் ஒளி சிறைபட்டிருப்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

வழக்கு எண் திரைப்படம் பிடிக்கவில்லை என்போரை விடுங்கள், பிடித்திருப்பதாக  பாராட்டுபவர்களும் கூட மேலாட்டமான ஒரு மனித நேயம் என்பதாக மட்டும் முடித்துக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகக் கேட்பதாக இருந்தால் அப்படி பிடித்திருக்கிறது என்பவர்களும் வழக்கு எண் திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்புவார்களா?

***

வேலு அனாதையாக்கப்பட்ட ஒரு ஏழை. ஜோதி தந்தையை இழந்த சேரி மகள். ஆர்த்தி பள்ளிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க மாணவி. தினேஷ் ஆடம்பரத்தில் திளைக்கும் மேட்டுக்குடி மாணவன். நால்வரும் வயதில் விடலைப் பருவத்தினர் என்றாலும் வர்க்கத்தில் வேறுபட்டவர்கள். முதலிருவரும் வாழ்வதற்காக வேலை செய்கிறார்கள். பின்னிருவரும் வாழ்விருப்பதால் படிக்கிறார்கள். கூடவே களிக்கவும் செய்கிறார்கள். மாநகரத்தில் ஏழைகளும், பணக்காரர்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. அந்தச் சார்பு பணத்தாலும், உழைப்பாலும் பறிமாறிக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் ஒரே பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமா?

முடியும் என்று பலவீனமாக சொல்பவர்களும், முடியாது என்று வேகமாக மறுப்பவர்களும் கொண்டிருக்கும் விசாரணையற்ற பொதுப்புத்தியை வாழ்க்கை எனும் உலைக்களத்தில் உருக்கி உண்மையை உணர்ச்சியுடன் உள்ளத்தில் ஏற்ற முனைகிறார் இயக்குநர். எனினும் இந்த படம் பொதுவில் உள்ளே நுழைவதற்கு சிரமப்படும். இது படத்தின் பிரச்சினையா, பார்ப்பவரின் பிரச்சினையா?

இது ஏழைகளின் படமென்றாலும் ஏழைகளுக்கு பிடிக்க வேண்டியதில்லை!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்கர வாழ்க்கையின் வழமையாகிப் போன ஆம்புலன்ஸின் அலறலோடுதான் படத்தின் டைட்டில் காட்சி துவங்குகிறது. வாடிக்கையாகிப் போன வாழ்க்கைத் தருணங்களில் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாக இயங்கும் மக்களின் ஓரிரு கணங்களையாவது இந்த துரித வண்டியின் அலறல் இடைமறிக்காமலில்லை. படத்தின் துவக்கத்திலேயே வாழ்வின் முடிவுக்கு முன்னுரையாக விளக்கும் ஆம்புலன்சின் வருகை கதையின் மர்மங்களுக்கு பீடிகை போடுகிறது.

உயரப் பார்வையிலிருந்து விரைந்தோடும் ஆம்புலன்சுக்கு அடுத்தபடியாக மருத்தவமனையின் நெருப்புக் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதியின் மங்கலான தாழ்வாரத்தில் ஒரு தாயின் சக்தியற்ற வெடிப்பு அழுகையை நடுப்பார்வை காட்சியினூடாகக் கேட்கிறோம். சற்று தொலைவில் ஆர்த்தி பெற்றோருடன் பதட்டத்தோடும் விம்மலோடும் நிற்கிறாள். சூழ்நிலைகளின் உணர்ச்சிகளை ஈவிரக்கமின்றி ஒதுக்கிவிட்டு தொழில் நுட்ப கேள்விகளை தொடுக்கும் போலீசார். காவல் ஆய்வாளர் குமாரசாமியின் வருகைக்குப் பிறகு கதையின் ஓட்டம் காவல் நிலையத்திற்கு சென்று விடுகிறது.

அதிகாரமும், ஆணவமும், கேட்பார் கேள்வியின்றி குடி கொண்டிருக்கும் காவல் நிலையமும், காவல் ஆய்வாளரின் அறையும் மொத்தப் படத்தின் கதை சொல்லிக் களனாக, மேடையாக மாறுகிறது. அழைத்து வரப்படும் வேலு கறை படிந்த பற்களுடன், இனம் புரியாத தயக்கத்துடன், இருந்தே ஆக வேண்டிய பயத்துடனும் தனது கதையை ஆரம்பிக்கிறான். அனுசரணையான கேள்விகள் மூலம் குமாரசாமி முழுக் கதையையும் வெளிக் கொண்டு வருகிறார். நாற்காலியில் அமர்ந்திருக்கும் நாமும், அவரும், நின்று கொண்டிருக்கும் வேலுவின் பலவீனமான குரலிலிருந்து வரும் வரலாற்றினை கேட்கிறோம். நிற்க வைத்துக் கேட்கப்படும் கதை உட்கார்ந்திருப்பவர்களின் மனதை தைக்க வேண்டுமென்றால் நாமும் நிற்பவனோடு பயணிக்க வேண்டும்.

ஆம்புலன்சு, மருத்துவமனை, காவல் நிலையம் என்று நகரத்து வாழ்வின் இரகசியங்களை வெளிப்படையாக பறைசாற்றும் வேகமான காட்சிகளுக்குப் பிறகு, முடிவுகளின் புதிர்களை அவிழ்க்கும் வண்ணம் ஆரம்பத்திற்கு செல்கிறோம். வேலு அனாதையான கதை ஆரம்பிக்கிறது. இந்தக் கதை முடிவில் அவனது நிலை மாறிவிடவில்லை என்றாலும் அவனைப் போன்றதொரு உறவின் கை அவனோடு நட்பு பாராட்டுகிறது. முடிவும், ஆரம்பமும் மாறி மாறி நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கின்றன.

வழக்கு எண் ஒரு ஏழையின் கதை என்பதை விட பரம ஏழையின் கதை என்று சொல்வது பொருத்தமானது. பாதையோரம் வேலை செய்து, உண்டு, உறங்கி வாழும் தெருவோர மனிதர்கள் பொது வாழ்வின் நியதிகள் எதுவும் இல்லாமல் வாழ்பவர்கள். மூடுண்ட காரிலும், ஏ.சி அறையிலும் உலகை சிறை வைத்திருப்பவர்களுக்கு சாலையோர மனிதர்கள் என்ற ஜீவன்களுக்காக செலவில்லாமல் கொஞ்சம் கருணை காண்பிப்பார்களே ஒழிய அந்த உலகினுக்குள் நுழைந்து பார்க்கும் தைரியமோ தேவையோ அற்றவர்கள்.

இருப்பினும் இயக்குநரும், வேலுவும் அன்னிய வாழ்விலிருக்கும் விதேசி மனிதர்களை இழுத்து வந்து அந்த கையேந்தி பவனுக்குள் சாப்பிட அழைத்துச்  செல்கிறார்கள். அப்போது மூக்கை சுளிக்கிறோமா, முகத்தை, கண்களை, காதுகளை, நாக்கை கொடுக்கிறோமா என்பதிலிருந்து இந்தப் படத்தோடு நம்முடைய உறவு என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது.

தரும்புரி, வட இந்திய முறுக்குக் கம்பெனி, இறுதியில் சென்னையின் கையேந்தி பவன் என்று அலைக்கழிக்கப்படும் வேலு கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் மக்களின் ஒரு வகை மாதிரி. இடைவெளிக்கு முந்தைய பகுதியில் வேலுவின் கதையே அழுத்தமாகக் காட்டப்படுகிறது. விவேகமற்ற வேகத்தையும், கேலிக்குரிய திருப்பங்களையும், பொருளற்ற நகைப்புக்களையும், பெண்ணுடலை நுகர வைக்கும் குத்தாட்டத்தையும் கொண்ட ‘விறுவிறுப்பான’ படங்களில் சிக்குண்டிருக்கும் இரசிகர்கள் எவரையும் வேலுவின் கதை ஈர்ப்பது சிரமம்.

வழக்கு-எண்-18-9-விமர்சனம்வேலுவைப் போன்றே வாழ்வில் தத்தளிக்கும் வேலுக்களும் இந்தப் படத்தை இரசிப்பது கடினம்தான். ஏழைகளுக்கே இந்தப் படம் பெரிய அளவுக்கு பிடிக்காது என்ற உண்மையை ஆரம்பத்திலேயே சொல்லி விடுவோம். ஏழைகள் எவரும் தங்களது கதைகளை ஒரு சினிமாவில் காட்டப்படும் முக்கியத்துவம் கொண்டது என்று கருதுவதில்லை. நகரத்து பெப்சி-கோக் வாழ்வை உறிஞ்சிக் கொண்டே கிராமத்தில் இழந்த பதநீர் வாழ்வு குறித்து ஆட்டோகிராஃப் நினைவுகளாக பெருமையுடன் பீற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஊர் நினைவுகள் இனிக்குமென்றால் ஒரு ஏழைக்கு கசக்கவே செய்யும். அவனைப் பொறுத்த வரை ஊர் என்பது வாழ முடியாத, அன்னிய பிரதேசங்களுக்கு துரத்தியடிக்கும் ஒரு வெறுப்பான இருண்ட உலகம்.

அதனால்தான் ஒரு ஏழை, ஒரு பணக்காரப் பெண்ணை காதலிப்பது போன்ற படங்களையே உலகமெங்கும் காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து காமரூனின் டைட்டானிக் வரையும் இந்த ஃபார்முலாவே வெற்றிகரமான கதை மாதிரி. நகரத்து நெரிசலில் உதிரிப் பாட்டாளியாக பிதுங்கி வாழும் அந்த விரட்டப்பட்ட ஏழைகளுக்கு ஒரு சிம்புவோ, தனுஷோ சேரியிலிருந்து நிறைய சேட்டைகளுடன் பணக்கார உலகத்திற்கு மாறும் கதைகளையே அவர்கள் விசில் பறக்க இரசிப்பார்கள்.

சொத்துடைமை வாழ்வால் ஏற்றத் தாழ்வாக பிரிந்திருக்கும் இந்த உலகை ஒரு இயற்கையான அமைப்பு போல மாற்ற முடியாது என்று கருதும் ஏழைகளின் ஆழ்மனத்திலிருக்கும் வாழ்க்கை குறித்த ஆசை இத்தகைய அபத்தமான ‘கனவு’ படங்கள் மூலம் தன்னைத் தணித்துக் கொள்கிறது.

கூடவே மனித சாரத்தை உறிஞ்சிக் கொள்ளும் அவல வாழ்விற்கு மசாலா நிறைந்த குத்தாட்டப் படங்களே பொருத்தமான போதையாக சிந்தனையில் இறங்குகின்றன. ஏழைக்களுக்கென்று குறைந்த பட்ச வாழ்க்கையை கிடைக்கச் செய்யாமல் இந்த போதை ரசனையை மாற்ற முடியுமா? சீசன் காலங்களில் தொடர்ந்து இரவு பகலென்று உழைப்பதற்கு பான்பராக்கும், மதுவும் கை கொடுக்கும் போது அவர்களிடம் சென்று போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊட்ட நாம்  விரும்பினாலும் அதை நிறைவேற்றுவது சாத்தியமா?

எனினும் ‘மேன் மக்களின்’ இன்ப துன்பங்களையே கதையாக, செய்தியாக, நாட்டு நடப்பாக உணர்த்தப்படும் சூழ்நிலைக்கு இவர்களும் விதிவிலக்கல்ல. கஞ்சிக்கு வழியில்லை என்ற போதும் சீதையை மீட்க இராமன் கொண்ட துன்பங்களையும், திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றிய பாண்டவர்களும்தான் நெடுங்காலம் நமது மக்களின் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த அடிமைத்தன வரலாறு இன்றும் மாறிவிடவில்லை.

ஆனால் சற்று வசதிகள் நிறைந்த மேம்பட்ட வாழ்க்கையை வாழும் நடுத்தர வர்க்கம் கூட வேலுவின் கதையை இரசித்து விடுமா என்ன? வழக்கு எண் திரைப்படம் பொதுவில் ஏழைகளை நல்லவர்களென்றும், பணக்காரர்களை கெட்டவர்களாகவே சித்தரிப்பதாகவும், இது பொதுப்புத்தியை கைப்பற்ற நினைக்கும் மலிவான உத்தியென நடுத்தர வர்க்க ‘அறிவாளிகள்’ பலர் அலுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் இயக்குநரோ, படமோ அப்படி ஒரு ‘மலிவான’ உத்தியைக் கையாளவில்லை. இருந்திருந்தால் அது அனல் பறக்கப் பேசும் விஜயகாந்த் படங்களாக சரிந்திருக்கும். மாறாக இரு வர்க்கங்களும் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள், அறங்கள், சமூக உறவுகளை எப்படி உருவாக்கிக் கொள்கின்றது, பேணுகின்றது, அவற்றின் சமூக விளைவுகள் என்ன என்பதைத்தான் படம் இதயத்திற்கு நெருக்கமான குரலில் மறக்க முடியாத ஒரு பாடலைப் போல இசைக்கின்றது.

அந்தக் கவிதையை இரசிக்க முடியவில்லை என்ற பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினையோடு தொடர்புடையது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வர்க்கம்தான் ஒரு மனிதனுடைய வாழ்வையும், பண்பையும் தீர்மானிக்கிறது என்பதை, தன்னுடைய வாழ்க்கை தன்னுடைய அறிவால் மட்டும் உதித்த ஒன்று என்று பாமரத்தனம் கலந்த மேட்டிமைத்தனத்துடன் நம்பும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் இதை ஏற்க மாட்டார்கள். அல்லது தங்களது வாழ்க்கையை சமூகப் பேரியக்கத்தோடு ஒப்பிட்டு பார்த்து ஒரு மெல்லிய சுயவிமரிசனத்தைக் கூட அவர்களால் செய்ய முடியாது.

இதை படத்தோடும், குறிப்பான பாத்திரச் சித்தரிப்புகள் வரும் கதையோட்டத்தோடும் பரிசீலிப்போம்.

No comments: