Saturday, August 25, 2012

அத்த பெத்த பச்சக்கிளி...!!!





அத்தமவ..!!
முற்றத்திலே உக்கார்ந்து 
போட்ட கோலத்துக்கு 
ஊரு கண்ணே படுமுன்னு 
திருஷ்ட்டி வைச்சவன் நானுந்தாண்டி!

கத்தாளங்காட்டுக்குள்ள 
தொட்டு புடிச்சி ஆட்டத்திலே..
தொங்கட்டான தொலைச்சுப்புட்டு 
தேம்பி தேம்பி அழுத புள்ள...!!

கலங்காதே கண்ணேன்னு
எங்கக்கா தோடெடுத்து 
அறியாத வயசிலே யாரும் தெரியாம 
உனக்கு கொடுத்தவனும் நானுந்தாண்டி!

கிணத்தோரம் தேரை [தவளை] பார்த்து
கத்தி கத்தி அழுதவளே 
உன்னச் சுத்தி சுத்தி அதவிரட்டி
சூட்ச்சமமா சிரிச்சவனும் நாந்தாண்டி!!

பள்ளிக்கூட பாதையெல்லாம் 
உன் பையத்தூக்கி திரிஞ்ச
பாவிப்பயலும் நாந்தாண்டி!!
பச்சக்குத்த தேவையில்ல - அத்தமவ 
நீதான் எம்புட்டு உசுரும் கேளு புள்ள!

நேத்துவர நேராத்தான் பார்த்துபுட்டா 
எங்கைய கிள்ளி வைப்ப..! 
மாமன் எம்மாமன்னு ஊரெல்லாம் 
சொல்லி வைப்ப! 

இன்னைக்கென்ன சமைஞ்சவன்னு 
முதுகுகாட்டி திரும்பி நிக்க
என்னென்னைக்கும் உம்மாமன் 
நாந்தாண்டி 

வெக்கமென்ன ஏவ்வுசுரே!
வெளியே வாடி பச்சக்கிளி.. 
பக்கம் வந்து நீயும் நில்லு
என் அத்தபெத்த தங்கக்கிளி...

 -கவிதைக்காரன்  

[நன்றி கவிபரணி, கோவை]

No comments: