Wednesday, April 4, 2012

திருநெல்வேலிக்காரனின் பங்குனி உத்திரம்


இன்று காலை குயில்களின் சப்தத்தில் விரைந்தே புலர்ந்தது.. பக்கத்து வீட்டின் சலசலப்புச்சத்தம் ஏனோ தூக்கத்தை கலைத்துப்போட எழுந்து எட்டிப்பார்த்தேன் வானத்தை பொழுது புலர்ந்து ஜன்னலுக்கு எதிரே நிலா சிரித்துக்கொண்டிருந்தது பங்குனி மாதத்தின் காலை...

இன்று என்ன விஷேசம் எல்லோரும் பரபரப்பாயிருக்கிறார்களே எனக் கேட்டபோது இன்று பங்குனி உத்திரம் சாஸ்தா கோவிலுக்குப்போகிறார்கள் என பட்டென பதில் வந்தது...



சுமார் 18 - வருடங்களுக்கு முன்
___________________________________

கழுத்து மணி ஜலங் ஜலங்கென ஒலிக்க.. எட்டு மேலே எட்டு வைத்த இரண்டு காளை பூட்டிய மாட்டுவண்டிகளில், தாத்தா, பாட்டிகள் [அப்பத்தா, அம்மத்தா ] அத்தை மாமன் ,சித்தி சித்தப்பன் , பெரியப்பன் , பெரியம்மை என  கூட்டுக்குடும்பமாயும் , சாமிக்கு நேர்ந்த கிடா சகிதமாக சாத்தான் [சாஸ்தா] கோவிலுக்கு பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் மாலை புறப்படுவோம்...

போகும் வழியெங்கும் நிலா பார்த்துக்கொண்டே.. அப்பத்தாளின் நாட்டுப்புறப்பாட்டு... அண்ணன் தம்பிகளோடு விடுகதை விளையாட்டு அத்தை மடியில் தலை சாய்த்து உறங்காமல் நிலாவை ரசித்து கலையும் மேகங்களை உருவங்களாய் நினித்து சிலாகித்து அந்தி இரவாகி பொழுது புலரும் போது.

சீவலப்பேரி கிராமத்தில் தென் பொதிகை கரைந்து ஓடும் ஜீவநதியாம் தாமிரபரணிக்கரையின் மருங்கில் வெள்ளியெலும்பி இருக்கும் சாஸ்தா கோவிலை வந்தடைவோம்...



மாட்டுவண்டியை பெரியப்பனும் , தாத்தனும் பூட்டு கலைக்க,  கொட்டடியில் இறங்கிய சொந்தங்கள் தேடி வந்து நலம் விசாரிக்கும் அசலூர்க்கு வாக்கப்பட்ட சொந்தங்களின் .. குடும்ப நலன் விசாரிக்க..

சித்தப்பன் தோள்களைத் தொற்றிக்கொண்டு ஆற்றில் குளிக்க நீ முந்தி நான் முந்தி என அடித்துப்பிடித்து ஆளாய்ப்பறக்க  பரணி பாயும் கரையில் குளித்து குதூகலித்துக் கரையேறுவோம்

தூக்குச்சட்டிகளின் கூட்டாஞ்சோறு வீசும் முருங்கை இலை வாசம் மணக்க..அம்மத்தாவின் கை மணக்கும் கானத் துவையலும் காலை உணவில் பசியும் ருசியும் கலந்து பறிமாறப்படும். அம்மா, சித்தியின் கைகளில்... கூட்டாஞ்சோற்றின் ருசி இன்று வரை வேறெந்த உணவுப்பதார்த்தத்திலும் நான் கண்டதே இல்லை..

நேர்ச்சை முடி எடுக்க இழுத்துபிடித்து செல்லப்பட்ட
சித்தி மகனுக்கு மாமன் மடியில் அடித்த மொட்டை சந்தனத்தால் தக தகக்க தடவிப்பார்த்து சந்தோஷிக்கும் குழந்தை குறும்பில் தாத்தா எடுத்து தந்த புத்தாடைகளை அணிவோம்..

அடுத்த வேலையாக... சாஸ்தாவை கும்பிட அப்பத்தாவின் மடியில் தூக்கிக்கொள்ள ஆளாய் அடித்துக்கொள்ளும் தலைமுறை வாண்டுகளில் என்னை மட்டும் தூக்கிக்கொள்ள மற்றவரை எல்லாம் அந்த பாம்படக்கிளவி ஒற்றைக்கையில் தர தரவென இழுத்து சாமி பாரு சாமி பாரு என சத்தமிட்டு  வேண்டுதல் வைக்கும்.



ஓங்கி உயர்ந்திருக்கம் பூடத்தை பார்த்து கை தூக்கி கும்பிட்டு முணு முணுக்கும் சமயத்தில் அதன் கண்கள் சட்டென்று கண்ணீர் வைக்கும். கண்ணீர் வர வைக்கும் கிளிசரின்கள் அங்கே எந்த பலூன் விற்பவனிடமும் கிடைக்காது இன்று வரைக்கும் ஆனாலும் அந்த ரெடிமேட் கண்ணீர் இன்றும் என்னை ஆச்சர்யப்படுத்தும் அது தான் அவர்களின்  தெய்வ நம்பிக்கை(?)

[ பின்னாட்களில் நான் கடவுள் இல்லை எனச் சொல்லித்திரிவேனென என் அப்பத்தா கனவிலும் நினைத்திருக்காது]

இனி என்ன எங்களுக்கு வேலை ஆட்டமும் பாட்டமும் தான் அண்ணன்கள் கண்ணாம்பூச்சி மரமேறிக்குரங்கென ஆட்டம் போட அத்தை மகள்களோடு கிச்சுக்கிச்சு தாம்பூலம் விளையாடுவதே எனக்கு பிடித்ததாய் இருந்தது, வீர விளையாட்டுக்களை விட பெண் பிள்ளைகளோடு விளையாடுவது அத்தனை சுகம்.,



ஒளித்து வைச்ச குச்சிகளை மணலுக்குள் களைந்து கண்டு பிடித்து விளையாட அடிக்கும் ஓர் மழை...
பங்குனி உத்திரம் தோறும் தவறாமல் மழையுண்டு என
இன்னமும் சொல்வார்கள் முன்னோர்கள் கணிப்பு மீது அத்தனை நம்பிக்கை இன்றும் மழை வரலாம்.. யாருக்குத்தெரியும்.

[நான் மூட நம்பிக்கை என்று சொன்னாலும் கூட அட அடிக்கும் வெயிலுக்கு ஒரு மழை வந்தால் தான் என தோன்றுகிறதே! ஹஹ் ]


{மென்மையான இதயமுள்ளவர்கள் படிக்க வேண்டாம் இந்த **அடையாளமிடப்பட்ட வரிகளை}



**இதற்கிடையில் ஆட்டை வெட்டுகொடுக்க ஆளாலுக்கு தாங்கல் போட.. வீட்டு ஆண்கள் எல்லாம் வேட்டி மட்டும் கட்டி சட்டை போடாமல் திறுநீறு பூசிக்கொண்டு சன்னதியில் பூ கொடுக்க நிற்பார்கள்.

மஞ்சள் தண்ணீர் தெளித்து மாலை கட்டிய கிடா [ஆடு] தலையை அசைத்ததும் மல்லாக்கப்போட்டு நான்கு கால்களையும் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக்கொள்ள விம்மும் மார்புக்கூட்டை பூசாரி அருவாளைக் கொண்டு செதுக்கினார் போல அறுத்து ஆட்டின் நெஞ்சுக்குழிக்குள் கை விட்டு இருதயத்தை கத்தரிப்பார் .

இருதயத்தை படையலுக்காக கொடுத்துவிட்டு நெஞ்சுக்குழிக்குள் பழம் வைத்து அனுப்பிடுவர். அந்த இடமே ரத்தச்சகதியாய் மிதக்கும். அச்சமயம் சிறுவர்களை வர விட மாட்டார்கள் ..அண்ணன்கள் வரமாட்டார்கள். ஆனால் நான் இந்த இடங்களில் அழுது முரண்டு பிடித்து பார்க்கனும் என  முதல் ஆளாக நிற்பேன்.ஏனென்று தெரியாத வயதில் ஓர் ஆர்வம் அது.**



சாஸ்தாவிற்கு படைக்கப்பட்ட ஆட்டை சமைக்க வேண்டிய வேலைகள் அடுத்தடுத்து ஆரம்பமாக ஆட்டை தலைகீழாகக்கட்டி தாத்தா தன் குறுவாளால் லாவகமாக தோல் அகற்ற பின் வெட்டப்படவும், அத்தையும் , சித்தி , அம்மையுமாக கறி சோறு தயாராகும் மணி மதியத்தை நெறுங்கவும்

முதலில் 11 ஏழைகளை அழைத்து அவர்களுக்கு பரிமாறல் குடும்பமே பரிமாறும் எச்சில் இலை அள்ளும்.. ஆளாளுக்கு ஒரு வாளியைக்கையில் எடுத்து பரிமாறக்கிளம்ப எனக்கு மட்டும் ஏனோ தண்ணீர் ஜக்கும் டம்ளரும் மட்டுமே பெரியதொரு போரில் கடைசியாக மிச்சமிருக்கும் ஆயுதமாக கிடைக்கும்.

அவர்கள் எப்போது சாப்பிட்டு கிளம்புவார்கள் என மனம் ஆளாய்ப்பறக்கும் ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல்  காத்திருந்து .. அவர்கள் நன்றி சொல்லி கிளம்பியதும் முதல் ஆளாக இடம் பிடித்து அமர்ந்து விடுவேன்.



ஆட்டுக்கறிச்சமையலை ஆவலாய் ருசித்து இந்தா எலும்பு கடிச்சு தின்னு டே பல்லுக்கு நல்லதுன்னு அத்தை வைக்க , ஈரல் இந்தா இரத்தம் ஊறும்ன்னு அம்மத்தா கொஞ்சம் எடுத்து வைக்க பாசமும் நேசமும் ஆறாய் ஓடும் அங்கே

உறவுகளின் இணக்கத்தில் பங்குனி உத்திரம் மீண்டும் மாலை கிளம்பி மறு நாள் காலை வீடு வந்து சேரும்போது மூன்று நாள் விழ போல பிரமிப்பை பூர்த்தி அடையும் .. என்ன வேண்டுதல் எனத்தெரியாத வயதுகளில் குடும்பத்தோடு நடக்கும் இது போலான வைபவங்களில் எத்தனை அந்நியோன்யம் இருந்தது..



எத்தனை உறவுகள் எத்தனை தலைமுறைகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தோம். ஊருக்கே சோறிடும் பண்பு எல்லாம் அங்கே தானே...கற்றறிந்தோம். மெல்ல நினைவுகள் பின்னோக்கி வருடங்கள் கடக்கிறது அதி வேகமாய்...  

___________________________________________

இன்று
***************
கஸ்ட்டப்பட்டு கடந்த கால நிகழ்வுகளில் என் சிந்தனைக்கு எட்டிய நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கிறேன்...

வானம் பார்த்து கதை சொல்லும் அத்தை மடி இனி கிடைக்கப்போவது இல்லை ...

தாத்தனின் மாட்டு வண்டி,வில்வண்டி பற்றி வாய்ச்சொல் மட்டுமே மிச்சம்..

வீட்டில் கட்டிட வேலையின் போது அதிகமாக கொஞ்சம்   மணல் தேவை என்றதும் பெரியவர் ஒருவர் ஓட்டி வந்த மாட்டுவண்டியில் சூம்பிப்போன தேகமுடைய காளை மாடுகளைப் பார்த்தது தான் கடைசியாக காளை மாடு பார்த்த  நினைவில்...

தாமிரபரணியில் நான் குளித்த இடத்தில் இப்போது மணலும் புதர்போல் மண்டிய நாணலும் ... மணல் கொள்ளையடித்த லாரிகளின் டயர் தடங்களும் கூடவே ஒரு இருபது லிட்டர் தண்ணீர் நதியாகவும்... ஓடிக்கொண்டிருக்கிறது [சில இடங்களில் தவிர்த்து ]

சித்தப்பன் பெரியப்பரெல்லாம் அவரவர் மக்களோடு நகர எல்கைக்குள் வாழ்ந்தாலும் தேசங்கடந்தது போலான  தொடர்பில் இருக்கிறார்கள் .

சாஸ்தா கோவிலைக்கூட காங்ரீட் தளம் அமைத்து அல்ட்ரா மார்டன் அய்யனாராக்கி விட்டார்கள் என்ன ஒன்று அவர் இன்னும் ஜீன்ஸ் அணியவில்லை..

அண்ணன் மூத்தவன் கோவையில் இளையவன் சென்னையில் அடுத்தவன் இன்றோ நாளையோ இரவு தூங்கப்போகும் முன் நேருக்கு நேராகப்பார்க்கலாம்
அந்த பார்வையை மீண்டும் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்கள் இடைவெளி வரும்.. இத்தனைக்கும் ஒரெ வீட்டில் இருவரும் ...

எல்லாம் மாறி விட்டது... ஆனால்

இன்னும் அந்த நிலா மட்டும் மாறவே இல்லை... என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறது... ஜன்னல் வழியே...
                          


-கார்த்திக் ராஜா

[கவிதைக்காரன் ]

Sunday, April 1, 2012

எனக்கென ஓர் வானம் ... இறக்கைகள் விரித்து

நேற்றோடு எதிர்பார்க்கின்றன
என் மாற்றங்களின் சிறகுகள்
தமக்கும் சொந்தமென ஓர் வானம்
வேண்டுமென்று...!

நானெங்கு போவேன்
என் வீதிக்கே விடைகளில்லாத
கேள்விகள் ஆயிரமாயிரமென்னைச்
சூழ்ந்துகிடக்க..

வானத்தை வசப்படுத்த நான்
கனவைத்தான் கடன் வாங்க வேண்டும்
ஆனாலும் துளிர்க்கும் ஓர் நம்பிக்கை...

துப்புறவுப்பணியாளனாய்...
அகந்தைகளை அகற்றிக்கொண்டே
தினம் கடந்து போகின்றது...மனம்...

என்றாவது வானம் வசப்படுமென்ற
நம்பிக்கையில் நான் உறங்கச்செல்கிறேன்
என் மாற்றங்களை மறுபரிசீலனை செய்துகொண்டே...

-கவிதைக்காரன்

Saturday, March 24, 2012

தேங்கிப்போன குட்டைகளா நீங்கள்?

வறண்டுபோன உங்கள்
நதி விண்மீன்களையும்
கூட இனி சுமப்பதாயில்லை

விதையில்லாத மரங்களின்
வேர்கூட விறகிற்கும்
சேர்ப்பதாயில்லை

பனியும் புல்லும்
பசுக்களுக்கும் இல்லாமல்
போனபோதும் கவிதை கவிதையென
காலைக்கு அதையே கட்டி அழுகின்றீர் ஏனோ!

இன்னுமின்னும்
எத்தனைகாலம் புளித்த
தயிரையே பாலுக்கு உரை ஊற்றிக்கொண்டிருப்பீர்

புதிது புதிதாய் அடையாளம்
காணப்படவேண்டிய
களம் கண்ணுறங்கிக்கொண்டிருக்க

மீண்டும் மீண்டும் எழுதிய வரிகளையே
இடம் வலம் மாற்றிப்போட்டு
இதுவும் கவிதையென

எத்தனை நாட்கள் கடத்தி
திரிவீர்?

உங்கள் பழையனவான
வார்த்தைகளை
கொஞ்சம் புதைத்துவிட்டு
புதிய திசையை தேடுங்கள்

சலிக்கவைக்கவில்லையா
உங்கள் செத்துப்போன
உவமைகள்

மீண்டும் மீண்டும்
ருசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
ரசப்புளிகளா நீங்கள்?

துவர்த்துப்போய் துவண்டுபோகாமல்
புதியதாய் தேடித்திரிந்து அலைந்து
படைக்கும் படைப்புகளில்
அர்த்தப்பட்டிருக்கின்றது

புதுக்கவிதைகளின் உதயம்..!

ஒரே சாயல் உங்களை
மக்கச்செய்தால் பரவாயில்லை
மக்காக்கிச் சென்றால்...! ???

இன்னும் நீங்கள்
குண்டுச்சட்டிக்குள்ளே
குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றீர்களா

தயவு செய்து உங்கள் குதிரையையாவது
மாற்றித் தொலையுங்கள்
புதுக்கவிதையாளர்களே..!

-கவிதைக்காரன்

Tuesday, March 20, 2012

ஆரெனின் கண்டால் சொல்வீர்...



 



செம்பொட்டு புலரும் காலை நிதம்
வானில் பறந்து பாங்காய்..

சிலிர்க்கும் சிட்டே கொஞ்சம்
கேளென் இசைக்கும் நெஞ்சம்...

பெட்டைக்குருவி உன்னை
பேணமறந்து போனோம்..!

முற்றும் அழிந்த பின்னே
இங்கே நினைவுநாளா விளக்குகின்றோம்..

அலைகற்றை எழுப்பும் தாக்கம்
சிதைந்ததெம் மழலை ஏக்கம்..!

உச்சிமிகப்பழுக்கும் வயதில்
காணவோ நீயும் இல்லை...

எத்தனை மரங்கள் கொன்றோம்...!
எத்தனை பறவை தின்றோம்...!

வலைஉலகம் சுமக்கும் பெயரை -எம்மையும்
அறியாமல் வல்லூறாய் வதைத்தே கொன்றோம்..

நெற்றை கொடுக்கும் கைகள் -நிதம்
உன்னை காணாது கண்கள் தேங்கும்...!

ரெட்டை சிறகு போதும் ஆரெனின்
எனக்குத் தாரும்...

பீடித்த மானுடம் வேண்டாம்
நீ வாழ்ந்த வெறுங்கூடெனக்குப் போதும்...

யாரெனில் எனக்குச்சொல்வீர்
ஆங்கோர் குருவி கண்டால்..

-கவிதைக்காரன்

Friday, March 9, 2012

உடைந்த சில்லுகளாய் மனம்..





என் வழித்தடங்கள் எல்லாம்
வெறுமையால் நிரப்பப்பட...

போகும் பாதையெல்லாம் வேண்டா வெறுப்பாய்
நிலவும் கதிருமென்னை அன்னிச்சையாய்

ஆக்கிரமித்துக்கொள்ள
நிழல் என்னை நீங்காத இருள் என்னை பீடித்துக்கொண்டது..!

பெரும் போக்கிடமில்லாதவனாக
நாடியவரோடேயே நட்போடு அண்டிக்கிடப்பதால்

உனதருமையும் தரமிழந்து போகிறதோ!
மற்றான் மணம் புதிதென்பதால் தானோ

உன்னையே கண்முன் எடைபார்க்கவும்
துணியும் அன்போ...இவையெல்லாம்

எதை எதிர்ப்பார்த்து நின்றாய்
ஏமாற்றம் உன்னைச்சாய்த்துப்போட...கலங்காதே...

இல்லாத அருமை இருக்கும் பேருக்கும்
உணரும் வரை நீயும் நானும் மட்டுமில்லை
தனிமைக்கும் நீயே துணையாவாய்...

சில நேரம் சமாதானப்பட்டுக்கொள்ள முனைந்தாலும்
சட்டென உடைந்த கண்ணாடிச்சிதறல்களாக என்னைச் சாய்க்கப்பார்க்கிறதே.. என்செய்வாய்...
**
முள்ளுக்கு வேலி இல்லை என..
முடங்குதல் அழகோ..!

உன் வானம் பின்னால் ஆயிரம் விண்மீன்...
வாழக்கற்றுக்கொள்வதைக் காட்டிலும்

வாழ்ந்துவிடல் நன்றாமே.. குழந்தையாய்
கொஞ்சம் தவழ்ந்து போவது

தாழ்ந்து போவதிலும் நன்றென்பாய்...
வா... ஒரு மின்னல் மழை ரசிக்க...

வெயில்காலம் மழைக்காலம் மாறி வந்த போதும் கவிதைக்கு குறைவா என்ன உன்னிடம்... !

கவலையை கடவாய் மனிதா!
ஏதுமில்லை வெற்றிடம் காற்றோடும் கதை பேசலாம்..!

Wednesday, February 29, 2012

பிரைவேட் நம்பர் காலிங் யூ....! நேரம் நள்ளிரவு 12:00 மணி



ஆழ்நிலை தூக்கத்தில் மிதந்துக் கொண்டிருந்தேன். ‘செல்லம்...ஐ..லவ்.... யூ’ என்று கைபேசியில் பிரகாஷ்ராஜின் குரல் என்னை எழுப்பியது. தூக்கம் கலைந்து, கண்களை மூடியவாறுப் பேசத் தொடங்கினேன்.

“வணக்கம் யார் பேசறிங்க..?”

“வணக்கம் மணி, நான்தான் தேவி பேசறேன்.”

பெயரும் குரலும் பரிட்சயமில்லாததால், தொலைபேசி எண்ணைக் கவனித்தேன், ‘ப்ரைவட் நம்பர்’ என இருந்தது.

“ம்.. நீங்க...”

“பார்த்திங்களா மறந்துட்டிங்க...என்னங்க நீங்க..”
“...................” (நான்)
அந்த குரல் மீண்டும்,

“நீங்களும் மறந்துட்டிங்களா..?” அவள் அழுதாள். அது அழுகையா சிணுங்கலா என்று தெரியவில்லை. நான், “அப்படியில்லைங்க.. எனக்கு ஞாபக சக்தி குறைவு. நீங்களே சொல்லுங்களேன்.” என்றேன்.

அவள் செல்லமாகச் சலித்துக் கொண்டாள். “ம்.. நானே சொல்றேன். நான் தேவி. ஒரு தடவை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்திதிருக்கோம். நீங்கதான் அறிவிப்பு செய்தீங்க...கவிதைகூட சொன்னீங்க. நான், கடைசியா உங்ககிட்ட வந்து பேசி உங்கள் கையொப்பம் கேட்டேன். நீங்களும், ‘நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் நண்பன்’ ன்னு எழுதிக் கொடுந்தீங்க..”

ஏதோ ஒரு பெண்ணின் முகம் லேசாக நினைவுக்கு வந்தது. கண் திறக்காமல் சிரித்தேன்.

“ஓ, நீங்களா..? உங்களுக்கு மட்டுமில்லை நான் எல்லார்க்கும் அப்படித்தான் கையெழுத்து போடுவேன். சரி என்னங்க இந்த நேரத்தில்..?” என்றேன். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். பேசலாமா..?” தூக்கம் ஒரு புறம் இழுத்தாலும், மறுபக்கம், அந்த தேவியின் குரல் என்னை இழுத்தது.

“ம்.. என்ன பேசப் போறிங்க..?” என்று கேட்டேன்.

“தற்கொலை செய்துக்கிறது கோழைத்தனமா..?” என்று பதில் கேள்வி கேட்டாள் தேவி.

 “ஏங்க திடிர்னு இந்த கேள்வி..?”

“பதில் சொல்லுங்களேன்..”

“தற்கொலை செய்றது தைரியமான செயல்..”

“அப்படியா..?!”

“ஆமாங்க, வாழ்க்கையை முழுமையா வாழ பயந்து சிலர் எடுக்கிற சில நிமிட தைரியமான முடிவுதான் தற்கொலை.சரிங்கா ஏன் இப்படி ஒரு கேள்வி..?”
தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போய் முழு விழிப்பு நிலைக்கு வந்திருந்தேன்.

“நான் தற்கொலை செய்யலாம்னு இருந்தேன்” என்றாள் தேவி. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“என்னங்க சொல்றிங்க..?”

“அவசரப்படாதீங்க..இன்னும் சொல்லி முடிக்கல..தற்கொலை செய்யலாம்னுதான் போனேன். அப்போ ஒரு ஆசிரமத்தின் தொலைபேசி எண் கிடைச்சது..சரி கடைசியா என் பிரச்சனைக்கு இங்க தீர்வு கிடைக்கலாம்னு நினைச்சி போன் செய்தேன். அவங்க பேசினது எனக்கு ஆறுதலா இருந்தது. தற்கொலை முடிவை கைவிட்டுட்டு, இப்போ அந்த ஆசிரமத்துலதான் இருக்கேன்.”

எங்கள் பேச்சை மேலும் தொடர விடாமல், இடையில் புகுந்தது அவன் குரல்,

“மாமா இன்னும் தூங்கலையா? மணி என்ன மாமா...?”

“போன் பேசறன்.. மணி ஒன்னாவப்போகுது. நீ தூங்குடா. நான் அப்பறம் தூங்கறேன்..”

“ச..ரி மாமா..”

வார்த்தைகளை உளறி, அந்தக் குரலின் தூக்கம் தொடர்ந்தது. அது என் அத்தை மகன். அத்தை வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருப்பதால் அவனோடு ஒரே அறையைப் பகிர்ந்துக் கொண்டிருந்தேன்.

‘அப்படியென்னங்க பிரச்சனை.?”

“அதை தெரிஞ்சி நீங்க ஒன்னும் செய்ய முடியாதே.. ஏன் கேட்கறிங்க..?..ம்..”

“என்னைப் பொறுத்தவரைக்கும், நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றுக்குமே.. ஒரு காரணம் இருக்கும்.. இப்போ நீங்க இந்த நேரத்தில் என்கிட்ட பேசறது கூட ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்னாதான் இருக்கும்னு நம்பறேன்..” என்றேன் சிரித்தவாறே.

“பரவாயில்லையே, கவிஞருக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே.. சரி..சரி என் கதையைக் கண்டிப்பாகச் சொல்லணுமா..?”

“தேவி. அது உங்கள் விருப்பம்.. நாளைக்கு காலையில நான் அலுவலகத்தில் இருக்கணும். அதுக்குச் சீக்கிரம் படுக்கணும். நாம நாளைக்குப் பேசலாமா..?”

“ம்.. சரிங்க மணி. நாளைக்கு நானே ‘கால்’ செய்றேன். குட் நைட்..”

பேசி முடித்த பிறகு, யோசித்தபோது அன்று சந்தித்தவளின் முகம் ஞாபகத்தில் வரவில்லை. தற்கொலை செய்யும் அளவுக்குத் தேவிக்கு அப்படி என்ன பிரச்சனை..?

ஒருநாள் தானே பார்த்தோம். அதை ஏன் என்கிட்ட சொல்லனும்..? இப்படிப் பல கேள்விகளுக்கு நாளை பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலையணையில் முகம் புதைத்தேன்..
--------------------------------------------------------------------------------
மறுநாள் காலை நாளிதழ் படித்ததும் அதிர்ச்சி. இளம் பெண் தற்கொலை என்றிருந்தது. உடனே கைபேசியை எடுத்து நேற்று இரவு பேசிய எண்ணை தேடினேன். இரவு பேசியதாக எந்த எண்ணும் இல்லை. குழப்பம் என்னைச் சூழ,

நேற்றுத் தேவியிடம் அவளது பிரச்சனையை கேட்டிருக்கலாமே என தோன்றியது. ஒரு வேளை அவளது தற்கொலைக்கு நானும் மறைமுகக் காரணமாக இருந்திருப்பேனோ..? அவள் தற்கொலைக்கு முன்தான் என்னிடம் பேசினாளோ..? ஒருவேளை போலீஸார் அந்தக் கைபேசியை பரிசோதித்தால், என் மீது சந்தேகம் திரும்புமோ..?

தற்போதுதான் எழுத்தாளனாகவேண்டும்ன்னு போராடி அச்சமயத்தில் கிடைத்த அரசு வேலையில் சேர்ந்து குடும்ப பாரத்தை குறைக்கத் தொடங்கியுள்ளேன். இந்த நேரத்தில் இப்படியோர் இடியை என் குடும்பம் தாங்காது. இன்றைய தினம் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டேன். சீக்கிரம் என்பது எங்களைப் பொருத்தவரை இரவு மணி 10.00.

இரவும் எனக்குப் பகல் போலத்தான் தோன்றியது. ஏனெனில் காலையில் ஏற்பட்ட குழப்பம் என்னை யோசிக்கவிடாமல் தடுத்தது. நள்ளிரவு மணி 12.00.

“செல்லம்..ஐ..லவ்.............................”

கைபேசியைத் தொடர்ந்து கத்தவிடாமல் உடனே எடுத்தேன். மறுமுனையில் அவள்தான்..

“என்ன மணி பயத்தில் இருக்கிங்களா...?”

“என்ன...எ...ன்...ன... சொல்றிங்க..?”
 
“இல்ல..அமைதியா இருக்கிங்க அதான் கேட்டேன்”

 பெருமூச்சுடன் ஆரம்பித்தேன்,“இப்போதாவது உங்கள் பிரச்சனை என்னன்னு சொல்லுங்களேன் ப்லீஸ்” அவள் சிரித்தாள்.

அவள் இன்னும் உயிரோடு இருப்பது எனக்கே என் உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது. எப்படியும் இன்று அவளது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்தேயாக வேண்டும் என முடிவெடுத்தேன்.

“எல்லாத்தையும் ‘போன்ல’ சொல்ல முடியாது மணி. வேணும்னா நான் தங்கியிருக்கும் ஆசிரமத்துக்கு வாங்களேன்....”

 “அதுக்குள்ள நீங்க ஏதும் செய்துக்க மாட்டிங்களே.?”

“ச்சே..ச்சே.. முகவரி கொடுக்கறேன் எடுத்துக்கோங்க...”

தேவி சொன்ன முகவரியைக் குறித்துக் கொண்டேன்.

 “மணி நீங்க வந்து நான் நெறைய பேசனும். ஏன்னு தெரியலை உங்ககிட்ட சொன்னால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னு தோணுது அதான்.. தப்பா எடுத்துக்காதிங்க.. நான் தப்பான பொண்ணு கிடையாது..!”

என்றவாறே அவள் மெல்ல கலங்கினாள்.

“தேவி. நான் அப்படி நினைக்கலை, கவலைப்படாதிங்க. உங்கள் பிரச்சனைக்கு என்னால தீர்வு கிடைக்கும்னு நீங்க நம்பறீங்க. நிம்மதியா இருங்க நாளைக்குச் சந்திப்போம்.”

 இவ்வாறு பேசி முடிக்கவும், என் அத்தை மகன் படம் பார்த்துவிட்டு படுக்க என் அறைக்கு வரவும் சரியாக இருந்தது.

“என்ன மாமா.. இப்போல்லாம் ராத்திரி அடிக்கடி ஏதோ பொண்ணுகிட்ட பேசறிங்க.. இதெல்லாம் நல்லாயில்லை..”

“ஏன் ரவி..?”

 “இல்ல..! எனக்கும் ஒரு நம்பரைக் கொடுத்தா நாங்களும் பேசுவோல..”

 “அடப்பாவி .. அதான் மாமான்னு கூப்ட்றியா என நக்கலடித்தேன் ..?”

படுத்துத் தூங்குடா..என பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டேன் .” - மாமா என்ற ,மரியாதையை இழந்துகொள்ள துணியவில்லை.

மறுநாள் அதிக சிரம்மில்லாமல் தேவியின் வீட்டை அடைந்தேன், இல்லை... அது, ஆசிரமம்தான் ஆனால் பார்ப்பதற்கு வீடு போல் இருந்தது.

இப்போது பல இடங்களில் வீட்டை வாங்கிச் சில பிள்ளைகளை வைத்து இது ஆசிரமம் என்று சொல்லி பணம் வசூலிக்கும் கூட்டம் பெருகி வருவது என நினைவுக்கு வந்தது.

ஆசிரமத்தின் வெளியே நின்றேன். “தேவி” என அழைத்தேன்.

 “பரவாயில்லையே , சொன்ன மாதிரி வந்துட்டிங்களே..?” தேவியின் குரல்தான் அது. என் பின்னால் இருந்து கேட்டது.

திரும்பி, “என்னங்க உள்ளே இருந்து வருவிங்கன்னு பார்த்தா என் பின்னால இருந்து வரிங்க...! ” என்றேன். அவள் சிரித்தாள்.

 ஓ! இவளா? அன்று பார்த்தவள் தான் என சமாதானப்படுத்திக்கொண்டேன் மனதை . அவள், “கொஞ்சம் வெளியே போயிருந்தேன். நல்லவேளை சீக்கிரமா வந்துட்டேன்... வாங்களேன்... நடந்துகிட்டே பேசலாம்... ”என்றாள்.

நடக்கத் தொடங்கினோம், பல நாட்கள் பழகியவள் போல் அவளது அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கினாள்

“ஏன்னு தெரியலை மணி..! உங்ககிட்ட என் சோகத்தை சொன்னாக்கா... எனக்கு ஆறுதல் கிடைக்கும்னு தோணுது, அதான் சொல்றேன்.. நான் உயிருக்கு உயிரா காதலிச்சவன் என்னை ஆபாசமா படமெடுத்து என்னையே பயமுறுத்தினான்.

எனக்கு வேற வழி தெரியலை..அதான் தற்கொலைக்குத் தயாரானேன்..ம்... ஆனால் அது முடியலை.... இப்போ இந்த ஆசிரமத்தில் இருக்கேன் .அதும் எவ்வளவு நாள்னு தெரியலை..” பேசிக்கொண்டே வந்தவள் திடீரென அமைதியானாள்.

நடந்துக் கொண்டே அவளுக்கு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தேன்.


“தேவி, இப்போ இந்த மாதிரி ரொம்ப நடக்குது. காதலிக்கறதா சொல்லி பொண்ணுங்களை இப்படி படமெடுத்து அந்த பொண்ணுங்க வாழ்கையையே நாசமாக்கிடறாங்க.. அவங்களை..”

என நான் முடிப்பதற்குள், ஆவேசமாக, அவள் சொல்கிறாள் “கொல்லணும்... கொல்லணும்... நிச்சயம் கொல்லணும்..”

தேவியின் குரல் மட்டும் கேட்கின்றது. சட்டென்று திரும்பிப் பார்க்கிறேன். இதுவரை என்னுடன் நடந்து வந்தவளைக் காணவில்லை. சுற்றிலும் தேடுகிறேன். அவளைக் காணவேயில்லை. எனக்கு உடம்பெல்லாம் வியர்க்கத் துவங்குகிறது. இது எப்படிச் சாத்தியம்...! என் கழுத்தில் இருக்கும் முருகனின் படத்தைப் பிடித்தவாறே மீண்டும் ஆசிரமத்தின் வாசலில் நிற்கின்றேன்.

ஒருவர் உள்ளிருந்து வந்து என்னை விசாரித்துவிட்டு , “அப்படி யாரும் இங்க இல்லைங்க தம்பி. இங்க சின்ன பிள்ளைங்கதான் இருக்காங்க..” என்று சொல்லி, என் பயத்திற்கு அணைவெட்டுகிறார். பயம் என் உடலில் பரவி இன்னும் கூடுதலாக வியர்க்க ஆரம்பித்தது.

தேவியின் முகத்தை வேறேங்கோ பார்த்ததுபோல் தோன்றுகிறது. மூளையைக் கசக்கி யோசிக்கிறேன்.

ஆமாம்...ஆமாம்... ஒரு முறை அத்தை மகன் ரவியின் கைபேசி விடியோ ரெக்கார்டரில் ஏதோ ஒரு பெண்ணின் நிர்வாணப்படம் இருந்தது. அன்று அவனை திட்டியதும் புத்திமதி சொன்னதும் நினைவு வந்தது.... அது..அது.. தேவியின் முகம்தான். அன்று இளம் பெண்ணின் தற்கொலை என பத்திரிக்கையில் வந்த படமும் இவளுடையதுதான்.

அப்படியென்றால் ரவிதான் அவனா.....! குழப்பத்துடன் வீடு திரும்பினேன்.

இரவு மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அத்தை புலம்பினார், “என்ன புள்ளயோ எப்பப் பார்த்தாலும்... விடிஞ்ச பிறகுதான் வீட்டுக்கே வரான்..என்னதான் செய்யறதோ தெரியலை..”

ரவி இன்னும் வீடு திரும்பவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. முதல்நாள் நள்ளிரவு இருந்து நடந்தவை எல்லாம் என் மனதில் இன்னொருமுறை திரைப்படம்போல் ஓடியது.

தேவியின் அழைப்பு
பத்திரிக்கைச் செய்தி,
தேவியின் மறு அழைப்பு,
ஆசிரமப் பயணம்
கொல்லணும் நிச்சயம் கொல்லணும்
மாயமாகும் அவள்
அந்தப் பேருல யாருமில்லைங்க தம்பி.

அப்படியென்றால், அவள் கொன்றது...

 நள்ளிரவு மணி 12.00.

தூக்கிவாரிப்போட்டது எனக்கு... என் கட்டிலுக்குப் பக்கத்தில் ரவியின் கைபேசி அலறியது. முன்பு நான் பல முறை முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாத அதே கைபேசி.


அலறிக் கொண்டிருக்கும் கைபேசியில், அழைப்பவரின் பெயரை அதிர்ந்து போய் பார்க்கிறேன்.


அது ‘பிரைவட் நம்பர்' என்று பளிச்சிடுகிறது!