கைகளில் அழகுபடுத்திய மருதாணியுடன்
புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்..
கைபேசியில் பேசிக்கொண்டே எனைக் கடந்தபோது
வெகுநேரம் முன்வந்து தொந்தரவு செய்த என் ஒற்றை முடியை
காதோரம் ஒதுக்கி விட்டுச் சென்றாயே..
அந்த நொடியில்..
அருகமர்ந்து பேசியபடியே
உன் தோள் சாய்ந்து தூங்கியிருந்தேன்..
ஏதும் சொல்லாமல் என் பக்கமாய்
உன் தலையை சாய்த்துக்கொண்டாயே..
அந்த நொடியில்..
நானே செய்ததாகச் சொல்லி
உன்னிடம் நீட்டிய பலகாரத்தை
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
“சூப்பரா இருக்குப்பா“னு சொல்லி சமாளித்தாயே..
அந்த நொடியில்..
பேருந்துப் பயணத்தின் கூட்டத்தினிடையே
என்னை உற்று நோக்கிய யாரோ ஒருவனை
எரித்துவிடுவதாய் பார்வை வீசினாயே..
அந்த நொடியில்..
ஒவ்வொரு முறையும்
எனக்கான பிறந்தநாளை மறந்துவிட்டு,
கோபித்துக்கொண்ட என்னை சமாதானம் செய்ய
ஏதேதோ கோமாளித்தனங்கள் செய்வாயே..
அந்த நொடியில்..
புதிதாய் வாங்கிய பேனாவை
எழுதிப்பார்க்க ஆசைப்பட்டு ஏதோ கிறுக்கினாய்..
என்னவென்பதை எடுத்துப் பார்க்க
என் பெயர் இருந்ததே....
அந்த நொடியில்..
அழைபேசியில் வரும் கணிணி குரலை
“சொல்லுடா செல்லம்“ என அழைத்து
வேண்டுமென்றே வெறுப்பேற்றி
என்னிடம் அடி வாங்குவாயே..
அந்த நொடியில்..
புதிதாய் புடவை உடுத்திவந்த என்னை
செல்லமாய் தலையில் குட்டி
“எப்டி சேலை கட்டிருக்க பாரு“என தரையமர்ந்து
கீழ் மடிப்புகளை சரிசெய்தாயே..
அந்த நொடியில்..
எப்போதும் பேர் சொல்லியே அழைக்கும் நீ
காதல் அதிகமாகும்போது மட்டும்
“கோழிகுஞ்சு“என என்னிடம் சிணுங்குவாயே..
அந்த நொடியில்..
சொர்க்கமும் நரகமாய்
நீ அருகிலில்லாத இந்த காதலர் தினம்..
பிரிவின் ஏக்கத்தில் தவித்துக்கிடந்த தருணம்
உன்னிடம் வந்த குறுஞ்செய்தி.. “ஐ மிஸ் யூடி கோழிகுஞ்சு“..
இந்த நொடியில்...
.
.
“ஐ லவ் யூடா”
.
No comments:
Post a Comment