Saturday, February 18, 2012

யாரிவனென்றறிய...





சற்றுமுன் தண்டவாளங்களுக்கருகே
 வேகமாய் என்னை
கடந்து போன ஒருவன் சற்று
தூரத்திலிருந்து முறைத்துப்
பார்க்கிறான்.

கொஞ்சமும் அவன் பார்வை
என்னை விட்டு அகலாமல்
வெறித்துப்பார்ப்பதால் அவன்
என்னைத்தான் பார்க்கிறான்

என்பதை உறுதி செய்துகொண்டேன்  
மேலும் யாரவன் என்பதை
சிந்திக்க தொடங்க அந்த நேரம்
சரியாக இருக்குமென ஆரம்பித்தேன்.

இதுவரைக்கும் சண்டைகள் போடாதவனாக
இருக்க வேண்டும்...
இதுவரைக்கும் என்னால் தூற்றப்படாதவனாக
இருக்க வேண்டும்...
இதுவரைக்கும் நான் புறக்கணித்தவர்களில் ஒருவனாக
இல்லாமலிருக்க வேண்டும்...

ஏனெனில் இவையெதிழும் அவன் முகச்சாயல் தாங்கியவனைக்கண்டதில்லை..

இப்போது என்னை ஒரு பயம்
அப்பிக்கொண்டது கொஞ்சம்
இருள் படர்ந்தது போல
இருந்த அவன் முகம் வெளிச்சம் மெல்ல
படர்ந்ததாய் என் பார்வைக்குப்புலப்பட!

கொஞ்சம் திகிலுறும் போது அது நடந்திருந்தது..
ஆளில்லாத அந்த இரும்புப்பாதை தடத்தை
கடக்க வேகமாய் சென்று இரயிலடிபட்டு
இறந்து போனான்...

கழிவு மீனுக்கு காத்திருக்கும்
காகக்கூட்டம் போலவும்
மாலை நேர இறைச்சிக்கடையில்
வாலாட்டி நிற்கும் நாய்கள் போலவும்

கூட்டம் அவனைச்சூழ்ந்து கொள்ள
இடைவெளிகிடைக்காத இடங்களில்
மெல்ல நிழைந்து அவனை அருகினேன்

வெள்ளைச்சட்டை அணிந்திருந்த
அவன் இரத்தச்சகதியில்
சிவந்து போயிருந்த ஆடைக்குள்
இறந்துகிடந்தான் .!!

அருகாமையிலிருந்ததால்
இப்போது அவன் முகம்
இன்னும் தெளிவாய்ப்பட்டது
ஆம் அது நானாக  இருந்தது...!


எண்ணம் & எழுத்து
-கவிதைக்காரன்

No comments: