Sunday, February 10, 2013

நீயும் நானும்....!?


காலை வணக்கங்கள் சகோக்களே சகாக்களே...!

நேற்றைய இரவில் நீயா நானா ? நிகழ்ச்சியை நீங்கள் பார்த்தீர்களா... உங்களில் சிலர் பார்த்திருக்களாம்,.

நிகழ்ச்சியை பார்க்கும் போது நிச்சயமாக என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறேன் [!] என்ற பயம் வந்து என்னைத் தொற்றிக்கொண்டது...

இளைய சமுதாயம் என்ன தெரிந்துகொள்கிறது என்பதை விட எல்லாம் தெரிந்துகொண்டது மாதிரியான ஒரு மாய தோற்றத்தை உருவாக்கிக்கொண்டு திரிவதை காணும்போது

அட! நாம் படிக்காமல் போனோமோ அதிகம் என்று பலவிஷயங்களிலிருந்து எனக்குள் மேலெழும் சமூகக் கோபங்களை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டதை நினைக்கிறேன். வருத்தமே மேலோங்குகின்றது. இதைத்தானா இந்த கல்வி போதிக்கிறது...

எவ்வளவு நாட்கள் வேதனைப்பட்டிருக்கின்றேன், உயர்கல்வியைத்தாண்டிடமுடியாமல் குழந்தைத்தொழிலாளியாக ஆரம்பித்து இன்றைய நிலையை அடையப் பெற்றவரைக்குமான என் ஆற்றாமைகள் பெரிது.

ஆனால்
படித்தவர்களின் இந்த சமுதாயம் தனக்கு தெரிந்துகொண்டதை வைத்துக் கொண்டு, மீடியா வெளிச்சத்தில் விழும் நிகழ்வுகளை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டு, ஏதேனும் இரண்டு சம்பவங்களை இணைத்து முடிச்சுப்போட்டு இரண்டுக்குமான கொந்தளிப்புகளை வித்யாசப்படுத்தி எல்லோரையும் எளிதாக கேலிக்குரியவராகச் சித்தரிப்பதோடு நிறுத்திக்கொள்கின்றது.

கைக்குட்டை அளவுக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளாமல் வெறும் மேம்போக்கான வாதங்களை மட்டுமே பேசுகின்றது. பொதுப்புத்தி சிந்தனையை வலுவாக தனக்குள் பதியமிட்டுக்கொள்கின்றது... சகக்கூட்டத்தில் நான்குபேஎர் ஒருவரைக் கெட்டவராக அடையாளப்படுத்தினால் என்ன ஏதென்றே தெரியாமல் தானும் ஏற்றுக்கொள்கின்றது.

இவர்களுக்கு தமிழ் பேசப்பிடிக்கவில்லை, வாசிக்கப்பிடிக்கவில்லை, எழுத்தாளர்களைத் தெரியாது, மீனவர்களின் வாழ்நிலை புரியவில்லை.
தேயிலைத் தொழிலாளர் அல்லல்கள் என்ன ஏதென்றே தெரியாமல் காபிசீனோவை சிப் செய்கிறார்கள். எத்தனைப் புத்தகங்கள்.. எவ்வளவு விஷயங்கள் எத்தனைச் சம்பவங்கள்... எழுதப்படுகின்றன...

பாலகுமாரனின் எழுத்தைப்படித்துவிட்டு ஒரு இயக்குனர் இப்படி கவலைப்பட்டிருக்கின்றார். “உங்கள் எழுத்தைப்படித்த பின் எனக்கு ஒஉ பெரும் கவலை வந்துவிட்டது பாலா. இந்த இளைய தலைமுறையினரிடம் இந்த எழுத்துக்கள் போய் சேர வேண்டுமே என்கின்ற கவலை. வந்து என்னை தூங்கவிடாமல் செய்கிறதென்று”.

நிறைய வாசிக்க வேண்டி இருக்கின்றது. நீங்கள் நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது.. சில வருடங்களுக்கு முன்னால் “வந்தார்கள் வென்றார்கள் ” புத்தகத்தினை வாங்கிப்படிப்பதற்காக... காசு சேர்க்க இரவுப்பணி செய்து சேமித்திருக்கிறேன். கி.மு கி.பி புத்தகத்தை வாங்கித்தர என் அண்ணனிடம் எத்தனை நாட்கள் ஏங்கி இருக்கின்றேன். எரியும் பனிக்காடு படிக்கும் போது உதிரம் சூடாகி இருக்கின்றது..


தமிழைப் பேச கில்டியாக இருப்பதாகச் சொல்லும் போது எனக்கு எழுந்த கோபம் இழுத்துப்போட்டு நாலு சாத்து சாத்தவேண்டும் என்பதாகவே இருந்தது. நாகரீகம் பொருட்டு அப்பா டேட் என்று மாறியிருக்கின்றதே பரவாயில்லை. யாரை வேண்டுமானாலும் அப்படி அழைத்து விடுவோமா?

இடஒதுக்கீடு என்ற ஒன்றுமட்டும் இல்லை என்றால் நாம் இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கமுடியாதே என்பதை சிந்திக்கத் துணியவில்லை..
என்பாட்டன் முப்பாட்டனின் சொத்து வேண்டும், அவர்கள் செய்த ஏய்ப்புக்களின் பாவச்சம்பளமான இன்றைய இடஒதுக்கீட்டில் தான் கீழ்வகுப்பினராய்ப்பார்ப்பவன் முன்னேறி வருவதையும்,அது தன்னை பாதிப்பதையும் பொறுக்க முடியவில்லை. எப்படியப்பா உங்களால் முடிகிறது... இந்த சிந்தனையை நெஞ்சுக்குள் ஊறவைத்து திரிய... இதற்கு ஏன் உங்களுக்கு கல்லூரிப்படிப்பு... நாளை உனக்கு மேல் அதிகாரி கீழ்வகுப்பினர் என்ற அடையாளத்தோடு இருந்தால்.. என்ன செய்வாயோ?

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை... என்று சொல்லிவைத்தாற்போல் கூவுகிறார்கள். அதைச் சொல்லும் அத்தனை பேரும் பெண்கள். பொதுப்புத்தி சிந்தனை இப்படி அமைந்தது வேடிக்கை.

இவர்கள் யாருக்கும் சம்பவங்கள் பாதிக்கப்படவில்லை... அதன் தாக்கம் வீரியமானதாக இல்லை.. அடிப்படைகள் தெரியவில்லை...ஆண்கள் என்பதை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டு வக்கிர துதிபாடவும் தயார். ஏன் எந்த பெண்ணாவது விபச்சாரம் தவறானது என்று பேச முன்வரவில்லை... அது அவர்களுடைய பிரச்சனை எனக்கு நான் பாதுகாப்பாக இருக்கவேண்டும்... ஏன்?

விஷயங்களின் அடிப்படை அவர்களைப்போய் சேருவதில்லை ஆனால் அவர்களைச் சொல்லிக்குற்றமில்லை என்றும் விடமுடியாது. இன்றைய தேதியில் வெளியான பாடல்களைத் தேடி தரவிறக்கம் செய்யும் இணையப் பயன்பாடு இப்வர்கள் உலகில் சாத்தியம் ஆகும் போது சமூகத்திற்கான இவர்கள் குரலை முன்வைப்பதில் என்ன சிக்கல்...

எதிர் வரிசையில் அமர்ந்திருந்தகளப் பணியாளர்களில் ஒருவர் தெளிவாகச் சொன்னார். “நாங்கள் எழுதிக்கொண்டிருப்பதெல்லாம் யாருக்குப் போய் சேறுகிறதென்றே தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறோ”ம் என்று.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதுகூட இன்றைய கல்லூரி மாணாக்கர்களைவிடவும் இன்னும் மெருகாக இருந்தோம் என்றே நினைக்கிறேன். எல்லாரையும் குற்றமிடவில்லை... இதோ இதே முகநூலில் சமூக வக்கிரம், அநீதி கண்டு பொங்கி குரல்கொடுக்கும் பெண்களையும், ஆண்களையும் [இளம்வயதினர்] எனக்குத் தெரியும்.. ஆனால் அவர்கள் எண்ணிக்கை அளவில் மிகச்சிலர்.

முன்னேறிய பெரு நகரங்களில் இருந்து வந்த பெரும்பாலானவர்களின் பார்வை எத்தனை மட்டரகமானதாக இருக்கின்றது..
ஆக கல்லூரிகள் ஒரு பொருளாதார அடியாட்களையும் கூலிகளையும் தான் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றது..


என் அலுவலக நண்பன் ஒருவன் இருந்தான் சாமுவேல் என்று. அவனுக்கு எப்போதும் வேலை என்னை தூண்டிவிட்டு ஏதாவது புரட்சி சிந்தனைகளைப்பற்றி பேசவைத்து கேட்டுக்கொண்டிருப்பது.. நன்கு படித்திருக்கிறான். ஐஐடியை தூக்கிப்போட்டுவிட்டு மனதிற்கு பிடித்ததைச் செய்ய வேண்டுமென்று நினைத்து எதையாவது படித்துக்கொண்டிருப்பவன்.பேசும் போதே சிலகருத்துக்களில் அவன் உணர்ச்சிவசப்படுவான்.

அதில் அதீதமாக அரசியலைப்பற்றியதாக இருக்கும்.. ஆந்திராவில் 200க்கும் அதிகமான கிராமங்களை நக்சலைட்டுகள் ஆட்சிசெய்கிறார்கள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை... பா.ராகவனின் மாவோயிஸ்ட் புத்தகத்தை அவனிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன்,. படித்து முடித்தவன் நக்சலைட்டில் சேரப்போகிறேன் என்றான். நான் அவனை வேடிக்கை செய்யவில்லை ஏனென்றால் நானே அப்படி நினைத்தேன் அந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும்.

பக்கத்து மாநிலத்தில் நடப்பவைகளை பற்றியே மேலோட்டமாகக் கூட தெரியாத நாம் டெல்லி சம்பவத்திற்கு கொந்தளிக்கிறோம். அஸ்ஸாம் பிரச்சனையை சீந்துவதில்லை... விஸ்வரூபத்திற்கு எதிராயும் உடன்பட்டும் குரல் எழுப்புகின்றோம்... ஏன் சினிமா பற்றி பேச வேண்டும் என்றால்... அக்குவேறாக ஆணி வேறாக இந்த இசையமைப்பாளர் இந்த பாடல்பாடியவர் இவர் என்றெல்லாம் நா கூசாமல் பேச முடிகின்றவர்களுக்கு... கூடங்குளம் தெரியவில்லை...

வெட்கமாக இருக்கின்றது.. என் சகோதரனின் முகச்சாயம் கிழிபடுகின்றதை நினைத்து ஆற்றாமை பெருக்கெடுக்கின்றது.. இது நாள் வரையில் அவனுக்கு நான் கொடுத்த பெருமதிபுகள் உடைந்து சாம்பலாகின்றது. கோபம் மேலேறி நிற்கின்றது.

சங்காத்யமே வேண்டாம் போ என்று வெகுண்டு நகர்கிறவர்கள் அதிகரிக்கின்றார்கள். மக்கள் போராளிகள் கேலிக்குரியவர்களாகிவிடுகிறார்கள். இதிலும் போலிகள் வேறு .. நெல்லை விட உயரமான களைகள் போல ஆக்கிரமிப்புடன்.,
அதற்கு நகர்தலே கூட உத்தமம் தான் போல...

மக்கள் போராட்டம் எல்லாம் அரசியல் கூட்டம் நடக்கும் மேடையில் நிரம்பி இருப்பவர்களை விடக்குறைவானவையாக இருக்கின்றது..

அன்றைய நாட்கள் போல இங்கே தலைவர் ஒருவர் [!] இல்லை என்பது புரிகிறது... மாவோ, லெனின் ஸ்டாலின்...கர்மவீரராகட்டும்., ஆனால் ஏன் தலைவரை எல்லோரும் தேடுகின்றார்கள். உருவாகாமல்.. என்ற கேள்வி மூச்சடைக்கின்றது...! அது அரசியலாகட்டும். ஏன் நமக்கு வேண்டாம் என விலகிப்போகிறார்கள். படித்தவன் தன்னைப்பற்றித்தான் யோசிக்கப்போகின்றானா? கடைசி வரை.. [பெரும்பாலான]

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போய்விடுவார்களா?

ஊருக்கு உழைக்க இனி எவரும் இல்லாமல் போகும் நிலையும் தான் வந்தே தீருமா?

கூலிகளைத்தான் இந்த கல்விநிலையங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றதா?

திறமைக்கு இங்கே வழியில்லை என்று உழைப்புக்கு வழிதேடி வளைகுடா நோக்கி நாங்களும் பறக்கத்தான் வேண்டுமா?

வெறும் பேச்சில் இன்னும் நாட்களை நகர்த்தத்தான் போகின்றோமா?

பணம் தான் நாளைய விடியலைக்கூட நிர்ணயிக்குமா?

கிராமங்கள் என்றால் என்னவென்றே தெரியாத சமூகம் அரிசியைதின்னும் போது எப்படிச் செரிக்கின்றது?

பணம்கொடுத்து
எல்லாவற்றையும் அனுபவிக்க இது என்ன நாடா?
இல்லை விலைமாது வீடா?

லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று சூழுரைத்துவிட்டு ட்ராபிக்கில் விதிமீறுவதும் குற்றம்தானே?

தனிமனித ஒழுக்கத்தை எப்போது பேணப்போகிறோம்... ?

மதுவை நம் அத்யாவசிய உடமைக்குள் அங்கீகரித்தே விட்டோமா?

பகுத்தறிவைப் பழித்துவிட்டு சாமியாரிடம் பல்லிளித்தல் சாபம் தானே?

சமூக விழிப்புணர்வுதான் வேண்டாமா! உங்களின் தொடர்புகளைப்பயன்படுத்தி

நியாயங்களை, அநீதிகளை நாலுபேருக்காவது எடுத்துச் சொல்லுங்களேன்... உங்களின் பொழுது போக்குக்கிடையில்...
தயவு செய்து...


கொலைவாளுக்குக்கூட வந்திடாது போல இம்மக்களோடே வாழ எனக்கு பயமாக இருக்கின்றது...!

-கவிதைக்காரன்.

[நீயா? நானா ?

உரலி : http://www.dailymotion.com/video/xxexn8_neeya-naana-part1-10-02-13_shortfilms#.URgiLx04tQM

No comments: