Wednesday, August 29, 2012

கொஞ்சம் திமிர்....

இரவு என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
நஞ்சைப்போல
விழுங்குகிறது...!

சுயமரியாதைக்காய் |
கைவிடப்பட்ட
முன்னேற்றக்கூடம்...!

கடைசியாய்
நடந்து வரும் - என்னை
பார்த்து ஏளனமாய்ச்சிரிக்கிறது..!

ஜாடி தூக்கும்
மகத்துவத்தொழில்
எனக்கு மறந்தும்
தெரியாமல் போனதால்

இறந்தும் விடைக்கும்
பிணம்போல
முறுக்கிடும் கோபம்
என்னைக் கொண்டு

சேர்த்த இடத்தில்
நான் மட்டும்
தனிமையாய்..

ஆம்! இங்கே
நான் மட்டும் தனிமையாய்.

யாரும் உடனில்லை
வேண்டுமென்றும்
ஏக்கமில்லை...!

கடைசிச்சாலையில்
நடந்து வந்தும்..
கண்ணிரண்டும் தூங்கவில்லை..!

நாளை நீயே
சொல்வாய்... அதோ
போகிறான் பார்
திமிர்பிடித்தவனென்று..!

சொல்லிவிட்டுப்போ!
ந்ன் திமிரெனக்கு வேலி
எனத் தெரியப்போவதில்லை
உனக்கு..!

நீ அப்போது
என் பின்னால்
நின்று
கொண்டிருப்பாயாவென
தெரியாது..! - ஆனால்

நான் அப்போது உனக்கு முன்னால்
சென்றுகொண்டிருப்பேன்!

-கவிதைக்காரன்

Sunday, August 26, 2012

தந்தையாய்...


கட்டிலின் மேல் காங்ரீட் கூரைகளில் பட்டு
எதிரொளிக்கும் உயிர்முனை கேவல்..!
உயிரணுவின் விளையாட்டின்
தவம் திறந்து வெளிப்படும் உயிர்ப்பூ..!

அத்தனை துடிப்பிலும் உயிர் போகும்..
வலிகளை வார்த்தைக்கு கொடுக்காமல்
மூர்ச்சைக்குள் மூழ்கிடமாட்டாமல்
நாசிகள் தடுமாற சுவாசம் தடம் மாற

அஃகென்னும் அழுந்துதலில் கட்டுப்படுத்தும்
இரட்டை நாடகம் தொடர…அடி நாதத் துடிப்பின்
முணகலிலும்: வில்லென விறைத்து
வானுக்கும் பூமிக்குமிடையே

பயணிக்கும் உணர்வின் மூன்றாவது அத்யாயம்
முற்றுப்பெறுவதற்குள் உன் முன் ஜென்மங்கள்
கண்ணில் வந்து போகும் இளவேனில் நாளில்

தொட்டிலுக்கு வரப்போகும்
நம் ஈரைந்து திங்களின் தவத்தை வரமாக்கி
பெற்றெடுத்தாய் …!
நீ….!!!

வார்த்தைகளுக்கு அடங்கமாட்டாமல்
கண்ணீர்பூத்து கரங்களில் அந்த பிஞ்சுதேகம்
ஏந்தும் வரை

நீ உணர்ந்த உன் அத்தனை வலிகளும்
அந்த நிமிடம் வரை என் நெஞ்சில்
சுமந்தவனென்பதை

என் கண்ணீர் காட்டிக்கொடுப்பதை ...
மறைக்க மறந்தவனாக தந்தையின் செறுக்கும்
கணவனின் தகிப்பும் நிறைந்துபோய் நான்..!
உன்
புன்னகை சேமித்துக்கொண்டிருந்தென்...


-கவிதைக்காரன்

என் தோழி…!


என்றோ தொலைந்து போன
என் தோழியானவளின் கனவு
சமீப நாட்களாய்
என் உறக்கம் கலைத்து..
போனது எனக்கே வியப்பாய்!

காரணம் பெரிதாக ஒன்றும்
இல்லை..! உண்மையில் உட்கார்ந்து
யோசிக்கும் வரை அவள் பெயர்கூட
எனக்கு நினைவில் இல்லை!

பள்ளி ஆண்டு விழாநாளில்
என் சகோதரியின்
மஞ்சள் வண்ணதாவணி தலைப்பை
எப்படியெல்லாமோ சுற்றி
வண்ணத்துபூச்சிபோல் வேடமணிந்து
நீயும்…!

வெள்ளை நிற அரைக்கால்
சட்டையணிந்து உச்சஸ்தாதியில்
பாட்டுப்பாடியபடியே நானும்
நம்மோடு சிலரும் ஆடிப்பாடிய
ஆண்டுவிழா புகைப்படம் மட்டுமே மிச்சமாய்..

என்னிடம் அதுவும் போன
முறை விருந்தினர் வந்தபோது
புகைப்பட ஆல்பங்களை அம்மா
எடுத்துகாட்டியபோது சிக்கியது

ஆனால் அன்றைய நாளின் கனவில் கூட
வேறொரு அவள் தானே வந்து போனாள்
இங்கே அவள் இரகசியமாக்கப்பட்டிருக்கிறாள்.

சரி நேற்றைய கனவுக்கும்
தொலைந்த தூக்கத்துக்கும்
இன்றைய கவிதைக்கும் காரணமானவள்
இவள் முதலில்
தோழி என உங்களுக்கு அறிமுகம்
செய்யப்பட்டவள்…!

பதின்ம வயதுகளை கடந்த
பருவங்களில் என்னோடு
பயின்றாள் என்பது மட்டும் அடையாளம்!

நெல்லிக்காய்க்கு கொள்ளைபிரியம்
கொள்பவள்..!
பொதுவாக பெண்பிள்ளைகள்
எல்லோருக்கும் பிடித்துபோனது தான் என்றாலும்
நான் இவளை பற்றி மட்டும் தானே பேச நினைக்கிறேன்!

அப்படியானவளுக்கும் எனக்கும்
நட்புவளையம் வளவிகள் பூட்டி
பரிமாறும்..!
(பெண்பிள்ளைகளின் வளையல்களில் அப்போது கொஞ்சம் ஆர்வம் அம்மா அக்காவுக்கு வாங்கும் வளையள்கள் என் கை சேராது பெரியதாய் இருக்கும் இன்று நிலைமை வேறு பழச ரொம்ப கிண்டப்படாது..!)

புத்தகங்கள் இடம் மாறும்!
விளையாடும் போது என்னை காப்பாற்றுவாள்!
தண்ணீர் குடிக்கும் இடங்களில்
நான் முண்டியடித்து அவளுக்கு இடம் பிடிப்பேன்!

அக்கா உடல்நலமின்றி இருந்த நாட்களில்
தனியாக நான் மட்டும் பள்ளிக்கு
செல்லும் போதெல்லாம் அவள்தான் எனக்கு
தனிமை மறக்கசெய்தவள்…
இப்படி இருந்தவளை ஏன் ?பெயர்கூட மறந்ததாக
இருக்கிறேன் என்கிறீர்களா..!

அந்த பிரிவிற்கும் காரணம் உண்டு!

அன்றோர் மாலை எப்போதும் போல
பள்ளிமுடித்து சாலைகடந்து
வீட்டிற்கு செல்லும் வழியில்
யாரென அறியாத வாகன ஓட்டியின்
கவனமின்மைக்கு இரையாகி
ஒருமாதகாலம் வகுப்புக்கு ஓய்வாய்
நாற்காலியில் சாய்வாய்..! நானிருக்க..

வலிகள் எல்லாம் வெரைந்து கரைந்து
முடிந்ததென வந்த நாளில்
மொத்த பள்ளியும் கண்ணீர்மல்க வரவேற்றது!
நானும் மல்கிப்பெருகி
அக்கூட்டத்தில் தேடினேன்!
என் தோழியானவளை!

அவள் அங்கு இல்லை!
என் தேடலை அறிந்த நண்பன்
எனக்குமட்டும் கேட்கும் சப்தத்தில்
காதில் சொல்லிபோனான்!
அவள் தந்தை சாலை விபத்தில் இறந்தாரென!

அதனால் பள்ளியைவிட்டே!
போய்விட்டாள் தாத்தாவின்
ஊருக்கு நாளை போகப்போகிறாள்
வேண்டுமானால் நாளை என்னோடு வா!
நான் அவளிடத்தில் அழைத்து செல்கிறேனென..!

மறுநாளும் விடிந்தது!
நான் வழக்கம் போல பள்ளிக்கு சென்றேன்!
நண்பனின் புரியாத பார்வைக்கு பதில் காட்டாமல்
இருந்தவனை
வம்படியாக ஒரு மதியப்பொழுதில் கேட்டான்!

ஏண்டா அவளை பார்க்க போகலை
நீ வருவேன்னு அவ எவ்ளோ நேரமா! காத்திருந்தா தெரியுமா?
என்றான்!...

நான் பதில் சொலவே இல்லை!
அவள்
எனக்கு தனிமையில் தைரியம்
சொல்லி தந்தவள், என்பதை
அவளை நீங்கிய தனிமையில்!
உணர்ந்துகொண்டேன்.

நேற்றைய கனவுக்கு காரணம்!
நான் தனிமையில் இருப்பதாய்
சொல்லி பார்த்து பத்திரம் என்று அம்மா!
பக்கத்து ஊருக்கு சென்றதாலா?

தோழியானவள் !
தைரியம் விதைத்திருக்கிறாள் என்னுள்!
நான் தைரியம் என்றால் என்னவென
அறியும் வயதை எய்தும் முன்னமே!


-கார்த்திக் ராஜா (தொலைந்த என் தோழிக்கு சமர்ப்பணம் :)

நினைவின் எச்சமாய்...


அந்த ரயில் நிலையத்தில்
இன்று நான் காத்திருக்கிறேன்...
வழக்கம் போல கிறுக்கும் போனாவை கைக்கு
கொடுத்தபடி..

முளைத்திருந்த சில காளான்கள்
நேற்றைய மழையை
மறக்கடிக்கவே இல்லை..

அந்த ரயில் நிலையத்தில்..
தேம்பி இருந்த மழைநீரில்

வானம் விழுந்துகிடப்பதை
அறியாமல்தாண்டிப்போன

ஒரு தலைப்பாகை கட்டிய
பெரியவரும் என் பார்வையில்
கவிதையாகிருக்க..

வராத ஒரு ரயிலுக்காய் நான்
காத்திருக்கிறேன்’ என நீங்கள்
அறிந்திட வாய்ப்பில்லை...

ஆம்! பாழடைந்த வீட்டுக்குள் பட்டாம்பூச்சி
சிறகசைத்தால் வரும் சந்தோசம் போல்
எனக்கு இங்கே... ஒரு ஈர்ப்பு..

மழை பெய்த மறுநாளில்
இங்குவந்து சுவர்களில்
படிந்த பாசி மணமும் ஈரம் செறிந்த
தண்டவாளங்களுக்கும்...

என் வரவு ஒன்றும் புதிதானதும் அல்ல
ஏறக்குறைய ஐந்துவருடவழக்கம்
முன்பு இந்த மார்க்கத்தில் ரயில்கள் வந்து
கொண்டுதான் இருந்தது...

மீட்டர்கேஜ்கள் மாற்றமடைந்து
பிராட்கேஜ்களாக மாறிய நாட்களில்
அடையாளம் மறுக்கப்பட்ட
அகதியின் குடிசையாய்..ஆனது...

நினைவுகலைத்தாங்கி
எச்சமாய் நின்ற இந்தமஞ்சள்
கட்டிடத்தோடான பிணைப்பிற்கும்
ஒரு மழைக்கு மறுநாள்தான்

காரணமாய் இருந்ததென்பது..
மறுக்கமுடியாது..அதை படிக்க
என் ஐந்து வருடம் முந்தைய
பழைய டைரியை புரட்டவேண்டும்...

ஜன்னல் கம்பிகளில்....! தரையில்
சொட்ட வரிசைகட்டி நிற்கும்
நீர்த்துளிபோல ஒரு அழகான ஒருதலைக்காதலுக்கு
இறையாகிப்போன நண்பனின்
உயிர்....!

இந்த தண்டவாளத்திற்கும்
இரயில் நிலையத்திற்கும் வெறுக்கத்தக்க
அடையாளத்தைகொடுக்க
அஞ்சாங்கிளாஸ் சிறுவனுக்கு இது

பேய் இருக்கும் வீடானது...
எனக்குமட்டும் நினைவிருக்கிறது..
அந்த மழைக்காளான்கள் போல
நண்பனின் நினைவுகள்...

அவ்வப்போது வந்து இப்படித்தான்
எதையாவது கிறுக்கிப்போகிறேன்
எனக்கும் கூட ஆவி பிடிப்பவன்- என
பெயர்வைத்திருக்கிறார்களாம்...

அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை
அடுத்து என்று மழைவருமெனத்தெரியும் வரை
இந்த டைரிக்கும் எனக்கும் இங்கு வேலை இல்லை...
நினைவில் நட்பு...


-கார்த்திக் ராஜா...

யாதுமாகிய என்னவளே...!


அன்றோர் நாள்
கண்ணாடி பூக்களை கைகளில்
ஏந்தி வாசமென்னவென கேட்கிறாய்!
உன்னால் நான் சிரித்திருக்கும் போது
எனக்கே தெரியாமல் விழியோரம் கோர்த்திருக்கும்
கண்ணீரை துடைதெடுத்தெடுக்கிறாய்!
என் தனிமையின்..கணங்களில் வந்து
மௌனத்தில் மழைபோல் சடசடவென
உரையாடுகிறாய்!
நான் ஆர்பரித்து மகிழும் போது
தேனெடுக்கும் தும்பிபோல்
மெதுவாய் வந்து உன்னோடு காதலில் நான்
என்று காதில் ஸ்வரமாய் இசைக்கிறாய்!
உன் நேசத்தின் ஆழம் புரியாமலே..!
மேலோட்டமாய் நீந்தி திளைத்திருக்கிறேன்!
உன் மௌனத்தின் காரணம் விளங்காமலே!
பலநாள் நீங்கிதவித்திருக்கிறேன்...!

நான் உன்னில் சொல்லும் பொய்களின்
இடைவெளியில் உன் புன்னகையை
பதியம் செய்து உண்மையென
மாற்றிடுகிறாய்....!
உன்னில் ஏற்படுத்திய என் கோபங்களில்
நீ எத்தனை உடைந்து போயிருக்கிறாய்
என்பதை உம்மென்ற உச்சரிப்பில் உணர்த்திடுகிறாய்
அந்த மௌனம் கலைக்க நான் போடும்
குறும்புத்தனங்களில் மெல்ல
சிரித்து என் தலைமுடி கலைத்து
கண்களிலே பேசுகிறாய்..!
மறந்து போன நம் முதல்நாள் சந்திப்பை
வருடம் கழித்து அத்தனை ஆவலாய்
நீ கேட்டதும் புரியாமல் விழித்த கதை
சொல்லி அவ்வப்போது விகடம் செய்கிறாய்!,
ஜேப்டியில் மறைத்து வைத்த
உன் பழைய புகைப்படத்தின்
பின்னால் எழுதியிருந்த
இருவரிகவிதையை கண்டு
இத்தனை கேலி செய்கிறாய் !
உன்னை அணு அணுவாய் காதல் செய்கிறேன்
அதை தினம் தினமும் கவிதை செய்கிறேன் !
இத்தனைக்கும் என் ஒற்றை கவிதைக்கு
கூட உன்னிலிருந்து பாராட்டுதல்கள்
கேட்டதில்லை ; நீயும் சொன்னதில்லை!
உன்னிலிருந்து கிடைப்பது
கடையிதழை சுழித்து ரிக்க்க்க்க்க்...
என்ற
ஒலியுடன் ‘’மொக்கை கவிதை’’-டா!
என்ற வார்த்தையும் பின்னே ஒரு புன்னகையும்தான்!
அட்ந்த புன்னகைக்காகவேணும்
இன்னுமோர் கவிதை! செய்திருப்பேன்!
தனித்திருக்கும் இன்றைய பொழுதுகளில்
புரட்டிபார்த்திருக்கவாவது!

Saturday, August 25, 2012

அத்த பெத்த பச்சக்கிளி...!!!

அத்தமவ..!!
முற்றத்திலே உக்கார்ந்து 
போட்ட கோலத்துக்கு 
ஊரு கண்ணே படுமுன்னு 
திருஷ்ட்டி வைச்சவன் நானுந்தாண்டி!

கத்தாளங்காட்டுக்குள்ள 
தொட்டு புடிச்சி ஆட்டத்திலே..
தொங்கட்டான தொலைச்சுப்புட்டு 
தேம்பி தேம்பி அழுத புள்ள...!!

கலங்காதே கண்ணேன்னு
எங்கக்கா தோடெடுத்து 
அறியாத வயசிலே யாரும் தெரியாம 
உனக்கு கொடுத்தவனும் நானுந்தாண்டி!

கிணத்தோரம் தேரை [தவளை] பார்த்து
கத்தி கத்தி அழுதவளே 
உன்னச் சுத்தி சுத்தி அதவிரட்டி
சூட்ச்சமமா சிரிச்சவனும் நாந்தாண்டி!!

பள்ளிக்கூட பாதையெல்லாம் 
உன் பையத்தூக்கி திரிஞ்ச
பாவிப்பயலும் நாந்தாண்டி!!
பச்சக்குத்த தேவையில்ல - அத்தமவ 
நீதான் எம்புட்டு உசுரும் கேளு புள்ள!

நேத்துவர நேராத்தான் பார்த்துபுட்டா 
எங்கைய கிள்ளி வைப்ப..! 
மாமன் எம்மாமன்னு ஊரெல்லாம் 
சொல்லி வைப்ப! 

இன்னைக்கென்ன சமைஞ்சவன்னு 
முதுகுகாட்டி திரும்பி நிக்க
என்னென்னைக்கும் உம்மாமன் 
நாந்தாண்டி 

வெக்கமென்ன ஏவ்வுசுரே!
வெளியே வாடி பச்சக்கிளி.. 
பக்கம் வந்து நீயும் நில்லு
என் அத்தபெத்த தங்கக்கிளி...

 -கவிதைக்காரன்  

[நன்றி கவிபரணி, கோவை]

Friday, August 24, 2012

கடல் கொண்ட தமிழன்..!!இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம்! இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டு, "திருநெல்வேலி அருங்காட்சியகத்தில்" பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !!

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக. இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது. அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்".


இதில் "கனம்" (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது, இதை நிர்வகிப்பவர் "கனாதிபதி". "கன்னி" (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய "கலபதி", "கன்னி" என்பது தமிழில் "பொறி" என்று கூட பொருள் படும்.

 இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப்போல) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!.

 அடுத்து "ஜதளம்" சுருக்கமாக "தளம்" (நிரந்தரப்போர் பிரிவு) இதை நிர்வகிப்பவர் "ஜலதலதிபதி", இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. "மண்டலம்" (பாதி நிரந்தர போர்ப்பிரிவு) இதை நிர்வகிப்பவர் "மண்டலாதிபதி" இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும், இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்.

 "கனம்" (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது! "அணி" இதை நிர்வகிப்பவர் "அணிபதி" மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது.


 "பிரிவு" மிக முக்கியமான பிரிவு இது, இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் "கீழ்பிரிவு-அதிபதி / தேவர்" என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது, உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று.

இந்த கப்பல் பட்டையை வைத்து தான் "இலங்கை", "இந்தோனேசியா", "ஜாவா", "மாலைதீவு", "மலேசியா", "சிங்கப்பூர்" போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான்! இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம்!!

இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் "NAVY" என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை "தமிழர்களுக்கு" தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும்? சிந்தியுங்கள்

-முகநூலில் நண்பர் சாம் மகேந்திரன். 

Monday, August 20, 2012

ஒரு புன்னகை... சில கோபங்கள்...

அக்கா மகனின்
காதுகுத்து விழாவாம்..


பழைய
கோபங்களால்
மனவருத்தங்களாலும்

இரண்டு வருடங்கள்
பேசாமலே இருந்தவள்
இப்போது  அழைக்கிறாள்.

வரமாட்டேன்.
என உரக்கச்சொல்லிவிட்டு

அழைப்பை துண்டித்துவிட்டு
கிக்கரை உதைத்து
கிளம்பினேன்..!
வேலைக்கு..சாலையோர பேரூந்தின்
ஜன்னலோர
சிறுவனின்
சின்னப்புன்னகைகளில்
சிதறிவிடுகிறது...
என் அத்தனை கோபங்களும்..

-கவிதைக்காரன் ! 

தினசரி செய்திகள்


மீனவன் 
கொல்லப்படுவதும் 

கலைஞர்
கடிதம் எழுதுவதும் 

ஜெ.
அறிக்கை விடுவதும்

ராமதாஸ் 
வேண்டுகோள் வைப்பதும்

சீமான்
ஆவேசப்படுவதாய் கை உயர்த்துவதும்

ஃபேஸ்புக் போராளிகள் 
அரசை காரி உமிழ்வதும்...

இரவும் பகலும் போல
தினசரி நிகழ்வாய்ப்போனது 

-கவிதைக்காரன். 

Friday, August 17, 2012

தோழிக்காக....
பேசிக்கொண்டே
இருந்தோம்..
சரி சாப்பிட்டுவிட்டு வா!
நேரமாயிற்று..
நானும் சாப்பிடப்போகிறேன்.

இன்று விரதம் வேறு
என்றாள் தோழி..

அப்படியா?
இன்றென்ன விரதம்
வினவினேன் நான்...!

தெரியாதா?
இன்று அமாவாசை
என்றாள்..!!

அப்படியென்றால் நிலா
வராதா ?

வெகுளியாய்
நான் கேட்க..!!

முறைத்துக்கொண்டே
அதான் நான் வந்துவிட்டேன்ல
போய் ஒழுங்கா சாப்பிட்றா!
என தலையில்
குட்டினால்...!

எங்கோ பௌர்ணமி
பிறை விட்டிருக்கும்..!

-கவிதைக்காரன்!

ஒரு யானையின் பிளிறல்

 

காலாட்படை கூடி என்னை ஈட்டிகொண்டு 

வாட்டி நின்ற போதும் 
புறமுதுகிட்டதில்லை..!!!

எதிரவனின் வாள்முனை 
எம் மேனிதுணைத்தெடுத்த போதும் 
களைத்தே போனதில்லை...!!!

என் காயங்களின் குருதி
காலடியில் சிந்திச்
சகதியானபோதும் 
களத்தை சிதறடித்து
சாய்க்காதவரில்லை...!!!

பின்வழிக்கு 
துணிந்ததே இல்லை...
முன்சென்ற பாதை மாத்திரம்
எனக்கானது...!!!

பிளிறல்கள் மாத்திரம் எனக்குண்டு 
பிதற்றல்கள் ஏதுமில்லை 
குண்டுகள் துளைத்தெடுத்த போதும்
குப்புறச்சாய்ந்ததில்லை...!!!

கொன்றாயடா..?
எம் வீரத்தை கொடும்
பாதகக் கொடியோனே..!!!

வென்றிடும் மன்னவனின் 
கொடைக்குள் ஆளும்
பட்டத்துக் களிறென்னை
நட்டநடுக்காட்டில்...!!!

நாதரவாய் 
வெட்டிச்சாய்த்ததென்ன??

எயிற்றின் மதிப்புக்காய்
எம் குரல்வளை குதறியதென்ன?
வெண்கோட்டுக் களிறென்
சிரசை சிதைத்துப் போனதென்ன? 

அழுகுமென் பிணத்தை
அப்புறப்படுத்திடும் 
போது 

துர்வாடை எங்கென
நீ  “உணர்ந்தே கொள்வாயோ..??”
இல்லை இன்னுமின்னுமென்
இனம் “கவர்ந்தே கொல்வாயோ??”

உனக்கொன்று தெரியுமா?!?
யானையை எந்த விலங்கும் 
வேட்டையாடுவதில்லை 
மனிதனைத்தவிர...! 

-கவிதைக்காரன்.

Thursday, August 16, 2012

இப்போதே சொல்லிவிட்டுப் போ...!!!இப்போதே அழகாய் 

ஒரு கவிதை சொல்லிவிட்டுப்போ!

என வேகமாக வேலைக்குச்செல்ல

இருப்பவனை 

சட்டை பிடித்து 

இழுத்து நிறுத்துகிறாய்..! அலமாரியில் 

நிறைய தபு சங்கரின் 

புத்தகங்கள் கிடக்கின்றன..! 

வாசித்துக்கொள் நேரமாயிற்று என்றேன்..! 


ஆனாலும் உன் கைப்பிடி 

என்னை விடவே இல்லாமல் இறுக்கமாய் 

பற்றிக்கொள்ள..! 


வேறு வழியே இல்லாதவனாய் 

இரண்டு வினாடிகள் 

உன்கண்களையே உற்றுப்பார்த்து 

நெருங்கி... அருகில் வந்து 

செல்லமாய் கன்னங்களை கிள்ளிவிட்டு “லேட் ஆகிடுச்சுடா செல்லம்” 

என்றவாறே புறப்பட்டுவிட்டேன்..! 

நீயும் அந்நிமிடம் என்னை  விட்டுவிட்டாய்..


அப்படி எந்த கவிதையை என் கண்களிலிருந்து 

வாசித்து விட்டாய் நீ..

தெரியவே இல்லை..

எனக்கு.... 

-கவிதைக்காரன்

Tuesday, August 14, 2012

நாளை எனக்கில்லை...!!!
மழையில்
குடையிருந்தும்
நனைந்து சிரிக்கும்
குழந்தையாய்..நான்!!

அறிந்தோ அறியாமலோ
எனக்கு மிச்சமிருப்பது
ஒரிருநாள் வாழ்க்கை
மட்டும்..

இன்றோ நாளையோ
எனது
கடைசி நொடி
குறிக்கப்பட்டு விடும்..!!

ஈரம் சொட்டும்
மெல்லடுக்கு
தேகத்தில்
விழுந்து சிதறும்
மழைத்துளிகளின்
உடைதலில்...!!

மகிழ்ச்சியை
தேடும் எனக்கு...
அண்டிய சுவற்றின்
அரையங்குலத்தில்
குறைவாய்
ஒட்டிக்கொள்ளும்
வசதி மட்டும்...

கடைசித்துளி
மேகத்தை ரசித்தவரையில்
எனக்கு நாளை
என்பதில் நம்பிக்கை குறைவு..

மிச்சமாகிப் போவது
நேற்றைக்கு
முளைத்த காளான் என்ற
பெயர் மட்டுமாய்...!

ஆனால் வாழ்ந்தவரைக்கும்
தலை நிமிர்ந்து வாழ்ந்தேன்
என்று நெஞ்சம் நிமிர்த்திய
குரலை
பதித்துவிடுகிறேன்
இன்றே...!

Saturday, August 11, 2012

கவிதைக்காரனாகிய நான்...!!!கவிதைக்காரனாகிய நான்...!!!
உற்சாகமோ,சோகமோ?
மனசுக்குள்ளே பாடும்... 
மனங்கொத்தி...!!!

தோல்விகளின் காயங்களை 
ஏகமாய் சொறுகிய 
சரங்குத்தி..!!!

மிக நீண்ட  இரவின் 
முடிவுகளில் என்னையறியாமல் சாயும் வரை...
புத்தகங்களை வாசிக்கத்துடிக்கும் 
விழிகளைக் வாடகைக்கெடுத்தவன்...!!!

பள்ளிகல்வி வாசல் வரை
தாண்டியதும்..!
பட்டறையில் வாகனங்களுக்கு 
வர்ணம் பூச வார்ப்பு பிடித்த கரங்கள்...!!! 

நதி தான் ஓரிடத்தில்


நிற்காதே..?
ஓடியகால்களுக்கு
கொங்கு நகரம் 
பாதை ஒன்றை காட்டியது...!! 

அங்கே தான்
மதனும்,


மணிமகுடணும் [சுஜாதா] 
உலகத்தின் பார்வையை 
உள்வாங்கப் புகட்டினார்கள்.. 


டால்ஸ்டாயும், 
டார்வினும் அறிமுகமாகினர்...!!
ஸ்டாலினும்.. 
சே-வும் சிந்திக்க வைத்தார்கள்..!!


பாரதியிடம் வலதுகையையும்...

பாலகுமாரமிடம் இடது கையையும் 
பிடித்து தமிழ் நடை பழகிக்கொண்டேன்..!!!


இலக்கியம் தெரியாது..!!!
இலக்கணமும் புரியாது...!!! 
வெண்பாவையும் எழுதுகிறேன்..!!!
வெள்ளைச்சாமி 
பெரியப்பாவையும் எழுதுகிறேன்..!!! 
எனக்குத்தெரிந்த கோணத்தில்...!!! 


அப்போது தான்
ஆர்குட் என்ற ஆட்டுக்குட்டி 
அறிமுகமானது..!!!

அதன்
பரிணாம வளர்ச்சியில் பிறந்த 
முகநூலின் கதவுத்துவாரங்களை 
எட்டிப்பார்த்த எனக்கு 
துறவுகோலையும் தந்தது..!! 

ஷேர்லக் ஹோம்ஸ் முதல் 
ஷேர்மார்கெட் பஞ்சாயத்து வரை 
இங்கே பரவலானது..
பரவச ஆரம்பம்...! 

பால், வயது,
பாராதுபழகும் 
தோழமைகளோடு 
 “கவிதைப்பக்கம்” என 
அடையாளப்பட்டேன்...!!!

வெளிச்சத்தில்...படித்ததை 
தெருவிளக்கினிலே” 
தேடிப்பதிந்தேன்..! 
ஐயங்கள் ஆயிரம் 
அனுதினமும் தெளிந்தேன்..! 

தோழமைகள் ஆயிரம் 
தோள்கொடுக்க நெருக்கமாய்..!!
நட்புவட்டம் 
நாற்திசையிலும் 
கரம்குலுக்கி தோள்தட்டி நின்றது..! ஏட்டில் எழுதித்திரிந்ததை
இணையத்தில் ஏற்றினேன்.
தட்டிக்கொடுத்த கரங்களால் 
சுட்டிகாட்டப்பட்ட தவறுகளை 
திருத்தும் பக்குவங்கொண்டேன்! 

வீடுவரை வந்த சொந்தமெல்லாம் 
என்னை செம்புலப்பெயெலென்றும்...
 சேர்-தான் நானென்றும்
விலகியே சென்றிட..

நான்கரணாய் சூழ்ந்த
நல்லுடன் பிறப்புக்களினுடன் 
வாழும் வேடந்தாங்கல் 
பறவையாய் ஆனேன்  நான்...!!!அன்று
வேற்றுமைகள் எட்டிப்பார்க்க

ஆனது போகட்டும் 
அதிகமாய்ப்போனால் 
நானிருக்கிறேன் என

என்னை மட்டும் நம்பி மீண்டும் 
தனித்திட்ட
ஒற்றைக்கால் காளான் நான்...! 

என்றாயினும்
மண்கிளறி என் வேர்களை 

அழுத்தமாய்ப் பதித்திடத் துடிக்கும் என் பெயரோ!-கவிதைக்காரன்!
   Children of The Pyre - Trailer (2008) Medium

“நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால்  தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” 
காசி நகரம்:
மாலை நேரம்:
மணிகார்னிகா சுடுகாடு:

சுடுகாட்டுச்-சிறுவர்கள்பிணம் எரிப்பதற்கு முன் சடங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் சில சிறுவர்கள் உஷாராக நின்று கொண்டிருக்கிறார்கள்.  பிணத்தை சிதையின் மீது வைப்பதற்கு முன்பு அதன் மீது போர்த்தப்பட்டிருக்கும் பல வண்ண பளபளப்பான துணியை எடுக்கிறார் புரோகிதர். அவ்வளவுதான் அந்தத் துணியை நொடியில் கைப்பற்றிக் கொண்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்கிறான் ஒரு சிறுவன். பிணத்துடன் வந்தவர்களோ சிறுவர்களை திட்டியபடி துரத்துகிறார்கள். துணியை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாற்றியபடி சிறுவர்கள் சிட்டாய் பறக்கிறார்கள்.
காசி ஹிந்துக்களுக்கு மிக முக்கிய புண்ணிய ஸ்தலம். தவறு செய்யும் கிறித்துவர்களுக்கு உடனடியாக சர்ச்சில் பாவமன்னிப்பு கிடைப்பது போல், ஹிந்துக்கள் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்து விட்டு காசியில் உள்ள கங்கையில் குளித்துவிட்டால் அவற்றை கரைத்துக் கொள்ளலாம்.
இன்னும் முக்கியமாக ‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கு நேராக போய் விடலாம்’ என்ற நம்பிக்கையும் உண்டு. கடவுளின் நகரில் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும் துறைமுகமாக இருந்தாலும் சரி, அங்கு பிணங்களை எரிக்கும் வேலையை செய்பவர்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’தான். ‘நாங்க குளிச்சு சுத்த பத்தமாக வந்தாலும் எங்களைத் தொட மாட்டார்கள். பிணத்தையும் பிணத்தை மூடியிருக்கும் துணியையும் தொடுவதால் எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறார்கள்’ என்கிறான் ஒரு சிறுவன்.
காசியில் கங்கைக் கரையில் இருக்கும் மணிகார்னிகா சுடுகாட்டில் பல பிணங்கள் ஒரே நேரத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு காட்சியில் பார்க்கும் தூரத்தில் 14 பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதாக எண்ணுகிறான் ஒரு பையன். அனைத்து பிணங்களையும் தொழில்முறை வெட்டியான்கள் எரிக்க வேண்டும் என்றால் வரிசையில் பிணங்கள் வெயிட் செய்து நாறிவிடும். ‘நாங்கள் இல்லையென்றால் இந்த பிணங்களை நாய்கள்தான் இழுத்துக் கொண்டு போகும்’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். ‘பிணம் சீக்கிரமா எரிஞ்சுடணும்னுதான் எங்க விருப்பம், அப்பதான் எங்க வேலை சீக்கிரம் முடியும், தூர தூரத்திலிருந்து வந்திருக்கும் சொந்தக்காரங்களும் சீக்கிரம் திரும்ப முடியும்’ என்று வாடிக்கையாளர்கள் மீது அக்கறையுடன் பேசுகிறான்.
‘இப்போ எனக்கு 15 வயதாகிறது, 5 வயதிலேயே இந்த வேலைக்கு வந்து விட்டேன்’ என்கிறான் ஒரு பையன். இன்னொருவனை 8 வயதுக்கு மேல் மதிக்க முடியாது.
ரவி, யோகி, சுனில், மனீஷ், ககன், ஆஷிஷ், கபில் என்ற ஏழு சிறுவர்களின் மூலமாக புண்ணிய நதிக் கரையில் இருக்கும் மயானத்தின் செயல்பாடுகளை காட்டுகிறது இந்த ஆவணப் படம்.
பிணங்களை எரிப்பதற்கு உதவி செய்யும் எடுபிடிகளாக இந்த சிறுவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக பிணத்தை மூடி வரும் அலங்காரங்கள் செய்யப்பட்ட, பல வண்ணத் துணியை எடுத்துச் சென்று விற்பதில்தான் அவர்களுக்கு வருமானம். அதைத் தவிர பிணத்தை எரிக்க வருபவர்களிடம் வசூலிக்க முடிந்ததை வசூலித்துக் கொள்கிறார்கள்.
பிணத்தை சிதையில் ஏற்றும் முன்பு துணியை உருவி அருகில் வைக்கிறார்கள். அந்த நேரத்தில் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள், லாகவமாக அதை கையில் எடுத்தபடி கவனத்தை ஈர்த்து விடாதபடி நடக்கிறார்கள், யாராவது கவனித்து விட்டால் ஓடுகிறார்கள். சில சமயம் பிணத்தை எரிக்க வந்திருப்பவர்கள் அல்லது வெட்டியான் பிடித்து துணியை பிடுங்கி கொள்கிறார்கள் ‘சில பேர் நல்லவங்க, துணியை கொடுத்திடுவாங்க, போய் காசு சம்பாதிச்சுங்க என்று. சில பேருக்கு பொறாமை நாங்க துணியை வித்து நிறைய சம்பாதிக்கிறோம்னு பிடுங்கிடுவாங்க, துணியை சிதையில் வைத்து எரித்துப் போடுவார்கள்’.
அந்தத் துணியை எடுத்துச் சென்று கடைகளில் விற்றால் ஒரு துணிக்கு 2.50 ரூபாய் கிடைக்கும். அதை துவைத்து, மடித்து, பையில் போட்டு கடைகளில் 25-30 ரூபாய் விலைக்கு மறுபடியும் விற்கிறார்கள் கடைக்காரர்கள்.
கிடைக்கும் துணி எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு போய் விற்று பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள் இந்த சிறுவர்கள். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்காகத்தான் தங்கள் வாழ்நாளையே இங்கு கழிக்கிறார்கள். பிணம் ரோட்டில் கடக்கும் போது நாம் மூக்கை பொத்திக்கொள்கிறோம். நம் குழந்தைக்கு கூட சாவைப் பற்றி விளக்காமல் “சாமிகிட்ட போய்டாங்க” என்று தான் சொல்லுகிறோம். ஆனால் காசியில் இருக்கும் இந்த சிறுவர்கள் சாவை தினமும் எதிர்கொள்கிறார்கள்.
“ஆரம்பத்தில் இந்த வேலைக்கு போனா என் அம்மா என்னை அடித்து நொறுக்கி விடுவார். இனிமேல் சுடுகாட்டிற்கு சென்றால் கொன்று விடுவேன் என்பார். ஆனால் ஒரு நாள் 500 ரூபாய் நோட்டை கொண்டு கொடுத்த பிறகு ‘நீ தினமும் சுடுகாட்டிற்கே வேலைக்கு போ’ என்று சொல்லிவிட்டார்”
அவர்கள் கஞ்சா புகைக்கிறார்கள், புகையிலை சாப்பிடுகிறார்கள். ‘இத்தனை பிணங்களை எரிக்க வேண்டியிருக்கிறது, கஞ்சா பிடிச்சா இன்னும் நான்கு பிணங்களை எரிப்பதற்கு தயாராக மனது லேசாகி விடும்’ என்கிறான் ஒரு பையன்.
‘சின்ன பையனாக இருந்து கொண்டு இந்த வயதிலேயே புகையிலை சாப்பிடுகிறாயே’ என்று கேட்டதும்
‘அது சரி, இவ்வளவு சின்ன வயதில் வேலை செய்து சம்பாதிக்கிறேனே, அதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா! அவ்வளவு அக்கறை இருந்தா அரசாங்கத்திடம் சொல்லி மாசா மாசம் 5,000 ரூபாய் அனுப்பி வைக்க ஏற்பாடு செய். நான் இதை எல்லாம் விட்டு விடுகிறேன். அது முடியாதுன்னா என்னை என் போக்கில் விட்டு விடு’
ஆம், இவர்களின் வாழ்க்கை பரிதாபப்பட வேண்டிய ஒன்றல்ல, சமூகத்தின் மீது கோபம் கொள்ள வேண்டிய விடயம். நம் பரிதாபத்தை உதிரும் மயிருக்கு சமமாக கூட அவர்கள் மதிப்பதில்லை.
“இன்று ஒரு அரசியல் தலைவரின் பிணத்தை எரிக்கிறார்கள். எங்க தேசத்தின் மிகப்பெரிய தலைவராம் அவர்” என்கிறான். தூரத்தில் மூவர்ணக் கொடி போர்த்திய உடல் ஒன்று சிதையில் வைக்கப்படுகிறது.
“அரசியல் தலைவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்”
“தாயோளி எல்லாவனும் தாயோளிகதான்!. பணக்காரங்களுக்குத்தான் வேலை செய்கிறானுங்க, அதிலும் முதலில் அவங்க பையை நிரப்பிக் கொள்கிறானுங்க’
“நான் மட்டும் நாட்டின் தலைவரானால், எல்லாருக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய ஏற்பாடு செய்வேன். எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி செய்து கொடுப்பேன். ஆனா, ஏழைகளுக்கு மட்டும்தான். பணக்காரங்க எல்லாம் தாயோளிங்க’
“தலைவர்கள் பிணத்தின் மேல் மூவர்ணக் கொடி போர்த்தியிருக்கும். அதை எடுத்துச் சென்று போன முறை ஒரு படகுக் காரருக்கு 5 ரூபாய்க்கு விற்றேன்”. அந்த வகையில் ஒரு தலைவரின் மரணம் இந்த சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஓரிரு ரூபாய்கள் அதிக வருமானம் கிடைக்கும்.
ஆகஸ்ட் 15 அன்று மூவண்ணக் கொடி ஏற்றுகிறார்கள், தேசிய கீதத்தை பாடிக் காட்டுகிறான் ஒரு சிறுவன். மாலையில் ஓய்வு கிடைக்கும் போது தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.
பிணங்கள் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவெல்லாம் கூட வேலை செய்கிறார்கள்.  பிணங்கள் எரிந்துக்கொண்டே இருக்கும் என்பதால் பக்கத்திலேயே, அதாவது எரிந்துகொண்டிருக்கும் சிதைக்கு 5 அல்லது 10 அடிக்குள் உள்ள தரையில் அப்படியே படுத்துக்கொள்கிறார்கள். இரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தூங்குவதற்குள் ஏதாவது ஒரு பிணத்தை புரட்டிப் போடச் சொல்லி யாராவது எழுப்பி விடுகிறார்கள்.
வெயில் காலத்தில் சூட்டில் சிறுநீர் கூட வராது, உடம்பெல்லாம் வேர்க்குருக்களால் நிரம்பி விடுகிறது.
ககன் எனும் சிறுவனுக்கு 10 வயது தான். அவன்தான் எல்லோரையும் விட குறும்புக்காரன். தூக்கத்தில் ‘சிதைகள் எழுந்து நிற்கும், வாயைப் பிளந்து காட்டும்’ என்று சொல்கிறான்.  ”ஒரே கெட்ட கனவு பேய்கள் எல்லாம் வருகின்றன” என்கிறான்.
சுடுகாட்டுச்-சிறுவர்கள்
ந்தப்படத்தின் டிவிடியை என் நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். உயர்  மத்திய வர்க்க நண்பரின் மனைவி இந்தப்படத்தை பார்த்துவிட்டு “நல்ல வேளை, என் பிள்ளைகள் புண்ணியம் செய்தவர்கள்”என்றார். பார்ப்பனிய தத்துவத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள நண்பரின் மனைவி ஒரு சாட்சி. ஆனால் காசியிலேயே பிறந்து தினமும் கங்கையில் காலை மாலை குளிக்கும் அந்த சிறுவர்களின் பாவம் கரையவில்லை என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கங்கையுடன் துளியும் சம்பந்தமில்லாத நம் சென்னை குழந்தைகள் கூட புண்ணியத்துடன் பிறந்துவிடுகின்றன.
கண்ணுக்கு முன் நடக்கும் எந்த அயோக்கியத்தனத்தையும் கடந்து சூடு சொரணையற்று செல்ல நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆயிரமாண்டு காலம் அடிமையாக, அரை வயிற்றுக் கஞ்சி குடித்து ஆதிக்க சாதிக்கு உழைத்து, கேள்வி கேட்காமல் மடிந்த மனிதர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவத்தை எண்ணி, அடுத்த ஜென்மத்தில் ஆதிக்க சாதியில் பிறக்க வேண்டிக் கொண்டே, விதியை நொந்து இறந்தவர்கள் தான்.
அந்த தத்துவம் இன்று சுரண்டப்படுபவர்களை பாவம் செய்தவர்களாகவும், சுரண்டுபவர்களை புண்ணியம் செய்தவர்களாகவும் சொல்லுகிறது. அப்பொழுது கங்கையில் குளித்தால் பாவம் போகாது என்ற சிறு உண்மையையாவது ஒப்புகொள்வார்களா? தலித் ஒருவர் கங்கையில் குளித்துவிட்டு வந்தால் ‘பாவ’மெல்லாம் போய், நல்ல வாழ்க்கை அவருக்கு கிடைக்குமா?
சுடுகாட்டுச்-சிறுவர்கள்
இயக்குநர் ராஜேஷ்.எஸ்.ஜாலா
ஆனால் இந்தப் படத்தை எடுத்த ராஜேஷ் ஜாலா ஒரு தீர்வை சொல்கிறார். ‘இந்தப்படத்தை அரசியல்வாதிகள், ஆளுபவர்களுக்கு போட்டு காட்ட வேண்டும். இது தான் இந்தியா’ என்று அம்பலப்படுத்தி அவர்களை திருத்த வேண்டும் என்கிறார்.
‘ஆளுபவர்களும், அதிகாரிகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது’ என்பது அபத்தம். சரி தெரியாது என்ற வைத்துக்கொண்டாலும், தினம் தினம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைக்கும் பொருளாதார கொள்கை, போராடும் மண்ணின் மைந்தர்களை தீவிரவாதிகள் என்று கொல்வது போன்ற சமூகப் பணி செய்துக்கொண்டிருக்கும் அவர்கள் இந்த படத்தை பார்த்து திருந்தி விடுவார்கள் எனும் வாதத்தை பற்றி என்ன சொல்வது! அவர்கள் என்ன விஜய்காந்த படத்தில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளா அல்லது எம்ஜி ஆர் படத்தில் வரும் நம்பியார்களா, நீண்ட நீதி நெறி வசனத்தின் பின் திருந்திவிட?
ஹார்லிக்ஸ் பிள்ளைகள் அல்ல, சமுகத்துடன் உறவாடும் பிள்ளைகள் தான் நேர்மையாகவும், இரக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த சிறுவர்கள் ஒரு அனாதை பிணத்தை பார்த்தவுடன் அதற்கு ஈமச் சடங்குகள் செய்து அதை எரிக்கிறார்கள்.
அந்த சிறுவர்களுக்கு அழகுணர்ச்சி இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆடிப்பாடுகிறார்கள். தங்களுக்குள் சிரித்து கேலி பேசி மகிழ்கிறார்கள். நவராத்ரா திருவிழா நேரத்தில் எரியும் சிதைகளின் பின்னணியில் மேடை போட்டு ஆட வரும் நாட்டிய பெண்களுடன் ககன் டான்ஸ் ஆடுகிறான். ‘நான் அவ்வளவு நல்லா ஆடலை’ என்று வெட்கத்துடன் புன்னகைக்கிறான். மழை பெய்யும் போது, எடுத்து வைத்திருந்த பிணத்தை போர்த்தும் துணியை கட்டிக் கொண்டு அழகு பார்க்கிறான் இன்னொரு சிறுவன்.
‘இந்தத் தொழிலை விரும்பி தான் செய்கிறோம் என்று அவர்கள் எங்குமே சொல்லவும் இல்லை. வேறு வழியில்லை, குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
ஹிந்துத்வவாதிகளும், ஜெயமோகன்களும் ஜாக்கி ஏத்தி நிற்க வைக்கும் காசியின் புனிதத்தை இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவற்றை கேள்வி கேட்டபடியே தான் இருக்கிறது. படத்தை பார்த்த பிறகு தீர்வை நோக்கி நகர வேண்டியது நாம் தான். என்ன செய்ய போகிறோம்? இவர்களுக்காக உச்சு கொட்டிவிட்டு நகரபோகிறோமா? அல்லது ஹிந்து மரபை எண்ணி கன்னத்தில் போட்டு கொண்டு முக்தியடைய போகிறோமா?
_________________________________________________
- ஆதவன்.

Friday, August 10, 2012

கோவை மாநகரம் இது...!!!

இரும்புத்தாதுகள் காற்றில்
இம்மியளவு இடைவெளியில்லாமல்
இடம் நகரும்

விசை மோட்டார் நகரம்...!!
தறி பாடும் இரைச்சல் கீதம் எப்போதும்
கேட்கும் பஞ்சாலை 
நகரம்...

வாணிபச்சந்தையில்
வானெட்டும் வேகம் கொண்ட
உழைப்பாளரின்...உப்புத்தேகம்
ஓய்வுக்கு ஏங்குவதில்லை...!!!

அன்னமிட்ட சாலைகளும்
கல்விக் கொடையும்
கந்தக நெடியும்
இங்கே
ஏராளம் தாராளம்..!!

கொங்குத்தமிழுக்கும்
குந்தகப் பேச்சுக்கும் கொஞ்சமும்
குறைவில்லை...!!!

மேற்குக்காற்றின்
ஈரவாடையில்.இங்கே.
பொழுதுகள் விடியும்...

இன்னும் மிச்சமிருக்கும்
பாரம்பரீய அடையாளமாய் வீதிகள்
சாணம் மொழுகிய அடையாளத்தோடு
இங்கே வரவேற்கும்..!!!

வார்த்தைக்கு வார்த்தை
அன்பொழுகும் நேசம்
என்றும் மாறாததாயிருக்கும்..!!!

பிறப்பிடம் எங்கேயோ
வசிப்பிடம் இதுவென்று
வந்தோர் பல்லாயிரம் இங்குண்டு...!!

எழுபத்து இரு மாதங்களாய்
இம்மக்களினூடே  வாழ்ந்ததில்
ஒரு நாளும் போதுமடா சாமி
எனச் சலித்ததே இல்லை..!

கொங்குத்தமிழ் விளையாடும்
வீதியில் செம்மொழியும்
தேர் நின்ற ................................... “கோவை மாநகரம்”
ஆம்!
இங்கே உழைப்புக்கு
வந்தனம் செய்வோர்...
ஆயிரமாயிரமுண்டு....!

-கவிதைக்காரன்