Sunday, August 26, 2012

என் தோழி…!


என்றோ தொலைந்து போன
என் தோழியானவளின் கனவு
சமீப நாட்களாய்
என் உறக்கம் கலைத்து..
போனது எனக்கே வியப்பாய்!

காரணம் பெரிதாக ஒன்றும்
இல்லை..! உண்மையில் உட்கார்ந்து
யோசிக்கும் வரை அவள் பெயர்கூட
எனக்கு நினைவில் இல்லை!

பள்ளி ஆண்டு விழாநாளில்
என் சகோதரியின்
மஞ்சள் வண்ணதாவணி தலைப்பை
எப்படியெல்லாமோ சுற்றி
வண்ணத்துபூச்சிபோல் வேடமணிந்து
நீயும்…!

வெள்ளை நிற அரைக்கால்
சட்டையணிந்து உச்சஸ்தாதியில்
பாட்டுப்பாடியபடியே நானும்
நம்மோடு சிலரும் ஆடிப்பாடிய
ஆண்டுவிழா புகைப்படம் மட்டுமே மிச்சமாய்..

என்னிடம் அதுவும் போன
முறை விருந்தினர் வந்தபோது
புகைப்பட ஆல்பங்களை அம்மா
எடுத்துகாட்டியபோது சிக்கியது

ஆனால் அன்றைய நாளின் கனவில் கூட
வேறொரு அவள் தானே வந்து போனாள்
இங்கே அவள் இரகசியமாக்கப்பட்டிருக்கிறாள்.

சரி நேற்றைய கனவுக்கும்
தொலைந்த தூக்கத்துக்கும்
இன்றைய கவிதைக்கும் காரணமானவள்
இவள் முதலில்
தோழி என உங்களுக்கு அறிமுகம்
செய்யப்பட்டவள்…!

பதின்ம வயதுகளை கடந்த
பருவங்களில் என்னோடு
பயின்றாள் என்பது மட்டும் அடையாளம்!

நெல்லிக்காய்க்கு கொள்ளைபிரியம்
கொள்பவள்..!
பொதுவாக பெண்பிள்ளைகள்
எல்லோருக்கும் பிடித்துபோனது தான் என்றாலும்
நான் இவளை பற்றி மட்டும் தானே பேச நினைக்கிறேன்!

அப்படியானவளுக்கும் எனக்கும்
நட்புவளையம் வளவிகள் பூட்டி
பரிமாறும்..!
(பெண்பிள்ளைகளின் வளையல்களில் அப்போது கொஞ்சம் ஆர்வம் அம்மா அக்காவுக்கு வாங்கும் வளையள்கள் என் கை சேராது பெரியதாய் இருக்கும் இன்று நிலைமை வேறு பழச ரொம்ப கிண்டப்படாது..!)

புத்தகங்கள் இடம் மாறும்!
விளையாடும் போது என்னை காப்பாற்றுவாள்!
தண்ணீர் குடிக்கும் இடங்களில்
நான் முண்டியடித்து அவளுக்கு இடம் பிடிப்பேன்!

அக்கா உடல்நலமின்றி இருந்த நாட்களில்
தனியாக நான் மட்டும் பள்ளிக்கு
செல்லும் போதெல்லாம் அவள்தான் எனக்கு
தனிமை மறக்கசெய்தவள்…
இப்படி இருந்தவளை ஏன் ?பெயர்கூட மறந்ததாக
இருக்கிறேன் என்கிறீர்களா..!

அந்த பிரிவிற்கும் காரணம் உண்டு!

அன்றோர் மாலை எப்போதும் போல
பள்ளிமுடித்து சாலைகடந்து
வீட்டிற்கு செல்லும் வழியில்
யாரென அறியாத வாகன ஓட்டியின்
கவனமின்மைக்கு இரையாகி
ஒருமாதகாலம் வகுப்புக்கு ஓய்வாய்
நாற்காலியில் சாய்வாய்..! நானிருக்க..

வலிகள் எல்லாம் வெரைந்து கரைந்து
முடிந்ததென வந்த நாளில்
மொத்த பள்ளியும் கண்ணீர்மல்க வரவேற்றது!
நானும் மல்கிப்பெருகி
அக்கூட்டத்தில் தேடினேன்!
என் தோழியானவளை!

அவள் அங்கு இல்லை!
என் தேடலை அறிந்த நண்பன்
எனக்குமட்டும் கேட்கும் சப்தத்தில்
காதில் சொல்லிபோனான்!
அவள் தந்தை சாலை விபத்தில் இறந்தாரென!

அதனால் பள்ளியைவிட்டே!
போய்விட்டாள் தாத்தாவின்
ஊருக்கு நாளை போகப்போகிறாள்
வேண்டுமானால் நாளை என்னோடு வா!
நான் அவளிடத்தில் அழைத்து செல்கிறேனென..!

மறுநாளும் விடிந்தது!
நான் வழக்கம் போல பள்ளிக்கு சென்றேன்!
நண்பனின் புரியாத பார்வைக்கு பதில் காட்டாமல்
இருந்தவனை
வம்படியாக ஒரு மதியப்பொழுதில் கேட்டான்!

ஏண்டா அவளை பார்க்க போகலை
நீ வருவேன்னு அவ எவ்ளோ நேரமா! காத்திருந்தா தெரியுமா?
என்றான்!...

நான் பதில் சொலவே இல்லை!
அவள்
எனக்கு தனிமையில் தைரியம்
சொல்லி தந்தவள், என்பதை
அவளை நீங்கிய தனிமையில்!
உணர்ந்துகொண்டேன்.

நேற்றைய கனவுக்கு காரணம்!
நான் தனிமையில் இருப்பதாய்
சொல்லி பார்த்து பத்திரம் என்று அம்மா!
பக்கத்து ஊருக்கு சென்றதாலா?

தோழியானவள் !
தைரியம் விதைத்திருக்கிறாள் என்னுள்!
நான் தைரியம் என்றால் என்னவென
அறியும் வயதை எய்தும் முன்னமே!


-கார்த்திக் ராஜா (தொலைந்த என் தோழிக்கு சமர்ப்பணம் :)

1 comment:

தமிழ்ச்செல்வன் said...

நட்புவளையம் வளவிகள் பூட்டி
பரிமாறும்..!
வளையோசை இன்னும் என் காதில் இனித்துக்கொண்டே இருக்கிறது.