Saturday, March 24, 2012

தேங்கிப்போன குட்டைகளா நீங்கள்?

வறண்டுபோன உங்கள்
நதி விண்மீன்களையும்
கூட இனி சுமப்பதாயில்லை

விதையில்லாத மரங்களின்
வேர்கூட விறகிற்கும்
சேர்ப்பதாயில்லை

பனியும் புல்லும்
பசுக்களுக்கும் இல்லாமல்
போனபோதும் கவிதை கவிதையென
காலைக்கு அதையே கட்டி அழுகின்றீர் ஏனோ!

இன்னுமின்னும்
எத்தனைகாலம் புளித்த
தயிரையே பாலுக்கு உரை ஊற்றிக்கொண்டிருப்பீர்

புதிது புதிதாய் அடையாளம்
காணப்படவேண்டிய
களம் கண்ணுறங்கிக்கொண்டிருக்க

மீண்டும் மீண்டும் எழுதிய வரிகளையே
இடம் வலம் மாற்றிப்போட்டு
இதுவும் கவிதையென

எத்தனை நாட்கள் கடத்தி
திரிவீர்?

உங்கள் பழையனவான
வார்த்தைகளை
கொஞ்சம் புதைத்துவிட்டு
புதிய திசையை தேடுங்கள்

சலிக்கவைக்கவில்லையா
உங்கள் செத்துப்போன
உவமைகள்

மீண்டும் மீண்டும்
ருசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
ரசப்புளிகளா நீங்கள்?

துவர்த்துப்போய் துவண்டுபோகாமல்
புதியதாய் தேடித்திரிந்து அலைந்து
படைக்கும் படைப்புகளில்
அர்த்தப்பட்டிருக்கின்றது

புதுக்கவிதைகளின் உதயம்..!

ஒரே சாயல் உங்களை
மக்கச்செய்தால் பரவாயில்லை
மக்காக்கிச் சென்றால்...! ???

இன்னும் நீங்கள்
குண்டுச்சட்டிக்குள்ளே
குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றீர்களா

தயவு செய்து உங்கள் குதிரையையாவது
மாற்றித் தொலையுங்கள்
புதுக்கவிதையாளர்களே..!

-கவிதைக்காரன்

Tuesday, March 20, 2012

ஆரெனின் கண்டால் சொல்வீர்...



 



செம்பொட்டு புலரும் காலை நிதம்
வானில் பறந்து பாங்காய்..

சிலிர்க்கும் சிட்டே கொஞ்சம்
கேளென் இசைக்கும் நெஞ்சம்...

பெட்டைக்குருவி உன்னை
பேணமறந்து போனோம்..!

முற்றும் அழிந்த பின்னே
இங்கே நினைவுநாளா விளக்குகின்றோம்..

அலைகற்றை எழுப்பும் தாக்கம்
சிதைந்ததெம் மழலை ஏக்கம்..!

உச்சிமிகப்பழுக்கும் வயதில்
காணவோ நீயும் இல்லை...

எத்தனை மரங்கள் கொன்றோம்...!
எத்தனை பறவை தின்றோம்...!

வலைஉலகம் சுமக்கும் பெயரை -எம்மையும்
அறியாமல் வல்லூறாய் வதைத்தே கொன்றோம்..

நெற்றை கொடுக்கும் கைகள் -நிதம்
உன்னை காணாது கண்கள் தேங்கும்...!

ரெட்டை சிறகு போதும் ஆரெனின்
எனக்குத் தாரும்...

பீடித்த மானுடம் வேண்டாம்
நீ வாழ்ந்த வெறுங்கூடெனக்குப் போதும்...

யாரெனில் எனக்குச்சொல்வீர்
ஆங்கோர் குருவி கண்டால்..

-கவிதைக்காரன்

Friday, March 9, 2012

உடைந்த சில்லுகளாய் மனம்..





என் வழித்தடங்கள் எல்லாம்
வெறுமையால் நிரப்பப்பட...

போகும் பாதையெல்லாம் வேண்டா வெறுப்பாய்
நிலவும் கதிருமென்னை அன்னிச்சையாய்

ஆக்கிரமித்துக்கொள்ள
நிழல் என்னை நீங்காத இருள் என்னை பீடித்துக்கொண்டது..!

பெரும் போக்கிடமில்லாதவனாக
நாடியவரோடேயே நட்போடு அண்டிக்கிடப்பதால்

உனதருமையும் தரமிழந்து போகிறதோ!
மற்றான் மணம் புதிதென்பதால் தானோ

உன்னையே கண்முன் எடைபார்க்கவும்
துணியும் அன்போ...இவையெல்லாம்

எதை எதிர்ப்பார்த்து நின்றாய்
ஏமாற்றம் உன்னைச்சாய்த்துப்போட...கலங்காதே...

இல்லாத அருமை இருக்கும் பேருக்கும்
உணரும் வரை நீயும் நானும் மட்டுமில்லை
தனிமைக்கும் நீயே துணையாவாய்...

சில நேரம் சமாதானப்பட்டுக்கொள்ள முனைந்தாலும்
சட்டென உடைந்த கண்ணாடிச்சிதறல்களாக என்னைச் சாய்க்கப்பார்க்கிறதே.. என்செய்வாய்...
**
முள்ளுக்கு வேலி இல்லை என..
முடங்குதல் அழகோ..!

உன் வானம் பின்னால் ஆயிரம் விண்மீன்...
வாழக்கற்றுக்கொள்வதைக் காட்டிலும்

வாழ்ந்துவிடல் நன்றாமே.. குழந்தையாய்
கொஞ்சம் தவழ்ந்து போவது

தாழ்ந்து போவதிலும் நன்றென்பாய்...
வா... ஒரு மின்னல் மழை ரசிக்க...

வெயில்காலம் மழைக்காலம் மாறி வந்த போதும் கவிதைக்கு குறைவா என்ன உன்னிடம்... !

கவலையை கடவாய் மனிதா!
ஏதுமில்லை வெற்றிடம் காற்றோடும் கதை பேசலாம்..!