Monday, May 23, 2011

குழல் விளக்கு...

விட்டில் பூச்சி ஒன்று
விரட்டி விரட்டி தொட்டு
விளையாடுகிறது குழல்விளக்கை
அதை இறையாக்க ஒரு பட்சி
காத்திருக்கிறது அறியாமலே!

சுடுமென்றறிந்தா..!
வெளிச்சம் கண்டு தன்னை
மறந்தா எத்தகைய நினைவில்.
சுற்றிவரகொண்டது...

இன்னும் சற்று நேரத்தில்
இரையாகியும் போகலாம்
அந்த சுவர் பட்சிக்கு
இல்லை சூட்டில் இறந்தும் போகலாம்

ஆனாலும் எதையுமே அறியாத
மனதையோ இல்லை
எதையும் புரியா அறிவாயோ
அந்த குழல் விளக்கை
சுற்றி வருகிறது விட்டில்...

விடை என்னவென தெரிந்திடாமலே..
செல்ல மனமில்லை
பார்வையாளனான எனக்கு...!!
விளக்கை அணைத்து வாழ்க்கை கொடுக்கவா?
விரட்டி அடித்து சந்தோசம் பறிக்கவா?

எதையுமே அறியாமல் குழல் விளக்கு ஒளிர்கிறது....

கடிகார நண்பன்..!

நேரத்தை எனக்காய்
கடத்தியபடியே செல்கிறது..!
அங்கும் இங்குமாய் ஒரு நளின ஆட்டம்
இடையிடையே இசைகோர்வை
வெளியீடு வேறு..!!!

நாள்தோறும்  ஒரே இடத்தை வலம் வந்து.
நேரம் காட்டி செல்பவன்
கடிக்கார  குட்டையில் வீழ்ந்து கிடந்த
என்னை காலம் முந்துவதெப்படிஎன
கற்றுகொடுத்த வித்தைக்காரன்..

என் தாமதத்தையும் கண்டிருக்கிறான்
என் வேகத்தையும் வென்றிருக்கிறான்
எப்போதும் நான் சோர்ந்தால்
ஒலி எழுப்பி அதட்டி சிரிப்பான்!

அந்த ஒலியை ஒழித்து கட்டவே
கடினப்பணிகளையும் விரைந்து
முடிக்க விளைவேன்
யார் கண்பட்டதோ..நேற்றைய இரவில்
விழுந்து கிடக்கிறான் கீழே..

நட்டநடுவே ஓர் கீறல்
என் நெஞ்சிலும் தான்...!
சிதறலாய் போய்விட்டான் என்
கடிகார நண்பன்..!

மழையானவள்....

செம்மண் பூமியை புரட்டி போட்டாற்போல்
வானம்...செக்கசிவப்பாய்..
விரைவே மழைக்காரியை
அழைத்து வந்து நனைத்துசெல்வேன்
என மிரட்டும் அந்திப்பொழுது....!!!

யார் இறந்தாரோ தெரியவில்லை..
கண்ணீரோடு..வீசப்பட்ட மனம் இல்லா
பூக்கள் செறிந்த சாலை..
குறுக்கும் நெடுக்குமாய் கட்சி தோரணம்..

கடைவீதிகளேல்லாம் கண்டன ஆர்பாட்டத்தின்
கீழ் அடைத்திருக்க..முதல்முறை வேலை நிமித்தமாய்
கோவை தரிசிக்க வந்த நாள் இப்படியா வைக்கவேண்டுமென..
உள்ளுக்குள் பொருமினேன்..

என் நேரத்திற்கு..பிப்பிரவரி பதிநாலாய் போக..
சாலையெல்லாம் பசுமை தொலைந்திருந்தது..

சொன்னதுபோல் மழைக்காரி மந்தாரமாக வந்து
வேலை கெடுக்க..செல்லுமிடம் செல்லாமல்
ஒதுக்குபுறமாய் ஓரிடத்தில் நான்..

அன்றைய வேலை தொலைத்த பெருமை எனக்கும்
பறித்த பெருமை மழைக்குமாய் போக..
வீதியில் வடிந்த மழையை...காலில் போட்டு
மிதித்தபடியே..நடந்து போக..

எதிரே திறந்திருந்த ஆபத்பாந்தவணான தேநீர்க்கடையில்
கொட்டை எழுத்தில்..*கோவையில் குண்டு வெடிப்பு *
மழைக்காரியை மிதிக்க மனமில்லை....
மன்னிக்க மழைக்காரி இல்லை இனி மழையானவள்.

Thursday, May 5, 2011

நேற்று வரை தெரியாது நான் நல்லா எழுதுறேன்னு!

நேற்று வரை தெரியாது நான் நல்லா எழுதுறேன்னு!
 ரொம்ப நாள் முன்னாடி (அப்பா மறைந்த பின்பு)
ஏதோ ஒரு தூக்கமில்லா இரவு..
எல்லாருக்கும் இருக்கும்
ஆனால் எனக்கு..
தூங்கிவிட்ட இரவுகள்
விரல் விட்டு எண்ணும்
எண்ணிக்கையிலே..

தூக்கமில்லா 
அந்த நாட்களை
நிரப்பி இருந்தது
என் பேனாவில் நான்
அடைத்து வைத்திருந்த
*மை* தான்..

அந்நாட்களில்
எழுத்துக்கள் என் இரவை காவு
வாங்கிக்கொண்டன..
யாரோ ஒரு பெண்ணுக்கு
எழுதி தந்த கடிதங்கள்
மட்டும் என்னை
பிடித்திருந்ததாய்
சொல்லி இருக்கலாம்
எழுத்தில்!

நண்பனின் காதலி
ஒரு பெண் எனக்கு தோழியாய்
இருந்தால் அவனுக்கு காதலி
ஆகும் முன்னமே!

நான் எழுதிய ஒரு
*அயல் நாட்டில் வாழும்
மகனுக்கு வயோதிக தந்தை எழுதும்
கடிதம் போலொரு வரிகளை*
எப்படியோ என்னிலிருந்து
எடுத்து 

அருமை அருமை
என்று பார்க்கும் போதெல்லாம் சொல்லி
அதில் ஒரு பிரதி எடுத்து
பாத்திரமாக்கி கொண்டிருந்தாள்.

இன்று நண்பன் என்னைபர்க்க
வரும்போது கூட தலையிலடித்து
சொல்வான் பாவி நீ நல்லாவே இருக்க
மாட்ட.. உன்னை யாரடா கவித எழுத
சொன்னா..உன்னைபத்தி பேசுற
நேரமெல்லாம்  அந்த கவிதைய சொல்லி
கழுத்தை அருக்கிராடா..என்பான்

அப்போதும் சொல்லிகொள்வான்
ஊரில் உள்ளவனுகேல்லாம் எழுதுற..
என்னைக்காவது  எனக்கு எழுதி
கொடுத்திருக்கியாடா  என்று
நான் சொல்வேன்.

*இருடா ஆளாளுக்கு திட்றீங்க
இதெல்லாம் கூட ஒரு நாள்
எழுதிபோட்டுறேன் * என்று
(இன்று அதும் நிறைவேறிய சந்தோசம்)

இப்படியே! நகர்ந்து கொண்டிருந்த போது
சொந்த வீடு கட்டி வேறு பகுதிக்கு
குடி பெயர்ந்த போது..
நான் இல்லாத பொழுதுகளில்
வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டு
கல்லூரிப்பெண்கள் (இப்போது சகோதரிகள் )   

என் அலமாரி மூட்டைகளை
அவிழ்த்துகொட்டி என் மானத்தை
காற்றில் பறக்க விட்டு விட்டனர்.
யாரோ ஒரு பெண்-னுக்கு
(டீடைல்வேணாமே !)
நான் எழுதி கொடுத்த (எனக்கான காதல்)
கடிதத்தை ஊருக்கே
பிரசூரம் பண்ணிய புண்ணியவதிகள்

நல்லவேளை என் கவிதை தொகுப்புகள்
அவர்கள் கண்ணில் படாமல் பத்திரமாய்
இருக்கும் என நான் இருக்க! ஐயோ  !
அது என் கண்ணிலும் படவில்லை..
எங்கே போனது என்று வீடு முழுக்க
தேடினால்  அது எல்லாம்

அடுத்தடுத்த வீடுகளுக்கு
பிரித்து கொடுக்கப்பட்டிருந்ததாம்
நேரில் போய் கேட்கவும் கூச்சம்..
 யாரை கேட்டு கொடுத்தீர்கள்
என்று வீட்டில் கூச்சல் மட்டுமே
போட்டு அடுத்த பேனாவுக்கு
பசியடைத்திருந்தேன்.

அன்று முதல் ஊருக்குள்ளும்
ஒரு பரிகாசம் கலந்த பெருமிதப்பார்வைகள் 
என் மீது பட்டன! தட்டுதடுமாறி அத்தனை
தொகுப்புகளையும் வீட்டுக்குள் ஒழித்து வைக்க
காணாமல் போன சில காகிதம் மட்டும்
என்னை கவிஞன்  என்றாக்கியது..!

அப்படியே சில காலம் உருண்டோடிட    
யார் சொல்லியும் கவிதையை விடவில்லை 
ஆனால் காதலியை விடுவதாயிற்று!
அவளே சொல்லி கேட்காமல் போவேனா?

என்னோடு நிழலாய் என் பேனாவும்..
அதனில் நினைவாய் நானும் 
நடைகொண்டதோர் நாட்களில்
எல்லாம் எழுதும் என் பேனா 
எந்தந்தையை பற்றி எழுதியது.

பல நேரங்களில் நான் எழுதுவதை விட 
என் பேனா அருமையாய் எழுதும்  
(சிலவை  நானா! எழுதினேன்னு 
அப்புறமா சிந்திப்பது உண்டு  )

அப்பாவை பற்றி என் பார்வையில் 
வரைந்த ஓவியமாய்  அமைந்தது 
அந்த தொகுப்பு..  எழுதிய நாளில்
தூக்கம் மறந்தும் என்னை 
தொட்டு செல்லவில்லை 

மறுநாள் அதனை புத்தகமாக்கி 
அம்மாவுக்கு தொலைப்பேசியில் 
அழைத்து (வெளியூரில் இருந்திருந்தேன் )
மொத்த எழுத்துக்களையும் 
வாசித்து காண்பித்து பூரித்து போனேன்!
அம்மாவிடம் அப்போது குரல் இல்லை..!
விசும்பலைத்தவிர..!

ஆனால் அப்போது கூட நான் என்னை 
நல்ல கவிஞன்  என எண்ணி 
கொண்டதே இல்லை..
மிகநூளுக்கு  வந்த பின்பு 
(முன்பே இருந்தேன் ஆனால் 
பயன்பாடு குறைவு)
என் பேனாவுக்கு சுத்தமாய் 
வேலை இல்லாமல் போனது!
இங்கே அன்னை விட எத்துனை பேர் ! 
என எண்ணியே தனித்து நிற்க 

மீண்டும் எனக்கு புத்துணர்ச்சியை அள்ளிக்
கொடுக்க அவதரித்து வந்தால் 
ஒரு தோழி! அவளின் வார்த்தைக்கு 
மதிப்பளித்து  இன்று வரை தவிக்கிறது
என் விசைப்பலகை..

இன்னும் சில நண்பர்களின் அறிமுகத்தால் 
காதலையே சுற்றிவந்தவன்..!
காலுக்கடியில் இருந்த பூமியினையும் 
கவிதைகொள்ளச் செய்தேன் !
வழக்கமாய் வந்து அருமை என்பாரும் !
என்றாவது வந்து வாழ்த்துரை 
சொல்லி போவாரும்  
என்றே !


கடந்து கொண்டிருந்தது என் பயணம் 
அப்போதும் வழக்கம் போல் 
என் டயலாக்கை நான் விடுவதாய் இல்லை!
ஆனால் நேற்று ! இரவு எதோ ஒரு ஆங்கில 
திரைப்படம் பார்க்கும் போது எழுந்து 
வாயில் கதவின் சாவியை தேடும்போது 
அது சாமி படத்தின் முன்னாள் இருப்பதை 
அம்மா சொல்ல துளாவும் போது!
கையில் சிக்கியது!
அம்மாவுக்கு நான் கொடுத்த அந்த!
புத்தகம் (அப்பா -என்னுடைய பார்வையில்)
அம்மா எதற்காகவும் விட்டு கொடுக்காத 
கடவுள் நம்பிக்கைக்கு பின்னால் இருக்கிறது 
என் எழுத்து..
அந்த நிமிடம்..
என்னை உணர்ந்தேன் நல்ல கவிஞனாய்!
என் தந்தைக்கோர் நல்ல மகனாய்..!
-கார்த்திக் ராஜா ..!