Friday, August 17, 2012

ஒரு யானையின் பிளிறல்

 

காலாட்படை கூடி என்னை ஈட்டிகொண்டு 

வாட்டி நின்ற போதும் 
புறமுதுகிட்டதில்லை..!!!

எதிரவனின் வாள்முனை 
எம் மேனிதுணைத்தெடுத்த போதும் 
களைத்தே போனதில்லை...!!!

என் காயங்களின் குருதி
காலடியில் சிந்திச்
சகதியானபோதும் 
களத்தை சிதறடித்து
சாய்க்காதவரில்லை...!!!

பின்வழிக்கு 
துணிந்ததே இல்லை...
முன்சென்ற பாதை மாத்திரம்
எனக்கானது...!!!

பிளிறல்கள் மாத்திரம் எனக்குண்டு 
பிதற்றல்கள் ஏதுமில்லை 
குண்டுகள் துளைத்தெடுத்த போதும்
குப்புறச்சாய்ந்ததில்லை...!!!

கொன்றாயடா..?
எம் வீரத்தை கொடும்
பாதகக் கொடியோனே..!!!

வென்றிடும் மன்னவனின் 
கொடைக்குள் ஆளும்
பட்டத்துக் களிறென்னை
நட்டநடுக்காட்டில்...!!!

நாதரவாய் 
வெட்டிச்சாய்த்ததென்ன??

எயிற்றின் மதிப்புக்காய்
எம் குரல்வளை குதறியதென்ன?
வெண்கோட்டுக் களிறென்
சிரசை சிதைத்துப் போனதென்ன? 

அழுகுமென் பிணத்தை
அப்புறப்படுத்திடும் 
போது 

துர்வாடை எங்கென
நீ  “உணர்ந்தே கொள்வாயோ..??”
இல்லை இன்னுமின்னுமென்
இனம் “கவர்ந்தே கொல்வாயோ??”

உனக்கொன்று தெரியுமா?!?
யானையை எந்த விலங்கும் 
வேட்டையாடுவதில்லை 
மனிதனைத்தவிர...! 

-கவிதைக்காரன்.

No comments: