Sunday, August 21, 2011

என்ன செய்யப்போகிறோம்?


புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை. நமது உலகம் நம் கண் முன்னே அழிவதை நாம் திரைப்படக் காட்சிகளைப் போல பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

நமது வாழ்கை முறைகளால், நாம் நமக்கே வைத்துக் கொண்டுவரும் இந்த சூனியத்தைப் பற்றி நம் பதிவர்களில் சிலர் கூடப் பதிந்துள்ளனர். உலக உருண்டை ஒரு உள்ளங்கையில் இருப்பது போல சில படங்கள் பார்த்திருப்போம். உண்மையிலேயே இந்த உலகத்தின் அழிவும் அதை காப்பதும் நம் ஒவ்வொருவரின் கைகளில் தான் உள்ளது. சுனாமி, பெருவெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கடலோர கிராமங்கள் கடலில் மூழ்குதல் போன்ற இயற்கை சீரழிவுகளால் நம்மில் பலர் இன்று வரை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இவையெல்லாம் நம்மக்கு ரத்தம் அல்ல... தக்காளி ஜூஸ்.

நம்மால் மாற்றப்பட்ட இந்த சீதோஷ்ண நிலையினால், புவியில் உள்ள அனைத்து பனிப் பகுதிகளும் உருகி, கடலில் கலப்பதால், கடற்பரப்பின் வெப்ப நிலை உயர்ந்து, கடலின் அடிப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயு நாம் சுவாசிக்கும் ஆக்சிசன்னுடன் கலந்து நச்சுக் காற்றாக மாறிவிடும். இந்த பேராபத்து இன்னும் 4-5 ஆண்டுகளில் நிகழத் தொடங்கும். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இப்புவியின் வெப்பநிலை உயர்வு 1.8 degree F (1 degree C). இதில் கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் 1.1 degree F (0.6 degree C).

இயற்கை சீற்றங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கார்பன்-டை-ஆக்சைடும், மீத்தேன் வாயுவும் புவி தட்பவெப்ப மாற்றத்திற்கு மிக முக்கிய காரணிகள். அதிலும் மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட 25 மடங்கு சக்தி வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போது, சூரிய வெப்பத்தை பூமிக்கு கொண்டுவந்து சேர்த்து பல உயிரனங்களும், தாவரங்களும் வாழ உதவியது. ஆனால், இன்று அதிக அளவில் நம்மால் வெளியேற்றப்படுவாதால், அது நமக்கே ஆபத்தை உருவாக்கி விட்டது.

கடல் நீர்மட்டம் உயர்வது பெரும் ஆபத்தானது. தற்போதைய நிலவரப்படி கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் 1.8 mm உயர்ந்துகொண்டிருக்கிறது. 18 -ம் நூற்றாண்டில் 2cm, 19 -ம் நூற்றாண்டில் 6cm மட்டுமே உயர்ந்த கடல் நீர்மட்டம், கடந்த நூற்றாண்டில் மட்டும் 19cm உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டுக்குள் இது ௦0.8meter-க்கும் 1 .5 meter-க்கும் இடைப்பட்ட அளவில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மட்டம் 1meter-ஐ நெருங்கும்போது உலகின் பெரு நகரங்களான லண்டன், நியூயார்க் மற்றும் டோக்யோ போன்றவை மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடும்.

நமது சரித்திரம் தொடர வேண்டுமென்றால், சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நம் வாழ்வியல் சங்கதிகள் எதிர்காலத்திலும் ரசிக்கப்பட வேண்டுமென்றால், சந்ததிகள் நலமாய் வாழவேண்டும். கீழ் உள்ள படங்களை பெரிதாக்கி பாருங்கள் நமது தற்கொலையின் பாதச் சுவடுகள் தெரியும்.

விலங்குகள் கூட தனக்கு ஆபத்து என்றால் உரத்து குரலெழுப்பும். தம்மை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நாம்???

No comments: