Sunday, May 6, 2012

அன்னையர் தின வாழ்த்து..???


நெஞ்சம் எரியுது தனலாய்...
நெருஞ்சி முள்ளின் கீறலாய்..

அன்பைத் தேடி ஏங்கி வழிந்த என் உள்ளம்
சென்ற பாதையெல்லாம் வெறுமை வடிந்த பள்ளம்

அன்னை அன்னையென அன்பை மட்டும் எழுதுவதில்
உடன்பாடில்லை எனக்கு...

அனுதினமும் அன்புக்கு ஏங்கி அடுத்த வேலை
உணவுக்காய் எச்சில் காக்கைகளோடு இடமில்லாமல்
படுத்துக்கிடந்த எனக்கு...
தாலாட்டுப்பாட்டுக்கு கேடில்லை

தாயானவள் தரம்தப்பி என்னை
தவிக்க விட்டுப் போனபோது
ஐயிரண்டு வயது எனக்கு

அடித்து துவைத்த அப்பன் வளர்ப்பில்
அடிவயற்றுக்கும் கஞ்சியில்லை.

பெருநகரத்தின் வீதியில்
பிச்சையெடுக்க கைகள் உயர
தன்மானம் தடை சொன்னதால்

கையேந்தி உணவகத்தின் அர்த்தஜாம நேரத்தில்
பத்துப்பாத்திரம் கழுவி காத்திருந்து
பசி நீர்த்தேன்...

அழுது அழுது கண்ணீரில் உப்பில்லை
ஏன் இப்படி பிறந்தேன்? என் மீது தப்பில்லை

பற்றி எரிகிறது தாயே...
பள்ளி செல்லும் பிள்ளைகள் -எல்லாம்
என்னை பக்கத்தில் தாண்டி
கடந்து போகும் போது...!

அன்னையர் தினமென
ஆங்கோர் விளம்பரநாளிதழில்
கண்டேன்...

அண்ணன்கள் பலரும்
அன்னையென்றாலே புனிதமென
மாண்பையே எழுதும் போது

என்னைப்போலான
இருட்டின் கரையில் வெம்பித்திரியும்
பேரின் கதைகேட்க ஆளில்லைபோல...

என் கண்ணீரையெல்லாம்
திரட்டி உண்மை எழுதுகிறேன்...

நீ நல்லவளா கெட்டவளா தெரியாது
ஆனால் நல்ல தாயாய் நீ இல்லை என்று
மட்டும் எனக்குத் தெரியும்

உன்னை குற்றம் சொல்லப்போவதில்லை
நான் - எங்கிருந்தாலும் நல்லாயிரு..
ஆனால் நான் இங்கு நல்லாவேயில்லை...!

தயவுசெய்து
இனி என்போல் யாரையும்
உருவாக்கிவிட்டுப்போய்விடாதே..!

கற்பனை & எழுத்து
-கவிதைக்காரன்

No comments: