அல்லது நகரத்தின். வேகத்தில் நம்மை திணித்துச் சமன்படுத்திக் கொள்ள நாம் வேகமாகச் சுழல்கின்றோம் எனவும் கொள்ளலாமோ...
ஊரிலிருக்கும் போது... அரிதாக சில நேரம் பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பேன்... சீக்கிரம் எழுந்துவிட்டால்... இன்னுமா தூக்கமென்று போர்வையோடு தண்ணீரை ஊற்றிப் போகும் அக்காளைச் சபித்தது போல் அவை என்னைச் சபிப்பதில்லை... செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது ஒரு கலை...
அது ஒரு தியானம் போன்றது அந்த நிமிடங்களில் அவைகளோடு அளவளாவிக் கிடைக்கும் மகிழ்வை எழுத்தில் கொண்டுவருவது சவால் தான்.
இதுவெல்லாம் சிலகாலம் முன்புதான்... அதற்கும் முன்பற்றி சிந்தித்தால்...
நினைவு நதி ஈரமாய்ச் சிலிர்க்கத்தொடங்குகிறது...
அதிகாலைக்கும். நமக்குமான உறவுநம் வயதையொத்ததல்லவா... அதுவும் பால்யங்களை விட பதின்மங்கள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகாலையில் தான் அர்ச்சனைகளோடு தொடங்கும்..
பள்ளிக்கூட வயதில்.. நான்கரை மணிக்கு விடியும் எனக்கு உறக்கத்தை கொன்றுவிட்டு, எழுந்து முகவாய் கழுவிவிட்டு சைக்கிளை மிதித்துபரபரப்பாய் பாளையங்கோட்டையிலிருந்து பெருமாள் புரம் வரைக்கும் போய்
வண்ணதாசனோ,வண்ணநிலவனோ சரியாய் நினைவில்லை... அந்த எழுத்தாளர் வீட்டருகே. உள்ள ஜேசு. அண்ணன் வீட்டில் தயாராகின சமோசாக்களை பெட்டியில் அடுக்கிக்கொண்டு... வேய்ந்தான் குளாத்திலிருந்து வேலைக்கு ஆயத்தமாகும்..
சில நாள் பாதித்தூக்கத்தில் சைக்கிள் மிதித்து பாளையங்கோட்டை மத்தியச்சிறை முன்னே இருக்கும் பேரூந்துநிறுத்தத்தில் பத்துநிமிடம் படுத்து எழுந்தோடுவேன்...
அப்போதெல்லாம் புதிய பேரூந்துநிலையம் கட்டி முடித்திருக்கவில்லை...
அங்கிருந்து அதே பரபரப்போடு பாளையங்கோட்டை வீதிகளின் தேநீர்விடுதிகள் ஒவ்வொன்றிலும் சரக்குக் கொடுத்துவிட்டுமார்கெட், கே.டி.சி. நகர், வி.மு சத்திரம் , பாளை டவர், வண்ணாரப்பேட்டை வந்து பெட்டிகாலியாகவும் வன்ணாரப்பேட்டை வாங்கு ஊதவும் சரியாய் எட்டு மணியாகிவிடும்...
திரும்ப வீட்டுக்கு வந்து அடித்துபிடித்து பள்ளிக்கூடத்திற்கு ஓடிப்போய். .. லேட்டானதிற்கு பி.டி-யிடம் பிரம்படிவாங்கி ... பாடம் படித்து கொஞ்சம் பால்ராஜின் உதவியால் வாத்தியாருக்குத் தெரியாமல் பெஞ்சுக்கிடையில் குட்டித்தூக்கம் போட்டு மதியம் பலவீட்டுவிருந்துண்டு பள்ளிக்கூடம் விட்டதும் காலையில் கொடுத்த சரக்கிற்கு மாலை பணம் வசூலித்த பெருமாள் புரத்து ஜேசுதாஸ் அண்ணன் வீட்டுக்குப் போய். கணக்குக் கொடுத்தால் இருபத்து ஐந்துரூபாய் கொடுப்பார்... அது அந்த ஒருநாளின் உழைப்பின் சம்பாத்தியம்...
அத்தனை பர பரப்புக்கிடையில் உழன்று கிடைத்த ஊதியத்தை சட்டைப் பையில் சுமந்து அம்மாவிடம் கொடுக்கும் போது கிடைக்கும் ஒரு பெருங்கத்தையான சந்தோசத்தை..
இதோ இன்னும் இரண்டொரு நாளில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஏ.டி.எம் இயந்திரத்தின் வாசலில் வரிசையில் நின்று தேய்த்து எடுக்கும் ஊதியப்பணத்தில் நிச்சயமாய் பெறமுடிவதில்லை... பெரும் இடைவெளி ஏதேனும் விழுந்திருக்கலாம்... காலம் புரட்டிவிளையாடும் போது பந்துகள் தான் என்ன செய்யும்... நினைவு நதி குளிர் உதிர்க்கின்றது...
*******
நேரம் போனதே தெரியவில்லை...
சமீபமாய் பால்ராஜைச் சந்தித்தேன் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் மனைவியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். ஆண்டிநாடார் பாத்திரக்கடை முன்னே முண்டிக்கொண்டிருந்த கூட்டத்தில் அடையாளம்கண்டு கொண்டோம்.
புதுமாப்பிள்ளைக் களை கழுத்தில் மின்னியது... நலம் விசாரித்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாய் கலந்துவிட்டான்.
ஜேசுதாஸ் அண்ணனைப் பார்க்கத் தோன்றியது. போயிருந்தேன், எம்.எச் ஜுவல்லரிஸில் கொடுத்த கைப்பையைச் சுமந்தபடி நிலம் விற்றுக் கொண்டிருக்கிறார். ரெட்டியார்பட்டிக்கு கிழக்கே ரெண்டரை செண்ட் வாங்கிப்போடு இப்போ குறைஞ்சவிலைதான். கிரையம் நானே முன்னயிருந்து முடிச்சுத்தாரேன்னு அவர்பாட்டுக்கு பேசினார்.... எனக்கு இருபத்தைந்து ரூபாயை இடதுகையால் அவர் கொடுக்கும் லாவகம் கற்பனையில் ஓடிக்கொண்டிருந்தது...
******
பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் யாரோ தொட்டியில் ரோஜா வளர்த்திரிக்கிறார்கள்... அது மென்மையாய் என்னை நோக்கிப் புன்னகைக்கின்றது...
தண்ணீர் ஊற்றுவானேனென்று மனம் பரபரக்கின்றது...
பெரிய சைக்கிள் மிதித்தது தினத்தந்தியை வீசிப் போகும் சிறுவனை எங்கோ பார்த்தது போல் இருக்கின்றது.. அது நானாக இருப்பது வாய்ப்பில்லை...
கருப்புவண்ணத்தில் நிக்கல் நிறமிட்ட கடிகாரம் தனக்கான பணியை ஒலியெழுப்பி கூவுகிறது.வண்ணாரப்பேட்டை வீதிகளின் பரபரப்புஎன்னைத் தொற்றிக்கொள்கிறது....
வாருங்களேன் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அதிகாலை சென்னையின் மிச்சங்களை நுகர்வோம்...
- கவிதைக்காரன்.
4 comments:
அருமை...
இதோ வருகிறேன்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நல்ல தளம். வலைச்சரம் அறிமுகம். தொடருங்கள். நன்றி
கடந்த காலம் கடினமானதென்றாலும் அதில் ஒரு சுகம் இருந்ததோ..வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
Post a Comment