ஏன் மணிவண்ணா..
என்மீதிரக்கமில்லையா..
பால் மருவும் வெண்கண்ணா
விட்டு தொலைவு போகிறாயெதற்கு...
தீப்பற்றிய மெழுகாய் என் உளம்
உருகி உனைத்தேடித் தேயுது பாராயோ!
அரையணி தானவிழ
உடல் ஒளி தான் சிறிய
வளைகள் வழுக்கி விழுந்தனவே..
வந்தெனை நீயும் அணைத்திடுக...
மார் உயர்ந்தெழுந்து வாய் விம்மிடும் மங்கை
மனத் துயர் பார்க்கும் விழிகளை ஏங்கி ஏங்கி உயிர்த்தேயுதே...
தோங்கு மரமதில் வாங்கும் பூங்குயில் ராகம்
உன்பெயரெழுதி எனை மேயுதே...
பொழுது சாய்ந்து இருள் கம்மி கரைகிறது...
உளமோ உனை எண்ணி மருளுதே...
தூரமாய் உன் நிஜம்
வருவதாய் நோக்கினேன்...
ஆநிரைக் காண்கிறேன்
மாமணி கேட்கிறேன்
கோகலே நாகுகள் உகளுமன்றோ...
என் சொல்லி உய்குவேன் அவனையின்றி...
தோழி மேனியின் வெம்மையும் எனை இகழுமடி...
தோது ஏது இனி மாயன் வரவில்லை.
மாது நான் என்ன செய்கவோ
இருள் மிகச் சூழ்ந்தது
பனிப்புகை ஓங்குது..
அன்னைத் தோழியர்
அவரவர் துயிலில் தான் விழுந்து அயர்ந்து தூங்கவே...
அந்தகாரத்தின் ஆட்சி எனைக்கொய்ய
உன்னைக்காணாது
அயர்ந்த விழியது இன்னும் உயிர்பெற்று ஏங்குதே...
விடிதலுக்கேங்கினேன்
நீ வரத் தாங்கினேன்...
உன் செவி என் குரல் மடுக்கவில்லை...
ஏனென்று எனக்கொன்றும் புரியவில்லை...
ஒண்சுடரோனவன்
அவனைக் காணவில்லை
பெண்ணிவள் படுந்துயர் அவனுஞ் சகிக்கவில்லை...
யோ.... என்ன ஓர் இரவு ஏழு ஊழியாய்
எரிதழல் போலென்னை கொல்குதே..
மன்னவ நீவரின் யாதும் தீராது பாவி
என் நெஞ்சு இனி என்ன சொல்லித்தான் தீரும் போ...
- கவிதைக்காரன்
1 comment:
இந்த கவிதைய படிச்சதும் எனக்கும் ஏதாவது எழுதணும்னு கை துறுதுறுக்க ஆரம்பிச்சுடுச்சு கார்த்திக். அப்படியே இந்த கவிதை நாயகியா எல்லாரையும் மாத்தி விடுற நேர்த்தி இந்த கவிதை. இத தவிர நான் வேற என்ன சொல்ல?
Post a Comment