108 சேவை
இன்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தி இது.
108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.
ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.
நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான்.
இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment