என் பொண்ணைக்கட்டிகிட்ட அன்புள்ள மாப்பிள்ளைக்கு....
உங்கள் மாமனார் அருணாச்சலம் எழுதும் மடல் இங்கு உங்கள் மாமியார் மற்றும் மைத்துனன் சதாசிவம் எல்லோரும் நல்ல சுகம்.
நீங்கள் எப்படி இருக்கிறிர்கள் உங்கள் மனைவி அதாவது என் மகள் நலமா உங்கள் அம்மா மற்றும் தம்பிகளையும் நான் விசாரித்ததாக சொல்லவும்.
நியாயப்படி இந்தக் கடிதம் எழுதக் கூடாது நேரில் வந்துதான் பேசியிருக்க வேண்டும்
ஆனால் குத்தகைப் பூமியில் அறுத்த நெல்லு களத்திலேயே கிடக்கு அடித்து தூற்றி மூட்டைக்கட்டி வீட்டுக்கு கொண்டுவர ஏழு நாளா ஆளைத் தேடுகிறேன் கூலிக்கு ஆளே கிடைக்கவில்லை
களத்து மேட்டு நெல்லை அப்படியே போட்டுவிட்டு வீட்டில் தூங்க முடியுமா ?
பூச்சித்தொல்லையோ பூரான் கடியோ வயக்காட்டில்தான் தூக்கமும் விழிப்பும் அங்க இங்க நகரமுடியலை அதனாலத்தான் கடிதம் எழுதுறேன் தப்பா எடுத்துக்காதிங்க
உங்க மனைவி போன வாரம் வந்திருந்தப்போ சில விஷயங்களைச் சொன்னா கேட்கவே ரொம்ப கஷ்டமா இருந்திச்சி அதைவிட அவளைப் பார்க்கவே சகிக்கலை
நான் ஒன்னும் பாலும் தேனும் கொடுத்து வளக்கலை என்றாலும் என் பொண்ணு உடம்பு வாடும்படியா விட்டதில்லை
கல்யாணம் முடிஞ்சி முழுசா மூனுமாசம் ஆகலை அதற்குள்ள இன்னார் மகள் கழுத்தெலும்பு தேஞ்சிப்போயி இருக்கா என்று ஊரார் பேசினா உங்களுக்குத்தனே மாப்பிள்ளே கௌரவ குறைச்சல்
என் மகளை அப்படி வளத்தேன் இப்படி வளத்தேன் என்று வசனம் பேச நான் வரலை ஆனாலும் சில விஷயங்களைசொல்ல வேண்டும் என்பதினால் சொல்கிறேன்
அவளை ஒன்னாம் வகுப்பிலே சேர்த்த போது இரண்டு பர்லாங் நடந்துதான் பள்ளிக்கூடம் போகனும் சித்திரை வைகாசி வெயிலைத் தாங்குமா சின்னப் பிள்ளை காலு !
கன்னிச் சிவந்து போகும் வாய்க்கா வரப்பு வேலையெல்லம் தூரவச்சிட்டு வெயில் காலம் முடியும் வரை தோளில் தூக்கி சுமந்துக்கிட்டுத்தான் போவேன்
இதில் வேடிக்கை என்னன்னா என்காலில் செருப்பிருக்காது செருப்பு வாங்க காசுமிருக்காது செருப்புக்கு செலவு பண்ணுறகாசை சேத்துவச்சா என் மகள் பொன்னான காலுக்கு கொலுசுவாங்கலாம் என்று நினைப்பேன்
ஏன்னா அவா மேல எனக்கு கொள்ளை பாசம் ஊரு உலகத்தில உள்ள வைத்தியன் எல்லாம் உனக்கு பிள்ளை பொறக்காது
அதற்கான அறிகுறி எதுவும் இல்லைன்னு சொன்னப்போ அவுங்க எல்லாம் மூக்கு மேல விரலை வைக்கிற மாதி எங்க குலதெய்வம் அருளால அச்சி அசலா என்னை மாதிரியே வந்து பிறந்தவ
எம்பொண்ணு தூங்கும்போதும் என்மேலக்காலப்போட்டு தூங்கலைன்னா அவளுக்கு தூக்கம் வராது
வயக்காட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு மாடுகளை ஓட்டிக்கிட்டு வரப்புமேல என் மகளை கைபிடிச்சி தத்தக்கா பித்தக்கா என அவ நடக்க வீட்டுக்கு கூட்டிவரும்போது நான் பெற்ற சுகம் இருக்கே அதுக்கு இணையா இந்த உலகத்தில எதுவுமே கிடையாது போங்க
தெரு முனையில் கீறியும் பாம்பும் சண்டைக்கு விடுவாக ஏகமா கூட்டம் மொய்க்கும் நண்டுமாதிரி இருக்கும் இவளால கூட்டத்தை பிளந்து போயி பார்க்க முடியுமா
என்தோளில் ஏறி உக்காந்துக்குவா அவள் பாதத்தில் ஒட்டியிருக்கும் மண்ணு என் கன்னத்தில் விபூதியாய் கொட்டும் சிலசமயம் கண்ணுலேயும் விழும் கண்கள் உறுத்தி கண்ணீராய் வழியும்
ஆனாலும் ஆடாம அசையாம நிப்பேன் ஆர்வமாய் பார்க்கும் அவளுக்கு இடைஞ்சலாய் போகக்கூடாது என்று.
பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு பட்டுப்பாவாடைச்சட்டை வாங்கினமாதிரி எனக்கும் வேண்டுமென ஆசைபட்டாள் இராப்பகலா நிலத்தை நம்பி வாழ்கிறவனுக்கு நினைச்சவுடனே பணம்கிடைக்குமா?
முப்பது வருஷம் ஒழைச்சாலும் முக்கா துட்டுக் கூட மிஞ்சாத பொழைப்புத்தானே கலப்பை பிடிச்சவன் பொழைப்பு!
அதுக்காக அருமை மகள் ஆசையை மண்ணுலப்போட்டு மிதிக்க முடியுமா உங்க மாமியாரோட கல்யாணப் புடைவையை ஜரிகை பிச்சி வித்து பாவாடைச் சட்டை வாங்கிக் குடுத்தேன்
எங்க ஊரில் எட்டாம் வகுப்பு வரைத்தான் பள்ளிக்கூடம் என் மகளை பத்தாவது வரையிலாவது படிக்க வைக்க ஆசைப்பட்டு பத்து மயிலுக்கு அப்பாலுள்ள பள்ளியில் சேர்த்தேன்
போக்குவரத்து சரியா இல்லாததால அங்கே பள்ளிக்கு பக்கத்திலுள்ள ஹாஸ்டலில் தங்க வைச்சேன் ஒரே ஒருநாள்தான் அவளை விட்டுட்டு இருக்க முடிஞ்சது
ராத்திரியெல்லாம் தூக்கமில்லாம நெஞ்சுவலி வந்துப்போச்சி விடிஞ்சதோ இல்லியோ அவளை கூட்டி வந்த பிறகுதான் அடுத்த வேலையை பார்த்தேன்
அப்புறமென்ன அவா பத்தாம் வகுப்பு முடிக்கும் வரைக்கும் ஓட்டை சைக்கிளில் உட்கார வச்சி தினசரி இருபது மையில் மிதித்தேன் அவளை பிரிஞ்சி இருப்பதைவிட சைக்கிள் மிதிப்பது கஷ்டமாக இல்லை
என் பொண்ணு பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்றது அவள் ஐ.ஏ.எஸ் தேர்வில் ஜெயிச்சமாதிரி எனக்குத் தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் குதித்தேன் வீடுவீடாய்போய் மிட்டாய் கொடுத்து நான் பட்ட சந்தோஷத்திற்கு கணக்கே இல்லை
ஒரு நிமிஷம் கூட என்னையும் அவள் அம்மாவையும் பிரியாம வளர்ந்தப் பொண்ணு புதுசா உங்க வீட்டுக்கு வந்ததினால் முன்னப்பின்ன சின்னதா தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்
""இன்னும் பொறந்த வீட்டுமேல பாசம் பொங்கிவழியிது ஒழுங்கு மரியாதையாய் எல்லாத்தையும் மறந்து வேலையை பாருன்னிங்களாம்
மாப்பிள்ளை! நாம ஆண்பிள்ளைகள் பிறந்ததிலிருந்து கட்டையில போறக்காலம் வரைக்கும் ஒரே வீடு ஒரே மனுஷங்க உறவுத்தான் பொம்பளைங்க கதை அப்படி இல்லையே நாற்றங்கால் பயிரை வயலில் பிடுங்கி நடுவது மாதிரி இரட்டை வாழ்கையா போச்சே!
உங்க மனைவி தான் ஆற்றங்கரையோரம் கட்டி விளையாடிய மணல் வீட்டை விட்டு தோப்புக்கரணம் போட்டு சுண்டல் வாங்கிய அரசமரத்தடி பிள்ளையாரை விட்டு
ஏறி இறங்கி கட்டிபிடித்து விளையாடிய பூவரசன் மரத்தை விட்டு ஆடிய ஊஞ்சல்,பாடியப் பாடல், தேடிப்பிடித்த பட்டாம் பூச்சி ஒடியாடிய ஒற்றயடிப்பாதை தோழிகளின் சீண்டல் மொழிகள்,
பெற்ற அப்பனையும் ஆத்தாளையும் விட்டு தாலி ஏறிய நிமிஷம் முதல் எல்லாமே நீங்கத்தான் என்று வந்தவளுக்கு மனசுன்னு ஒன்னு இருக்கு அதிலேயும் நினைப்புன்னு ஒன்னு இருக்கு என்பதை கொஞ்சம் நினைச்சிப்பாருங்க மாப்பிள்ளே!
ஆயிரம்தான் புதுசா வந்த உறவுகள்தான் நிரந்தரம் என்பது புரிந்தாலும் பழையது அவ்வளவு சீக்கிரம் நெஞ்சைவிட்டு போயிடுமா?
நெல்லை வயலில் விதைச்சிட்ட உடனே கதிரறுக்க முடியுமா? அறுத்த கதிரைத்தா ன் உடனே மூட்டைக்கட்டி வித்திடமுடியுமா? எதற்கும் காலநேரம் காத்திருப்புன்னு வேணும் அப்பத்தான் எல்லாம் சரியாயிருக்கும்
அவசரப்படாம அவா மனசை மாத்த முயற்சி பண்ணுங்க அது ஒண்ணும் கல்லு இல்லை கரையாம இருக்க!
உங்க அம்மா ""என்ன பெருசா பொன்னையும் பொருளையும் மூட்டைக் கட்டிக்கிட்டா வந்தே கொண்டுவந்த ஓட்டை ஒடைசலுக்கு பேசாம மூலையில கிடன்னு சொன்னாங்களாம்
ராணிமாதிரி வளர்ந்த என் பொண்ணு மூலையில கிடக்குறதுக்கா காதுக்கு கம்மலும் கழுத்துக்கு மாலையும் காலுக்கு கொலுசும் போட வயிற்றுக்கு சோறு போட்ட வயக்காட்டை விற்றேன்
நகைநட்டு சீர்செனத்தியோட பெண்டாட்டி வீட்டுக்கு வருவது ஏன் தெரியுமா மாப்பிள்ளை?
புருஷனுக்கு கஷ்டம்ன்னு வந்தா கைதூக்கி விடுவதுக்குத்தானே தவிர புருஷனோட அக்கா தங்கச்சிக்கு போட்டு கல்யாணம் பண்ணிவைக்க அல்ல
இன்னொருத்தி கொண்டுவரும் சீதனத்தில் தன்வீட்டுப் பெண்ணை கரையேத்த நினைப்பவன் சரியான ஆண்பிள்ளை இல்லை என்பது என்கருத்து
""தங்கச்சி கல்யாணத்திற்கு உன் நகையை கொடு''
என்று நீங்கள் கேட்டதாக என்மகள் சொன்னதால் இதை சொல்கிறேன் தப்பா எடுத்துக்காதிங்க.
நீங்க மளிகைக்கடை வச்சிருப்பதாகச் சொல்லித்தான் பெண்கேட்டிங்க நம்பி நானும் கொடுத்தேன் வரதட்சனை பணத்தை வாங்கித்தான் கடைக்கு அட்வான்சே கொடுத்திருக்கிங்க!
சதாசிவம் மட்டும்தான் எனக்கு ஆண் பிள்ளைன்னு உங்களுக்கு தெரியும் அவனுக்குகூட நான் ஒரு பழைய சைக்கிள் வாங்கி கொடுத்ததில்லை
நீங்க என்பெண்ணோடு ராஜாமாதிரி போணும் என்று கடன் பட்டு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தேன் அதை வித்துத்தான் கடைக்கு முதல் போட்டிருக்கிங்க
கல்யாணம் முடிஞ்ச இந்த மூனுமாசத்தில இன்னும் ஏராளமா சங்கதி இருக்குஅதையெல்லாம் பேசப்போனா வீணா மனசங்கடம்தான் வரும் பிரச்சனைகள் வரும் அதனால அதை விட்டு விடுவோம்
நல்லதோ கெட்டதோ என் பொண்ணு உங்க மனைவியாயிட்டா நீங்க என் மாப்பிள்ளையாயிட்டிங்க இப்ப நீங்க இரண்டுபேருமே எனக்கு இரண்டு கண்ணுங்கதான் என்னால முடிஞ்சவரைக்கும் உங்களுக்கு ஒத்தாசையா இருப்பேன்
ஒருவிஷயம் எழுத மறந்தே போயிட்டேன் உங்க கல்யாணத்தன்னைக்கு குடிச்சிட்டு பந்தலில் விழுந்துக்கிடந்தானே தங்கராசு அவன் பெண்டாட்டி மருந்தக் குடிச்சிட்டு செத்துப் போயிட்டாள் படுபாவி மக!
நண்டும் சிண்டுமாய் மூனு குழந்தைகளை விட்டுட்டு மாமியாக்காரியும் புருஷனும் கொடுமைப் படுத்தினாங்கன்னு முட்டாள் தனமா போயிட்டா
அவளை பெத்தவங்க மனசு என்னப் பாடுபடும் இல்ல அவளுக்கு பொறந்ததுங்கத்தான் என்ன ஆகும்?
செத்துப்போனவா புத்திசாலியா இருந்திருந்தா உதவாக்கரை புருஷனையும் உருப்படாத மாமியாளையும் அம்மிக்குழவியை தூக்கிப் பேட்டு கொன்னு சத்தம் போடாம தோட்டத்தில பொதைச்சிருக்கனும் அதை விட்டுட்டு அறிவுக்கெட்டத்தனமா போயிட்டா!
நல்ல வேளை என் பெண்ணை அப்படி முட்டாளா வளக்கலை அதுவரையும் எனக்கு நிம்மதி
சரிமாப்பிள்ளை நிறைய எழுதிட்டேன் மிச்சத்தை நேரில் வரும்போது பேசிக்குவோம்
இப்படிக்கு
உங்கள் அன்பு மாமா,
தலைவெட்டியான்பட்டி . அருணாச்சலம் ....
2 comments:
நல்ல வேளை என் பெண்ணை அப்படி முட்டாளா வளக்கலை அதுவரையும் எனக்கு நிம்மதி///
ithuthan highlight!!! superb!
ஆகா கார்த்திக் அருமை. தலைவெட்டியான் பட்டி பேரே பயமா இருக்கு.செத்துப்போனவா புத்திசாலியா இருந்திருந்தா உதவாக்கரை புருஷனையும் உருப்படாத மாமியாளையும் அம்மிக்குழவியை தூக்கிப் பேட்டு கொன்னு சத்தம் போடாம தோட்டத்தில பொதைச்சிருக்கனும் அதை விட்டுட்டு அறிவுக்கெட்டத்தனமா போயிட்டா!////என்னா அட்வைஸு.?
இன்னொருத்தி கொண்டுவரும் சீதனத்தில் தன்வீட்டுப் பெண்ணை கரையேத்த நினைப்பவன் சரியான ஆண்பிள்ளை இல்லை என்பது என்கருத்து
இங்கே நின்னுட்டப்பா நீ.நல்ல கடுதாசி.
Post a Comment