Saturday, July 2, 2011

நான் நல்லகவிதை எழுதுகிறேனா?


நீண்ட நாள்களாக எதுவுமே எழுதாமலிருந்த நாட்களில். கொஞ்சம் மெண்டல் ப்ளாக். :-)
 
என்றோ..மெயிலில்  வந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்யக்கூடாது என்று நினைத்துக்கொண்டே ஞாபகமாக க்ளிக் செய்தேன். உடனே ‘தமிழ்க் கவிதைகள் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுவிட்டது’ என்றார்கள். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எப்போதெல்லாம் ஃபீட் பர்னரில் கவிதைகள் வருமோ அப்போதெல்லாம் எனக்குக் கவிதைகள் வருமாம். சரி, என்ன பெரியவிஷயம்  என்று இருந்துவிட்டேன்.

இன்றே ஒரு கவிதை வந்தது.

இன்று சம்பள நாள் என்பது கவிதைத்தலைப்பு. மங்களகரமாகத் தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று மேற்கொண்டு படித்தேன்.

பால்காரனுக்கு இவ்வளவு…
பள்ளிக் கட்டணம் இவ்வளவு…
மளிகை சாமானுக்கு இவ்வளவு…
வீட்டு வாடகைக்கு இவ்வளவு…
தீபாவளி செலவுக்கு இவ்வளவு…
என வரிசையாய்
கணக்கு போட்டபடி
அலுவலகம் வந்து சேர்ந்தேன்…

மாலைக்குள் அத்தனை வேலையையும்
முடித்து விட்டு சம்பளத்திற்காகக்
காத்திருந்தேன்..!
அழைத்துச் சொன்னார் முதலாளி
இம்மாதம் சம்பளமில்லை
அடுத்த மாதம் பார்க்கலாமென்று.

என்னுடைய அத்தனை
கணக்குகளும்
இந்தியனின் எண்கணிதக்
கண்டுபிடிப்பில் வந்து நின்றன..!

ஏமாற்றத்தோடு
வீடு திரும்பினேன்...
சிரித்தபடி வரவேற்ற
என் இல்லாள்
விபரமறிந்ததும்
வாடி நின்றாள்..!

எனைப் பார்த்து ஓடி வந்த
என் நான்கு வயது மகன்
வெற்றுக் காகிதத்தைக் காட்டி
சிரித்தபடி கேட்டான்
'அப்பா..! இதோ என் சம்பளம்...
உன் சம்பளம் எங்கே..?'

அவனுடைய சம்பளத்தைப் பார்த்தேன்
அந்த வெற்றுக் காகிதம்
எனைப் பார்த்து சிரித்தது..!

உடனே அன்சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.

இந்த மாதிரி கவிதைகளையெல்லாம் படித்து, எழுதித்தான் வளர்ந்தோம் என்பது உண்மைதான். நான் இதுபோன்று கவிதைகள் எழுதியபோது, அதனை வாசித்தவர்கள் எப்படி தவித்திருப்பார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. பாவம் அவர்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் என்னைத் தொடர்ந்து வந்து மிரட்டுகிறது போலும். இப்படி கவிதை எழுதுபவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல கவிதைகள் எழுதிவிடமுடியும் என்பதும் உண்மைதான். இந்தக் கவிதையை எழுதியவர் சீக்கிரமே மிக நல்ல கவிதைகள் எழுதத் தொடங்கிவிடுவார் என்று நம்புவோம்.

சரி நான் நல்லகவிதை எழுதுகிறேனா??
புரியாமல்...! எத்தனைபேர் திட்டிக்கொண்டிருப்பார்களோ..?

Friday, July 1, 2011

இன்னும் சில கிறுக்கல்கள்..



பொழுது போகாத நேரத்தில்

அவன் கிறுக்கி வைத்திருந்த ஓவியங்கள்
 
தாத்தா தன் நிலையிலிருந்து
கைத்தடியுடன் இறங்கி நடந்தார்
 
அப்பா எப்போதும்போல் ஏதோ யோசனையுடன்
தாத்தாவும் அப்பாவும் பார்த்துக்கொள்ளும்போது
 
பாட்டி தன் ஓவியத்திலிருந்து கீழிறங்கினாள்
சுவற்று ஓவியங்களில் இருந்து
 
வீட்டுக்குள் ஓடி வந்தன
பசுவொன்றும் அதன் கன்றொன்றும்

அவற்றின் விசித்திர உருவத்துடன்
என்னைச் சுற்றி அத்தனை பேரும் நடனமிட
 
என் ஓவியத்தில் இருந்து நான் இறங்கி வருகிறேன்
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் என்னைப் பார்க்க
 
எனக்கே பாவமாக இருக்கிறது
இடி இடிக்கும் ஒரு நொடியில்
 
அத்தனை பேரும் ஓவியமாகிப் போனார்கள்
வீடெங்கும் கிறுக்கும் குழந்தையை
 
இனி திட்டக்கூடாது என நினைத்துக்கொண்டே
நான் என் ஓவியத்தைத் தேடி ஓடுகிறேன்...

யார் மீது கோபம்?..

யாருக்காகவோ..
உருவாக்கி வைத்திருந்த
வார்த்தைகளை பொறுக்கி எடுத்து
பேசக் கற்றுக்கொள்ளும்
மகன் மீது எரிந்து விழுகிறேன்
 
வார்த்தைகள் தரும் அர்த்தங்கள்
கானகமெங்கும் முள்ளாய் பரவ
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
கல்லெறிந்தவன் கண்முன்னே
 
பைக்கில் ஏறி உட்கார்ந்து
உதடு சுளுக்கிச் சிரிக்கிறான்
 
என்னை முறைக்கும்
மனைவியைப் பார்க்காத
 
பாவனையில் வெளியேறும்
என்னை வழி மறிக்கும் மகன்
 
அம்மாவின் வார்த்தைகளை 
 ஒப்புவிக்கிறான்
 
உனக்கு யார் மீது கோபம்?

நிமிடத்தில் கடந்து செல்கிறேன் என்னை....



நீண்ட நாள்கள் கழித்து

ஒரு மலர்க்கொத்துடன் வந்தாய்
என்றோ பறித்த
மலரொன்றின் சருகுகளை
நான் கொண்டு வந்திருந்தேன்
யாருக்காகவோ காத்திருப்பதான பாவனையில்
நம்மைக் கடந்து சென்றன
நிறைய யோசனைகள்
என்றோ நமக்கான
இக்கவித்தருணத்தை
கவிதையாக எழுதியவன்
நம்மைப் பார்த்திருக்கிறான்
மலர்க்கொத்திலிருந்து
ஒரு மலரைப் பிய்த்து நீ எறிகிறாய்
என் கண்ணுக்கு மட்டுமே தெரிவதான
நட்சத்திரம் அங்கே தோன்றியது

தலைப்பு....???

மெல்ல நகரும் இப்பகலில்
கைகள் மேல் தூக்கி
வானத்தை இடிக்க
சோம்பல் முறித்தேன்
ஈரத்துணி
காற்றில் ஆடி நிற்க
நாசியில் அந்தியின் நெடி
நிழலும் வெயிலும்
வெறிகொண்டோடும் இரண்டு
பூனைகளைப் போல் ஓட
வெண்ணிற, சாம்பல் போர்வைகள் வருடி
வெளிவருகிறது வீடு
அங்கே அப்போது அந்நொடியில்
கவிழ்ந்த பேரமைதியில்
இரவைக் காட்டி
தலைக்குள்ளிருந்து சைகை செய்கிறாள்
கண்ணாடி வளையணிந்த
என் ஊமைப்பெண்
ணானவள்..

இன்னும்...! ஓசை அதிகமாகிறது..

" யாரோ ஒருத்தியின் காதல் குறிப்பு..."



அந்தி மழை காலத்தின் அழகிய பௌர்ணமி இரவினில்.. நிலை கொள்ளாமல் தடுமாறிய காற்றோடு... நில மகள் மீது தன் கால் தடம் பதித்து விளையாடிய மழைத் துளிகளை ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தேன். என் வீட்டின் வாசற்படியினில்.. தடம் மாறிய நிலையினில் என்அருகே வந்து விழுந்தது என்னை கடந்து சென்ற பேருந்தின் ஜன்னலின் வழியே ஒரு நாட் குறிப்பேடு.... 

 
அதன் பக்கங்களில் உயிர் கொண்டிருந்தது ஒரு அழகிய காதல்.. அந்நாட்குறிப்பேட்டினை படித்த போது தான் தெரிந்தது நான் நிற்பது கோடை மழை காலத்தில் அல்ல காதல் மழை காலத்தில் என்று.. அவளின் காதலோடு நான் பயணிக்கிறேன்....

JANUARY 9..
உயிர் நண்பனாக இருந்த நீ.. ஒரு நாள் " என் உயிர் காதல் நீதான்"
என்று சொல்லி காத்திருந்த நிலையில் எதிர் பாராது நிராகரித்தேன் உனது அன்பினை....
என்னால் மறக்க இயலாத உன்னையும், என்னின் நினைவுகளை தொலைக்க இயலாமல் எனது நாட்குறிப்பேடும் போட்டி போடுகின்றன காலத்தால்...

தேகம் தீண்டும் காற்றில் எல்லாம் உனது வாசம் நுகர ஆரம்பித்திருக்கிறேனடா...!

கடவுளின் உருவம் கண்களில் அகப்படுவதில்லை... மனதின் உணர்தலின் மூலம் தான் கடவுளை அறிய முடியும்.. அதுபோல காதல் என்பது மனித உணர்வுகளின் மெல்லிசை... அது உயிருக்குள் பூக்கும் வாசம்... மனதின் உணர்வுகளால் மட்டும் தான் காதலை உயிர்பிக்க முடியும்...
நீ இல்லா இந் நாட்களில்... உணர்ந்து கொண்டேனடா நான்..

JANUARY 22..
என் ரகசிய ஸ்நேகிதா...

மௌனம் நிறைந்த என்னில் மெல்லிசை வருடல் நீ..
என் உலகை அழகாக்கும் மிக அழகானவன் நீ..
முதன்முதலாய் என் இதயம் நனைத்த அன்பானவன் நீ...!
எந்த நிமிடம் நீ என்னுள் விழுந்தாய்...

எந்த தருணத்தில் என்னுள் விதையானாய் நீ...?

புரியவில்லையடா இன்னமும்...

உன் முகம் காட்டி மனதோடு மட்டுமே பேசும் அந்த நிமிடத்திலா....?

புன்னகை தொலைத்த என்னில்..
தாய் தன் குழந்தைக்கு கதை சொல்லி உணவூட்டுவது போல, நீயும் பல கதைகள் சொல்லி என்னில் புன்னகை ஊட்டினாயே அந்த நிமிடத்திலா..?

பதில் கூறு என்று பல கேள்விகள் கேட்பாய்.. "தெரியலையே" என நான் சொன்னதும்... "நீயா யோசிக்கவே மாட்டியே" என்று சிரித்துவிட்டு பதில் கூறுவாயே அந்த நிமிடத்திலா..?

எப்போதும் புன்னகை தவழும்படி பூ முகம் காட்டுவாயே அந்த நிமிடத்திலா..?

ஓராயிரம் முறை உன் காதல் உரைத்து விட்டு.. ஒரு முறை நான் உரைப்பதற்காக காத்திருந்தாயே அந்த காத்திருப்பு நிமிடத்திலா..?

எப்படி உன்னால் நான் ஈர்க்கப்பட்டேன்...?
எந்த நிமிடத்தில் நிகழ்ந்தது இவை அனைத்தும்...? இன்னமும் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்னால்...!

JANUARY 31...
உன்னை மிகவும் பிடிக்கும் எனக்கு.... எவ்வளவு பிடிக்கும் என்று கேட்கிறாயே.. 'உலகில் மிகவும் அழகானது எதுவோ.. ஆழமானது எதுவோ.. அதைவிட ஆழமான அழகாக உன்னை பிடிக்கும் எனக்கு...

சங்கடங்கள் வரும் போதெல்லாம் மட்டும் தான் கடவுளை நினைக்கிறேன்... ஆனால் உன்னை மட்டும் தான் தடங்கலின்றி நொடிகள் தோறும் நினைக்கிறேன்...

நீ விரும்பும் அனைத்தும் நானாகவே மாறினேனடா...
நீ வானவில்லை விரும்பினாய்.. நான் வண்ணமானேன்..
நீ மழையை விரும்பினாய்.. நான் தூறலானேன்..
நீ மரங்களை விரும்பினாய்.. நான் கிளைகளானேன்..
நீ காற்றை விரும்பினாய்.. நான் தென்றலானேன்..
நீ மலரை விரும்பினாய்.. நான் அதன் இதழ்களானேன்..
நீ பட்டாம்பூச்சியை விரும்பினாய்.. நான் அதன் சிறகுகளானேன்..
நீ புத்தகங்களை விரும்பினாய்.. நான் அதன் வரிகளானேன்..
நீ காலத்தை விரும்பினாய்.. நான் வசந்தமானேன்..
நீ வாழ்வை விரும்பினாய்.. நான் உன் காதலானேன்..
நீ உன்னையே விரும்பினாய்.. நான் உனக்குள் துடிக்கும் இதயமானேனடா

FEBRUARY 8...
நீ என்னோடு பேசிய பொழுதுகளை விட என் மனதோடு பேசி போராடிய பொழுதுகள் தான் அதிகமானது....
நீ எனக்கானவன் என்பதை நான் எதனால் முடிவு செய்தேன்..
நீதான் என் காதலானவன் என்பதை எப்போது முடிவு செய்தேன்..?
நான் கவிதைகள் எழுதிய போதா..?
உன் அழைப்புகளுக்காக காத்திருந்த போதா..?
உன் கவிதைவரிகளுக்கு நடுவே... இதை எப்படி எல்லாம் ரசித்து எழுதியிருப்பாய்..? என்று நினைத்து நானும் ரசித்துச் சிரித்தேனே... அப்போதா..?
உன் குறுஞ்செய்திகளை படித்துக் கொண்டே... உன் கவிதைகளோடும் உன் நினைவுகளோடும் உறங்கிப் போவேனே அப்போதா..?
எப்போது விதைத்தாய் என்னுள் ...?? வாழ்வினற்புதத்தை..!!

FEBRUARY 20..
இன்று நேற்றல்ல... நான் புத்தகம் வாசிக்க தொடங்கிய நாட்களில் இருந்தே...அக்கதைகளில் ஒளிந்து வேடிக்கை காட்டி மறைந்து போகும் ஒரு முகம்... உன் புகைப் படம் பார்த்த பின் நான் வாசித்த முதல் புத்தகதில் உலா வந்தது உன் முகம்... மறைந்து போன வேடிக்கை முகம் கண்டுவிட்ட மகிழ்சியில் திளைப்பதா... இல்லை காலம் கடந்து கண்டுவிட்ட விரக்தியில் அழுவதா.. புரியவில்லை அப்போது...!

நான் சிரிக்க மறந்த நேரங்களில் .. சிதைந்து போன நிமிடங்களில்.. சத்தமின்றி அழுத இரவுகளில்.. மௌனமாய் இருந்த நொடிகளில் என அனைத்திலும் உடன் இருந்தது உன் புகைப்படமும் உன் வார்த்தைகளும் தான்...

கடந்து விட்ட வருடங்களில் நீ இல்லை..
ஆனால் பின் வந்த மாதங்களில் நீ மட்டும் தான் நிறைந்திருக்கிறாய்...
கடந்து போன நாட்களின் நிகழ்வுகள் நிறைந்தே இருக்கிறது என் உள்ளத்தில்....

FEBRUARY 28...
உனக்கான உறவுகள் இல்லை என்றாய்..
உறவுகள் நிறைந்திருந்தும் இல்லாதவளாய் நின்றேன் நான்..!
நீ காதல் சொன்ன நாளில் இருந்தே.. கனவிலோ அல்லது காணும் பொருளிலோ எதிரில் வந்து நின்றுவிடுகிறாய் நீ..
இமைக்கவும் மறக்கிறேன் என் இதயம் பறித்த உன் புன்னகையால்...!

MARCH 8...
என்னென்னவோ பேசினாய் நீ.. என் நியாயம் நான் கூற.. உன் வாதாடல்களும் கூட... சொல்லிவிட துடித்த மனதினை கட்டுப்படுதத்தான் பெரும்பாடாகிப் போனது எனக்கு...
" மறு ஜென்மம் வரை காத்திருக்கிறேன்" என்ற உன் வார்த்தைகள் தான் இழுத்துச் சென்றது என்னை காதலில்...!

என் லட்சியங்களும் ரகசியங்களும் கனவுகளோடு காலம் கழிக்க இயலாமல் துடைத்து எறியப்பட்டது " நீ மட்டும் தான் எனக்கு வேண்டும்" என்று நீ சொன்ன அப்போது...! சில நிஜங்களை சிலரால் மட்டும் தான் நிகழ்த்த முடியும்.. உன்னால் ஆன நிஜம் என் காதல்.. நிகழ்த்தியவன் நீ...! முதன்முதலாய் என் இதயம் நனைத்த அன்பானவன் நீ..!

MARCH 19...
குட்டிப்போட்ட பூனை மாதிரி என்னை சுற்றி சுற்றி வருகிறதடா உன் உன்னதமான நினைவுகள்.. !
நான் உதடு கடித்து அமர்ந்திருந்த நேரத்தில்.."யேய் அப்படி பண்ணாத டீ" என கூறி என்னை மேலும் வெட்கம் கொள்ளச் செய்த அந்த இனிமையான பொழுதுகள் நினைவிருக்கிறதா உனக்கு..?

கைபேசி இணைப்பை துண்டிக்காமலேயே.. ஒற்றை முத்தத்திற்காக காத்திருந்துவிட்டு.. " என்ன டா " என கேட்கும் போது "சரி ஒன்னும் இல்லை" எனக் கூறி சிரித்துச் சிணுங்கிய நிமிடங்கள் நினைவிருக்கிறதா உனக்கு..?

முத்தம் கேட்டு கெஞ்சிவிட்டு... பின் கேட்காமலே முத்தத்தால் கொஞ்சும் அந்த சில நிமிட நேரங்கள் நினைவிருக்கிறதா உனக்கு...?

நீ என்னிடம் அளவளாவும் கதைகள் எனக்கு தெரிந்திருந்தும் தெரியாதது போல நடிக்கும் என்னை கண்டுகொண்டு கேலி செய்வாயே.. அந்த சுகமான நாட்கள் நினைவிருக்கிறதா உனக்கு...?

நான் பேச மறந்த தருணங்களில் " உன் வேலைகளுக்கு நடுவே என்னை மறந்து விடாதே" என குறுஞ்செய்தி அனுப்பினாயே.. அந்த நிமிடங்கள் நினைவிருக்கிறதா உனக்கு...?

உன் மனதின் எண்ணங்களை வகைபடுத்தி குறுஞ்செய்தியாக அனுப்புவாயே.. நினைவிருக்கிறதா உனக்கு...?

" உனக்குள் மறைத்துவைத்து இருக்கிறாய் காதலை... என்றேனும் வெளிப்படுத்துவாய்... இன்றில்லையானாலும் மறு ஜென்மத்திலாவது நடக்கும்.. நான் காத்திருக்கிறேன்" என கூறி காத்திருந்த நேரத்தில்... என் அழுகைக்கு இடையில் நான் காதல் சொன்ன நிமிடம்... அழகாய் சொன்னாயே " ஹப்பா.. இதுக்காக தான் காத்திருந்தேன்" என்று அந்த அழகிய நிமிடங்கள் தான் நினைவிருக்கிறதா உனக்கு..?

உன் ஆசைகளை எல்லாம் என்னுள் விதைத்த நீ.. இன்று என்னை பார்பதும் அறிதாகி.. உரையாடல்களும் சுறுங்கிப்போனது.. நான் மட்டும் நிற்கிறேனடா சுமைதாங்கியாய்... ம்ம்ம்ஹூம்... காதலோடு... காதல் தாங்கியாய்...!

MARCH 27...
இப்போதெல்லாம என் கைபேசி மௌனமாகவே இருக்கிறது.....
மற்றவர் அழைப்பை கூட ஏற்க பிடிக்கவில்லை உன் அழைப்பு இல்லாத காரணத்தால்...
கவிதையாய் அனுப்பிய உன் காதலின் அடையாளங்கள் நிறைந்திருக்கும் உன் குறுஞ்செய்திகளை தூசு தட்டி பார்கிறது மனம்..
நிமிடங்களை கரைத்த நமது பதிலிருப்புகள் நிறைந்திருக்கிறது இன்பாக்ஸில் இன்னமும் அழிக்கப்படாமல் அழகாய்...
கழிந்து போகும் நிமிடங்களையும் நேரங்களையும் கணக்கறியாது நகர்த்திச் சென்ற நமது உரையாடல்கள் நிறைவாய் நிற்கிறது அழிக்கப்படாத அழைப்புகளில்..
" என்ன பன்னிட்டு இருக்க... அப்புறம் ... ம்ம்... ம்ஹும்... " இப்படி எத்தனையோ அர்த்தமற்ற உரையாடல்கள் .. குரல் கேட்பதற்காகவே அழைத்தோம் உன்னை நானும் என்னை நீயும்....
சில நேர அழைப்பின் போது காத்திருப்பு ஒலி கூறும் " மற்றொரு நபருடன் தொடர்பிலிருக்கிறார்" என்று... உடனே தொடங்கிவிடும் சின்ன சண்டையும் செல்ல சிணுங்களும்...
இப்போதெல்லாம் ரொம்பவே அமைதியாகி விட்டது என் கைபேசி... உன் அழைப்பில்லாத காரணத்தினால்...

சலித்துவிட்டதோ அன்றி தவிர்த்து விட்டாயோ... காரணமின்றி கேள்விக்குறியாகிவிட்டது குறைவாகிப் போன உன் அழைப்புகள்... நான் ரசித்த உன் வார்த்தைகளை கூட உனக்குள் பூட்டி வைத்துக்கொண்டு விட்டாய் மௌனமாக...
நீ கொஞ்சிப் பேசிய எனது கைபேசியும் இன்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டதடா.. உன் அழைப்பிற்காக...

நீ செல்லமாக கொஞ்ச வேண்டாம், சிறிதளவேனும் மௌனம் தவறவிடு போதும்...
உன் காதல் பார்வை வேண்டாம், ஓர விழி பார்வை மட்டுமாவது கொடு போதும்...
பார்த்துப் பார்த்துப் பழக வேண்டாம், பிறை முகமாவது காட்டு போதும்..
வார்தைப் பரிமாறல்கள் வேண்டாம், எழுத்துப் பரிமாறல் மட்டுமாவது கொடு போதும்..
மணிக்கனக்காய் பேச வேண்டாம், நாளில் நான்கு முறையாவது பேசு போதும்...!
துயரத்துடனே மௌனமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்னைப் போலவே உன் அழைப்பில்லா என் கைபேசியும்...!

APRIL 16..
விவாதத்தில் தொடங்கி, நிராகரிப்பில் ஆரம்பித்து , அழுகையின் இடையில் ஜெயித்தது உன் காதல்.... அன்று முதலே எதிர்பார்க்கத்துவங்கிவிட்டது எனது வாழ்வின் பக்கங்கள் உனது வரிகளை..

என் பிரியமானவனே..
உன் காதல் சொல்லி வாதிட்ட நேரங்களில் எல்லாம் வார்த்தைகளால் வலி குடுத்து நிராகரித்தேன் உன்னை... ஆனால் என் மனதோடு தான் போராட இயலவில்லை.. உனதன்பின் ஆழமும்.. காதலின் வேகமும் தான் தூண்டியது என்னை.." நானும் உன்னை காதலிக்கிறேன்" என்று சொல்லச் சொல்லி...

என் செல்ல ஸ்நேகிதா...
நான் உன் மடி வரும் வரை காத்திருந்த நீ... இப்போது வேலையின் காரணம் சொல்லி என்னை காக்க வைப்பது ஏனடா...?

என்னுள் விதைத்திருக்கிறேன் சில கனவுகளை...
" உன் தோள் சாய்ந்து படுக்கும் நேரம் அதிகமாக வேண்டும்..
அப்போதெல்லாம் என் தலை கோதும் உன் விரல் வேண்டும்...
நான் இளைப்பாறுவதற்கு வேண்டும் உன் இதழ் முத்தம்...
உன் வேலை நேரத்திலுன் எனை அழைத்து இரு வார்த்தை ஒரு முத்தம் பேசிட வேண்டும்...
விரும்பும் நேரத்தில் இல்லாவிட்டாலும் என் விழி தேடும் நேரத்திலாவது உன் முகம் காண வேண்டும் நான்...
என் உணர்வில் கலந்துவிட்ட நீ உயிராய் வேண்டும் எனக்கு...
மரணம் என்னை மொத்தமாய் விழுங்கும் வரையிலும் உன் நேசமும் காதலும் எனக்கே எனக்காய் வேண்டும்...
உன் குரல் கேட்டு என் பொழுது விடிய வேண்டும்...
உன் மடியில் என் இரவு முடிய வேண்டும்...
இது இயலாவிடினும் குறைந்த பட்சமாக என் கடைசி நிமிடங்கள் மட்டுமாவது உன் மடியில் தீர்க்க வேண்டுமடா...!

APRIL 28..
தனிமையில் தவிக்கும் நாட்களிலும்.. உனதருகே இருக்கும் நிமிடங்களிலும்.. உனக்கே உனக்காக மட்டும் தான் எனதுயிர் எனும் எண்ணம் உண்மை தான் என்பதை உணர்கிறேனடா நான்...

என் உள்ளம் கவர் கள்வனே...
உன்னோடான எதிர்பார்ப்புகள் ஏமாற்றமே தருகிறது பல சமயம்...
என் வாழ்வை நகர்த்திச் செல்வது உன்னோடான காதல் மட்டுமே. என்னை அன்பால் வென்றவனடா நீ...
என் வாழ்வை வளமாக்கினாய் உன் வார்த்தைகளால்...
என் உயிர் பறித்தாய் உன் புன்னகையால்..
உன் பாசாங்கில்லா அன்பை என் இதயம் பருகச் செய்தாய்..
என் சோகங்கள் அனைத்தையும் என் மனதோடு அமர்ந்து களைத்தெரிந்தவன் நீ....
உன்னை மொத்தமும் நேசிக்கிறேன்...
உனது மூச்சையே ஸ்வாசிக்கிறேன்...
பல யுகங்களாய் எனதிதயம் தேடிய என் உயிர் நீ...
நின்னைச் சரணடைந்தேனடா....!

( தொடர்ந்து வந்த நாட்குறிப்பின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்ட நிலையில் அவளின் தீரா காதலின் நினைவுகளை சுமக்க இயலாமல் காகிதங்கள் தற்கொலை செய்து கொண்டன போலும் .. )

தொடாரும்.......