Tuesday, December 6, 2011

தேடல்களின்... தீர்வு எனக்கானதாய்... ஓர் வெற்றிடம்




நாள் எது பொழுதெதுவென
புரியாத
ஒரு வேற்றுகிரக
விடியலில்..

மார்கழிக்குழாம்
பாடி; மாலை வெயில்
இதமாய் பளிர்க்கும்
அந்திமத்தில்...

மிகப்பெரியச் சண்டையின்
முற்றில்
மௌனிக்கும்
வினாடியின் கடைசி
சொட்டில்...

பின்னிரவுகளில்
தூங்காமல்
எழுதும்
இறப்பின் கவிதையின்
இறுதிப்புள்ளியில்....

மகிழ்ச்சிகள் முறிந்து
திடீரென எதிர்கொண்ட
சாலை விபத்தின்
பரிதவிப்பில்...

பொம்மைக்கு அழும்
எதிர்வீட்டுக்
குழந்தையின்
மிட்டாய் கிடைத்த
புன்முறுவலில்...

நட்பிடம்
மறைத்த உண்மையை
வெளிச்சொல்ல முடிவெடுக்கும்
எண்ணத்தின் கடைசி வார்த்தையில்..

உண்மைகளை நிறுபிக்கும்
வரை போராட்டமாய்
செல்லும் பாதையின்
முட்டுக்கட்டைகளில்

காசு பணமில்லாமல்
போனாலும்
பார்த்ததும் சுகம் கேட்கும்
சம்சாரிநண்பனின்
உபசரிப்பில்..

தேடும் பொருளை கண்டெடுக்கும்
போதான மகிழ்ச்சியின் முதல்
உணர்வில்..

மூங்கில் கழியில்
நுழைந்த காற்றாய்..
எப்போதும் நான் என்னைத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்...!

வெற்றிடம் நிரப்பி...!

-கவிதைக்காரன்..

No comments: