Friday, June 1, 2012

காலை விடிகிறது.... உறங்காத கவிதைகளாய்..


அதிகாலையிலே மனசு அலைபாயுது அது சரி நேற்று இரவு தூங்கி இருந்தால் தானே... காலைக்கும் இரவுக்குமன வித்யாசம் தெரியும் .... மணி நான்கை மெல்ல நெருங்கலாமா வேண்டாமா என எண்ணித் தவித்துக்கிடக்க உருண்டு புரண்டு படுத்தும் உறக்கம் மட்டும் கண்களோடு சரசம் கொள்ள வரவேயில்லை... 

நேரம் கடப்பதாய் தோன்றவில்லை... சட்டையை மாட்டிக்கொண்டு சாலையில் ஒரு வாக்கிங் செல்லலாமென புறப்பட்டேன். 

மனதில் பல எண்ணங்கள் அசைப்போட்டுக் கொண்டிருக்கின்றன அன்னிச்சையாய்.... 

கால்கள் செல்லும் பாதைக்கும் கண்கள் பார்க்கும் வீதிக்கும் சம்பந்தமில்லாத காக்கை குருவிகளின் சப்தம் மட்டும் வரும் கோவையின் மின்னொளி வெளிச்சம் நனைக்கும் விமானநிலையச் சாலையில் நகர்கின்றேன்.

நாட்கள் என்னோடு பின்னால் நகர்கின்றன... இதே போல் தொலைவாய் நடந்த தனித்த இரவுகளை கவனமாய் நினைத்துப்பார்க்கிறேன்...
அப்போதிருந்ததைவிட இப்போது சுமைகளை அதிகமாய்ச் சுமந்து கொண்டிருக்கிறேன்.

நினைவைக்கலைக்கும் விதத்தில் எதிர்பட்ட மிதிவண்டி நடமாடும் தேனீர் விற்பன்னரின் குரலுக்குச் செவி சாய்த்து... கால்கள் நிற்க...
சூடாய் ஒரு தேனீரை விடியலுக்கு தயாராகும் காலையின் குளிரில் அருந்தி இன்னும் முன்னோக்கி நடக்கிறேன். 

விமானநிலையத்தின் வெளிச்சவிளக்குகள் மேகம் தொடும் தூரம் வரைக்கும் சென்று ஊரைச்சுற்றிக்கொண்டிருக்கின்றது நின்ற இடத்தில் நின்றபடியே...
அந்த வெளிச்சச்சுழல்களில்.... காணாமல் போய்க்கொண்டிருக்கிறது இருள்.. 
கூடவே நானும்.... 

கைப்பேசியை கைக்குக்கொடுத்து பாடல் வரிசையில் கண்கள் மேய... “வெள்லைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைத்திக்காக விடியவே ” -பாடல் மனதைக்கரைத்தது... 

மழலை ஒன்று உறங்குகிறது அன்னையின் கதகதப்பில்.... என்ற வார்த்தையின் போது கொஞ்சம் கண்ணீர் கண்களில் முட்டி நிற்க.. கைகள் துடைக்க துணியவியலாததால்.... தானாய் தரையில் விழுந்து உடைகிறது கன்னம் புரண்ட நீர்த்துளி... 

இசையின் ஞானியின் அடுத்தப்பாடலை தேடும் போது நினைவுக்கு வந்தது.., அட இன்று அவரது பிறந்த நாளாயிற்றே என்ற எண்ணம். கண்டிப்பாய் அவருக்காய் ஒரு பதிவை வாழ்த்துச்சொல்லி எழுத வேண்டுமென மனம் நினைத்துக்கொள்ள விமான நிலைய வாயிலை அடைந்தே விட்டேன். 

நடைப்பயணம் அங்கே இளைப்பாறிவிட்டு மீண்டும் பின்னோக்கித் திரும்பியது சாலையோரம் பேப்பர்க்காரர்கள் கைகள் துரிதமாய் அன்றைய நாளிதழின் கோர்ப்புக்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்க... விடிதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த ஆதவன்... மெல்ல கரங்களை உயர்த்தி சோம்பல் முறிக்கிறான்...

இன்றைய நாளின் கலையில் எதையுமே நான் செய்யவில்லை என்றாலும் ஒரு பதிவு எழுதும் அளவுக்கு என்ன பெரியதாய்ச்செய்துவிட்டேன். 
கேள்வி கேட்டபோது நினைவுக்கு வந்தது. 

யாருக்கும் என்ன காரணமென்று சொல்லவேயில்லை... 
எனக்கு மட்டும் இருக்கும் வருத்தத்தின் விழிம்புகளில் நின்றபொழுதில் என்னையும் அறியாமல்...
இன்று நான் அழுதிருக்கிறேன். 


-கவிதைக்காரன்.
No comments: