Saturday, June 2, 2012

என் ஆசான் "கிறிஸ்டோபர் ஞானதுரை"

நாம் யாரிடம் கற்கிறோமோ அவர் டான் ஆசிரியர் கற்றுக்கொடுப்பவரெல்லாம் அல்ல..!

இந்த வார்த்தை காலை நேரம் கண்ணில் பட்டது....ஆம்! வாழ்க்கைப்பயணத்தில் நாம் கற்றுக்கொள்வது எத்தனை எத்தனையோ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை என புதிது புதிதாய் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம்.  

சாக்லேட் வாங்கிக்கொண்ட குழந்தை தன் மழலைக்குரலில் “தேங்க்ஸ் அங்கிள்” என்றதும் மறந்து போன தமிழனின் நன்றியை நினைவுகூர்கிறேன், இப்படி மறந்தவற்றையும் நாம் தினம் தினம் கற்றுக்கொண்டே இருக்கிறோம்...! 

கசடற கற்கிறோமோ இல்லையோ அதற்குத்தக நிற்பது மிகக்குறைந்து போய்விடுகிறது. கற்பதையும் ஆசிரியரையும் கண்ட வாசகம் எனக்கு என் பள்ளிக்காலத்தை நினைவுக்குகொண்டு வந்து செல்கிறது,

வசதிவாய்ப்புகளற்ற சராசரிக் குடும்பத்தின் கடைசிப்புதல்வனாய்ப் போனதால் கவனிப்பாரென அதிகமில்லத சூழ்நிலையில் கல்வி ஒன்றை மட்டும் தடையில்லாமல் பெற முடிந்தது, 

வீட்டுவேலைக்குச் செல்லும் அம்மா தந்தை இல்லாத குடும்பம் அன்னையவளின் ஒற்றை வருமானத்தின் விடியல்களால் கடந்து கொண்டிருக்க அந்த நாட்களில் எந்த ஒரு வருத்தமும் என்னைச்சாய்த்துப்போடாமல் வளர்த்து வந்தார். 

ஆறாம் நிலை முதல் முதலாக உயர்நிலைப்பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கிறேன்., திருநெல்வேலியின் மையத்தில் கம்பீரமாய் வானுயர்ந்து நிற்கும் கதீட்ரல் பேராலய உச்சியின் கீழ் வேம்பு மர நிழலில் அமைந்த பள்ளியில்... தொடங்கியது என் அனுபவப்பாடங்களின் நாட்கள்.


சாதாரணமாகவே வகுப்பில் முன்னிருக்கை மாணவன் படிப்பு ஒன்றும் பெரிய இடைவெளியய் இருக்கவில்லை... அதனால் ஏற்கனவே படித்த “அடைக்கலாபுரம் தொடக்கப்பள்ளியின் பள்ளி மாணவர் தலைவன்”-ஆக இருந்ததும் அங்கு பணி புரிந்த ஆசிரியையின் கணவர் கதீட்ரலில் உடற்கல்வி ஆசிரியராக இருந்ததாலும் அதிக எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கதீட்ரலின் வகுப்பறை பெஞ்சுகளை நிரப்பி இருந்தேன் !

ஆறாம் நிலைக்கு ஆசிரியராக தேவராஜ் ஆசிரியர்... முன்னர் படித்த பள்ளியின் சான்றிதழ் அடிப்படையில் என்னை துணை வகுப்பு மாணவர் தலைவனாகவும் , என் புதிய நண்பன் வரதராஜன் என்பவனை வகுப்புத்தலைவனாகவும் தேர்வு செய்தார்...!

வரும் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் தலைவனை அடையாளங்கண்டு கொள்லப்பட இருக்க நாட்கள் மெல்ல நாவல் மரத்துக்கடியில் இருக்கும் கேண்டீன் நட்புக்களாக பல்கிப்பெருகியது புதிய நட்பு வட்டத்தோடு.,..

சிலவாரங்களில் ஆசிரியர் மாற்றத்தின் பின் வந்து சேர்ந்தார் எனக்கு தமிழ் ஆசிரியராக உயர்திரு.கிறிஸ்டோபர் ஞானதுரை .

என் வாழ்க்கைச்சுழலில் பல மாற்றங்கலையும் எனக்குள்ளிருந்த திறமைகளையும் எனக்கே அடையாளம் காட்டிய மோதிரக்கரங்கள் இவருடையது என அப்போது தெரிந்திருக்கவில்லை..

பாடங்க்ளும் செய்யுள்களுமாக நாட்கள் நகர பள்ளி விழா ஒன்றினை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் வைக்க ஏற்படானது.

தமிழைய்யா வேகமாய் வந்தார். 

வகுப்பறையே எழுந்து வணக்கம் அய்யா என கோரஸாக இசைக்க, என்னையும் வரதராசனையும் இன்னுமொருவனையும் எழுப்பி விட்டு செய்யுள் ஒன்றினைச் சொல்லசொன்னார். 

சாதாரணமாகவே கணீர் குரல் எனக்கு என்னையும் மிஞ்சிய வெண்கலக்குரல் வரதனுக்கு ... மற்றவன் செய்யுள் படிக்காததால் திக்கித் திணற எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய் ஒரு மூன்று தலைப்பைக்கொடுத்து 
இந்த தலைப்பில் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். 

அது தான் எனக்கான முதல் விதை...

நான் தேர்ந்தெடுத்தது ...“காந்தியும் தீண்டாமைச்சாயங்களும்”... எடுத்த தலைப்பின் தேடல்களுக்காக எல்லோரும் சத்திய சோதனையைத் தூக்கிக்கொண்டு ஓட நானோ யாரும் யூகிக்காத வண்னம் வேறு திசையில் சென்று கொண்டிருந்தேன்! 

ஆம்! வழக்கமாய் தலைவர்கள் பிறந்த ஊர் நாள், அம்மை தந்தை பெயரென்று ஒப்புவிக்கும் உப்புக்குசப்பாணி விளையாட்டு எனக்கு உகந்தது என தோன்றவில்லை.... நேராக நான் சென்றது காந்தி மியூஸியத்திற்கு வரலாற்று நிகழ்வுகளில் அவரைத்தேடிப்படித்தேன், 

இரண்டு நாள் கழித்து வகுப்பில் வாசிக்கச்சொன்னார் நாங்கள் எழுதியதை முதல் வரதன் காந்தியின் வாழ்க்கைச்சரிதத்தை சரல் மணல் போல சீராக சொல்லி முடிக்க 

அடுத்து எழாவது வகுப்பு மாணவன் ஒருவன் ஆம் அது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான போட்டி இப்படி பலரது கட்டம் முடியவும் என் வாய்ப்பு வந்தது... 

எழுதி வைத்த மாதிரியை புத்தகத்திலே வைத்து விட்டு எழும்ப அது வரைக்கும் பேப்பரைப்பார்த்து வாசித்தவர்கள் கண்கள் என்னையே குறுகுறுவென்று பார்க்க என் பேச்சை ஆரம்பித்தேன். அது தான் என் முதல் கன்னிப்பேச்சு. 

அவையோர் வணக்கத்திலே அதிரிபுதிரியாக எதுகை மோனைகளைசொறுகி எடுத்த தலைப்பையும் அதனை எடுத்ததன் காரணத்தையுமடுக்கி தீண்டாமை நிகழ்வுகளை வருசை படுத்தி போராடியவர்கள் பட்டியலைச்சொல்லி அதில் மகாத்மாவின் பங்கை மேம்படுத்திச்சொல்லி நாளைய சமுதாயம் படைக்கப்போகும் நாம் என்ன செய்யப்போகிறோமென்ற கேள்வியோடு என் பேச்சை முடிக்க ஆசிரியரே கைதட்டி விட்டார்... மாணவர்களும் சேர்ந்து.... 

அருகே அழைத்து ஆச்சர்யத்தில் இருந்த ஆசிரியர் யார் எழுதிக்கொடுத்தா அப்பா எழுதிக்கொடுத்தங்களா என்க

அப்பா இல்லீன்க ஐயா, அம்மா மட்டும் தான் அம்மா வீட்டு வேலை செய்யுறாங்க.. நானாதான் எழுதினேன் என்ற போது அவஸ்தையாய் அவர் என் மீது கொடுத்த பரிதாபப்பார்வையைக்கூட புரிந்து கொளாத வயதினனாய் புன்ன்கைத்து நின்றேன்.

போட்டி நாள் வந்தது சந்தேகமே இல்லாமல் முதல் பரிசு.. எனக்காக காத்திருந்தது என் பெயரும் பொறிக்கப்பட்ட பரிசை ... என் வாழ்நாளின் எனக்கான முதல் பரிசை கையிலெடுத்துச்சென்றேன்,

அடுத்தடுத்து கல்விக்காலங்கள் கடந்து செல்ல தாமிரபரணி கலை இலக்கியச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவுப்போட்டியில் கலந்து கொள்ள பள்ளிகள் தேர்வாக தலைமையாசிரியரின் கையிலிருந்த பட்டியலில் எங்கள் பள்ளி சார்பாக கலந்து கொள்ள மூன்று பேருடைய பெயர்கள் தேர்வாகி இருக்க ... 

தமிழைய்யா அவர்கள் என்மீதான நம்பிக்கையில் என்னை அனுப்பி வைக்கச்சம்மதித்தார். 

போட்டியிலெல்லோரும் பல மேடை கண்ட ஜாம்பவான்களாக இருக்க நானோ சின்னஞ்சிறுவனாய் தனித்து நிற்க...!


என்னை போட்டியாளன் என்றேகருதாமல் எடுபிடி வேலை செய்யப்பணித்து வந்தார்கள் மற்ற பள்ளி பேச்சாளர்கள். பொறுமைக்கடலினிலும் பெரிதல்லவா !
கடுகின் காரத்தை கருத்திலும் களத்திலும் காட்டிக்கொள்ளலாமென அமைதியாகிக்கிடக்க   போட்டி ஆரம்பமானது ... 

என் அதிஸ்டமோ அல்லது பலரது தூரதிஸ்டமாவெனத்தெரியவில்லை முதலாவதாகவே என் பெயரையும் பள்ளியையும் சொல்லி அழைக்க தனியாளாக வந்திருந்த நான் மேடையேறுகிறேன். என் முதல் மேடை அது.

எதையும் மனதில் எண்ணவில்லை போட்டித்தலைப்பு கலையும் இலக்கியமும் வாழ்ந்த நெல்லை... என் பார்வையில் வசனங்களாக நடுவர்களின் வரவேற்புக்கு பஞ்சமில்லாமல் பலத்த கைத்தட்டுக்கள் அவ்வப்போது என்னை இடைவெளிவிட வைக்க பல மேடை கண்ட பேச்சாளன் போல முழங்கிக்கொண்டிருந்தேன். 

எனக்கான நேரம் முடிவடைந்தது மூன்று நிமிடங்கள் ஆனாலும் நடுவர்கள் இன்னும் சொல்ல வேண்டியதிருந்தால் சொல் நாங்கள் கேட்கிறோம் என கண்காட்ட நேரம் நீட்டிக்கப்பட்டது என் தரப்பைச் சொல்லி முடிக்க நான்கரை நிமிடங்கள் ஆனது கரகோஷம் மாத்திரம் அரை வினாடிக்கு அந்த விழா அறையையே மிரளச்செய்தது...

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்டத்தாய் அங்கே கேட்க வரவில்லை... 

தந்தை மகற்காற்றும் உதவிக்கு யாரும் கூட இல்லை... அடுத்தடுத்து பேச்சாளர்களின் முழக்கங்களால் மேடை குலுங்க போட்டிகள் முடிவடைந்து
வெற்றி அறிவிப்புக்காக காத்திருப்பு மூன்று பிரிவுகளில் நான் கலந்து கொண்ட பிரிவிற்கான முதல் பரிசு எங்கள் பள்ளி மாணவனான கார்த்திக் ராஜாவுக்கு என அறிவித்தார்கள் .

சகஜநிலைக்குத் திரும்பி நான் தான் அந்த கார்த்திக் ராஜா என உணர சில வினாடிகள் பிடித்தது வெற்றிக்களிப்பில் எல்லோருடைய புன்னகைப்பார்வையோடும் நான் வீடு வந்து சேர்ந்தேன்.அங்கே என்னை பாராட்டித்தழுவி.. அள்ளியணைத்து உச்சி முகர யாரும் இல்லை.

மறுநாள் காலை ... 

விரைவாகவே பள்ளிக்குச் செல்ல தலைமையாசிரியரின் அறையில் மிக உற்சாக வரவேற்பு பள்ளிக்கு பெருமை சேர்த்தேனென்று... என் அத்தனை நன்றிகளும் தமிழைய்யா கிறிஸ்டோபர் ஞானதுரை அவர்கள் இருந்த திட்சையில் கரம் கூப்பியது..!

பள்ளி மாணவர்கள் ஒரே இடத்தில் குழுமுவது காலை நேர பிரார்த்தனைக்கூடம். அங்கே பிரார்த்தனை முடிந்ததும் மாணவர்கள் மத்தியில் என் செயலைப்பாராட்டி தலைமையாசிரியரின் கையால் பரிசு வழங்கப்பட்டது..

அனைவரும் அப்படியே அமர்க; என தலைமையாசிரியர் சொல்லிவிட்டு இப்போது நம் முன்னேபேசிக்காட்டுவான் கார்த்திக் என சொல்லிவிட்டுச் சென்று அமர்ந்தி கொண்டார். 

க்ளௌட் நைன் என்பார்களே அப்படியோர் சந்தர்ப்பம் என் பள்ளியின் மேடையில் என் உரை. மூச்சுவிடாமல் இரண்டு நிமிடங்கள் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது வானம் பொத்துக்கொண்டு மழை உற்றெடுக்க தடைபட்ட பேச்சு... 

தலைமையாசிரியரின் செய்கையால் மீண்டும் தொடர்ந்தது... நீ பேசு ராஜா.. என என்னை கண்லாட்டிவிட்டு மாணவர்களை தாழ்வாரங்களைச்சூழ்ந்து அமரச்செய்தார் கிட்டத்தட்ட 1400 மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் என் பேச்சைக்கேட்டுக்கொண்டிருக்க நான் பேசி முடிக்க அடுத்த வினாடிகள் வானதிர கைத்தட்டல் ஓசைகள் ...

ஆக மொத்தம் பள்ளிக்கே நான் செல்லப்பிள்ளை ஆகிவிட்டேன். என்னை அறியாத ஆசான்கள் இல்லை...வாயில் காவலர் முதல் அடையாளம் சொல்லும் நபராகிப்போனேன், எதோ காரணத்தினால் பள்ளிக்கு வந்த அம்மாவுக்கு என்னை புகழ்ந்து சொல்லும் வாட்ச்மேன் வார்த்தை கூட அந்நியமாய்த்தெரிந்து என்னை உணர ஆரம்பித்திருந்தார். 

அப்போதெல்லாம் தலைக்கணம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதது எத்தனை வசதி... ஆம்...! நான் நிற்கவில்லை நிற்க விடவில்லை என் தமிழைய்யா ஓடு ஓடு என ஓடவிட்டுக்கொண்டிருந்தார்.

பள்ளி வாழ்க்கையில் மூன்று ஆண்டுகடந்திருந்தது.

மூன்று முறை மாவட்ட ஆட்சித்தலைவர் கையால் பரிசு 
[மா.ஆட்சித்தலைவர் கி.தனவேல் ] 

மேயர் கையால் இரண்டு முறை 
[உமாமகேஸ்வரி தி.மு.க]   

மாவட்ட அளவில் வெற்றிகள் , தேசிய நூலக வார விழாவில் கல்லூரி முதல் உயர் கல்வி வரை 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேச்சுப்போட்டியில் 
நானே எதிர்ப்பார்க்காமல் முதல் பரிசு வென்று இலவச நூலக மெம்பர்ஷிப் கார்டு பெற்றது பல பள்ளிகளில் சிறப்புரை என படிப்புடன் தனித்திறன் போட்டிகளிலும் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தேன்.,

எங்கு சென்றாலும் வெற்றி... வசப்பட்டுக்கொண்டிருந்தது, பள்ளி பற்றிய நாளிதழில் வெளியான கட்டுரையில் என் பெயர் இடம்பெற்று செய்தித்தாளில் படம் வெளி வந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து நான் இன்பத்தை பகிர்ந்து கொண்டிருந்தது... என் முதலாளியிடம் ஆம். 

பள்ளி விடுமுறைக்காலங்களில் தேனீர் அங்காடியில் பணி புரிந்தேன்.,
சிகரெட் விற்பனைக்கடை நடத்தினேன். என் நண்பர்கள் எனக்கு முன்னால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் போது நான் வேலைக்குச்சென்று கொண்டிருந்தேன், 

நாட்கள் நகர்ந்தன... படிப்பில் கொஞ்சம் பின் தங்க ஆரம்பித்த தருணம் அது. குடும்பச்சூழல் என் விதியோடு விளையாட அனாதை இல்ல விடுதியில் படிக்க வைக்கச்செய்யப்பட்டேன். 

அங்கே எனக்குள் இருந்த ஒரு கவிஞனும் கருவிலிருந்து வெளி வந்தான் “கிறிஸ்துஜோதி உயர்நிலைப்பள்ளி ” அது. நாகர்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

மூன்று மாதங்கள் அந்த பள்ளியில் படித்தேன். ஆம்! எனக்கு கதீட்ரலையும் அங்குள்ள ஆசிரியர்களையும் இழந்துவிட மனமில்லை. அந்த மூன்று மாத இடைவெளிக்குள் அந்த பள்ளியின் ஆண்டு விழா நடைபெற... ஒன்பது சான்றிதழ்கள் நான்கு முதல் பரிசுகள், இரண்டு மூன்றாவது பரிசுகள் என கதை... கவிதை... கட்டுரை... பேச்சு... தனிநடிப்பு... என பல்கலைப் பிரிவுகளிலும் வெற்றிகளைக்குவித்து வந்தேன். 

கவிதைப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கவிதை எழுதிக்கொடுத்தேன் முதல் மூன்று மட்டுமல்ல போட்டியில் கலந்து கொண்ட அத்தனைக்கவிதையும் என்னுடையதாக இருந்தது. 

மீண்டும் கதீட்ரலில் நுழைந்த போது வந்துவிட்டான் என் மகன் என என்னை வாரி அணைத்துக்கொண்டது என்பள்ளியின் வளாகங்கள். ஆனால் ஏழ்மைக்கதவுகள் திறக்கவில்லையே.. ஒரு நிபந்தனையோடு ப்ள்ளியில் சேர்ந்தேன் அது காலை பள்ளிக்கு பின் தங்கி வருவது என ஆம்! 
அதையும் அனுமதித்தார்கள்... 


[ஈச்ச மரங்கள் நடுவில் என் வகுப்பறை]

பின் தங்கி வர என்ன காரணம் இருக்க முடியும் உங்கள் யூகம் இங்கு வேலை செய்யப்போவதில்லை... காலை மூன்று மணிக்கு எழுந்து என்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆறூ கிலோமீட்டர் தொலைவு கடந்து காலை தேனீர்க்கடைதிண்பண்டங்களான சமோசாவை பெட்டியில் கட்டி அனைத்து கடைகளுக்கும் போட்டுவிட்டு ஒன்பது மணிக்குள்வீடு வந்து மீண்டும் பள்ளிக்கு புறப்பட்டுச்செலவதால் அந்த நிபந்தனை... வேண்டுகோள்.

மீண்டும் மாலை படிப்பை முடித்து காலை கொடுத்த சமோசாவுக்கு வசூலுக்குசென்று பணம் வசூலித்து வீடு திரும்ப மாலை ஏழு மணி அதன் பின் படிப்பு, இத்தனைக்கும் கூலி ஒரு நாளைக்கு 25/- ரூபாய்.... நாட்கள் இப்படியே கடக்க வேலைக்குச் செய்ததை சொந்தமாய்ச் செய்ய ஆரம்பிக்க உழைப்பின் அர்த்தம் கற்று படித்தேன். எல்லா நேரத்திலும் தந்தை இல்லா என்னை தன் மகன் போல கண்ணும் கருத்துமாய்ப்பார்த்துக்கொண்டவர் தமிழையா கிறிஸ்டோபர் ஞானதுரை அவர்கள். 

இன்னும்வெளியில் சொல்லக்கூடாதென்று அவர் செய்த பல உதவிகளால் தான் நான் வளர்ந்தேன்., நல்ல மனிதன் எனக்கு ஆசானாக வந்ததும் நல்ல பள்ளி என்னை அரவணைத்துக்கொண்டதும் நான் ஏழ்மையிலும் எழுந்து நிற்க மட்டும் கற்றுக்கொண்டதற்கு காரணம். 

என்கிருக்கிறார் எனத் தெரியவில்லை அந்த இடக்கை தெரியாமல் கொடுக்கும் வள்ளல். ஆனால் அவர் போல ஒருவர் இல்லாவிட்டால் நான் எந்த மூலைக்குள் முடங்கி இருப்பேனென்று எனக்கே தெரியாது ..

அந்த கண்களுக்கு நான் கற்பக விதையாய் தெரிந்திருக்கிறேன், கற்பிப்பவறேல்லாம் ஆசானல்ல நாம் யாரிடம் கற்றுக்கொள்கிறோமோ அவரே ஆசான், 

அவர் எனக்கு ஆசானுக்கும் மேல்; அய்யா என்றாவது இப்பதிவு உங்கள் கண்ணில் பட்டால் ஏன் கண்ணீரில் நன்றி சொல்லி இருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள்...

-உங்கள் மாணவன் -

கார்த்திக் ராஜா [கவிதைக்காரன்]

அவர் பற்றி இணையத்தில் தேடும் போது என் போலன ஒரு மாணவரின் வார்த்தை இது :
anantharaman  wrote 2 years ago0 
this is my school where i have studied ni this school i have good teachers like rubavathy ,chistoper gnanadurai ,tv jeyaraj and iam gifted to study in this school.

என் பள்ளி : http://wikimapia.org/242079/Cathedral-Hr-Sec-School-Palayamkottai

1 comment:

பிரேமி said...

அன்புத் தோழமையே... எத்தனைபேர் வறுமையில் வாழ்ந்த வாழ்க்கையை இப்படி பகிரங்கமாக சொல்கின்றார்கள். உங்களின் ஓயாத ஓட்டத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். உங்களின் கட்டுரை கண்டு கண்ணில் நீர் திரண்டது. உங்கள் மொழித்திறமையாலும், பேச்சின் வலிமையாலும், கவிதையின் கற்பனைத்திறனாலும் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்....