Friday, March 18, 2011

இறுதியாக எழுதப்படுகிறது இக்கடிதம்

இதற்குமுன் எழுதப்பட்ட
எண்ணிலாக் கடிதங்களின்
கதி பற்றியறியும் ஆவலில்
இறுதியாக எழுதப்படுகிறது இக்கடிதம்.

முகவரியைத் தெளிவாகவே
முன்பக்கம் எழுதிவிட்டபடியால்
முன்குறிப்பிட்ட கடிதங்கள் எதுவும்
வந்துசேரவில்லையென்று சொல்லிநழுவ
வாய்ப்பேதுமில்லையுனக்கு.

அனுப்புநர் யாரென்றறியாக்காரணத்தால்
அநாமதேயமென்றெண்ணிப் பிரிக்கப் பயந்ததாய்
பொய்யுரைக்கவும் வழியில்லை.
பின்புறம் என்பெயரை
பெரிதாய் எழுதிவிட்டேன்.

உள்ளிருக்கும் வாசகங்கள்
உனக்கானவை அல்லவென்று
அத்தனை எளிதாய்ப் புறந்தள்ளி
பாசாங்கு செய்யவியலாது.

அகம் கொண்ட உன்மத்தத்தை
கணநேரமேனும்
முகம் காட்டி முறுவல் பூக்கும்.

அவை உன்னை அடைந்த பொழுதுகளிலெல்லாம்
உன் மார்போடணைத்து மனதுக்குள்
மண்டியிட்டு மன்றாடி நின்றிருப்பாய்!

அதன்பின் அவற்றின் கதியென்னவென்பதை
அனுமானிக்க என்னால் இயலவில்லை.
அவை யாவும் தன் அந்திமக்காலத்தில்
உன்னை வந்தடையவில்லை,

வாழ்விப்பாயென்ற நம்பிக்கையுடனே
பயணித்து வந்திருந்தன பல மைல் தூரம்!
அவற்றை என்னதான் செய்தாய்?

இதரக் கடிதங்களின் கதி பற்றியறிய
எழுதப்பட்ட இக்கடிதத்தையும்
என்ன செய்வாயென யோசிக்கிறேன்.

முந்தையக் கடிதங்களோடு இதுவும்
உன் அலமாரியின்
ரகசிய இழுப்பறையில் பூட்டப்பட்டோ…
பரணிலிருக்கும் தகரப்பெட்டிக்குள்
பழந்துணிகளுக்கு மத்தியில் பதுக்கப்பட்டோ…
இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்
குறைவானநிலையில் இப்படி அனுமானிக்கிறேன்.

முந்தையக் கடிதங்களைப் போலவே
இதுவும் எரிக்கப்படலாம்
அல்லது புதைக்கப்படலாம்,
எவருமற்ற வனாந்திரத்தின் நடுவே
ஏராளமுறை வாசிக்கப்பட்டு,
பின் ஒரு இறுக்கமான மனநிலையோடு
எண்ணற்றத் துகள்களாய்
ஒவ்வொரு அட்சரமும் உருத்தெரியாமல் கிழிக்கப்பட்டு,
கைகள் நடுங்க, காற்றிலே தூவப்படலாம்.

அவ்வாறு நிகழும் ஒவ்வொருமுறையும்
ஆழ்ந்த மெளனத்துடன் அஞ்சலி செலுத்தியோ,
அக்கடிதங்களின் அற்பாயுளுக்காக
சில துளிகள் கண்ணீர் விட்டோ
உன்னை நீ ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

இப்படியான அவற்றின் இறுதிக்கதி பற்றி
தீர்மானமாய் அறியவரும்வேளையில்
போர்முனை அனுப்பப்பட்ட
வீரர்களைப் போலவே என் கடிதங்களும்
பிணைக்கைதியாகப் பிடிபடாமல்
வீரமரணம் ஏற்றதை எண்ணி நானும் இன்புறலாம்....

No comments: