Thursday, March 17, 2011

விளைந்த வயல் குறித்த
வேதனையைச் சுமந்தபடி
உலையில் கொதிக்கிறது
அரிசி.
விட்டுக்கொடுத்து
பறிக்கப்பட்டது போக
மிச்சமிருக்கும் நிலத்திலும்
முளைத்து வரமுடியவில்லை
முன்புபோல்
நிலதைப் பாதுகாக்கும் பொறுப்பு
வயக்காட்டு பொம்மைகளிடமே
ஒப்படைக்கப்பட்டது எப்போதும்
வரப்புகளும் வாய்க்கால்களும் கிணறுகளும்
பறிக்கப்படும்போது
வேடிக்கை பார்த்தபடி
வெறுமனே நிற்பதைத்தவிர
வேறென்ன செய்யும் பொம்மைகள்?
பக்கத்து வயல்களுக்குப்
பாயும் வேளையில்
கரை மீறிக் கசியும் நீரில்
முளைவிட முடிந்தது
கொஞ்சமாவது....
எவரும் அறியாமல் துளையிட்டு
நிலத்திற்குள் ஊடுருவிய
பெருச்சாளிகளின் நாசங்கள்...
பாதுகாவலர்கள் பொம்மைகளே
என்பதறிந்த
அயலூர்க் குருவிகளின்
அச்சமற்ற அபகரித்தல்கள்...
எதிலும் அகப்படாம...
பானை வந்து சேர்வதற்குள்
பட்டபாடுகளை நினைத்தபடி
உலையில் கொதிக்கிறது
அரிசி.
பானையிலும்
பத்திரமாய் இருக்க முடியவில்லை
தீய்த்துவிடும் தீவிரத்தில்
தணல்கள்
கொதித்தால் போதாது
பொங்க வேண்டும்
பொங்கி வழியாமல்
அணையாது
அடுசுடும் நெருப்பு.

No comments: