Thursday, June 23, 2011

உசேன் ஒரு வாழ்க்கை...

இந்தியாவின் பிக்காஸோ என்ற பெருமை பெற்ற ஓவியர் மக்புல்ஃபிதா ஹுசைன் உலகு நீத்துவிட்டார். இந்தியா தன்னைப் பெருமைப்படுத்திய புதல்வர்களுள்மேலும் ஒருவரை இழந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஊடகங்களும், கலைஞர்களும் அவருக்குப்பெரும் புகழஞ்சலி செலுத்துகின்றனர்.

இருந்தபோதிலும், தன் கடைசி காலத்தில் தாய்நாட்டில்இருக்க முடியாமல் ‘துரத்தியடிக்கப்பட்டு’ வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் குடியுரிமைப் பெற்றிருந்தார் அவர்.  நாட்டின் ஒரு பெரும் கலைஞனை, கடைசி காலத்தில் ‘துரத்தியடித்த’தீராப் பழியை இந்திய தேசம் சுமக்கிறது.. அதற்குக் காரணமாக, அவருடைய ஒருசில ஓவியங்களும், அவர் பெயர் மீதான அரசியலும் தான் அமைந்திருந்தன என்றால் மிகையாகாது.

மறைந்துவிட்ட எம்.எஃப் உசேன் மிகத் திறமையான ஓவியர் என்றபோதிலும், சொந்த நாடான இந்தியாவில் அவர் பெருமளவுக்குப் பேசப்பட்டதெல்லாம் அவரைச் சுற்றிய சர்ச்சைகளினால்தான். மாதுரி தீட்சித் என்கிற ஹிந்திப் பட நடிகையின் ஆதர்ச ரசிகராக சிறிதுகாலம் அவர்அறியப்பட்டிருந்தார். அந்த நடிகையை வைத்து ஒரு திரைப்படத்தையும் அவர் எடுத்திருந்தார்.

அதன்பின்னர் அவருடைய சர்ச்சைக்குரிய ஓவியங்கள் தாம் அவரைப்பற்றி பேசவைத்தன. பாரதமாதா என்கிற உண்மையல்லாத உருவகத்தை அவர் வரைந்த விதமும், ஹிந்துகடவுளர்களை, குறிப்பாக, சரஸ்வதியை அவர் ஆடையில்லா நிலையில் வரைந்ததும் ஹிந்து பெருமக்கள் அவர்மீது கோபம் கொள்ளச் செய்தன.  அரசியலால்தூண்டப்படாமல் ஹிந்து பெருமக்கள் இதில் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தஉணர்வுகள் புரிந்துகொள்ளப்படவேண்டியவையே.

எம் எஃப் உசேன் இறந்து விட்டாலும், அவருடைய ஓவியங்களை முன்வைத்த ‘அரசியல்’ மீண்டெழுந்து தலைவிரித்தாடுகிறது.

பொதுவாக, உருவம்வரைவதை - உசேன் தன் பிறப்பால் சார்ந்திருந்த இஸ்லாமிய மதமும் சமூகமும் கடுமையாக எதிர்க்கின்றன – அதுவும் மிகக் கண்ணியமாகக் கூட உருவப்படங்களை வரைவதற்கு அவை அனுமதிப்பதில்லை என்னும் நிலையில், உசேன் எப்படி உருவங்களை ஆர்வமாக வரையத்தொடங்கினார் என்பதற்கு அவருடைய வாழ்க்கையே விடையளிக்கிறது.

எம் எஃப் உசேன் சிறுவயது முதலே ஒரு பெயரளவு முஸ்லிமாக, இந்து மதத் தத்துவங்களின் மீது மிகப் பிடிப்புள்ளவராகவே வளர்ந்து வந்திருக்கிறார். வால்மீகி, துளசிதாசர் ஆகியோர் எழுதிய ராமாயணங்களை, ஹிந்து மதத்தின் உபநிஷத்துகளை தீவிரமாகப்படித்து வாழ்ந்தவர் உசேன். ராம் மனோஹர் லோஹியா என்கிற ஜனசங்கத் தலைவரின் விருப்பத்தை ஏற்று சித்திரத்தில் ராமாயணத்தை வரைந்துதள்ளியவர் அவர். தன் ஓவியப் பணியைத் தொடங்கும்போதெல்லாம் விநாயக உருவத்தை வரைந்துவிட்டே துவங்குமளவுக்கு பூரண ஹிந்துவாகவே தன்னைவரித்துக் கொண்டவர் உசேன். பதிவொன்றில் சொல்லியிருப்பது போல, தன் உணர்விலும், இரத்தத்திலும் ஹிந்து உணர்வே ஊறியவர்தான் உசேன். அவரே தன்னை ஒரு முஸ்லிமாகப் பார்க்கவில்லை.

சரி, ஹிந்துமதத் தத்துவங்களை உள்வாங்கி, அதன்படி வாழ்ந்த ஒருவர் ஹிந்துக் கடவுளர்களை நிர்வாணமாக வரைந்து, ஏன் ஹிந்து பெருமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தவேண்டும்? இங்கே தான் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உசேன் என்ற "முஸ்லிம்" பெயர்செய்த ‘பெருங்காயம்’ அது. ஊடகச் சமையலில் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.

"ஹிந்துமதத்தில் நிர்வாணம் என்பதற்கு பல தத்துவ விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. நிர்வாணம் என்பது தெய்வீகம், நெருப்பை அணைப்பதன் அடையாளம், உண்மையை அறிவதன் குறியீடு என்றெல்லாம் சொல்லி இன்றைக்கும் அதற்கான எடுத்துக்காட்டுகளாக சிவலிங்கங்களும், குகைவரைக் கோயில்களின் சிற்பங்களும் காட்சியளித்துக் கொண்டிருக்கையில், உசேன் ஆபாச உணர்வைத் தூண்டாமல் கலையுணர்வு ததும்ப வரைந்த ஓவியங்கள் எப்படி தவறாகும்" என்று கலை இலக்கிய விமர்சகர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும், உசேன் தன் மகளின் திருமண அழைப்பிதழில் கூட சிவன்-பார்வதியின் தழுவல் நிலையை வரைந்தபோது எழாத எதிர்ப்பு காலங்கடந்து வந்தது ஏன் என்றும்கேள்வி நீள்கிறது.

உசேன் இவ்வாறு வரைந்ததை எந்த (சரியான) முஸ்லிமும் ஆதரிக்கவில்லை. ஏற்கனவே சொன்னது போல, மிகக்கண்ணியமாகக் கூட உருவங்களை வரைவது கூடாது, தடுக்கப்பட்டது என்றே முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

ஹிந்து மதத்தில் நிர்வாணம் பழிக்கத்தக்கதல்ல. உசேனின் நிர்வாண ஓவியங்களை அவர் பெயரளவுக்குச் சார்ந்திருந்த முஸ்லிம் சமூகமும் ஆதரிக்கவில்லை என்றால் இந்த ஓவியங்களை வைத்து நடத்தப்படும் அரசியலின் மூல ஊற்று எது?

அவர் பெயர் தான் அது. நம்புங்கள், நடைமுறையில், பெயரில்தான் எல்லாம் இருக்கிறது.

முழுதும் ஹிந்துத் தத்துவங்களோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த உசேன் தன் பெயரை மாற்றிக் கொண்டு, ஒரு உமேஷாகவோ, உமையவனாகவோ அந்த ஓவியங்களை வரைந்திருந்தால் அரசியல் பிழைப்புக்கு அற்பக் காரணங்களைத் தேடிக் கொண்டிருந்த ‘சங்’கத்தினருக்குப் பிரச்னை செய்ய வழியற்றுப் போயிருக்கும். ஆனால், உசேன் என்ற அந்தப் பெயர் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. "ஆகா, எங்கள் கடவுளை ஆபாசமாக வரைந்துவிட்டான், அடிடா அவனை!" என்று ஹிந்து பொதுமக்களைத் தூண்ட, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அவை ‘வாய்ப்பை’க்கண்டறிந்தன. உயிர் தப்ப நினைத்த உசேன், அதன்பின் கத்தர் குடியுரிமை பெற்று, இலண்டனில்நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

இந்தப் பிரச்னையில், அரசியலாடும் மனிதர்களை நான்காகப் பிரிக்கலாம்:

1) கருத்துச் சுதந்திரவாதிகள் என்னும் காகிதப்புலிகள்: இவர்கள் உசேன் மீதான தாக்குதலைக் கண்டித்தார்கள். தஸ்லிமா நஸ்ரின் என்றாலும் உசேன்எ ன்றாலும்  கருத்துச் சுதந்திரம் தான் முக்கியம் என்று களத்தில் குதிப்பவர்கள்.

மனிதர்கள் சார்புடையவர்களே என்னும் உண்மை உணராதவர்கள் இவர்கள். இவர்களுடைய சார்பு (அது மதமாகவோ, மொழியாகவோ, இனமாகவோ, கலையாகவோ இருக்கலாம்)பாதிக்கப்படும்போது உண்மை உணர்ந்து அதே கருத்துச் சுதந்திரத்தின் இடுக்கில் நுழைந்து வெளியேறக்கூடியவர்கள் இவர்கள்.

2) ஹிந்துத்துவ அரசியல்வாதிகள்: இவர்கள் தாம் இதனை வாய்ப்பாகப்பயன்படுத்திக் கொண்டவர்கள். ஆனால், எதிர்பார்த்த ஆதாயம் எதையும் பெறாததுடன், தேசத்துக்கும் தமது துரத்தியடிப்பின் மூலம் களங்கம் ஏற்படுத்தியவர்கள்.

"ஏன் இதனை வரைந்தாய்?" என்று கேட்பதை விட "ஏன் அதனை வரையவில்லை?" என்று கேட்பதில் அரசியலாதாயார்வ மிக்க இவர்கள் இந்திய ஞான மரபின் தத்துவக்குஞ்சுகள் என்று தம்மைக் கருதிக்கொள்பவர்கள்.

காலத் தேவைக்கேற்ப, பொதுவுடமை பேசுபவர்களைப் போலவே, இவர்கள் முதல்பட்டியலிலும் முகம் மறைத்து தலைக் காட்டுவதுண்டு.

3) முஸ்லிம் முல்லா சமூகம்: இந்தப் பிரச்னை வெறுமனே உசேனை மாத்திரம் குறிவைப்பதல்ல என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, பெரும்பாலும் "மெளனம்" காத்த சமூகம்இது.              உசேன் வரைந்த நிர்வாண ஓவியங்களை ஒரு சில அறிஞர்கள் கண்டித்தாலும் பெரும்பாலோனோர் கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, மரியாதையாகக் கூட உருவப்படம் வரைவதற்குத் தடையைக் கொண்டிருந்தும், உசேன் வரைந்த, முழுவதும் தன்னை மூடிக்கொண்ட ஒரு பெண் சித்திரத்துக்கு ‘பாத்திமா’ என்று பெயரிடப்பட்டதற்கும்கூட, இச்சமூகம் போதுமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு இந்துத்துவாக்களின் மேற்குறிப்பிட்டகேள்வியும் காரணமாக இருக்கலாம்.

4) பொதுமக்கள்: வெறுமனே உணர்ச்சிக் கொந்தளிப்பில் காற்றடிக்கும்பக்கம் செல்லும் பட்டங்கள்.

எந்த விஷயத்திலும், அறிவுபூர்வமாகச் சிந்தித்தால், நாம்மேற்கண்ட யாராலும் ஏமாற்றப்பட மாட்டோம் என்பதை இவர்கள் விளங்கிவிட்டால், இந்தியாவில் இத்தகைய அரசியல்குப்பைகள் ‘ஊடகச் சமையல்’ செய்யப்படமாட்டாது. அவர்களுக்காகத் தான் இந்தக்கட்டுரை.
நன்றி!
குறிப்பு: எம்.எஃப் உசேன்   வாழ்க்கை தகவல்கள் இணையங்களிலிருந்தே பெறப்பட்டன.
- வாசகன்!

No comments: