நேற்றைய கனவில்
எனக்கும் என் எதிரிக்குமான
வாய்த்தகராறு...!
சற்று நேரத்தில் வார்த்தை
பெற்றுப்போட்ட சண்டைக்குழந்தைகள்
உடனுக்குடன் நாகரீகம் பாராமல்
நடுரோட்டில் கைசரசங்களாக வளர்ந்திடுகிறது..
ஓங்கு குத்தப்பட்ட கைகள் அவன் நாசியை
பதம்பார்க்க.. மீள்வதற்குள்
அடுத்த குத்து அடி வயிற்றில் என
ஆக்ரோசமாகிப்போனது அச்சண்டை..!
சண்டை அன்று எனக்கு பிடித்தமான
பொருளாகி இருந்தது...
எதைப்பற்றியும் எவன் பற்றியும்
சிந்திக்காமல் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள
வெளிநாட்டில் இருந்து வரும் மாமன்
வாங்கி கொடுத்த விளையாட்டு பொம்மை
போல அதன் மீது அத்தனை
ஆர்வமாகத்தோன்றியது...அந்தச்சண்டைகள் எனக்கு...
அதுவும் எதிரிக்கு முதலில்
இரத்தம் கொட்டிப்போனால்
நாம் தான் மோதலில் ஆக்கிரமிப்பில்
இருக்கிறோம் என்ற ஆணவம்
தலை மேல் ஏறி அமர்ந்து கொள்ளும்!
அது அடுத்த அடியைக்கொடுக்க
கொஞ்சமும் யோசிப்பதில்லை..
அது சண்டைக்குப்பின்வரும்
நிகழ்வுகளைப்பற்றி சிந்திக்க விடுவதே இல்லை!
மூளை மரத்துப்போய் முன்கோபம்
நரம்புகளை முறுக்கேறச்செய்ய !
சுற்றி வேடிக்கைபார்ப்போரின் முகபாவனைகள்
நம்மை ஒரு இரக்கமில்லாதவன் மேல்
செலுத்தும் பார்வையோடு அதேநேரம்
மிரட்சியாக பார்க்கும் போது
கிடைக்கும் பெருமித உணர்வு
எதிரியை நிலைகுலையச்செய்யும்
அளவுக்கு தாக்க வைக்கிறது...!
அநேகமாக இன்னும் இரண்டு அடி
கொடுத்தால் எதிரி வீழ்ந்திடுவான்
என் கனிப்பு தப்பவில்லை
அடுத்த இரண்டு அடிகளுக்குள்ளாகவே
அவன் வீழ்ந்தான்..
இனி அவன் எழுந்து வந்து அடிக்கப்போவதில்லை
அடிவாங்கவும் திராணி இல்லாதவனானான்!
அங்கிருந்து கிளம்பும் முன் அச்சத்தால்
எவனும் அவனைக்காப்பாற்றவோ என்னை
தாக்கவோ முனைவதாகப்படவில்லை!
எதற்கும் அவர்களை இன்னும் பலவீனப்படுத்தலாமென்ற
எண்ணத்தில் நான்கைந்து வன்சொற்களை
ஏகவசனாமாக வீசிவிட்டு விரைந்து கடந்து போகிறேன்
அந்த இடத்திலிருந்து... !
நான்
சிறுவயது முதல் இதுபோலான
சண்டைகளுக்கு தலைபடுவதில்லை,
ஏன் கெட்டவார்த்தை
பேசுவோருடனோ கூட நட்பு பாராட்டியதே இல்லை
அதைவிட பள்ளியில் எனக்கு இருந்த
நல்லபெயரை காப்பாற்றிக்கொள்ள
இருக்கும் இடம் தெரியாமலே வளர்ந்துவிட்டவன்..!
ஆனால் இன்று ஒருவனை இரத்தம் வரும்
அளவுக்கு காயப்படுத்த நான் குரூரமானவனாகிப்போக
யார் காரணம் !? வேடிக்கை பார்த்தவனில் ஒருவன் வந்து
விலக்கி இருப்பானேயானால்..!
வார்த்தைச்சண்டை கைநீட்டும் முன்
அவ்விடத்தை நான் கடந்திருப்பேனேயானால்!
இந்த நிகழ்வு நடந்தே இருக்காதே
என எனக்கு நானே என்னை நல்லவனாகச்சித்தரிக்க
சமாதானப்படுத்திக்கொண்டிருக்கையில்
கனவு முடிந்தது... காலை புலர்ந்தது
கவனமாக எதிரிகளைத் தவிர்த்து வருகிறேன்..!
-கவிதைக்காரன்
[கார்த்திக் ராஜா]
No comments:
Post a Comment