Thursday, February 16, 2012

யுகம் யுகமாய்






ஆதியின் கூட்டில்
நடந்து நடந்து
சுமந்து சுமந்து
கடந்து கடந்து
அடைந்த நதிக்கரை மீதினில்
அமைந்த நாகரீகம்...

கற்களை
பெயர்த்து கரும்பாறை
இடுக்கில் மரவேரை
சொறுகி மழைகாலம்
பாறை பெயர்த்து வழி
அமைத்த நாகரீகம்

தீயின் காலம்
சருகுகள் கரிய
கரும்புகை படர
வளர்ந்த நாகரீகம்

பறவை எச்சிலில்
துளிர்த்த இலையில்
பாங்காய் வளர்ந்த
பயிர்களில் பசித்தீர்த்த நாகரீகம்

கல்லில் குடைந்த
கூர்வெட்டோத்தியின்
குருதிநாற்றத்தில் கொன்று
மலத்திய செந்நரி
மாமிசங்கொண்ட நாகரீகம்

 வட்டுகல் விற்கள்
வீசி ஏய்தி வீழ்த்திய
களிறும் விரட்டிய
அரிமாவையும் புரட்டிய
நாகரீகம்

மண்சுடல் சிற்பம்
மதில் கரி உருவமென
குடைந்து குழைத்த
குறுமலை நாகரீகம்

நூறாண்டு வாழும்
ஆமை கொன்று
நீராடும் மீனை
குதறிக்கிழித்து
களித்த பொழுதின்
எச்ச நாகரீகம்






மண்ணையும் மழையையும்
விண்ணையும் பொன்னையும்
அளந்த சேற்றில் ஊறிய
சபிக்கப்பட்டவனின் மிச்சத்தடங்களாய்

தூக்கைச் சுமக்கும்
நாகரீகம்


சைவ வைணவ பட்சிகளென
தவிட்டு போதனைக்குள்
சாஸ்ட்ராங்கமாய் கால் நீட்டி
படுத்துக்கிடக்கும்
நாம்

குரங்குகளின் புணரல்
கற்றோமென்றால் முகஞ்சுளிக்கவும்
நாய்களையும் அதன் உப்பு
நாக்குகளையும் அறிந்த படியால்

உள் வீட்டுக்கு காவல் வைத்தோமென்றால்
அறிவுஜீவியெனக் கொள்ளவும் தயங்கியதில்லை...

வெப்பம் படிந்த
அண்ணாச்சி பழங்களைப்போல
வெளிக்கசடுகள்
நீங்காமல் திரிகிறோம் யுகம் யுகமாய் !


-கவிதைக்காரன்

No comments: