நிசப்த அலைவரிசையில்
அவன் என் முன் அமர்ந்துகொண்டு
பார்வையால் என்னை ஆக்கிரமிப்பதை
தடுக்க முடிவதே இல்லை..!
அவன் கேட்கும் கேள்விகளுக்கு
பதிலைச்சொல்லி முடிப்பதற்குள்
அடுத்த கேள்வியை
எடுத்து என் முன்வைக்கிறான்..
எப்படி சாத்தியமாகிறது இவனால்
என்று நான் சிந்திக்கும் முன்னரே
அடுத்தடுத்த கேள்விகள்
எடுத்து வைக்கப்பட்டன
ஆனால்...!
ஒரு ஒற்றுமை என்னவெனில்
அவன் கேட்க்கும் அத்தனைக்கேள்விகளும்
என் அன்றைய நாளின் செயல்களையே
உடனிருந்து வேவுபார்த்ததாக இருக்கிறது..!
முதல் கேள்வி இப்படியாக இருந்தது
ஏன் தேவை இல்லாத இடங்களிலும்
உன் சுபாவம் தெரியாதவரிடத்தும்
வார்த்தைகள் விதைக்கிறாய் என..!
அடுத்த கேள்வி உனக்கான அடையாளத்தை
ஏன் இத்தனை மட்டமாக்கிக்கொள்கிறாய்? என!
அடுத்த கேள்வி பொறுமையில்லாமல்
உன் கோவத்தையும் வெளிப்படுத்தி
பொதுஇடத்தில் மேலும் இழுக்கு சுமந்து
அவப்பெயரைத்தேடிக்கொள்வானேன்?
அதன்பின்னராக.... உனக்கு அறிவென்பதே இல்லையா!?
என்றும்... கேள்விகள் தீர்வதாகவே தெரியவில்லை
இப்படி நான் பதிலகளைத்தேடும் முன்னரே
அவன் கேள்விகள் என் மனதின்
எல்லையைத்தொட்டு கடந்து போய் விடுகிறது,...
அதன் பின் நான் அவனுக்கு
பதில்களைச்சொல்லாமல்
மனதின் எண்ணங்களை பரிசீலித்த்துக்
கொண்டிருந்தமையால்
அவன் அங்கிருந்து கிளம்பிப்போனதை
கவனிக்கவே இல்லை ...!
அவனுக்கும் என் பதில்கள் தேவையாக இல்லை
என்னை சிந்திக்க வைப்பதே
அவன் வந்ததன் காரணமாக
இருந்தது...! தினமும்...
அவனைப்பற்றி விசாரிப்பதும்
எனக்கு தேவையாகப்படவில்லை...
அதோ அதோ தொலைவில்
அவன் கடந்து போகிறான்
நான் உரத்தகுரலில் அவன் பெயரைக்கேட்டேன் !
பதில் வரவில்லை...மீண்டும் கேட்டேன்
“மனசாட்சி” என்றொரு எதிரொளி வந்தது...!
-கவிதைக்காரன்
No comments:
Post a Comment