அம்மாவின் அவசர முடிவு எப்போதுமே தவறாகத் தான் போகும், ஆனால் அதை ஆரம்பத்திலேயே அவர்களிடம் எடுத்து சொல்வது யார்? அப்படியே சொன்னாலும் போடோ. முப்பது வயதில் தாலியறுத்து. நாற்பது வருஷமா வாழ்க்கையோடு மல்லுக்கட்டி நிற்கும் எனக்கு தெரியாதது உனக்கு தெரியுமோ? என்று வாயை அடைத்து விடுவார்கள், அதையும் மீறி பேசினால் அழகை. ஆர்ப்பாட்டம். உண்ணாவிரதம் என்று போராட்டாம் நீண்டு கொண்டே போகும்,
மாமாவை தேர்தலில் நில் என்று சொல்லி வலிய தள்ளி விட்டதும் அம்மா தான், இன்று நல்ல பிள்ளையை கெடுத்துவிட்டேனே என்று அழுது புலம்புவதும் அம்மா தான், இன்றைய தேர்தல். அரசியல் என்பதெல்லாம் மகாத்மாவை கூட வழி தவற செய்துவிடும் என்பது அம்மாவுக்கு தெரிய வாய்ப்பில்லை தான், அதை முன்கூட்டியே தெரிந்தால் தான் மாமாவை தேர்தலில் நிற்க வேண்டாம் என்று தடுத்து பார்த்தேன், நீ நேற்று பிறந்தவன் உனக்கு நமது குடும்பத்தை பற்றி என்ன தெரியும்? உன் தாத்தா சுகந்திரம் பெற்ற பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே நின்று ஜெயித்தவர், நாட்டுக்கே அமைச்சராகவும் இருந்து நல்ல பெயர் எடுத்தவர், அப்பாவுக்கு பிறகு தம்பிக்கு அரசியல் ஆர்வம் இல்லாதினால் வியாபாரம். தொழில். விவசாயம் என்று இருந்து விட்டார், இன்று வாய்ப்பு வந்து வாசலில் நிற்கிறது, தாத்தாவின் செல்வாக்கு வெற்றி மாலை போட காத்திருக்குது அதை வேண்டாம் என்று சொன்னால் அறிவு கெட்டதனமாக போய்விடும், இதற்கு மேலும் அம்மாவிடம் பேசி பயனில்லை என்று எனக்கு தெரியும், இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எல்லோரும் தன் பேச்சை தான் கேட்க வேண்டும் என்ற விரும்புகின்ற மாமா முதல்முறையாக அம்மாவின் பேச்சுக்கு தலையசைத்தார், வெற்றியும் பெற்று
விட்டார்
நான் முன்பெல்லாம் மாமாவை போல் நல்ல மனிதர்கள் கிடைப்பது அரிது என்று அழுத்தமாக நம்பினேன், காரணம் எனது தகப்பனார் காலமாகி அம்மாவை புகுந்து விட்டார் வெளியே போ என்று தள்ளிய போது என் வயது வெறும் மூன்று மாதம் தான், நண்டும். நசும்புமாக ஆறு குழந்தைகளோடு மாமா வீட்டிற்கு அம்மா வந்த போது அவருக்கு கல்யாணமாகி இரண்டு வருடம்தான் ஆகியிருந்தது, தாத்தாவும் உயிரோடு இல்லை, ஊர். உலகத்தில் உள்ள அண்ணன் தம்பிகள் கூட பிறந்தவர்கள் திக்கற்று போய்விட்டால் ஏதோ கடமைக்காக சில உதவிகளை செய்வார்கள், சிலரிடம் அதை எதிர்ப்பார்க்கவும் முடியாது, மாமா அப்படியல்ல, கூட பிறந்த அக்காவை தனது தாயை போல தான் நினைத்தார், நடத்தினார் தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் என்னையோ என் சகோதிரிகளையோ வேற்றுமையாக நடத்தியதே கிடையாது, மாமாவின் மனைவியும் அவரின் மனம் கோணும் வண்ணம் நடந்ததே இல்லை, நான் என் தாயாரை அம்மா என்று கூப்பிடுவதே போல் தான் அத்தையையும் அழைப்பபேன், எங்கள் வீட்டியிலுள்ள குழந்தைகள் எல்லாருக்கும் இரண்டு அம்மாக்கள் என்று தான் நினைத்து கொண்டிருந்தனர்,
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன், என் தகப்பனாருடைய சகோதரர்கள் போனால் போகட்டும் என்று சிறிதளவு சொத்தை அம்மா பெயருக்கு கொடுத்த போது கிடைத்திருக்கும் சொத்தை விற்றோ. குத்தகைக்கு விட்டோ பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்கிறேன், எத்தனை நாள் தான் உனக்கு பாரமாகயிருப்பது என்று மாமாவிடம் அம்மா சொன்னது தான் தாமதம், அவர் கண்களில் நெருப்பு பொறி பறந்ததை முதல் முறையாக பார்த்தேன், ஏன் மைதிலி ஏதாவது சொன்னாளா? என்று கரகரத்த குரலில் கேட்டார், அம்மா ஆடி போய்விட்டார்கள், அய்யய்யோ அப்படி எல்லாம் எதுவுமில்லை, நானாகத்தான் உன்னிடம் கேட்டேன், உன் மனைவியின் மீது குறை சொன்னால் கடவுள் மன்னிக்கவே மாட்டார், தயவு செய்து நீ அப்படியெல்லாம் நினைத்து பெண்களுக்கிடையில் பிளைவை ஏற்படுத்தி விடாதே என்று படப்படபோடு அம்மா சொன்னார், மாமா மௌனமாக எழுந்து போய்விட்டார், அவர் அப்படி எழுந்து போனால் விஷயத்தை அத்தோடு விடு மேலே பேசாதே என்று அர்த்தம்
,
எனக்கு தெரிந்து மாமா காலையில் நான்கு மணிக்கே எழுந்து விடுவார், குளித்து முடித்து வெள்ளை வெளேர் என்று சலவை ஆடை உடுத்தி நெற்றி நிறைய விபூதி பூசி அவர் வாசலுக்கு வரவும் ஜீப் வந்து நிற்கும் அதில் ஏறி நஞ்சை. புஞ்சை தோட்டம் துரவு என்று சுற்றி பார்த்து விட்டு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டு வாசலில் சரியாக ஜீப் வந்து நின்றுவிடும், இந்த முறையும். நேரமும் எப்போதுமே தவறாது, அதன் பிறகுதான் காலை உணவு சாப்பிடுவார், மாமா காலையில் எப்பொழுதுமே இட்லி. தோசை என்று சாப்பிட்டு நான் பார்த்ததே கிடையாது, தட்டு நிறைய பழையசாதம் தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல். எப்போதாவது ஒரு நாள் துவையலுக்கு பதிலாக பழைய குழம்பு, இதுதான் அவரின் காலை ஆகாரம்,
மீண்டும் பத்து மணிக்கெல்லாம் மாமாவின் ஜீப் புறப்பட்டுவிடும், பன்னிரெண்டு மணிவரை ரைஸ்மில். இரண்டு மணி வரை ஜவுளிக்கடை. மூன்று மணிக்கு மேல் பெட்ரோல் பங்க். ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் வீடு இதுதான் அவரது தினசரி நடவடிக்கைகள், மதிய உணவு. ஜவுளி கடைக்கு அத்தையோ. அம்மாவோ எடுத்து சென்று விடுவார்கள், எப்போதாவது நான் எடுத்து சென்றிருக்கிறேன் ஒரு கையில் சாதத்தை பிசைந்து கொண்டே இன்னொரு கையில் கணக்கு போட்டு வாடிக்கையாளரிடம் இவ்வளவு பணம் வாங்கு என்று பணியாளர்களிடம் அவர் சொல்வதும். அதை எடுத்து வை. இதை ஒழுங்கு பண்ணு என்று கட்டளையிடுவதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும், ஒரே நேரத்தில் ஒரு மனிதனால் இத்தனை வேலை செய்ய முடியுமா? என்று பிரமித்து போவேன்,
எல்லாத்தையும் நல்லா பாத்துக்கோ தெளிவா நெளிவு சுளிவு கத்துகிட்டாத்தான் நல்லா நிர்வாகம் பண்ண முடியும், என்று என்னை பார்த்து சொல்லும் அதே நேரத்தில் கடை மேனேஜரை பார்த்து கண்ணடித்து இந்த பையன்க எங்கிருந்து தொழிலை கவனிக்க போறாங்க. மீசை முளைக்கின்ற வர பூணக்குட்டி மாதிரி பம்முவான்க, காலேஜ் கிலேஜ் என்று போய் விட்டால் கூட படிக்கின்ற எதாவது ஒரு குட்டிய கூட்டிக்கிட்டு வந்து ஆசிர்வாதம் பண்ணுங்க என்று நிப்பாங்க, என்று தமாஸ் பண்ணுவார், மாமா தமாஸ் பண்ணும் போது வெட்கப்பட்ட மாதிரி நிற்கனும் தப்பி தவறி அதற்கு எதாவது பதிலை நாம் சொல்லி விட்டால். முளச்சி மூணு இலை விடல. வாய் பேசறியா வாய் போடா என்று துரத்தி விடுவார்,
மாலை ஆறு மணி வந்து விட்டாலே எங்களுக்கெல்லாம் ஜாலியாகவிடும், வீட்டுக்கு வந்து கை. கால் அலம்பி விட்டு பிள்ளைகள் எல்லோரையும் வரிசையாக உட்கார வைத்து கடைத்தெருவில் வாங்கி வந்த திண்பண்டத்தை தருவார், என்ன படிச்சிங்க எங்கெல்லாம் போனீங்க என்று விசாரிப்பார், கொஞ்சநேரம் எங்களோடு சரிசமமாக விளையாடுவார், அவர் முதுகில் யானை சவாரி அடிக்கடி நான் செய்து இருக்கிறான், பிள்ளைகளோடு விளையாடும் போது எவ்வளவு பெரிய வேலை வந்தாலும் எத்தனை பெரிய மனிதன் வந்தாலும் கண்டு கொள்ளமாட்டார், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதெல்லாம் ஏழு மணி வரை தான், அதன் பிறகு ஓடி போய் படி என்று துரத்தி விடுவார், ஆனால் பசங்க ஒழுங்காக படிக்கல என்று அத்தை குறை சொன்னால் நீ பெரிய படிப்பாளியோ எல்லா வயசு வந்தால் தானா படிக்கும், வற்புறுத்தி எதையும் குழந்தைகளுக்கிட்ட திணிக்காதே என்று பட்டென்று பேசிவிடுவார்,
ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை ரைஸ்மில் கணக்கு. பெட்ரோல் பங்க் கணக்கு என்று ஒவ்வொன்றாக பணியாளர்கள் வந்து கொடுத்து கொண்டே இருப்பார்கள், அப்போது மட்டும் தான் வீட்டில் மாமா பரப்பரப்போடு இருப்பதை காண முடியும், கணக்கில் சிறிய தவறுகள். குளறுபடிகள் இருந்தால் கூட சகித்து கொள்ள மாட்டார்,
மாமாவிடம் வேலை செய்பவர்கள் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாலும் வேறு இடத்திற்கு போக மாட்டார்கள், மாதா மாதம் சம்பளம். முதல் சனிக்கிழமை கொடுத்து விடுவார், தீபாவளி. பொங்கல் என்று இல்லாமல் வேலைக்காரர்களின் அவ்வப்போதைய தேவதைகளையும் கணிசமாகவே கவனிப்பார், தாத்தா காலத்திலிருந்தே வேலையில் இன்று வரை இருப்பவர்களும் அவர்களது வாரிசுகளும் மிக அதிகம், ஊரில் இன்னாரிடம் வேலை செய்கிறான் என்றாலே அவனுக்கு தனி மதிப்பு உண்டு,
பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன், முதலாளி முன்னால் கையை கட்டுவார்கள் பின்னால் வந்து வாய்க்கு வந்தபடி பேசுவார்கள் ஆனால் மாமா விஷயத்தை பொறுத்தவரை அவரை குறை சொல்லுபவர்களை நான் இதுவரை பார்த்ததேயில்லை, அவருக்கு ஒருநாள் உடம்பு சரியில்லையென்றால் ஏதோ அந்த நோய் தனக்கே வந்து விட்ட மாதிரி பதட்டப்படுவர்கள், ஒரு முறை மலேரியா ஜீரம் அவருக்கு வந்த போது மொட்டை போட்டு கொண்டே தொழிலாளர்கள் நிறையபேர் உண்டு,
எனது பிளஸ்டு தேர்வு முடிவு வந்த போது மேலே படிக்கிறாயா? அல்லது நமது வேலைகளை கவனிக்கிறாயா? என்று மாமா என்னிடம் கேட்டார், நீங்கள் என்ன சொல்கீறீர்களோ அதை நான் செய்கிறேன் என்று சொன்ன போது நம் குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு நீ தான் எனக்காக பிறகு எல்லாவற்றையும் கவனித்து கொள்ள வேண்டியதும் நீ தான், இந்த வயதிலேயே தொழிலை கவனித்தால் தான் நல்ல அனுபவம் வரும் என்று சொன்னார், ஒரு டிகிரியாவது படித்துவிட்டு தொழிலை கவனித்தால் அனுபவத்தோடு கொஞ்சம் தைரியம் வருமல்லவா? என்று நான் சொன்னவுடன் நான் படிக்க விரும்புவதை சட்டென்று புரிந்து கொண்டு சரிசரி எந்த காலேஜில் சேர வேண்டுமோ சொல் ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்றார்,
மாமாவிடம் என் மாற்றுகருத்தை சொன்னது அந்த ஒரு முறை மட்டும் தான், ஆனால் அந்த ஒரு முறையிலேயே தன் எண்ணம் மட்டும் தான் நிறைவேற வேண்டும், மற்றவர்களின் விருப்பத்தை பற்றி கவலையில்லை என்று நினைக்கின்ற சர்வதிகாரியல்ல அவர், ஒரு ஜனநயகவாதி தான் என்பதை தெரிந்துகொண்டேன், நான் படிப்பு முடித்து வருவதற்குள் என் அக்காமர்கள் ஐவருக்கம் அவரது மூத்த மகளுக்கும் நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கரை சேர்த்துவிட்டார்,
ஒரு நாள் இரவு ஒன்பது மணியிருக்கும் அம்மா வந்து உன்னை மாமன் எதற்கோ கூப்பிடுகிறான் போ என்று சொல்லவும், அவர் அறைக்கு போனேன் ஒரு வெள்ளைத்தாளை என் முன் நீட்டினார், ஒரு கல்யாண பத்திரிக்கைகாக மாடல் எழுதியிருக்கிறேன், படித்து பார், எந்த அச்சகத்தில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதையும் சொல் என்றார், காகிதத்தை பிரித்து படித்தேன், எனது கல்யாண பத்திரிக்கைக்கான மாடல் தான் அது, மணமகள் என்ற பகுதியில் அவரது கடைசி மகள் பெயர் இருந்தது, எனக்கு சற்று அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் கூட இருந்தது, நீங்கள் விரும்புகின்ற அச்சகத்திலேயே கொடுத்தால் நான் தேர்ந்தெடுப்பதை விட நன்றாக இருக்கும் என்றேன், எனது பதிலில் திருமணத்துக்கு சம்மதமும். என் வாழக்கையை தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான் என்ற உறுதியும் இருப்பதை அறிந்து கொண்டவர் சந்தோஷமாக என் தோளில் தட்டிக்கொடுத்தார், அதன் பிறகு தான் வீட்டில் உள்ளவர்களுக்கே விஷயம் தெரிந்து சந்தோஷப்பட்டனர், என் திருமணம் நடந்த பிறகு நான் மாமாவுடைய நிழல் மாதிரி ஆகிவிட்டேன். அவர் பேசுவது பிரச்சனைகளை சாதுர்யமாக தீர்ப்பது வம்பர்களைக்கூட லாவகமாக அரவணைத்துக் கொள்வது எந்தத் தொழிலில் எப்போது முதலிடு செய்யலாம் எவ்வளவு லாபம் வரும் தொழிலாளர்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்பவைகளை ஒரு குருவி குஞ்சுக்கு இரையூட்டுவதைப்போல் சொல்லிக் கொடுத்தார் அந்த நேரத்தில் தான் பாழாய் போன தேர்தல் வந்து தொலைந்தது எதிர்கட்சி வசமாக இருந்த அந்த தொகுதி உறுப்பினர் மண்டையை போட்டு விட்டதால் வந்த இடைத்தேர்தல்
அது அதில் ஆளும்கட்சி சுலபமாகவும் ஜெயிக்க வேண்டும் என்றால் உள்ளூரில் சகல விதத்திலும் செல்வாக்கு மிக்கவரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களாம், ஆனால் உண்மையில் தன் கட்சிக்காரர்களை நிறுத்தினால் தோற்பது சர்வ நிச்சயம். யாராவது பொது மனுஷனை ஓரளவாவது நல்ல பெயர் உள்ளவனை நிறுத்தினால் தான் மானத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்த ஆளுங்கட்சி ஒரு நாள் காலை ஒன்பது மணிக்கு எங்கள் வீட்டு முன்னால் திடிர் முகாமிட்டனர்,
வட்டம். மாவட்டம். அமைச்சர் என்று எத்தனையோ கரை வேஷ்டிகள் கூழை கும்பிடுகள். விளம்பர சிரிப்புகள். அமைச்சர் மாமாவிடம் ஏதோ தனியாக பேசினார், அரை மணி நேரமாவது அவர்களின் பேச்சி நீடித்திருக்கும், எல்லோரும் விடைபெற்று போன பிறகு சலிப்போடு மாமா வெளியில் வந்தார், என்னடா வந்து பேசினாங்க என்று அம்மா கேட்டதற்கு அட அவனுங்க கெடக்கிறான், விடு அக்கா. வெட்டிபயலுக என்று சொல்லிவிட்டு ஜீப்பில் அமர்ந்தார், போகும் வழியில் என்னிடம் இடைத்தேர்தலில் நிக்கனுமாம். அரசியலே அயோக்கியபயலுக கூடாரானமான பிறகு எந்த நல்ல மனுஷனாவது அந்த வாசலை மிதிப்பானா. என்றார் என்னிடம் தன் கருத்தை அவர் சொன்ன பிறகு நான் என்ன பேசுவது. மௌனமாக இருந்தேன்,
அன்று இரவு சாப்பிடும் போது அம்மா மெதுவாக பேச்சை துவங்கினார், தம்பி அரசியல் என்பது நம்ம குடும்பத்திற்கு ஒன்றும் புதுசுயில்லையே. அப்பா போட்ட வழியில நீ நடப்பது ஒன்றும் தப்பில்லையே என்றார், அதற்கு மாமா அக்கா நம்ம அப்பா அரசியல் நடந்த காலம் வேற வீட்டில் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு கஞ்சி காய்ச்ச கால்படி அரிசி இல்லையென்றால் கூட பட்டினி கிடப்பார்களே தவிர பொது ஜனங்களுடைய பொருளை தொட மாட்டார்கள், இன்னிக்கு நிலைமை அப்படியில்லை யார் அதிகமாக பொது சொத்தை கொள்ளையடிக்கிறானோ அவன்தான் தலைவன், அந்த சாக்கடையில் என்னை இறங்க சொல்லிறியா? என்றார்,
ஊரில் இருக்கிறவங்க எல்லோருமே சாக்கடையை பார்த்து மூக்க மூடிட்டு போய்ட்டா சாக்கடையை யார் தான் சுத்தப்படுத்துவது அதற்கு யாராவது ஒருத்தர் துணிச்சலாக வரவேண்டுமல்லவா? அந்த ஒருவர் ஏன் நீனாக இருக்க கூடாது, அம்மா இப்படி சொல்லவும் மாமா யோசனையில் அமைதியானார், நீங்க சொல்வது வாஸ்தவம் தான், நாமே இறங்கி சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டுமா என்ன? வேறு எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரையாவது ஒருவரை தேர்தலில் நிறுத்தி மாமா ஆதரவு கொடுக்கலாமே என்று நான் சொன்னேன்,
போடா! உனக்கு விவரம் தெரியாது, நாம நிக்க வைக்கிறவன் நாளைக்கு கெட்டவனாயிட்டா நம்ம பேரு தானே கெட்டு போயிடும், நீ சொல்வதெல்லாம் சரிபடாது, என்று என்னை பார்த்து சொன்ன அம்மா தம்பி நீ எதையும் யோசிக்காதே, நான் மூத்தவள் என் அனுபவத்தால் சொல்கிறேன், இன்று நீ நிற்கமாட்டேன் என்று ஒதுங்கி கொண்டால் நம் பேச்சை கேட்கவில்லையே என்று ஆளுங்கட்சிக்காரன் கோவிப்பான், நம் தொழிலுக்கு கூட இடஞ்செல் செய்வான், எதையும் நிதானமாக யோசிச்சு செய் என்று மாமாவிடம் சொன்னார்கள், இந்த உரையாடல்கள் எதிலும் மைதிலி அத்தை கலந்து கொள்ளவேயில்லை, புருஷனும் நாத்தனாரும் பேசும் போது குறுக்கே அவர்கள் பேசி நான் பார்த்ததேயில்லை, என்ன நீங்க அம்மா எது சொன்னாலும் தலையாட்டி பொம்மை மாதிரி தலையை மட்டும் ஆட்டுகிறீர்கள் என்று நான் கேட்டால் பதிலுக்கு சிரிப்பார்கள் அந்த சிரிப்புக்கு அவர்கள் பெரியவர்கள் எனக்கென்ன தெரியும் என்பது பொருளா? நான் ஒன்று சொல்ல போக அது வேறு ஒன்றாக கருதப்பட வீணான தகராறு என்னால் எதற்கு என்பது பொருளா? என்று எனக்கு விளங்கவே விளங்காது, இப்போது மாமா அத்தையை யோசனையுடன் திரும்பி பார்த்தார், பொறியியல் போடவா? கூட்டு வைக்கவா? என்று அத்தை கேட்க அதை சட்டை செய்யாத மாமா என்னிடம் காலையில் வந்த அமைச்சரின் போன் நம்பர் என்ன? என்று கேட்டார், அப்புறமென்ன தேர்தல் திருவிழா எங்கள் வீட்டை மையமாக கொண்டு ஆரவரமாக துவங்கி விட்டது, சரவெடி மத்தாப்பு. வான வேடிக்கை என்று ஊரே அமர்க்களப்பட்டது, எங்கு பார்த்தாலும் சவால்கள் அறைகூவல்கள். வாக்குறுதிகள் என்று ஏகப்பட்ட பேரோசைகள் எல்லாம் அமைதியான போது மாமா வெற்றி பெற்ற செய்தி ஊரெங்கும் மழையாக கொட்டியது,
மாமாவின் அதிர்ஷ்டமா? எங்களின் துரதிஷ்டமா என்பது தெரியவில்லை, எங்கள் மாவட்டத்தை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லையென்பதினால் ஒரே மாதத்தில் மாமா அமைச்சராக்கப்பட்டார், இருபத்தி நான்கு மணி நேரமும் எங்கள் வீடு வெள்ளை வேட்டிகளாலும். காக்கி சட்டைகளாலும் போர்க்களம் போல் காணப்பட்டது, அமைதியும் நிதானமும் அரசியல்அமர்களத்திற்குள் எங்கோயோ ஓடி ஒளிந்து கொண்டது, தொழில் நிர்வாகம் எல்லாம் நான் ஒருவனே பார்க்க வேண்டிய நிலை வந்து விட்டது, மாமா வீட்டில் இருக்கும் காலம் மாதத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ தான், அந்த கூட்டம். இந்த கூட்டம் என்று ஏகமாக அலைந்தார்,
ஒரு நாள் அம்மா என்னை கூப்பிட்டு உன் அத்தை ரொம்ப வருத்தப்படுகிறாள். அவளை நீ ஆறுதல் படுத்து என்று சொன்னார்கள், எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அத்தைக்கு என்ன திடிர் வருத்தம், புருஷன் ஊரே கொண்டாடுகின்ற அமைச்சர் பிள்ளைகள் எல்லோரும் நல்ல நிலையிலே இருக்கிறார்கள் உடம்புக்கும் ஒன்றும் பெரிதாக இல்லை அதனால் அம்மாவிடம் வீணாக ஏன் அத்தை வருத்தப்டுகிறார்கள், என்ன காரணம் என்று கேட்டேன் உன் மாமா சென்னையில் ஏதோ வீடு வாங்கியிருக்கிறானாம், இதை அவளிடம் சொல்லவும் இல்லையாம் என்றார்கள், இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது ஆயிரம் வேலையில் மறந்து போயிருப்பார் மேலும் மாமா எப்போதுமே எதையும் சொல்லி கொண்டு செய்யமாட்டாரே என்றேன் அதற்கு அம்மா பிரச்சனை வீடு இல்லை, உன் மாமனுக்கு புதியதாக தண்ணிபோடும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறதாம் என்றார், இது நான் எதிர்பார்த்தது தான், உடம்பு முழுக்க சந்தனத்தை பூசிக்கொண்டு கருவாட்டு கடையில் இருந்தாலும் அதன் நாற்றம் நம் மீது ஒட்டாமல் போகுமோ? சட்டையில் சாணி பட்டபிறகு அதற்காக வருத்தப்பட்டு என்ன பயன்?
மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ள விரும்பவில்லை, அத்தையிடம் ஆறுதல் சொல்ல போனால் மண்ணை கிளறிவிட்டது போல் ஆகிவிட கூடாது என்று சும்மாயிருந்து விட்டேன், மாமாவின் அரசியல் பயணம் கண ஜோராக சென்று கொண்டிருந்தது, அவரிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசக்கூட வாய்ப்பு கிடைப்பதில்லை, கட்சிகாரர்களும் அதிகாரிகளும் அவரை சூழ்ந்தே இருந்ததினால் குடும்பத்தனர் கூட நெருங்க முடியவில்லை, ஏறக்குறைய அவர் எங்களிடமிருந்து தனித்தீவாக பிரிந்து போய்விட்டாரோ என்று கூட தோன்றியது, அந்த நேரத்தில் தான் மாமாவின் கட்சிக்காரர் ஒருவர் ஒரு குண்டை தூக்கி போட்டார்,
உங்கள் மாமா பூனையை பிடித்த எலி படத்தினுடைய கதாநாயகியோடு சென்னையில் கண ஜோராக குடும்பம் நடத்துகிறார் போல் இருக்கிறது என்றார், வானம் இடிந்து தலையில் வீழ்ந்தது போல் இருந்தது என்பார்களே அப்படி இருந்தது எனக்கு அடுத்த விநாடியே சொன்னவன் மீது கோபம் கொப்பளிக்க சட்டையை பிடித்து உலுக்கி கண்ணத்தில் ஓங்கி அறைந்து வெளியே போடா என்றேன், ரைஸ்மில் ஊழியர்கள் எல்லோரும் கூடி விட்டார்கள், நான் விரல் அசைத்திருந்தால் அவன் கை. கால்கள் முறிந்து போயிருக்கும், அவன் நடுங்கி விட்டான், பயத்துடன் பின்வாங்கி அவன் வாசலுக்கு சென்று சினிமாகாரியோடு கூத்தடிக்கும் போதே இத்தனை ரோஷமா? என்று நக்கலாக பேசினான்,
முதல் முறையாக மாமாவை பற்றி இப்படியொரு விமர்சனத்தை மற்றவன் சொல்ல கேட்கிறேன், கோபம். மனகொதிப்பு. ஆக்ரோஷம் எல்லாம் வந்தாலும் அளவிட முடியாத அவமான உணர்வு என்னை ஓங்கி தலையில் அடித்தது, விவரம் தெரிந்த நாளிலிருந்து கடவுள் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை யாரோ தெருவில் போகின்ற ஒருவன் வாய்க்கு வந்ததை பேசினால் அதை கேட்கும் தைரியம் எனக்கில்லை, உடல் நடுநடுங்க நாற்காலியில் விழ்ந்து விட்டேன், ஊழியர்கள் எல்லோரும் ஓடி வந்து என்னை சமாதானப்படுத்தினார்கள், அவனை வெட்ட போவதாக கூச்சல் போட்டார்கள், எல்லோரையும் அமைதிபடுத்திவிட்டு பெட்ரோல் பங்க் கணக்கை பார்க்க புறப்பட்டேன்,
அந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாகி கூட என்னால் சகஜ நிலைக்கு வரமுடியவில்லை மீண்டும் மீண்டும் அவன் சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது, நடு மண்டையில் ரம்பம் போட்டு அறுத்தது போல் வேதனையை கொடுத்து கொண்டேயிருந்தது, என் மனகுமச்சலை அம்மா எப்படியோ கவனித்துவிட்டார்கள், ஏன் எப்பவும் ஏதோ போல இருக்கிறாய், தொழிலில் ஏதாவது பிரச்சனையா? விவரம் தெரியாமல் எதையாவது நஷ்டப்படுத்தி விட்டாயா? என்று கேட்டார்கள் அவர்களுக்கு எப்போதுமே தம்பியின் பொருட்கள் குறைந்து விட கூடாது, நஷ்டம் வந்துவிட கூடாது, என்று அக்கறை உண்டு, இப்போது குறைவுபட்டு போயிருப்பது பொருளல்ல, தம்பியே தான் என்பதை அவர்களிடம் எப்படி சொல்ல?
அன்றிரவு பத்து மணியிருக்கும், பெட்ரோல் பங்கிற்கு எண்ணெய் லாரி சரியாக வந்து சேரவில்லை, ரைஸ்மில் பெல்ட்டில் தொழிலாளி ஒருவன் கையை விட்டுவிட்டான், என்று காலையிலிருந்தே ஏகப்பட்ட தொந்தரவு படுக்கையில் படுத்து கண்களை மூடு என்று அசதி நச்சரித்தது, சில எழுத்து வேலை வேறு மண்டையை குடைந்தது,
அந்த நேரத்திடல் வாசலில் கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது, படைபட்டாளத்தோடு மாமா வந்துவிட்டார் என்பதை போலிஸ் சைரன் சத்தமும் உறுதிபடுத்தியது, எந்த ராத்திரியானாலும் மாமா வந்தவுடன் எழுந்து போய் அவரை பார்த்து விடுவது என் வழக்கம் என்பதினால் அவசர அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கினேன்,
வழக்கமான கைதடிகளின் கூட்டம் மாமாவோடு வரவில்லை, மாறாக இரண்டு பெண்கள் வந்திருந்தனர், ஒரு பெண்ணிற்கு குறைந்தப்பட்சம் அறுபது வயதாவது இருக்க வேண்டும், ஆனால் செய்திருந்த அலங்காரம் நிச்சயம் அந்த பெண்ணின் ஒழுக்கத்தை சந்தேகப்பட செய்யும், இன்னொரு பெண் முப்பது வயதுக்கு கீழ்தான் இருக்க வேண்டும், அலங்காரம் அவளிடம் குறைவு என்றாலும் மனதை கிறங்கடிக்கும் மயக்கும் அழகு ஒன்று அவளிமிருந்து பளிச்பளிச்சென்று மின்னியது, நான் அடிக்கடி இவளை டி,வியில் சினிமா பாடல்களை பார்க்கும் போது பார்த்திருக்கிறேன், மிக நளினமாக நடனமாடுகிறாள் என்று நானே மனதிற்கள் வியந்தது உண்டு, ஆனால் இவர்களை ஏன் மாமா கூட்டி வந்திருக்கிறார் என்று தெரியவில்லை,
தூக்க கலக்கத்திலிருந்து எழும்பி வந்திருந்த என் மனைவி தகப்பானரை பார்த்து அப்பா யார் இவங்க. சினிமாவில் வரவங்க மாதிரியே இருக்காங்க என்று கேட்டாள், அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மாமா அம்மாவை பார்த்து அக்கா இவர்களுக்கு தங்க ஒரு நல்ல அறையை ஏற்பாடு செய், இவர்கள் இனி இங்கே தான் தங்குவார்கள் என்று சொன்னார், அவர் குரலில் முன் எப்போதும் இருந்திராத ஒரு நடுக்கம் இருந்ததை என்னால் உணர முடிந்தது, பேஷா தங்கட்டும்டா ஆனா இவங்க யார் என்று தெரிய வேண்டாமா? என்று அம்மா கேட்கவும். சொன்னதை பேசாமல் செய் சும்மா சும்மா கேள்வி கேட்டு தொண தொணக்காதே என்றார், அம்மா வாயடைத்து போய் நின்று விட்டார்கள், ஒரே வார்த்தையில் எல்லோரையும் அடக்கி விட்டோம் என்ற திருப்தியில் தனது அறையை நோக்கி நகர முயன்ற மாமாவை முன்வந்து தடுத்தார், மைதிலி அத்தை நில்லுங்க உங்க அக்கா கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டு அப்புறமா போங்க இதுவரை நீங்க அக்காகிட்ட இப்படி பேசினதேயில்ல, இன்னைக்கு நீங்க பேசறத பார்த்தா உங்க வார்த்தையில ஏதோ கள்ளத்தனம் தெரியுது என்று சத்தமாகவே கேட்டார்கள்,
அம்மாவிடம் மாமா கோபமாக பேசியதோ. அத்தை மாமாவை நிக்க வைத்து கேள்வி கேட்டதையோ இதுவரை எங்கள் வீடு பார்ததேயில்லை, ஒரு ராஜாவின் ஆனைக்கு அடிபணியும் அரண்மனை ஊழியர்கள் போல தான் வீட்டில் எல்லோருமே நடந்து கொள்வார்கள், அதிகாரமுள்ள அரசனை நிற்க வைத்து பணியாள் கேள்வி கேட்டது போல் இந்த காட்சி எனக்குட்பட்டது, அத்தையின் இந்த திடிர் மாற்றம் மாமாவை நிச்சயம் அதிர்ச்சியடைய செய்திருக்க வேண்டும், கலவரம் அவர் முகத்தில் தெளிவாக தெரிந்தது, ஆனாலும் அவர் அதை மறைக்க முயற்சித்தார், மைதிலி அமைதியாக இரு எல்லாம் காலையில் சொல்கிறேன் என்று சமாளித்து பார்த்தார், அத்தை விடவில்லை இல்லை முடியாது இங்கே. இப்பொழுதே சொல்லியாக வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பேசினார், அம்மா சிலை போல் நின்று கொண்டிருந்தார், மாமா சிறிது நேரம் மௌனமாக நின்றார்,
பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர் போல் உங்களுக்கு இப்போது இவர்கள் யார் என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே கவனமாக கேளுங்கள் என்று அந்த இளம் பெண்ணை சுட்டிக் காட்டி இவளை தான் நான் இரண்டாம் தாரமாக கட்டிக்கொள்ள போகிறேன், இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் வைத்து கொள்ள போகிறேன் என்றார்,
அந்த வார்த்தைகள் எல்லோருக்குமே இடியோசையாக கேட்டிருக்க வேண்டும், எல்லோரும் அமைதியாகி விட்டார்கள், புதிதாக வந்த பெண்கள் கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல் தோன்றுகிறது, அவர்களும் அதிர்ந்து தான் போய் நின்றார்கள், அம்மா நின்ற நிலையிலிருந்து தலையை கையில் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டர்கள், என் மனைவிக்கு இதயதுடிப்பில் வேகம் ஏற்பட்டிருக்க வேண்டும், மாடி கை பிடியை பிடித்து கொண்டு நின்றவள் அப்படியே சாய்ந்துவிட்டார் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, மனிதர்கள் தவறு செய்தால் கடவுளிடம் போய் முறையிடலாம், இங்கு கடவுளே குற்றவாளியாக நிற்கிறார், நான் யாரிடம் போய் முறையிட,
மைதிலி அத்தை நிதானத்துதக்கு வந்தார் போல் காணப்பட்டார், என் அருகில் வருமாறு அழைத்தார், நீ என் நாத்தனார் மகனாக இருக்கலாம், என் மகளுக்கு தாலி கட்டிய புருஷனாகயிருக்கலாம், ஆனால் நீ எனக்கு மகன் அப்படி தான் நான் உன்னை வளர்த்தேன், இப்போதும் என் நெஞ்சுக்குள் அந்த நினைப்பு தான் நிறைஞ்சி கிடக்கு, புறப்படு என்னையும் கூட்டிக்கிட்டு போ, இங்கிருந்து ஒரு தூசி துரும்ப கூட நாம எடுக்க வேண்டாம், யார் கடையிலாவது கணக்கு எழுதி எனக்கு சோறு போடு முடியலன்னா மூட்டைதூக்கு ஒழுக்க கெட்ட புருஷனோடு வாழ்றவ பேரு பொம்மனாட்டி இல்ல, வெறும் பொணம் இந்த மனுஷன் செஞ்ச தப்புக்கு கொலையே செய்யலாம், ஆனா இவன் உயிரோடுயிருந்து தப்பு பண்ணிட்டோம் என்று நினைச்சி நினைச்சி சாகனும் என்று என் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு வாசலை பார்த்து நடந்தார், அவரது அன்பு பிடியை உதற எனக்கு தைரியமில்லை,
அத்தையின் கண்களில் அழுகை இருந்தது ஆக்ரோஷம் இருந்தது என்னை தர தர வென இழுத்துக் கொண்டு வெளி வாசலுக்கு வந்தார் வாசலில் காவலுக்காக நின்ற ஒரு போலிஸ்காரர் அத்தையை பார்த்து அவசர அவசரமாக சல்யூட் வைத்தார் அவரின் உத்திதியோகத்தில் நல்லவர்க்கு வைத்த முதல் சல்யூட் இதுவாகத்தான் இருக்கும்