Saturday, November 19, 2011

எனக்குள் ஒரு மாற்றமாய் வந்தவள்...!

கண்களை திறக்காமல்
தினமும் இறுகிய முகத்தோடு விடியும்
புல்வெளி ரசிக்க நேரமில்லா
அதிகாலைகள் எனக்குச்சொந்தம்...!

புன்னகைகள் பூப்பூத்து
கன்னங்கள் சிரித்ததெல்லாம் மறந்து
போன மௌனபட்சியாய்..!-நான்

மகிழ்ச்சியை துறந்து
கிளைகள் இல்லா மரமாக
நான் உதிர்ந்த சருகுகளும் ஒட்டாமல்..!
வாழ்ந்திருக்க...

தனிமை நிலாவாய் தகிக்கும்
தனலாய் நானிருக்க...! ஒற்றை
விடிவெள்ளியாய் வந்து சேர்ந்தாள்
என் வாழ்வில்...!


நிழல்தேடும் பறவைக்கு
நிலாவே கூடானால்..!
நிலைகொள்ளாமல்
நர்த்தனமாடும்...!

சின்னஞ்சிறு கிளியே வென
செல்ல மொழி பேசும் வண்ண முகில் இவள்
வறண்ட என் நிலத்தினுள் வசந்த விவசாயம்
பார்க்க வந்த கன்னக்குழிச் சிரிப்புக்காரி...!

அடைமழைக்கு குடை பிடிக்க தயங்கி
அடைந்து கிடந்தவனை
கைகள் பற்றி அழைத்து வந்து காகிதக்
கப்பல் செய்து தரச்சொன்னாள்...!

குற்றாலச்சாரல் தெறிப்பது போல
அடங்காமல் அவளது வார்த்தைகள்
மெல்ல அதனில் நனைந்து கொண்டிருக்கும்
சுற்றுலாவாசியாக நான் கண்களால்
ரசித்து நின்றேன் அவளை ...

ஒவ்வொரு திருப்பத்திலும்
வரவேற்க காத்திருக்கும் விளையாட்டு
பொம்மைக்கடை காண்பவள் போல
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு பார்வைக்கும்
சந்தோசித்து பதில் சேர்க்கிறாள் என்வார்த்தைக்கு...

நாஞ்சில் நாடனின் வாக்குப்பொறுக்கிகள்
கதைகளில் என் நாட்களை தொலைத்தவன்
இந்த குறும்புக்கார சிறுமியின்
வாக்குவாதங்களில் என்னையே தேடுகிறேன்..

நா.முத்துக்குமாரின் அணிலாடும்
முன்றிலில் அமிழ்ந்து கிடந்தவன்..!
இந்த அணில் போல் துள்ளியாடும்
பனிக்காட்டு குறுஞ்சிரிப்புக்காரியின்
அழுகைகளில் அணைந்தே போகிறேன்,,,!

யாரிவள் என்னப்பேரிவள் ஏதும் அறியா
ஒரு மழைக்காலத்தில் ஒற்றைக்குடைக்குள்
கையிலோர் நாய்க்குட்டியோடு
தேம்பிநின்றவள்..! தொலைத்த யாரோ

ஒருவருக்காய் காத்திருந்த ஏக்கம்
வார்த்தைகளில் விம்மலைத்தவிர ஏதுமில்லாத
கபடமில்லாத குழந்தை அவள்..!

வேறேதும் தோன்றாமல்
என்னோடு அழைத்துச்சேர்த்திருந்து
முகவரி கொடுத்தேன்...!

இன்று என்னில் இருக்கும்
என்னையே எனக்கு அடையாளம்
கொடுத்தவள்... என் விடிவெள்ளி
இன்னும் மறையாமல் இருக்க..

ஏக்கத்தோடு மறைந்திடாமல்
காத்து நிற்கிறேன் என் வானத்தை..


மின்னலும் மழையுமாய்..
கொட்டிச்சிரிப்பவள்
அங்கே நட்ச்சத்திரம்
பறித்துக்கொண்டிருக்கிறாள்

நான் புல்வெளியில் அமர்ந்து
அவளை ரசித்துக்கொண்டிருக்கிறேன்..!
-கார்த்திக் ராஜா

No comments: