Tuesday, November 29, 2011

மயக்கம் என்ன – விமர்சனம்





படத்தில் ஒரு காட்சி..காட்டு வாழ்க்கையை படம்பிடிக்க செல்லும், தனுஷ் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்போது, அந்த மரத்தில் உள்ள இலை ஒன்று அப்படியே தவழ்ந்து, வந்து அவருடைய முகத்தில் மென்மையாக வருடும். அப்போது கண்ணை மூடிக்கொண்டு அதை அனுபவிப்பார்..அந்த காட்சியைப் பார்க்கும்போது, அந்த மெல்லிய உணர்வு உங்களுக்குள்ளும் இறங்காவிட்டால், தியேட்டரை விட்டு எழுந்து வந்து விடுவது நலம். இருக்கவே இருக்கிறது, வேலாயுதம், குருவி படங்கள்..விசிலுக்கு விசிலுமாச்சு, குத்துப்பாட்டுக்கு குத்துமாச்சு…

மெல்லிய உணர்வுகளை படம்பிடிப்பதில் ஒன்று, இரண்டு இயக்குநர்களே, வெற்றி பெற்றதுண்டு., பாலுமகேந்திரா போல், அவரும், சிலநேரங்களில் அதில் சறுக்கி, காம்பரமைஸ் பண்ணிய படங்கள் இருக்கின்றன. ஆனால் செல்வராகவன், காதல் படங்களை இயக்கும்போது, அந்த உணர்வுகளை அப்படியே கொண்டு வந்துவிடுகிறார்.

படத்தின் கதையை சொல்லி உங்களை போரடிக்கவிரும்பவில்லை. வைல்ட் லைப் போட்டோகிராபராக விரும்பும் தனுஷ்ஷின் வாழ்க்கையில் காதல் குறுக்கிடுவதே கதை. இல்லை, அனுபவங்களின் தொகுப்பே இந்த படம். எந்த ஊருலடா, இப்படி ஆணும் பெண்ணும் ஒன்னா டேட்டிங்க் பண்ணுறாய்ங்க என்று கேட்டால், “சாரி சார்..இதோ பக்கத்தில், பக்கத்து ஊர் பெங்களூரில், நிறைய டேட்டிங்குகள்..சென்னைக்கும் வந்துவிட்டது..கூடிய சீக்கிரம் அதுவும் நம் கலாசாரத்துக்குள் புகுந்துவிடும், நாம் அருவருப்பாக நினைத்தாலும் கூட..

இந்த பயலுக்கு எப்படிடா நேஷனல் அவார்டு கொடுத்தாய்ங்க..ஒருவேளை அரசியலா இருக்குமோ, என்று நினைத்தவர்கள் இந்த படத்தைப் பார்த்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். இதற்கு மேல் என்ன நடிப்பு வேண்டும் ஒரு நடிகனுக்கு..”ஏதோ தப்பா இருக்குதே..” என்று நாயகியை பார்த்துவிட்டு முணங்குவதாக இருக்கட்டும், நண்பன் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகட்டும்,..”மச்சி, அவ வேணாண்டா..” என்று தண்ணியைப் போட்டு புலம்புவதாகட்டும், மனைவியாய் அமைந்த காதலியை, கொடுமைப்படுத்தவதாகட்டும், பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

நாயகியாக ரிச்சா…மாடர்ன் நாயகியாக திடுக்கிடவைத்தாலும், மனைவியாய் அசத்துகிறார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நண்பன் “நீ அவனை விட்டுட்டு என் கூட வந்துடு..” என்று சொல்லும்போது, “நீ என்ன பண்ணுவ..நீயும் ஆம்பளைதான” என்று கேட்கும்போது, பலபேருக்கு சுருக்கென்று இருக்கும். எத்தனை பேர், இந்த சந்தர்ப்பத்தில் நல்லவராக இருப்பார்கள் என்று அவரவரர் மனசாட்சியை கேட்டால் தெரியும்..முதல் பாதியில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் தான் எனக்கு புரியவில்லை..ஒருவேளை பின்நவீனத்துவமாக இருக்குமோ…

ஒளிப்பதிவாளர் ராம்ஜியைப் பற்றி சொல்லாவிட்டால் கண்டிப்பாக, கொடுத்த காசுக்கு புண்ணியம் வராது. ஹூரோ, புகைப்பட கலைஞன் என்பதே, ஒளிப்பதிவாளருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..ராம்ஜி மாதிரியான கலைஞனுக்கு சொல்லவா வேண்டும்..காட்டுக்குள் சென்று கேமிரா கவிதை பேசியது போல் இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும்..அட..அட..


பிண்ணனி இசை, மற்றும் பாடல்கள் படத்தின் பெரிய பலம். ஜி.வி பிரகாஷுக்கு அநேகமாக 21 வயதுதான் இருக்கும் என நினைக்கிறேன்..ம்..நம்மெல்லாம், அந்த வயசுல….அநேகமாக, இனிமேல் செல்வா படங்களுக்கு, யுவன் இசை அமைக்கும் வாய்ப்பு கஷ்டம்தான்..”நான் சொன்னதும்.,”, “காதல் என் காதல்..” , “ஓட, ஓட..தூரம்” போன்ற பாடல்கள் ஏற்கனவே ஹிட்..காட்சியமைப்புகளோடு பார்க்கும்போது, இன்னும் ஸ்வீட்..இடைவேளைக்கு பின்வரும் காட்சிகளில் டயலாக்குகளை, பிண்ணனி இசை அழகாக நிரப்புகிறது..அப்படியே மனத்தையும்.

செல்வராகவன்..காதல், நட்பு, போன்ற அழகியல் உணர்வுகளை படம்பிடிப்பதில் முதலிடத்தில்..இந்த படமும் அதற்கு சாட்சி..இவரை தமிழ்சினிமா புறம்தள்ளினால், இது போன்ற உணர்வுகளை சொல்லும் படங்கள் வாய்ப்பது மிகக்கடினம்.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை..அண்ணாமலை பட டைப் பல்லி காட்சிகள்,  டேட்டிங்க்னாலும், இது ரொம்ப ஓவரோ, என எண்ணத் தோன்றும் காட்சிகள், செல்வராகவனுக்கேயுரிய சில கிளிஷேக்கள்..என்று ஆங்காங்கே…

இறுதியாக செல்வராகவன் படங்களை பிடிக்காதவர்களுக்கு, வழக்கம் போல, இது “மொக்கைப் படமாக” இருக்கலாம்…ஆனால், அனுபவங்களில் லயிப்பவர்களுக்கு, இது மறக்கமுடியாத படம்..எனக்கும்தான்

No comments: