Friday, October 21, 2011

9 விக்கெட்டு மாட்ச் -கிரஹாம் ஆனியன்ஸ்! ஆண்டு - 2009/2010



இவர் சச்சின் போன்று பல களங்கள் கண்டதில்லை. ஷேன் வார்னே போன்று பல சாகசங்கள் புரியவில்லை. வேகப் பந்து வீச்சில் பல பேரைத் திணற அடித்ததும் இல்லை. மாறாக புதிதாக ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர். 8 டேஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். 28 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஒரு முறை 5 விக்கெடுகளை வீழ்த்தி இருக்கிறார். இருப்பினும் இவரை தலையில் வைத்து கொண்டாடுகிறது இங்கிலாந்து அணி. அப்படி என்ன செய்து விட்டார் இந்த 27 வயது கிரிக்கெட் வீரர். நம் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், ஆஷிஷ் நெஹரா போன்ற வீரர்களால் செய்ய முடியாததை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

காரணம் டெஸ்ட் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சில பந்து வீச்சாளர்களே, 9 விக்கெட்டுகள் விழுந்த பின்னரும் நின்று ஆடி தங்கள் அணிக்கு ஆட்டத்தை சமன் செய்து கொடுத்ததாய் சரித்திரமே இல்லை. 90 களின் கடிசியிலும் 2000 ஆவது ஆண்டுக்கு பின்னரும் இந்த நிலை வெகுவாகவே மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இப்பொழுது கலக்கிக் கொண்டிருப்பவர் தான் இந்த ஆனியன்ஸ். முன்பெல்லாம் மட்டையாளர்கள் மட்டுமே செய்யக் கூடிய விடயமாக இருந்த வந்தது மட்டை ஆட்டம். 

வேகப் பந்து வீச்சாளர்கள் எல்லாம் பந்து வீசிப் பார்த்துப் பழக்கப் படுவதோடு சரி. ஏன் டெஸ்ட் போட்டியின் ஜாம்பவாங்களாக திகழ்ந்த மேற்கு இந்திய தீவு அணியில் கூட அப்படி ஒரு கடைசி நிலை ஆட்டக்காரர் இருந்ததாய் நினைவில் இல்லை. அதற்கு பிறகு கொடி காடி எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருந்த ஆஸ்த்ரேலிய அணியின் கடைசி ஆட்டக்காரர் மெக்ராவுக்கும் இதே நிலைதான். ஆனால் அவர் ஆடிய பல ஆட்டங்களில் எத்தனை முறை மட்டை சுழற்ற எத்தனை முறை களம் கண்டிருக்கிறார் என்ற எதார்த்தமான கேள்வியும் சரி தான். சொற்ப ஆட்டங்களாகதான் இருக்கும்.

இப்பொழுதெல்லாம் கடை நிலை ஆட்டக்காரர்கள் வந்து நின்று வெற்றி காண வைப்பதில்லை ஆனால் தங்கள் அணி தோல்வியைத் தழுவாமல் காப்பாற்றுவது போன்ற வெலைகளை செவ்வனே செய்து வருகின்றனர். கடைசியாக இங்கிலாந்து அணி ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 3 முறை இது போன்று தோல்வியின் விளிம்பிலிருந்து சமன் செய்து கொடுத்து திரும்பி இருக்கின்றனர் கடை நிலை ஆட்டக்காரர்கள். இது ஆரம்பித்தது சென்ற வருடத்தில் அவர்கள் ஆடிய ஆஷஷ் தொடரில் தான். கார்டிஃபில் நடந்த போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்ஸனும், மான்டியும் ஜோடி சேர்ந்து 10 ஓவர்களுக்கு மேல் நின்று ஆடி சமன் செய்து கொடுத்தனர்.

இப்பொழுது மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்த ஆனியன்சும், இங்கிலாந்து அணியின் சுவர் என்று அழைக்கப் படுகின்ற காலிங்க்வுட்டும் சேர்ந்து அந்த அணிக்கு செல்லவிருந்த வெற்றியைத் தட்டி பறித்தனர். ஆனாலும் மக்காயாவின் கடைசி ஓவர் பந்து வீச்சினை சமாளித்து சமன் செய்தது அப்பொழுதும் ஆனியன்ஸ்தான். அதற்கு முந்தைய ஓவரில் எப்படியோ ஒற்றை ஓட்டத்தை காலிங்க்வுடிற்கு கொடுக்காமல் தடுத்த தென் ஆப்பிரிக்க அணியினர், சற்று நிம்மதியாகவே காணப்பட்டனர். சரி ஆனியன்ஸ்தானே என்று. 

ஆனால் முன்பு ஒரு முறை மேற்கு இந்திய தீவு அணியின் தலைவர் கெய்ல் சொனது போல சற்று ஆனியன்ஸ் இந்த முறை தெ.ஆப்பிரிக்கா அணியினர் கண்களைப் பதம் பார்த்துதான் விட்டார். அதன் விளைவு முதல் போட்டி சமன் செய்தாகி விட்டது. அடுத்த போட்டியில் இங்கிலாந்தை ஒரு வழி ஆக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தெ.ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 98 ஓட்டங்களில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த முறைப் பெரிதாக ஆனியன்ஸின் உதவி அந்த இங்கிலாந்திற்கு தேவைப்படவில்லை.

இப்பொழுது நடந்து முடிந்த 3ஆவது ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்க அணியினர் ஒரு தீவிரத்துடன் விளையாடினர். போட்டியின் 5 நாட்களின் கடைசி அரை மணி நேரத்திற்கு முன்பு வரை, தெ.ஆப்பிரிக்க அணியினரின் பிடியில்தான் இந்த போட்டி இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் 291 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் இங்கிலாந்து அணியை 273 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து 18 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. அத்ற்கு பிறகு ஆடிய தெ.ஆப்பிரிக்க அணி அதிரடியாக ஆடி 447 ஓட்டங்கள் எடுத்தது. அணித் தலைவர் ஸ்மித் 183 ஓட்டங்கள் விளாசினார். 466 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற இலக்குடன் களம் இறங்கியது இங்கிலாந்து அணி.

முதல் போட்டி போலவே உள்ளது என்று தெ.ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பௌச்சர் சொன்னது ஸ்டம்ப் மைக்ரொஃபோனில் கேட்டதாம். என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை, அதே போன்று முடிவடைந்தது இந்த போட்டியும். தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெடுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனல் கடைசி ஒரு மணி நேரத்தில் மல மலவென விக்கெட்டுகள் சரிந்து மறுபடியும் 9 விக்கெட்டுகளோடு இங்கிலாந்து அணி ஆட்டத்தின் கடைசி ஒவரை சந்திக்கத் தயாரானது. ஸ்டெய்ன் மற்றும் மார்கலின் அனல் பறக்கும் பந்து வீச்சில் நிலை குலைந்திருந்தது இங்கிலாந்து அணி.

மறுபடியும் ஆனியன்ஸ் தான் மட்டையாளர். இந்த முறை மார்கல் பந்து வீசத் தயாரானார். 2 ஆவது பந்திலோ மூன்றாவது பந்திலோ பலத்த ஒலி எழுப்பினர் தெ.ஆப்பிரிக்கா அணியினர். நடுவர் ஔட் கொடுக்க மறுக்கவே ரெஃபெர்ரல் என்ற பிரமாஸ்த்திரத்தை கையில் எடுத்தனர். வல்லவனுக்கு சட்டையும் ஆயுதமாக சட்டையில் உரசி சென்றது என்று 3ஆவது நடுவர் அறிவிக்கவே இங்கிலாந்து அணித் தலைவர் ஸ்ட்றாஸ் சற்று சிரித்துப் பழகினார்.

அடுத்த மூன்று பந்துகளை இலாவகமாக தடுத்து ஆட இங்கிலாந்தின் புதிய கதாநாயகனாக ஆனார் ஆனியன்ஸ். அவரை இந்த பாடு படுத்தியதற்கு அவரிடம் மன்னிப்பு கோருகிறொம் என்று சொன்னார் ஸ்ட்றாஸ். இதற்கு மேல் என்ன செய்வது என்றே தெரியாமல் கண்ணில் ஆனியன்ஸினால் பெருக்கெடுத்த கண்ணீருடன் அனைவருக்கு கை குலுக்கினார் தெ.ஆப்பிரிக்க அணித் தலைவர் ஸ்மித்.

தெ.ஆப்பிரிக்க அணி இனி மேல் அதிகம் பப்பிள் கம் மெல்லுமாரு அவர்களின் உயர் மட்ட குழுவில் இருந்து கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள். (பப்பிள் கம் மென்று கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணில் நீர் சுரக்காதாம்!!!)

No comments: