Saturday, October 29, 2011

தூதுவனின்....துடிப்பு..!





கண்களில் வழிந்தோடும் இசை..
கானாதேசம் கண்ட போர்முரசாய்..
திகிலூட்டும் ஒரு மனோபாவத்தோடு..!

யாரும் பார்க்காமல் எந்த திசைகாட்டிப்பலகையும்
அறிவிக்காத ஒரு பாதையில்..! மேற்கொள்ளும்
பயணம்..! காத தூரம் நடந்தாலே!
கால்கடுகடுத்து போகும் பயணத்தினூடே

தாகம் தீர்க்க ஆதவன் ஒன்று குதித்து குளித்தாடும்
தடாகத்தின் பரப்பாய்..! மேலெழும்பிய வானம்
அந்த குட்டை நீருக்குள் மூழ்கிப்போக..!

எல்லாம் துறந்த முனிக்கும் ஆசை வாய்க்கும்
தாகசெறிப்போடு அருந்தும் வேளை
கொஞ்சும் குரலாய் கூடவே சுமந்து
வரும் அத்தாரகையின் நினைவு

நெஞ்சை வருத்தி செல்ல..!!
குட்டை நீரும் காணாது அவள் மீதான என் தாகம்
அடக்க..!!! பாத்திரம் கொள்ளாத பார்வையும்
சூத்திரமில்லா சுகவனமுமாய் ஆன
என்னவளின் தேசத்தை அடைய...

இன்னும் சிறகில்லாமல் பறக்க
அலையும் நெஞ்சை எலும்புகூட்டுக்குள்
அடைத்துவைத்து துடிக்கவிட்ட
பாவத்தோடு பயணம் கடக்கிறது
இன்னும் இன்னும் தொலைவாய்

நெருங்குகிறது கோட்டை மதில்
கையிருக்கும் செய்தி சேர்த்தும்
கொண்டவள் முகம் காண நேர்ப்பேனோ!
முந்தி இருக்கும் கழிமுகம் கடந்ததும்
முன்னவள் தேகம் சூடேனோ!

அரியணைவாழவன் கண்மலர்ந்ததும்
என் தோட்டத்து தேன்கொய்யாத மலரவளின்
கூந்தல் காட்டுக்குள் தொலைந்து போவேனோ !

மூங்கில் இழைக்குள் முடிந்திருக்கும் செய்தி
விரைவாய் சேராவிடில் என் மாலைசூடிய -பெண்ணவளுக்கு
என் தலைதான் மிச்சமாய் இருக்கும் !

இந்த கவலைகளை அறிந்தும் அறியாதவளாய்
தூக்கம் தொலைத்து ஒற்றன் என் வரவுக்காய் காத்திருக்கும்
என் கார்முகிலை நான் காற்றாய் தழுவ விரைவே தீர்க்கிறேன்

என் தாகத்தை ...!

மெல்லிய இசை இன்னும் குடி இருக்கிறது கண்ணுக்குள்
இடையிடையே போர்முரசின் ஒலி கலந்து ..

-கார்த்திக் ராஜா..!

(ஒரு தேசத்தின் ஒற்றனின் பயணத்தில் ..!ஒட்டுக்கேட்ட இதயதுடிப்புக்கள்! இது ..!)
 

No comments: