Saturday, October 29, 2011

தலைமுறை எச்சங்கள்...






பாண்டியும் பல்லாங்குழியும்
ஆடிக்கொண்டிருந்த சிறுமி..
மானாட மயிலாட...விளையாடுகிறேன் என்றாள்..

பம்பரமும் உண்டிவில்லும்
விளையாடித்திரிந்த சிறுவன்
பால் ஆக்டோபஸ் இருந்தா இந்தியா-வுக்கு தான்
வோர்ல்டு கப்-னு சொல்லி இருக்கும் என்கிறான்..

கொட்டைபாக்கை மென்று துப்பும் கிழவி..
கோல்கேட் சால்ட் பேஸ்டு தான் வேணுமென்கிறாள்..
தாத்தா மட்டும் ஏனோ இன்னும்
சுருட்டைமாற்றவே இல்லாமல்...

கட்டைவண்டிஎல்லாம் கூட..காணாமல் போகிறது..
ட்ராக்டர் தடம் மட்டும்..சாலையிலே..
ஆளாளுக்கு டிவிஎஸ்..வைத்திருந்தனர் முன்பு..
இப்போது அபெச்-ம் பல்சரும்.. பெருகிப்போனது..

ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஊர்கூடிபார்க்கும்...
ஊராட்சி டிவி பெட்டிக்கு பதில்
வீட்டுக்கு வீடு டண்டனாடன்-னென சத்தம்

ஆலமரம் சரிந்துபோன இடம்...இன்னும்
ஆட்டுதொட்டிலாய்தான் இருக்கிறது ஆனால்
ஆடுகளைத்தான் காணவே இல்லை...

புறாகூண்டும் மைனா குஞ்சும் வைத்திருக்கும்
நண்பனின் வீட்டு பறவைகூண்டு..
ஒதுக்குபுறமாய் ஏதோ ஒருமூலையில்..

வெள்ளை வேஷ்டிகள் மட்டும் கொஞ்சமும்
குறையவில்லை ஆனால் அதன்
கரைகளில் ஏகப்பட்ட மாற்றம்..கட்சிகள் பெருகியனவாம் ...

ஏதோஒரு பெயர்கொண்ட..சாம்பல் நிற கொக்கு..
தண்ணீரே இல்லாத குளத்தில்..தேடிக்கொண்டிருக்கிறது
தொலைந்து போன தன் தலைமுறை தடயங்களை ..

இழந்துபோயிருந்த கிராமத்தின் மிச்சமான
அடையாளமாய் ..மீசை மலித்திருந்த அய்யனார் சிலை..
மாறாத ஜாதிச்சண்டையில் ரொம்பநாளாய்
திருவிழாவே கொண்டாடப்படாமல்...

இதுமட்டும் மாறவே மாறாதோ..??
---கார்த்திக் ராஜா
 — 

No comments: