Saturday, October 29, 2011

புறவழிச்சாலை





நான்கு வழிச் சாலை
ஊரையே புறமுதுகிட்டு
ஒதுக்கி வைத்திருந்த
சாலை..

நாள் கிழமை பார்த்து
நவ தானியங்கள் இட்டு
நான்கேழுதலைமுறைக்கு
நிலைத்து நிற்க நிலை வைத்து
பகல் இரவு பாராது உழைத்து

பார்த்து பார்த்து கட்டிய வீட்டை
பகலிலேயே கொள்ளை
கொண்ட புறவழிச்சாலை..


வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்..
என்று யாரும் சொல்லும் முன்னரே!
சாலையெங்கும் சோலையாக நின்று
கையசைத்து கரியமிலம் வாங்கி
பிராணவாயு தந்த ஆலும் வேலும்
அழித்து போட்ட சாலை..

நா ஊற சுவை கூட புளி தந்து
நல்லவன் கெட்டவன் பார்க்காம நிழல் தந்து
நட்டமா நின்ன நெட்டை மரங்களை
கட்டை கட்டையா வெட்ட வச்ச சாலை..

அரச மர பிள்ளையார்
ஆடிக் கூழ் அம்மன்
கரையோர கருமாரி
தலைசாய்த்த கருப்புச்சாமி
அத்தனை பேரையும்
இடம் மாத்தி தடமான சாலை

காட்டை கொடுத்தவனுக்கும்
மேட்டை கொடுத்தவனுக்கும்
உழுத நிலத்தை கொடுத்தவனுக்கும்
ஒண்டிக் கிடந்த வீட்ட கொடுத்தவனுக்கும்
காசு தந்த கடையை விட்டுக் கொடுத்தவனுக்கும்
நன்றி கெட்டு சுத்தி சுத்தி வரவச்ச சாலை

ஊரை ரெண்டாக்கி
ஊருக்குத் தண்ணி தரும்
ஊருணியை மேடாக்கி
ஏர் உழவனின்
ஏரியை துண்டாக்கி
வாய்க்காலுக்கு வழிமறுத்து
நன்செய்யை நாசாமக்கி
புன்செய்யை பாழாக்கி
பாதைகளை வீணாக்கி
பயன் தரும் மரங்களை பிணமாக்கி
அரளிச் செடி தாங்கி
அம்சமாய் படுத்த சாலை


அரச மரத்து நிறுத்தம்
ஆல மரத்து நிறுத்தம்
பத்துப் பனை மரம் நிறுத்தம்
ஒத்தப் புளிய மரம் நிறுத்தம்
புங்கை மர நிறுத்தம்
வேங்கை மர நிறுத்தம்
மா மர நிறுத்தம்
பூ மர நிறுத்தம்
அத்தனையும் அடையாளமில்லாம ஆக்கி
உலகத் தரத்தில் ஒய்யாரமா நின்ன சாலை...

வெளியூருக்கு செல்ல வேகமாய் கிளம்புகிறேன்..
நிழலில்லா தார்சாலை நோக்கி..!
--------கார்த்திக் ராஜா !
 

No comments: