Tuesday, March 8, 2011

 பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொடுத்த இடத்தில் குடிசை அமைத்து, 33 ஆண்டாக அவரது நினைவாகவே, மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வருகிறார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்த போது, 1979ம் ஆண்டு பனமரத்துப்பட்டி அ.தி.மு.க., எம். எல்.ஏ.,வாக இருந்த சுப்பராயன், உடல் நலக்குறைவால் இறந்தார். எம்.ஜி.ஆர்.,திருமனூரில் உள்ள சுப்பராயன் வீட்டுக்கு சென்றுவிட்டு, காரில் சேலம் வந்து கொண்டிருந்தார். அப்போது, பனமரத்துப்பட்டி ஆத்துமேட்டில், காரை நோக்கி ஓடி வந்த பெண்ணை பார்த்தவுடன், எம்.ஜி.ஆர்., காரை நிறுத்தி இறங்கினார். எம்.ஜி.ஆரின் அருகே வந்த பெண், "விவசாய கூலி வேலை செய்யும் நாங்கள், புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகிறோம். அந்த குடிசையை காலி செய்யும்படி மிரட்டுகின்றனர்' எனக்கூறி, கண்ணீர் விட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., உடனே அதிகாரிகளை அழைத்து, குடிசை உள்ள இடத்தை, அந்த பெண் பெயரில் பட்டா செய்து வழங்க உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர் வழங்கிய இடத்தில், 33 ஆண்டாக குடிசை போட்டு வசித்து வரும் மணிமேகலை (62), பல இக்கட்டான சூழ்நிலையிலும், அந்த நிலத்தை விற்காமல் எம்.ஜி.ஆர். நினைவாக பாதுகாத்து வருகிறார். இது குறித்து மணிமேகலை கூறியதாவது: எம்.ஜி.ஆர்., கார் வருவதை பார்த்து, வயல் வேலையை விட்டுவிட்டு ஓடிவந்தேன். அப்போது, நான் வரப்பில் தடுக்கி விழுந்ததை பார்த்த எம்.ஜி.ஆர்., காரை நிறுத்தி, இறங்கினார். என்னை அருகே அழைத்து, "எதற்காக, இப்படி ஓடி வந்தாய்; என்ன வேண்டும் உனக்கு?' என, அன்போடு விசாரித்தார். "புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் குடிசையை காலி செய்யும்படி, மிரட்டுகின்றனர்' என, கூறி கண்ணீர் விட்டு அழுதேன். உடனே பஞ்.,தலைவரை அழைத்து, குடிசை இருந்த புறம்போக்கு நிலத்தில், 5சென்ட் இடத்தை, எனக்கு பட்டா போட்டு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டபட்டபோது, அந்த இடத்தை விற்கும்படி பலர் வற்புறுத்தினர். ஆனால், எம்.ஜி.ஆர்., கொடுத்த நிலம் என்பதால், அவரது நினைவாக நிலத்தை விற்காமல், குடிசையில் குடியிருந்து வருகிறோன். இவ்வாறு அவர் கூறினார். இப்போது, அமைச்சர்கள், அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். ஆனால், குறையை தெரிவித்த உடனேயே, அதே இடத்தில் தீர்த்து வைத்ததால்தான், எம்.ஜி.ஆர்., மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளார்.


No comments: