Monday, March 28, 2011

குடை இருந்தும் நனைந்து கொண்டே...



அன்றோர் மாலைநேரம்
குடைக்கும் மழைக்கும் நடக்கும்
 இசைசண்டையை ...ரசித்தபடியே
 நான் நடந்து போகிறேன்
 எனதினிய கிராமத்து வீட்டிற்கு..

விறகு வெட்டி சேகரிக்கும்
பெண்களும்..
ஆட்டுதொட்டி  ஆண்களும்...  
ஆங்காங்கே அடைமழைக்கு புறம்பாய்
வாழையிலும், பனையிலுமாய்...
நனைந்து  கொண்டே குடையாய்  பிடித்திருக்க ..

நகரத்தினன் மிதப்பாய்
ஏளனமாய் சிரித்து கைகளில் குடையோடு
நான்மட்டும் தொடர்ந்து நடக்க..
வெற்றிலை கறைபடிந்த ஏதோ ஒரு குரல்
கனக்கிறது...மழையின் இறைச்சலைவிட அதிகமாய்...

எய்யா...யாரவுக போறவுக செத்த நிண்டு போவியளா..!
இடியும் கிடியுமா கிடக்கு...தளப்புல்லைகே அவாதுள்ள ..
செத்த...குட்ட மரம்சாயிப்புல ஒதுங்கி பெறவு போவுறது..
என்கிறது...

வித்தியாசப்படுகிறது...எந்த அந்நியாமான...வார்த்தைகள் மட்டும்
ஆனால் பார்வையில் இல்லை ...பாசத்திலும் கூட..
இங்கே கறைகள் (வெற்றிலை)  அவர்கள் குரலில் மட்டும்
மனதில் இல்லவே  இல்லை

மழை வெறித்து வெள்ளந்தியாய் சிரிக்கிறது வானம்  
நான் குடை இருந்தும் நனைந்து கொண்டே...
-------------கார்த்திக்  ராஜா    

No comments: