Wednesday, March 30, 2011

எண்ணெய் தீர்ந்துபோன அந்தத் தெருவிளக்கு...

இருள் எத்திக்கும் வியாபித்திருந்தது. போகிற பாதைகூட சரியாகத் தெரியவில்லை. வானில் ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் "மினுக்மினுக்'கென்று கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நிலவுகூட இன்னும் எழவில்லை.

சாலையின் திருப்பத்தில் பஞ்சாயத்து விளக்கொன்று மங்கலான ஒளியைப் பரப்பிய வாறு நின்று கொண்டிருந் தது. மங்கலான அந்த மண்ணெண்ணெய் விளக் கின் ஒளி, புகை படிந்து போன கண்ணாடிக் கூட்டை ஊடுருவி சற்று தூரத்திற்காவது பரவிக் கிடந்த இருளை விரட்டிக் கொண்டிருந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அங்கு மங்கலான, சற்று சிவப்பான அந்த வெளிச்சத்துக்கும் இருளுக்கும் இடையே ஒருவிதமான போட்டியே நடைபெற்றுக் கொண்டிருந் தது. அந்த அளவிற்குச் சக்தியற்று சோம்பிப் போய் "மினுக் மினுக்'கென்று கண்ணாடிக் கூட்டினுள் எரிந்து கொண்டிருந்தது விளக்கு. எந்த நேரத்திலும் இருள் அந்த ஒளியை வென்று தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி வியாபிக்கச் செய்துவிடுமோ என்று, ஒவ்வொரு நிமிடமும் சந்தேகம் கொள்ளச் செய்து கொண்டிருந்தது நிலவிய சூழ்நிலை.

விளக்கு கம்பத்தின்மேல் ஏணியொன்று சாய்வாக வைக்கப்பட்டிருந்தது. மூங்கிலால் செய்யப்பட்டிருந்த அந்த ஏணி செய்யப்பட்டு எத்தனை வருடங்கள் ஆனதோ என்று கூறிக் கொள்ளும் வகையில் பழமையானதாக இருந்தது அது.

விளக்கு கம்பத்திற்குச் சற்று தூரத்தில் இருக்கிறது சங்கரன் பிள்ளையின் தேநீர்க் கடை. சங்கரன் பிள்ளை மிகவும் நல்லவர் என்று எல்லாருமே கூறுவார்கள். எந்த நேரமும் வழுக்கை விழுந்த தலையில் வெயில்பட்டு ஒளிரும் வண்ணம் நின்று கொண்டு, வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே கறை படிந்த முப்பத்திரண்டு பற்களும் வெளியே தெரியும்படி தேநீர்க் கடைக்கு வருபவர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் சங்கரன் பிள்ளை.

தெரு விளக்கின் மங்கலான வெளிச்சத்தினாலோ என்னவோ, சங்கரன் பிள்ளையின் தேநீர்க் கடைகூட சற்று தெளிவில்லாம லேயே தெரிந்தது. கடையின்முன் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் குத்துக்காலிட்டு தான் மட்டும் தனியே உட்கார்ந்திருக்கிறான் ஒருவன். குளிரினாலோ என்னவோ, அடிக்கொருதரம் உடலை மூடியிருக்கிற பழமையான அந்தப் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொள்கிறான். அவன் இன்னும் உறங்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். இருளின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவனுடைய முனகல் சத்தம் காற்றில் கரைந்து, விரவி வியாபித்துக் கொண்டிருந்தது. இந்த நடுநிசி நேரத்திலும் கண்மூடாமல் விழித்துக்கொண்டிருக்கும் அந்த மனிதன் யாராக இருக்க முடியும்?

கிழக்கேயிருந்து தேங்காயை ஏற்றிக்கொண்டு போகும் லாரி "உய்'யென்று சத்தம் எழுப்பியவாறு சாலையில் போய்க் கொண்டிருக்கிறது. அநேகமாக அது சங்கனாச்சேரி சந்தைக்குப் போகலாம். சாலையின் முனையில் லாரி திரும்பும்போது, பின்பக்க விளக்கிலிருந்து வெளிவரும் ஒளி தேநீர்க் கடையின் உள்ளே விழ, தலையைத் தூக்கிப் பார்த்துக்கொள்கிறான் அந்த ஆள்.

அது வேறு யாருமல்ல, கொச்சு குட்டிதான். அந்த ஊரில் எல்லாராலும் விரும்பப்படுகிறவனும், யாருக்கும் கேடு நினைக்காதவனுமான கொச்சு குட்டி. கொச்சு குட்டியை நினைக்கும் ஒவ்வொரு தருணமும், நிச்சயம் அந்தத் தெரு விளக்கும் நம்முடைய மனதில் தோற்றம் தரத்தான் செய்யும். அந்த அளவிற்கு அந்தத் தெரு விளக்கு கொச்சு குட்டியின் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டறக் கலந்திருந்தது. தெரு விளக்கு எரியவில்லையென்றால், யாருடைய மனதிலும் முதன்முதலில் ஞாபகத்திற்கு வருவது கொச்சு குட்டியின் முகமாகத்தானிருக்கும். அந்த அளவிற்கு அந்தத் தெருவிளக்கு அவனுடைய வாழ்க்கையில் உறவு கொண்டிருந்தது. இந்த உறவு இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. கிட்டத்தட்ட இருபத்து நான்கு வருடப் பிணைப்பு கொண்ட ஒரு சமாச்சாரம் இது.

இந்தக் கால இடைவெளியில்தான் அந்த ஊரில் எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருக்கின்றன. என்னென்ன புதுமைகளும் மாற்றங்களும் உண்டாகியிருக்கின்றன. சாக்கடை தேங்கிக் கிடந்த இடங்களெல்லாம் இன்று எந்த அளவிற்கு மாறிப்போய் புதுமையான கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. காளை வண்டி போகவே முடியாதிருந்த அந்தத் தூசு படிந்த சாலைகளில், இன்று லாரிகளும் பஸ்களும் "விர்விர்'ரென்று ஓசை எழுப்பிக்கொண்டு விரைந்து கொண்டிருக் கின்றன. செய்திப் பத்திரிகை என்றால் என்னவென்றே அறியாத கிராம மக்கள் இன்று உலகக் கதை முழுவதையும் பேசி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். படிப்பகமும் இளைஞர் நற்பணி மன்றங்களும் தெருவுக்குத் தெரு எழும்பியிருக்கின்றன. தேநீர்க் கடையோ சாராயக் கடையோ இல்லாதிருந்த ஊரில் இன்று எத்தனை சாராயக் கடை! தேநீர்க் கடை! தபால் அலுவலகமும், நர்சரி பள்ளிக்கூடமும், கூட்டுறவு சங்கமும், கட்சி அலுவலகங் களும்கூட இன்று அந்த ஊரில் உருவாகி விட்டிருக்கின்றன. அப்பப்பா... இந்த இடைவெளியில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் சம்பவித்துவிட்டிருக்கின்றன. ஆனால், எல்லாமே மாறிவிட்டிருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் மாறாமல் இன்றும் இருக்கிறதென்றால் அது அந்தத் தெருவிளக்குதான்.

சாலை திரும்பும் இடத்தில் ஒரு மூலையில், கேட்பாரற்று தன்னந்தனியே கரையான் அரித்துப்போன ஒரு மரத் தூணின் உச்சியில் இருக்கிறது அந்தத் தெருவிளக்கு. கடந்த காலத்தில் நடந்த எத்தனை எத்தனைச் சம்பவங்களைக் கண்ட சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது அது!

மாலை வந்துவிட்டால் போதும். வெளிச்சம் தர ஆரம்பித்து விடும் விளக்கு. ஆதவன் தன்னுடைய முகத்தை மலையின்பின் மறைத்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக் கின்ற நேரத்தில், கொச்சு குட்டி என்ற அந்த மனிதன் மெல்ல மெல்ல அசைந்தவாறு சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பான். பழமையான அந்த ஏணியில் ஏறி தினமும் விளக்கேற்றும் ஆத்மா அதுதான்.

இந்த நிகழ்ச்சி இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்றல்ல. எத்தனையோ வருடங்களாக ஒரு தொடர்கதை போன்று தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற ஒன்று இது.

தேநீர்க் கடைத் திண்ணையை விட்டு மெல்ல எழுந்தான் கொச்சு குட்டி. மெதுவாக நடந்து சென்ற அவன் கால்கள் விளக்கு மரத்தினடியை அடைந்ததும் நின்றன. அவன் காலடிச் சத்தம் கேட்டு, விளக்கு மரத்தினடியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த சொறி நாயொன்று மிரண்டுபோய் இருளினூடே ஓடி மறைந்து போனது.

விளக்கு மரத்தினடியில் ஊன்றப்பட்டிருந்த குத்துக்காலில் சிறிது நேரம் அப்படியே அமர்ந்துவிட்டான் கொச்சு குட்டி. அவனுடைய மனம் அப்போது எத்தனையோ வருடங்களாக நடைபெற்று வருகின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் வரிசைக் கிரமத்தில் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறிது நேரம் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அப்பப்பா! அவற்றில்தான் எத்தனை கசப்பான அனுபவங்கள்! அவை மீண்டும் மீண்டும் வலம் வந்து கொண்டிருந்தன மனத் திரையில்.

இது நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது கொச்சு குட்டி சிறிய பையனாக இருந்தான். வயது வேண்டுமென்றால் பதினான்கு அல்லது பதினாறு இருக்கும். கிழிந்துபோன சட்டையும் அரைக்கால் ட்ரவுசரும் போட்டுக்கொண்டு நாடோடிக் குழந்தைகளின் கூட்டத்தில் அவனும் ஒருவனாகச் சேர்ந்து ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பான். பனைமரம் போன்ற கரிய உடம்பும், எண்ணெய் தேய்த்தே பல நாட்கள் ஆகிவிட்டன போலும் என்று அறிவிக்கும் தலைமுடியும், வட்ட முகமும் கொண்ட அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பான்.

அப்பப்பா... அந்தக் காலகட்டம்தான் எத்தனை இனிமையான ஒன்றாக இருந்தது! வேதனையும் கண்ணீரும் அவலம் நிறைந்த வாழ்க்கையும் அப்போதெல்லாம் அவனுக்கு என்னவென்று கூடத் தெரியாது.

அப்படி வாழ்க்கை நடந்து கொண்டிருந்தபோதுதான் அது சம்பவித்தது. அன்றே அவனுடைய வாழ்க்கைப் பயணம் வேறு திசை நோக்கித் திரும்ப ஆரம்பித்துவிட்டது. ஆற்று நீர் போகும் போக்கில் அல்ல, எதிர் திசையில்...

அவனுடைய தந்தையும் தன்னுடைய இளமைக்காலம் முதலாகவே விளக்கு வைப்பவனாகத்தானிருந்தான். முதுமையில்கூட தன்னுடைய தளர்ந்துபோன கால்களால் நடந்து சென்று பழமையான ஏணியில் ஏறி நடுங்கும் விரல்களுடன் அவன் விளக்கு வைத்ததுகூட, தன்னுடைய ஒரே மகனான கொச்சுக் குட்டியின் வயிறு வளர்க்கதான்... அன்று இரவு... இப்போதும் அந்த நினைவு கொச்சு குட்டியின் மனதின் அடித்தளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. காற்றும் மழையும் போட்டி போட்டுக்கொண்டு நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த அந்த அமைதியான இரவில், அவனுக்கென்றே வாழ்ந்த அந்த ஒரு ஜீவனும் இந்த உலகை விட்டுப் போய்விட்டது நிரந்தரமாக.

கொச்சு குட்டி கதறினான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றான்.

அவனுக்கு இந்த உலகில் சொந்தமென்று கூற யார் இருக்கிறார்கள்? பையில் காலணாகூட இல்லாத துர்ப்பாக்கிய நிலை அவனுக்கு.

வாழ்க்கை என்ற கடும் பாறையில் அந்த பாலகன் ஏறத் தொடங்கினான். உலகம் என்றாலே என்னவென்று அறிந்திராத அந்தச் சிறு வயதில்...

இப்படித்தான் அந்தப் புதிதாக விளக்கு வைப்பவன் வாழ்க்கை அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தான். அவனை விளக்கு ஏற்றுபவனாக ஆக்கியதுகூட இந்தச் சமுதாயத்தின் சில நிர்ப்பந்தங்கள்தானே!

வாழ்க்கையின் தூசு படிந்த நீண்ட பாதையில் அந்தச் சிறுவன் தளர்ந்துபோன கால்களால் நடக்கத் தொடங்கினான்.

ஒவ்வொரு இடத்திலும் அவனுக்குக் கிடைத்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொன்றுமே அவனுக்குப் புதிய அனுபவமாகவே இருந்தது. இப்படித்தான் உலகமென்ற நீரோட்டத்துடன் அவனும் இரண்டறக் கலக்க ஆரம்பித்தது.

பாதையில் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் வாகை மரத்தின் இலைகள் சுமார் பத்து முறை உதிர்ந்து, தளிர்த்து, பூத்து, பின் உதிர்ந்திருக்கின்றன. எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. கடந்து போன காலகட்டம் மனிதனிடத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தாமல் இல்லை.

குழந்தைப் பருவம் இளமைக்கு வழிவிட்டது. துடிப்பும் உற்சாகமும் கொண்ட வாலிபப் பருவம் நடனமாடி மெல்ல நெருங்கி வந்தது.

அப்போதே புதிய வாழ்க்கையும் ஆரம்பமாகிவிட்டது. சிறு வயதில் விளக்கு ஏற்ற ஆரம்பித்த கொச்சு குட்டி இதோ இளைஞனாக மாறியிருக்கிறான். அந்தக் கரங்களில் இன்று நல்ல பலமிருக்கிறது. அந்த மனதில் நிறைய தைரியமிருக்கிறது. அந்த உடம்பில் தெம்பும், உற்சாகமும் இருக்கின்றன. கொச்சு குட்டி இன்று ஒரு வாலிபன். வாலிபப் பருவத்திற்கே உரிய கம்பீரம் அவனுடைய முகத்திலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவனுக்கும் சில லட்சியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பசுமை தோன்றும் கரையை நோக்கிப் பயணம் செய்யும் பயணிதான் கொச்சு குட்டி. வாழ்க்கையில் கஷ்டமும் அவலமும் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் லட்சியமும் இல்லாமலா போகும்? அந்த லட்சியங்கள்... எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கைக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன.

சின்னம்மாவுடன் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது எத்தனையோ வருடங்களுக்கு முன்னால்.

ஆதவன் தன்னுடைய பொன் கிரணங்களைச் சுருக்கிக் கொண்டு மலையின்பின் சென்று துயில் கொள்ளச் செல்லும் நேரத்தில், பழமையான அந்த விளக்கை ஏற்றி வைக்கும் கொச்சு குட்டியைப் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சுற்றி நின்றவாறு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அரைப் பாவாடையும் ப்ளவுஸும் அணிந்து, தலைமுடியை முடிந்து தூக்கிக் கட்டிய சின்னம்மா பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் விளக்கு மரத்தினடியில் அமர்ந்தவாறு மாலை வேளைகளில் விளையாடிக் கொண்டிருப்பாள். ஊர்க் கதை பேசிச் சிரிப்பாள். அவர்களில் ஒருவனாக இருந்து வந்தான் கொச்சு குட்டி என்ற அந்தப் பையனும்.

அப்போதுதான் அவர்கள் இருவருக்குமிடையில் பழக்கம் முளைவிட ஆரம்பித்து, காலச்சக்கரம் பல முறை சுற்றிவிட்டது. அந்த பழக்கம் மற்றொரு திக்கை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்த அன்பு மாலையில் மணமும் வண்ணமும் நிறைந்த மலர்கள் மட்டுமே இருந்து அணி செய்தன. வேறுபாடு என்பதற்கே அங்கு இடமில்லை. அந்த பந்தத்திற்கு எதிராக ஒரு குரலும் இல்லை- ஏன் ஒரு குழந்தையின் குரல்கூட.

விளக்கு வைப்பவனுக்குச் சமுதாயத்தில் அப்படியொன்றும் பெரிய ஸ்தானமில்லைதான். அவனுக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை, சுற்றமோ, பதவியோ, சொத்தோ ஒன்றுமில்லை. ஆனால், தான் மட்டும் தனியன் என்றிருந்த அவன்மீதும் அன்பு செலுத்த இன்று ஒரு புதிய ஜீவன் இருக்கிறது... யார் தடுத்தாலும் தகர்க்க முடியாத பிணைப்பு அது. சின்னம்மா வேறு யாருமல்ல. தெரு கூட்டும் ஏலிச் சேட்டத்தியின் மகள்தான். அவள் பிறந்ததும் வளர்ந்ததும்கூட சமுதாயத்தின் தாழ்வான ஒரு சுற்றுச் சூழலில்தான். அந்த உறவுக்கு எதிராக வாய் திறக்க யாரால்தான் முடியும்? இப்படித்தான் எவ்வித இடையூறுமின்றி அந்த அன்பு வளர்ந்தது.

ஆனால், நல்லவரான தேநீர்க் கடை சங்கரன் பிள்ளை மட்டும் அவ்வப்போது வழுக்கை விழுந்த தன்னுடைய தலையைத் தடவியவாறு ஏதாவது கூறுவார்.

""பரவாயில்லை. நல்ல காரியம்தான்... பாவப்பட்ட அந்த பெண்ணுக்கு நீ பொருத்தம்தான். கடவுள் புண்ணியத்துல நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்.''

""....''

கிறிஸ்துமஸ் கழிந்தவுடன், திருமணம் நடத்த வேண்டும் என்பது திட்டம். அவனுடைய எதிர்பார்ப்பு வானை முட்டிக்கொண்டி ருந்தது. வாசனை நிரம்பிய மலர்களும் பூக்கள் நிறைந்த பூந்தோட்டமும் அவனுடைய இதயத்தின் அடித்தளத்தில் அரும்பிவிட்டிருந்தன. வானத்தில் பூ நிலாவும் மனது நிறைய இனிய கனவுகளும்... இத்தனைக் காலமும் மனதில் போற்றி வந்த எதிர்பார்ப்புகள் மொய்த்துக் கனிந்து காற்றில் மணம் பரப்பும்போது, ஆனந்தம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?

அவனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சில நாட்கள் அவை. அப்போதெல்லாம் விளக்கு வைக்கும்போது அவனுடைய சிரிப்பில் ஒரு கவர்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் ஏதாவது பாட்டை முணுமுணுத்துக்கொண்டே விளக்கு ஏற்றுவான் அவனையும் அறியாமல்.

விளக்கு மரத்தில் சாய்ந்தவாறு கடந்துபோன நாட்களில் ஆழ்ந்து கொச்சு குட்டி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டான். நடந்ததை யெல்லாம் மறக்க வேண்டும் என்றுதான் அவன் நினைக்கிறான். ஆனால் நினைவுகள்... அவை எப்படி சாகும்? அழிவே இல்லாத நினைவுகள்...

அதன்பிறகு அங்கு நடந்ததெல்லாம்... எதிர்பார்ப்புகள் அடித்தளமின்றி சரிந்து வீழ்ந்தன. வெறுப்பு தரும் நினைவலைகள் மனத் திரையில் வந்து மோதியபோது வானை நோக்கி வெறித்துப் பார்த்தான் கொச்சு குட்டி. அங்கே, கல்லறையில் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி மாதிரி நான்கைந்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

கிறிஸ்துமஸுக்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நாடு முழுவதும் பரவிக் கொண்டிருந்த அந்தக் கொடுமையான நோய்தான் எத்தனை ஆயிரம் உயிர்களை எடுத்துச் சென்றுவிட்டது.

குப்பைகளைப் பெருக்கும் ஏலிச் சேட்டத்தியும் அதில் பலியாகி விட்டாள். சின்னம்மாவையும் அது விட்டு வைக்கவில்லை. கொஞ்சமும் எதிர்பார்க்காமலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

கொச்சு குட்டி ஓடிச் சென்று மருந்து வாங்கி வந்தான். டாக்டரை அழைத்துக்கொண்டு வந்தான். ஆனால், பயன்...? நோய்தான் முற்றிக் கொண்டே வந்தது. இரவும் பகலும் கண் விழித்து அவளைக் கவனித்தான் கொச்சு குட்டி. அவனுடைய இதயத்தில் வேதனையின் குவியல்கள். அன்றொரு நாள் எங்கும் நிசப்தம் நிலவிக் கொண்டி ருந்த வேளையில், சக்தியற்ற தன்னுடைய விழிகளைத் திறந்து கண்ணீருக்கு மத்தியில் கொச்சு குட்டியின் கரங்களை எடுத்து தன்னுடைய முகத்துடன் சேர்த்துவைத்து அணைத்துக் கொண்டாள் சின்னம்மா. அவளுடைய கண்ணீர் வழிந்து கொண்டிருந்த கன்னங்களில் தன்னுடைய கரம் பட்டபோது, அழுகையை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் கொச்சு குட்டி. அவனுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து அவளுடைய மார்புப் பகுதியை நனைத்துக் கொண்டிருந்தது.

""நீங்க இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கணும், மறக்காம...''

இதைக் கூறுவதற்குள் அவள் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. விழிகளில் நீர் பெருகியது. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்ததைப்போல் அவளிடமிருந்து நீண்ட ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. அன்று இரவிலேயே நடக்க வேண்டியது நடந்துவிட்டது. ஒரு வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

வாழ்க்கை அதற்குப் பிறகு எப்படி எல்லாமோ போனது. வாழ்க்கைப் பாதையில் ஒளி வீசிக் கொண்டிருந்த விளக்கு அணைந்து விட்டது. பாய்மரமற்ற கப்பலாய் கொச்சு குட்டியின் வாழ்க்கை போகிற போக்கில் போய்க்கொண்டிருந்தது. எப்போது பாறையில் மோதி அது தகரும் என்று அவனுக்கே தெரியாது.

நாட்கள் ஓடிக்கொண்டேயிருந்தன. ஆனால், ஒவ்வொரு மாலையிலும் ஒளி தர மட்டும் அந்தத் தெருவிளக்கு தவறியதே இல்லை.

மங்கலான கண்களும் எண்ணெய் தேய்க்காத தலை முடியும் ரோமம் வளர்ந்த முகமும் கொண்ட கொச்சு குட்டியை இன்று அடையாளம் கண்டுபிடிப்பதே கஷ்டம். வளர்ந்த நீளமான மீசையும், மெலிந்து போன உடம்பும்... அவனைக் கண்டாலே யாரும் மூக்கில் விரல் வைத்து வியந்துதான் போவார்கள்.

எண்ணச் சிறையிலிருந்து விடுபட்டான் கொச்சு குட்டி. என்றாலும், விளக்கு மரத்தின்மேல் கை வைத்து நின்றபோது கடந்துபோன அந்த நாட்களை அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

எத்தனை வருடங்களாக அவனுடைய தாத்தாவும் தந்தையும் இந்தத் தெருவிளக்கை ஏற்றி வந்திருக்கிறார்கள். இன்று அதற்குரியவன் கொச்சு குட்டி. அந்தக் குடும்பத்துக்கும் அந்தத் தெருவிளக்குக்கும் இடையில் அப்படியொரு பிரிக்க முடியாத பந்தம்! இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தலைமுறை தலைமுறையாய்... தாத்தாவுக்குப்பின் தந்தை, தந்தைக்குப்பின் மகன்.

ஆனால், இன்றோடு தெருவிளக்கின் பணி பூர்த்தியாகிறது. நாளை முதல்... நாளை முதல்... இது தேவையற்ற ஒன்றாகப்போகிறது.

நாளை காலை மின்சார அமைச்சர் வந்து பொத்தானை அழுத்தப் போகிறாராம். அதற்குப் பிறகு ஊர் முழுக்க ஒரே மின்சார விளக்குகளின் பளபளப்புதான்... அந்தத் தெருவிளக்கு இனிமேல் அந்த மின்சார விளக்கைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஒருவேளை இதை யாரேனும் கல்லெறிந்து உடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புகை படிந்த இந்தக் கண்ணாடி உடைவதை நினைத்துப் பார்த்தபோது, கொச்சு குட்டியின் கண்களில் கண்ணீர் அரும்பியது. எத்தனை வருடங்களாக அந்தக் கிராமத்தை அது இருளிலிருந்து காப்பாற்றி வெளிச்சம் கொடுத்து வந்திருக்கிறது. கொடும் காற்றிலும் கடுமையான இருட்டிலும் மங்கலான அந்த ஒளி அணையாது எரிந்து கொண்டிருக்கும். எத்தனை ஆயிரம் பேருக்கு அது வழிகாட்டி இருக்கிறது. எத்தனை ஆபத்துகளை நடக்க விடாமல் தடுத்திருக்கிறது.

கள்ளு குடித்துவிட்டு வருகிறவர்கள் சில வேளைகளில் எச்சிலை அதன்மேல் துப்பியதுண்டு. வாய் திறந்து கெட்ட சொல் கூறியதுண்டு. மரத் தூணில் இடித்ததுண்டு. எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டது அது. அதற்கு வெறுப்பு இல்லை; பகை இல்லை. ஆனால், நாளை முதல் இந்தத் தெரு விளக்கால் கிராமத்துக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. தளர்ந்து போன அந்த தலைமுறைக்கே சாட்சியாக நின்று கொண்டிருந்தது அந்த விளக்கு. அந்த விளக்கு தேவையில்லை யென்றால் கொச்சு குட்டியும்தான். அவன்கூட நாளை முதல் தேவையற்ற ஒரு பொருள்தான்.

கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை கொச்சு குட்டிக்கு. அந்தத் தெரு விளக்கை அன்புடன் இறுக அணைத்துக்கொண்ட கொச்சு குட்டி அதற்கு முத்தம் கொடுத்தான். அவனுடைய கண்ணீர் பட்டு அது ஈரமானது. தெரு விளக்கினால் அழ முடியாது. இல்லா விட்டால்... இருளினூடே நடந்து போனான் கொச்சுகுட்டி- எவ்வித லட்சியமுமின்றி.

தெரு முழுவதும் ஒரே இருட்டு. எண்ணெய் தீர்ந்துபோன அந்தத் தெருவிளக்கு தன்னுடைய இறுதி அத்தியாயத்தை முடித்துக் கொண்டது, நிரந்தரமாக.

No comments: