Wednesday, March 2, 2011

35000 கோடியை குறிவைக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்

“உலக வங்கி மற்றும் அதன் சகோதர நிறுவனங்களிலிருந்து வந்த நிதி ஏழைகளுக்கு உதவக் கூடியது போலத் தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில் ஒரு சில செல்வந் தர்களுக்குப் பயனளிக்கும் திட்டங் களுக்கு மட்டுமே வழங்குவோம். பன்னாட்டு நிறுவனங்கள் ஆசைப் படும் ஒரு நாட்டை இயற்கை வளங்கள் உள்ள ஒரு வளரும் நாட்டை நாங்கள் தெரிவு செய்வோம். அந்நாட்டுக்கு மிகப் பெரிய கடன் கிடைக்க ஏற்பாடு செய்வோம். பின்னர் அந்தப் பணத்தின் பெரும்பகுதியை எங்களது பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கும் அந்த வளரும் நாட்டிலுள்ள எங்களது கூட்டாளிகள் சிலருக்கும் திருப்பி விடுவோம்” என்று அமெரிக்கப் பேரரசின் ரகசியப் பணிகளை விளக்கும் நூலில் ஜான் பெர்கின்ஸ் தனது பொருளாதார அடியாள் வேலையைப் பற்றிக் குறிப்பிடுவார்.

உலக வங்கியாக தமிழக அரசை நினைத்துக் கொள்ளுங்கள். திட்டம் புரியும். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றித் தரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் கடனுதவிதான் (ஜான் பெர்கின்ஸ் சொன்னது போல்) ஒருசில செல்வந்தர்களுக்குப் போய் கொண்டிருக்கிறது. ஜான் பெர்கின்ஸ் கூறியது அப்படியே பொருந்துவது போல, இத்திட்டத்தின் பயன் முழுக்க முழுக்க கட்டுமான தொழிலுக்குப் போகிறது. தமிழகத்தில் சில வாரங்களாக ஏறி வரும் சிமெண்ட், செங்கல், மணல், கம்பி, கருங்கல் விலையை உற்று நோக்கினால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய சிமென்ட் வரலாற்றிலேயே 120 விழுக்காடு விலையேற்றம்:

கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதன் பணிகள் முழு வீச்சில் தொடங்கிய சில நாள்களில், 50 கிலோ கொண்ட ஒரு மூடை சிமென்ட்145 ரூபாயிலிருந்து 320 ரூபாயாக (120 விழுக்காடு) உயர்ந்திருக்கிறது. ஒரு லாரி செங்கல் (4500 செங்கல்கள்) கடந்த மாதம் 16,500 ரூபாய். தற்போது 27,500 ரூபாய்! 2 யூனிட் மணல் ரூ.4,500லிருந்து ரூ.6,500 ஆகிவிட்டது. இன்றைய நிலவரப் படி, தங்க விலையை விட தினசரி உயர்ந்து கொண்டிருப்பது கட்டு மானப் பொருட்களின் விலைதான். வட கிழக்குப் பருவமழை துவங்கி விட்டால் விலை இன்னும் உயரலாம்.


கடந்த ஆறு மாதங்களில் சிமென்ட் உற்பத்தி செய்வதற்கு பயன் படுத்தப் படும் மூலப் பொருள்களின் விலை உயரவில்லை. அரசாங்கம் சிமென்ட்டிற்கான கனிமப் பொருள்களுக்கு நீண்ட காலக் குத்தகையை மிகவும் குறை வாகவே தீர்மானித்து வழங்கி வருகிறது! வேறு எந்த வரி உயர்வும் தற்போது விதிக்கப் படவில்லை. தமிழகத்தில் வேறு எந்த அதிசயமும் அரங்கேறி விடவில்லை. அப்படியிருக்க சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் 100 விழுக்காடு விலையேற்றத்தின் கமுக்கம், கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கே வெளிச்சம்!

நான்கு கட்டமாக “நாமம்’

200 சதுர அடி பரப்பளவில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ளலாம். இதற்கு அதிகபட்சத் தொகையாக 75,000 ரூபாய் மானியமாக அரசு வழங்குகிறது. கூடுதலாக ஆகும் செலவை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

மானியத் தொகையில் வீட்டிற்குத் தேவையான இரும்பும் கம்பி, சிமெண்ட், கதவு, ஜன்னல் ஆகியன வழங்கப்படும். அதற்கான தொகை பட்டியலில் பிடித்தம் செய்யப் பட்டு, மீத முள்ள தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

அதாவது, முதல் கட்டமாக அடித்தளம் அமைக்க பயனாளி ஒருவருக்கு ரூ.9,817 வழங்கப் படுகிறது. இதில், சிமென்ட்டுக்கு ரூ.2,400 போக மீதி ரூ.7,417 பயனாளியிடம் கொடுக்கப் படுகிறது. இரண்டாவது கட்டமாக, ஜன்னல் மட்டம் வரை கட்ட ரூ.13,911 வழங்கப்படுகிறது. இதில், சிமென்ட் மற்றும் கம்பிக்கென ரூ.8,580 போக மீதி ரூ.5,331 பயனாளியிடம் வழங்கப்படுகிறது. மூன்றாவது கட்டமாக, கூரை மட்டம் வரை கட்ட ரூ.24,485-ல், சிமென்ட் மற்றும் கம்பிக்கு ரூ.21,085 போக மீதி ரூ.3,400 பயனாளியிடம் வழங்கப் படுகிறது.

இறுதியாக, ரூ.26,787-ல் சிமென்ட் மற்றும் கம்பிக்கு ரூ.9,005 போக மீதிப் பணமான ரூ.17,782 பயனாளியிடம் வழங்கப்படுகிறது. இதில், கழிப்பறை வசதிக்காக ரூ.2,200 என மொத்தம் பயனாளி ஒருவர் வீடு கட்ட ரூ.77,200 அரசு வழங்குகிறது.

இதில் முன்பணமாக ஏதும் வழங்கப்படமாட்டாது. மானியத் தொகை அடித்தளம், கூரை, கான்கிரீட், இறுதிநிலை என நான்கு கட்டங்களாக கிராம ஊராட்சிகள் மூலம் வழங்கப்படும். இத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்ட 2250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

35 ஆயிரம் கோடி மாபெரும் ஊழல் :

குடிசை வீடுகளை மாற்ற அரசு 75 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்குகிறது என்பதால் இருக்கும் குடிசையை இடித்துவிட்டு தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேர் கான்கிரீட் வீடுகளை இத் திட்டத்தின் கீழ் கட்டி வருகிறார்கள். சதுர அடிக்கு குறைந்த பட்சம் 1,200 ரூபாய் என 200 சதுர அடியில் வீடு கட்ட கிட்டத்தட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் தேவைப்படும். ஒரே நேரத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு 7,200 கோடி ரூபாய் புழக்கத்தில் வருகிறது. இதில் அரசு செலுத்தும் 2,250 கோடியை கழித்துக் கொண்டால் கூட வீடு கட்டும் 3 இலட்சம் பேரும் மொத்தமாக 5 ஆயிரம் கோடியை ஒரே நேரத்தில் கட்டுமானப் பணியில் செலுத்துகின்றனர்.

இது வெறும் 3 லட்சம் வீடுகளுக்கு மட்டும். அடுத்தடுத்த கட்டங்களில் மொத்தம் 21 இலட்சம் வீடுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மானியம் வழங்கப்படும். அப் படியானால் குறைந்த பட்சம் 35 ஆயிரம் கோடி! இதனை கணக்குப் போட்டுத் தான் இப்படி யொரு திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது. சிமெண்ட் உற்பத்தியாளர்களுக்கும், கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்யும் முதலாளி களுக்கும் இலாபத்தை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

குடிசை வீட்டில் வசிப்பதை கௌரவ குறைவு என்று மக்களின் மனதில் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியும் கான்கிரீட் வீட்டின் மீது மோகத்தை உருவாக்கியும் 100 விழுக்காட்டுக்கும் மேல் கட்டுமானப் பொருட்களின் விலையை ஏற்றி விட்டனர். இப்போது குடியிருந்த குடிசை வீடும் போய்விட்டதே என்று பயனாளிகள் பலரும் வேதனையுடன் புலம்பு வதை தினமணி உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

அதிகாரிகளுக்கும் அழ வேண்டும்

இத்திட்டத்தின் கீழ், முன் பணம் எதுவும் வழங்கப்படுவ கிராம ஊராட்சிகள் மூலமே 4 கட்டங்களாக தொகை வழங் கப்படுகிறது. அதிலும் சிமென்ட், கம்பி, ஜன்னல் போன்றவற்றிற்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையே கைகளில் தரப் படுகின்றது.

தி.மு.க. பிரமுகர்களின் அச்சுறுத்தல்கள்...

எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளூர் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் பயனாளிகளைப் படுத்தும் பாட்டை சொல்லி மாளாது. அந்தத் தி.மு.க. பிரமுகர்கள் அனுப்பி வைக்கும் சித்தாள்கள், கொத்தனார்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்கமாக இவர்கள் கேட்கும் தினக் கூலியும் அதிகம். இதில் பயனாளியும், தொழி லாளர்களும் என இருதரப்பும் ஆளும் கட்சிப் பிரமுகருக்கு கமிஷன் தரவேண்டும். அந்தப் பிரமுகரைத் தவிர்த்து விட்டு வேறு நபர்களை கட்டுமானப் பணிக்கு அழைத்து வந்தாலோ உள்ளூர் தி.மு.க. பிரமுகருக்கு கமிஷன் தர மறுத்தாலோ மானியத் தொகையை வாங்கவே முடியாத நிலை உருவாகும் என பயனாளிகள் மிரட்டப்படுகிறார்கள்.

பெருநகரவாசிகளும் இதற்கு விலைகொடுக்க வேண்டும்

இது ஏதோ, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு மட்டுமான சிக்கல் என்று நினைத்து விட வேண்டாம். இத் திட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் அடிக்க சிமெண்ட் உற்பத்தியாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள், மணல் விற்பனையாளர்களால் தமிழகம் முழுவதும் கட்டுநர்கள் மிகுந்த சிக்கலில் உள்ளனர். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட தொகையில் வீடு கட்டித் தரமுடியாத சூழ்நிலையால் கையைப் பிசைந்து கொண்டிருக் கிறார்கள். வீடு கட்டும் நடுத்தர மக்களும் அடுத்து எதை அடமானம் வைக்கலாம், எதை விற்கலாம் என பாதியில் நிற்கும் வீட்டை கட்டி முடிக்கும் வேதனையில் தவித்து வருகின்றனர். இதனால் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் விலை ஏறுவதோடு கூடுதலான கட்டுமான செலவை சமாளிக்க வீடுகளின் வாடகை உயரும். புதிய வீடுகளின் வாடகை உயரும் போது ஏற்கெனவே வீடு வாடகைக்கு விட்டிருப்போரும் வீட்டு வாடகையை உயர்த்தப் போகிறார்கள்.

ஆற்றுமணலுக்கும் பேராபத்து

தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆற்று மணலை கணக்கின்றி அள்ளி அண்டை மாநிலங்களுக்கும் விற்று கொள்ளை லாபம் ஈட்டுவது வாடிக்கையாகி விட்டது. மென் பொருள் துறையின் வீழ்ச்சி, உலகப் பொருளாதார சரிவு ஆகிய காரணங்களால் கட்டுமானப் பணிகள் சற்று இறங்கு முகத்தில் சென்று கொண்டிருந்தன. அவற்றைத் தூக்கி நிறுத்தும் விதமாக தி.மு.க. பொருளாதார அடியாட்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் உருவாகியிருக்கிறது.

பெருநகர் மற்றும் நகர்ப் பகுதிகளில் மட்டும் நடந்து வந்த கட்டுமானப் பணிகளை கிராமப் பகுதிகளிலும் நீட்டிப்புச் செய்யவே 75 ஆயிரம் மானியம் என்ற கவர்ச்சியுடன் மக்களை சந்தித்திருக்கிறார், கருணாநிதி. இப்போது மக்களும் ஏமாந்து போய் இத்திட்டத்தின் கீழ் வெறும் 75 ஆயிரம் மானியத்துக்காக 3 லட்சம் வரை இழக்கத் தயாரானது ஒருபுறம் இருக்க, ஆற்று மணலை முன்பைவிட வேகமாக கொள்ளையடிக்க கும்பல் தயாராகிவிட்டது.

ஒரே நேரத்தில் 3 இலட்சம் வீடுகள் கட்டப் படுவதால் அவற்றிற்குத் தேவையான மணலை அள்ளி தமிழகத்தின் நீராதாரத்தை விழுங்கச் செய்ய கருணாநிதி பச்சைக் கொடி காட்டிவிட்டார். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மணல் கொள்ளை கும்பலுக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அட்சயப் பாத்திரமாகியிருக்கிறது. என்ன செய்திருக்க வேண்டும்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ளதைப் போன்றே சிமென்ட் விலை உயர்வு ஏற்பட்ட போது தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் மூலம் சிமென்ட் மொத்தமாகத் தேவைப் படுவோருக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப் பட்டு வழங்கப் பட்டது. அந்தத் திட்டத்தின் மூலம் உரிய தொகைக்கு வங்கி வரைவோலை எடுத்துக் கொடுப்ப வர்களுக்கு ஒரு வாரத்தில் சிமென்ட் கிடைத்தது. தொடர்ந்து சிமென்ட் வர வழைப்பதில் ஏற்பட்ட சிக்கல், விநியோகத்தில் ஏற்பட்ட கால தாமதம் போன்ற வற்றால் அந்தத் திட்டம் கிடப்பில்போடப் பட்டதாகக் கருணாநிதி அரசு சொன்னாலும் சிமென்ட் உற்பத்தியாளர்களின் கொள்ளை இலாபத்துக்கு வழிவிட்டே இத் திட்டம் கைவிடப் பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க இத் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். ஆனால் தேர்தல் நெருங்கி வருகிறது. திருமங்கலம் பாணி தேர்தலை நம்பியிருக்கிறது, தி.மு.க. இப்படியான சூழ்நிலையில் அரசு கருவூலத்தில் உள்ளதையெல்லாம் நலத் திட்டம் என்ற பெயரில் பெரு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி விட்டு அதற்குக் கூலியாக அவர்களிடம் பெட்டி பெட்டியாக கையூட்டுப் பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு தேர்தலைச் சந்திக்கக் கருணாநிதி குடும்பம் முடிவு செய்திருக்கிறது. ஓட்டாண்டி ஆவது குடிசை வாசிகள்தாம்!

நன்றி:கீற்று...

No comments: