Wednesday, March 2, 2011

இலங்கையர்

புலிச் சந்தேக நபர்களைச் சந்திக்க வரும் பெண்கள் முறைகேடாக நடத்தப்படுகின்றனர்

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிச் சந்தேகநபர்களைப் பார்வையிடவரும் அவர்களது பெண் உறவினர்களிடம் சிறைச்சாலை அதிகாரிகள் முறை கேடாக நடந்துகொள்கின்றனர் என நாம் இலங்கையர் அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளை, நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் உதுல் பிரேமரட்ன கூறியவை வருமாறு:

தங்களைப் பார்வையிட வரும் பெண் உறவினர்களிடம் சிறை அதிகாரிகள் கீழ்த்தரமாக தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றும், குறிப்பாக இளம் பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்து தொடர்புகொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள் என்றும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் எங்களிடம் முறையிட்டனர்.

மகஸின் சிறைச்சாலையில் சுமார் 120 புலிச் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்வையிட இவர்களது உறவினர்கள் வருகின்றனர். கைதிகளைப் பார்வையிடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பார்வை அறை பத்து அடிக்கு உட்பட்ட சிறிய அறையாகும்.

கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். அதிலும் பின்வரிசையில் உள்ளவர்கள் வரிசையின் முதலாவது இடத்திற்கு வருவதாயின் சிறை அதிகாரிகளுக்கு நூறு ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வழங்கவேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையை சிறை அதிகாரிகளே ஏற்படுத்தியுள்ளனர். இதனால், தமது உறவினர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே தம்மைப் பார்வையிட வருகின்றனர் என்றும் கைதிகள் கவலை தெரிவித்தனர்.

எனினும், சிறைச்சாலைகளில் இடம்பெறும் இவ்வாறான முறைகேடுகள் அரசுக்குத் தெரிய வருவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் இதனைக் கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.

No comments: